

தமிழ் இலக்கிய உலகில் சிறார் இலக்கியம், சிறார் இலக்கியம் தவிர்த்தவை ஆகிய இரண்டே இரண்டு பிரிவுகள்தான். ஆனால், மேலை நாடுகளில் இரண்டுக்கும் இடைப்பட்ட வயதினருக்காக இளையோர் இலக்கியம் எனும் வகைமை எழுதப்படுகிறது. பொதுவாக, 14 முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு என இது பிரிக்கப்படுகிறது. சில நாடுகளில் இது வேறுபடலாம். இளையோர் இலக்கியத்தில் சாகசக் கதைகள் உள்ளிட்ட நேரடியான படைப்புகள் எழுதப்படுவதைப் போலவே, புகழ்பெற்ற நாவல்கள், சிறுகதைகளை மீள்கூறல் (Retold) முறையிலும் பல படைப்புகள் வெளியாகின்றன.
தமிழில் இப்படியான தனித்த படைப்புகள் அதிகம் இல்லையெனினும் சிலர் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதையும் காண முடிகிறது. பாரதிதாசனின் ‘இளைஞர் இலக்கியம்’ எனும் நூல் 1958இல் வெளிவந்துள்ளது. மரபுப் பாடல்களின் தொகுப்பான அந்நூலின் முன்னுரையில், ‘ஐந்தாண்டுடைய சிறுவர் சிறுமியர் முதல் பல்கலைக்கழக மாணவர் வரை உள்ள எவருக்கும் இந்நூலிற் பாடல்கள் கிடைக்கும்’ எனக் குறிப்பிடுகிறார் பாரதிதாசன். அவரின் வரையறைப்படி 5 வயது முதல் 24 வயது வரை என்று புரிந்துகொள்ளலாம். ‘இளைஞர் இலக்கியம் என்று பெயரிட்டு, இதை நான் எழுதத் துணிந்தமைக்குக் காரணம், பிழைச் சொல்லின்றி மாணவர் பாட்டு கற்க வேண்டும்’ என்று தன் நோக்கத்தையும் தெளிவுபடுத்திவிடுகிறார்.
மொழி வாழ்த்து, மொழி உணர்வுப் பாடல்கள் இடம்பெறுவதோடு, 50களில் இளையோரை வசீகரிக்கும் புதிய வாகனங்கள், புதிய பொழுதுபோக்குக் கருவிகளைப் பற்றியும் எழுதியிருக்கிறார். வானொலி பற்றியும், பட்டணத்தைப் பார்ப்பது குறித்தும் பாடல்களை எழுதியிருப்பார். ஒரு பாடலில் கார் என்பதை பொறியியங்கி என்று குறிப்பிட்டிருப்பார். மொழியுணர்வு, ஒழுக்கம், கற்றல் உள்ளிட்டவற்றைப் போதிக்கும் வகையிலான பாடல்களே இடம்பெற்றிருக்கும்.
பிரமிளின் பேய்க் கதை: புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி உள்ளிட்ட பலரின் சிறுகதைகளில் இதுபோல் இளையோர் வாசிப்புக்கு எனச் சில கதைகள் உள்ளன. ஆயினும் அந்த வகைமைக்கு என அவர்களும் எழுதவில்லை; தொகுக்கவும் இல்லை. இந்த நிலையில், விதிவிலக்காக நமக்குக் கிடைத்திருக்கும் நூல் கவிஞர் பிரமிளின் ‘யாழ் கதைகள்’. இளையோருக்கான சிறுகதைகள் எனும் அறிவிப்புடனே வெளியிடப்பட்டுள்ளது.
இக்கதைகள் வெளியானது குறித்துக் கால சுப்ரமணியன் எழுதியிருக்கும் குறிப்புகள் சுவாரசியமானவை. பிரமிள் பள்ளிப் படிப்பை முடித்துக் கல்லூரிக்குச் செல்லவியலாத சூழல். அவரின் நண்பர் அமிரசிங்கம் படிப்பைத் தொடர்கிறார். அவர், ‘யாழ்’ எனும் கையெழுத்து இதழை நடத்தியபோது, பிரமிள் எழுதிய கதைகள் இவை. பிரமிளின் பதினெட்டு வயதில் எழுதப்பட்டவை. அந்த வயதில் ஒருவருக்கு ஏற்படும் குழப்பங்கள், விலகும் அச்சங்கள், புதிய ஈர்ப்புகள், துப்பறிதல் உள்ளிட்டவையே கதைகளின் மையம். அவ்வயதை ஒட்டியவர்களுக்கு இதே புரிதலும் ஆர்வமும் இருக்கும் என்பதால், இளையோருக்கான கதைகள் எனத் துணிந்து வகைப்படுத்தலாம்.
பிரமிளின் தொடக்கக் கால எழுத்துகளே எனினும், அன்றாட வாழ்விலிருந்து விலகிய கதை மையங்களையும் அவர் எழுதியிருக்கிறார். அதேபோலத் தேர்ச்சி மிகுந்த சொல் தேர்வையும் நிதானமான எழுத்து நடையையும் காண முடியும்.
‘ அம்மா’ என்னும் கதையில், மரணப்படுக்கையில் அம்மா கிடத்தப்பட்டிருப்பார். தூரத்தில் மகன் படுத்திருப்பான். திடீரென்று அம்மா எழுந்து வருவதும், இறந்தும் உயிலை அடையாளம் காட்டுவதுமாக விரியும் கதை. இறந்தும் இறவாமல் மகன் கண்களுக்கு மட்டுமே புலனாகும் அமானுஷ்ய உருவமாக நடமாடுவார் அம்மா. நான்கே பக்கங்களில் சிக்கலற்ற கதையோட்டத்தில் நனவும் நனவிலியும் இணைந்தோடும் வகையில் எழுதியிருப்பார். ‘படிக்காத இரவு மனிதன்’ கதையிலும் ஆபரேஷன் செய்யும் கட்டத்தில் அம்மா இருப்பார். அப்பா இறந்துபோயிருப்பார். ஆபரேஷன் செலவுக்கு மகன் இருட்டில் செல்லும்போது, பூசாரி ஒருவர் ‘ராஜாத்திக்கு’ எனச் சொல்லி பணம் கொடுப்பார். அம்மாவிடம் வந்து கேட்டால், தன் கணவர்தான் அப்படி அழைப்பார் என்று சொல்வதோடு கதை முடியும். இப்படி, ‘பேய்வீடு’, ‘வேல மரத்துல பேய்’, ‘தொங்கும் பிணம்’ உள்ளிட்ட அமானுஷ்யம் மீதான அச்சத்தோடும் கேள்விகளோடும் கேட்ட கதைகளின் தாக்கங்களுடன் சில கதைகள் எழுதப்பட்டுள்ளன.
இளையோருக்கான உதாரணக் கதைகள்: ஒரு கட்டத்தில் பேய், இருட்டு மீதான அச்சம் சிறிது சிறிதாக விலகும் பருவமும் அதுதான். அப்படியான ஒரு கதைதான் ‘இருளிலே ஒரு குரல்’. இருட்டில் அழைக்கும் குரலைக் கேட்டு அலறி ஓடுவான். இறுதியில் தெரிந்த ஒருவர்தான் அவனை அழைத்ததாகக் கதை முடியும். ஒரு கதை பாதிதான் கிடைத்திருக்கும். ஒரு சித்திரக் கதையும் இடம்பெற்றுள்ளது. கதைகளுக்கு அவரே கோட்டோவியங்கள் வரைந்திருப்பார்.
இக்கதைகள் இப்போதுள்ள இளையோர் அனைவரையும் ஈர்க்குமா என்பது கேள்விக்கு உரியதுதான். சிலர் மிகுந்த ஆர்வத்தோடு வாசிக்கலாம். சிலரைக் கவராமல் போகலாம். ஏனெனில், இன்றைய இளையோருக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்புகளும் தகவல்களும் ஏராளம். எனவே, அவற்றை உள்ளடக்கிய கதைகளே அவர்களை வசீகரிக்கக்கூடும். ஆயினும் இளையோர் வகைமை குறித்த புரிதலுக்கு இக்கதைகள் முக்கியமானவை.
தமிழில் தற்போது இளையோர் இலக்கியம் துளிர் விட்டுள்ளது. வானம், புக்ஸ் ஃபார் சில்ரன் உள்ளிட்ட பதிப்பகங்கள் இளையோர் இலக்கியம் என்றே பல நூல்களைப் பதிப்பிக்கின்றன. உதயசங்கரின் ‘ஆதனின் பொம்மை’, ‘பறம்பின் பாரி’, விழியனின் ‘1650 - முன்ன ஒரு காலத்துல’, கொ.ம.கோ.இளங்கோவின் ‘சஞ்சீவி மாமா’, யெஸ்.பாலபாரதியின் ‘மரப்பாச்சி சொன்ன ரகசியம்’, யூமா வாசுகியின் ‘தேநீர்க் குடில்’, எனது ‘நீலப்பூ’ உள்ளிட்ட நூல்களை உதாரணமாகச் சொல்லலாம்.
சிறார் நூல்கள் வழியாக வாசிப்புக்குள் நுழைந்து நேரடியாகப் பெரியோர் இலக்கியத்திற்குப் பயணிப்பதில் பலருக்கும் சிக்கல் இருக்கும். இரண்டுக்கும் இடையே இடைவெளி உள்ளது. அதுவே பலரை வாசிப்புப் பழக்கத்தில் இருந்து வெளியேறவும் வைத்துவிடுகிறது. அந்த இடைவெளியை நிரப்பும் ஆக்கபூர்வமான இளையோர் படைப்புகள் வெளிவருவது அவசியம்.