

சென்னைப் பல்கலைக்கழகத்துக்குச் சில நாள்கள் முன்பு சென்றிருந்தேன். ஆங்கிலத் துறைத் தலைவர் அறை வாசலில் மொச்சைக்கொட்டை அளவில் ‘ஆம்ஸ்ட்ராங்’ என்ற பெயர்ப் பலகை. அவர் ஓய்வு பெற்றுவிட்டாரா என்று கேட்டேன். “இல்லை, இல்லை” என்று பதறினார், நான் சந்தித்த பேராசிரியர். நானே பின் நாக்கைக் கடித்துக்கொண்டேன்.
ஆம்ஸ்ட்ராங் என்கிற நிலவில் காலடி வைத்த அந்த அமெரிக்கர் பெயர் 1969க்குப் பிறகல்லவா இந்தியாவுக்குத் தெரியவந்திருக்கும். அதற்குப் பின்னர்தானே அப்பெயரை இங்கு சூட்டியிருக்க வேண்டும் என்று உடனே தோன்றிவிட்டது. 69க்குப் பிறகு பிறந்தவர் 60 என்கிற ஓய்வு வயதை இன்னும் தொட்டிருக்க மாட்டாரே என்று உறைத்தது.
பெயர்களின் பின்னணி: கடந்த ஜூலை 5ஆம் தேதி சென்னையில் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கும் 1977இல் பிறந்தவர்தான். ஆகச் சில பெயர்களை வைத்து, அவர்கள் பிறந்த ஆண்டை ஓரளவு ஊகிக்க முடியும். என் சித்தி ஒருவருக்குப் பெயர் ரஷ்யா.
அவர் பிறந்த ஆண்டு 1933. பெரியாரின் ரஷ்யப் பயணத்திற்குப் பிறகு வைக்கப்பட்ட பெயர். காந்திமதி என்ற பெயரைக் கேட்டவுடன் நம்மால் அவர் பிறந்த மாவட்டத்தை ஓரளவு சொல்லிவிட முடியும். திருநெல்வேலியில் கோயில் கொண்டுள்ள நெல்லையப்பருடன் உறைபவர் காந்திமதி. பரலி சு.நெல்லையப்பர் திருநெல்வேலிக்காரர். எனினும் எல்லா ‘தில்லை’களும் சிதம்பரத்தைச் சேர்ந்தோர் அல்லர்.
1960களில் எங்கள் கிராமத்தில் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. முருகர் கோயில் கொண்டுள்ள மயிலத்தில் பிறந்ததால் முருகன் என்று பெயர் வைக்க விரும்பினார் குழந்தையின் தந்தை. செஞ்சியில் பிறந்த முதல் மகனுக்கு ரங்கநாதன் என்று முன்பே பெயர் சூட்டியிருந்தார் அவர். என் பாட்டி, “முருகன் என்று ‘நாம்’ பெயர் சூட்டக் கூடாது. ‘முருகதாஸ்’ என்று வைக்கலாம்” என்றார். குழந்தை முருகதாஸ் ஆனது.
‘மனு’வில் பெயர் வைக்கும் முறை அப்படித்தான் வரையறுக்கப்பட்டுள்ளது. தாசன்களையும் தாசிகளையும் ஒழித்த திராவிடர் இயக்கம் வளராத காலத்தில் சூட்டிக்கொள்ளப்பட்ட பல பெயர்களில் ‘தாசன்’ இருக்கும். யாருக்கும் யாரும் அடிமை இல்லை என்ற தன்னிலை உணர்ந்ததால், இன்று எவரும் தாசர்கள் ஆவதில்லை. இன்று அண்ணாதுரை என்ற பெயரைக் கேட்டதும் அவர்கள் சமூகத்தின் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று சுலபமாகச் சொல்லிவிட முடியும். அறிஞர் அண்ணா புகழ்பெறுவதற்கு முன்னால் அப்பெயரை ‘மேல்’ பிரிவினர் கொண்டிருந்தார்கள்.
பெயர் மாற்றம்: விடுதலைப் போராட்டக் காலத்தில் பகத் சிங்குகள் மலிந்தனர். திராவிட இயக்கக் காலத்தில் தமிழ்ச்செல்வர்கள் பெருகினர். ஒரு காலத்தில் இறைவனின் பெயரை மட்டும் சூட்டிக்கொண்டவர்கள் அதிகம். சுடலை, மாடசாமி, ஐயனார் என்பன சில. என் பேராசிரியர் பெயர் பிச்சை, பின்னால் அவர் இளவரசு ஆனார். பாண்டி என்ற பெயர் பாண்டியன் என்றானது. ‘போதும் பொண்ணு’ என்றொரு பெயர் உண்டு. சீனிவாச ராகவன் என்ற பெயரை இடைநிலைச் சாதியினர் சூட்டிக்கொள்வதில்லை.
இப்படிப் பெயரில் சாதியம், பாலினம், பண்பாடு, சடங்கு, இறை, சமூகம் எனப் பல அம்சங்களும் உறைந்துகிடக்கின்றன. தாத்தாவின் பெயரைப் பேரன்களுக்கு வைக்கும் முறையைக் கண்டிப்புடன் பின்பற்றுபவர்கள் இன்றும் தமிழ்நாட்டில் உண்டு. திராவிட இயக்கம் செல்வாக்குடன் திகழ்ந்த காலத்தில் பெயரை மாற்றிக்கொள்ளும் வழக்கம் அதிகமாக இருந்தது. நாராயணசாமி நெடுஞ்செழியனானதும் ராமையா அன்பழகன் ஆனதும் பிரபலமான பழைய சான்றுகள்.
“பால்பேதத்தை அறியும் வண்ணம் பெயர் வைக்காதீர்கள்” என்று பெரியார் 1928இல் கும்பகோணம் அரசுக் கல்லூரியில் பேசும்போது கேட்டுக்கொண்டார். ஆனால் இந்த ஓர்மை இல்லாமலேயே பல பெயர்கள் தமிழில் உண்டு. ரமணி, கனகசுந்தரம், நாகபூஷணம் போன்றவை இவ்வகையிலானவை. பேராசிரியர் கல்யாணி ஆண் என்பதைப் பெயரை வைத்து ஒருவராலும் கண்டுபிடிக்க முடியாது.
அப்பெயரின் ஆண்பால் ‘கல்யாண்’. தமிழ்நாட்டில் கல்யாண் என்று மனிதர்களுக்குப் பெயர் வைப்பது துர்லபம். நயாகரா, வைக்கம் போன்றவை பாலினத்தை எளிதில் அடையாளப்படுத்திவிட முடியாத மனிதப் பெயர்களுள் சில. சம்ஸ்கிருதப் பெயர்களை வைப்பது இன்றைய போக்கு. அனுஷ், ரமிதா, ராகவ் போன்ற பெயர்கள் கடந்த 30 ஆண்டுகளில் மிகுதியாகிவிட்டன.
சமத்துவ வழிமுறை: இப்போது ‘முதல் எழுத்து’ (initial) இன்றிப் பெயரை மட்டும் விளிப்பது பெருவழக்காகிவிட்டது. வானொலியில் இருந்த ஒரு நண்பர் முதல் எழுத்து இன்றிப் பெயரை ஒலிபரப்பவே மாட்டார். இதை மரபாகப் பார்ப்பது ஒரு நிலை. ஆணாதிக்கச் சிந்தனையின் வெளிப்பாடாகப் பார்ப்பது முற்போக்கு நிலை. முதல் எழுத்தில் தந்தையுடன் தாயின் பெயரையும் சேர்க்கச் சொல்கிறோம்.
அன்று ப.உ.லெனின் என்று மகனுக்குப் பெயர் வைத்தார் பழமலய். இன்று அ.வே.கன்னல் என்று தன் மகளுக்குப் பெயர் சூட்டினார் ஆ.இரா.வேங்கடாசலபதி. சிலர்தான் இப்படிச் சமத்துவத்தைக் காக்கின்றனர். கணவன் பெயரைத் தன் பெயரின் பின்னால் போட்டுக்கொள்ளும் பெண்களைப் போலவே ஆண்கள் சிலரும் மனைவியின் பெயரைத் தம் பெயருடன் இணைத்து வழங்குகின்றனர். இளமுருகு பொற்செல்வி பழைய உதாரணம். திருநாவுக்கரசன் மனோரஞ்சிதம் புதிய உதாரணம்.
பெயரில் என்ன இருக்கிறது என்பது புகழ்பெற்ற தொடர். ரோமியோ - ஜூலியட் நாடகத்திலிருந்து சுடப்பட்டதாம் அது. (அதிர்ஷ்டத்தைத் தவிர) பெயரில் எல்லாம் இருக்கிறது என்பது முழுதும் ஒப்புக்கொள்ளப்படாத இன்னொரு தொடர். நாடு (பர்மா - மயன்மார்), நகரம் (பம்பாய் - மும்பை), மாநிலம் (கேரளா - கேரளம்), மொழி (ஒரியா - ஒடியா) எல்லாம் மாறுகின்றன.
ஏனென்றால் பெயரை வைத்துப் பண்பாடு உணரலாம், இடம் அறியலாம், மரபைப் புரிந்துகொள்ளலாம், சூட்டியோரின் கருத்தியலை ஊகிக்கலாம், பால் புரியலாம், மதம் உணரலாம், தேசம் தெளியலாம்.
பெயர்களைச் சுருக்கி அழைப்பது சமீபகால வழக்கம் என்று நாம் நினைக்கிறோம். ஆனால், 1950களிலேயே கு.அழகிரிசாமி எழுதிய கதை ஒன்றில் ஒரு பெயர்ச் சுருக்கம் வருகிறது. பெயர் நீண்டிருந்ததால் அதைச் சுருக்கி ‘பா’ என்று தன் மகளை அழைத்தார் ஒரு தந்தை. மகளின் நீளமான அப்பெயர் ‘பாமா’.
- தொடர்புக்கு: athiy61@yahoo.co.in