கோடையிலும் கொண்டாடலாம் காவிரியை!

கோடையிலும் கொண்டாடலாம் காவிரியை!
Updated on
3 min read

நீர் கொண்டுவந்தால் அது நமக்குக் காவிரி என்போம். கோடையில் நாம் கொண்டாட காவிரியில் எதுவுமே இல்லையா? தண்ணீர் காலத்தில் காவிரிக்குச் செல்பவரை, “காவிரிக்குப் போகிறார்” என்றார்கள். அவரே கோடையில் அங்கே சென்றால் “ஆற்றுக்குப் போகிறார்” என்பார்கள். தண்ணீர் இல்லாத காவிரி தன் இருப்பையே தொலைத்துக்கொள்வதைச் சொல்கிறது அந்த மொழி வழக்கு.

காவிரியைப் பாடிய கவிகள் எல்லோரும் அதன் நீர்ப் பெருக்கையே பாடினார்கள். கவி பாடுவது என்றாலே அதனதன் லட்சிய நிலையைப் போற்றுவதுதானே! நதிக்கும் நகருக்கும் மங்கலச் சொல் கூறுவது கவி மரபு. இந்த மரபிலிருந்து விலகி, கோடைக் காவிரியை யாரும் பாடியதில்லை.

சங்க காலத்திலிருந்து பதினெட்டாம் நூற்றாண்டு தியாகராஜர் வரை காவிரியின் நீர் வளமே கவிப் பொருள். புனல் பரப்பிப் பொன்கொழிக்கும் காவிரி அது. நுரைத்துப் பெருகி, துறை மூழ்க ஓடிவரும். தந்தமும் அகிலும் சந்தனமும் சுமந்து நஞ்சைப் பரப்பில் எக்கண்டமாகப் புகுந்துகொள்ளும்.

பிச்சிப்பூ அருச்சனை: பக்தி இலக்கியங்களும் காவிரியின் வழி நடையைக் கணக்கற்ற வினைச் சொற்களால் வர்ணிக்கின்றன. தியாகராஜரின் பாடல் ஒன்று, இரு கரைகளிலும் மறையவர்கள் நின்று பிச்சிப்பூவைத் தூவ காவிரி பவனி வருகிறாள் என்கிறது.

வறட்சி என்றாலும் அதைக் காவிரியின் மாறாத கருணைக்குக் காரணமாக்கினார்கள் கவிகள். பருவங்கள் தன்மை இழந்தாலும் காவிரி பெருகி வரும் என்றது ஒரு சங்கப் பாடல். தவித்துத் தன் வழி பார்த்திருக்கும் மக்களுக்கு இரங்கி மேற்குமலைச் சாரலால் காவிரி மழை பெய்விக்கிறாள் என்றார் தியாகராஜர்.

ஆனால், இன்ன பொருள்தான் கவி பாடத் தகுதியானது என்ற வரையைறை ஏதும் இல்லை என்பது இன்றைய இலக்கியக் கோட்பாடு. பாடு பொருளில் உள்ளார்ந்த கவித்துவம் எதுவும் இல்லை; அது பாடுபவரின் கவித் திறனில் உள்ளது என்போம். இந்தப் புதிய இலக்கிய மரபில் இப்போது நிறைய படைப்புகள் வருகின்றன.

ஆனாலும், கோடைக் காவிரிக்கு இலக்கியம் பிறந்ததாகத் தெரியவில்லை. புது வேகத்தில் வந்த யதார்த்த மரபு, மனித உறவுகளைப் பேசுவதோடு நின்றுகொள்கிறது.

கோடையின் இளம் காலையிலோ, அந்தியிலோ காவிரி மணலில் கால் புதைய நடப்போம். தை மாதக் கடைசி நீர் வரத்து அலை அலையாய்த் தெள்ளி வைத்த மணலை உடைத்து அடி போடுவோம். வைத்து எடுத்த நம் கால் தடத்தை மணல் சரிந்து மூடிக்கொள்ளும். ஏறு வெயிலின் வேகம் தெரியாமல் காவிரியில் இறங்கிவிட்டால் ஓடிக் கடக்கவும் முடியாது... திரும்பி நடக்கவும் இயலாது. தண் புனல் காவிரி அப்படித் தகிக்கும்.

காவிரியின் நீதி: இந்தத் தொன்மக் கதை சிலருக்காவது தெரிந்திருக்கலாம். கொள்ளிடத்தை வட காவேரி என்பார்கள். கோடையின் ஏறு வெயிலில் கைக்குழந்தையோடு ஒரு பெண் கொள்ளிடத்தில் இறங்கி நடந்தார். வெயில் உறைக்கவும் வேகமாக ஓடி மையத்துக்குச் சென்றுவிட்டார்.

மேலே போகவும் முடியாமல் திரும்பவும் முடியாமல் அதிர்ச்சியில் உறைந்த நிலை. செய்ய வேறு எதுவும் அறியாமல் குழந்தையை மணலில் கிடத்தி அதன் மேல் அவர் நின்றுகொண்டதாகக் கதை. தார்மிக நெறிகள் இப்படி நொறுங்கிச் சரியும்போது வழக்கமாகவே தொன்மங்களின் மாந்தர்கள் கல்லாக உருமாறுவார்கள். அந்தப் பெண்ணும் நின்ற இடத்திலேயே கல்லாகச் சமைந்தார் என்றுதான் இந்தத் தொன்மமும் முடிகிறது.

இப்போது காவிரியில் மணல் இருக்கிறதா என்று கேட்பீர்கள். கிழக்கே போகப் போக நாணலும், நரிச்சியும், விழலுமாக விளைந்து மூடிக்கிடக்கிறது காவிரியின் ஓடுகால். மாலையில் அப்போதுபோல் நண்பர்களோடு காவிரி மணலில் அமர்ந்து பேச முடியாது. மேலைக் காற்று காவிரியின் தூவாளி மணலைக் கொழித்துப் பட்டுத் துணியாக இப்போதும் பரப்புமா? வட்டாவும் குடமுமாக ஊற்றுக்குச் சென்று வீட்டுக் கதைகள் பேச இன்றைய பெண்களுக்கு வாய்த்திருக்கவில்லை.

காவிரி கண்ட கனவோ?- இந்தத் தலைமுறையினர் நடுச் சாமம்வரை காவிரி மணலில் விளையாடிக் களிப்பதை அறியாதவர்கள். கோடையில் காவிரி மணலில் நாடகம் நடக்கும். மணலையே தலையணையாக்கி, படுத்தபடியே விடிய விடிய நாடகம் பார்க்கலாம். விடிந்ததும் அந்த இடத்துக்கு வேறு எப்போதும் காணாத வெறுமை வந்துவிடும்.

நாடகம் நடந்ததையே நம்ப முடியாது. ‘நேற்று இரவு இங்கே கூத்து ஒன்று நடந்ததே; அது காவிரிக்குக் கனவில் வந்த ஊமைச் சம்பவங்களோ?’ - இப்படி, ஒரு விசேட திருஷ்டியில் நாம் காவிரியின் கனவைக் கண்டுவிட்டதாகக்கூட நினைத்துக்கொள்வோம்.

பங்குனி மாதம் திருவெள்ளறைப் பெருமாள் ஸ்ரீரங்கம் கொள்ளிடத்தில் அமைந்த பந்தலுக்கு வருவார். தைப் பூசத்தில் கொள்ளிடம் வழியாகவே கண்ணாடிப் பல்லக்கில் வரும் சமயபுரம் மாரியம்மனுக்குக் காவேரி ரங்கன் சீர்வரிசை தருகிறார். அன்பில், உத்தமர் கோயில் - இரண்டு ஊர்ப் பெருமாளும் வைகாசி விசாகக் கோடையில் கொள்ளிடத்துக்கு வருகிறார்கள். கோடையானாலும் காவிரியில் கோலாகலமே!

எங்கள் ஊர் பெருமாளுக்கு ஆனிப் பெளர்ணமியில் தெப்பத் திருவிழா. ‘ஐந்து வேலி (முப்பது ஏக்கருக்கு மேல்) குளத்துக்கு ஆனியில் தெப்பமா? இவ்வளவு பெரிய குளத்துக்குக் கோடையில் தண்ணீர் ஏது?’ என்று இன்றைய நிலவரத்தை நினைத்துக் கேட்போம். உற்சவ நாள் நிர்ணயமான காலத்தில் இன்றைய நீர்ச் சிறைகளான அணைகள் கர்நாடகத்திலோ தமிழகத்திலோ இருந்ததில்லை. மேற்கே மழை பெய்தால் இங்கே காவிரியில் தவங்காமல் தண்ணீர் வரும். எவ்வளவு மாறிப்போய்விட்டது இந்தக் காவிரி!

தொல் உணர்வு: இந்த ஆண்டு தெப்பத்துக்குப் பெருமாள் வந்தவுடன் மேலைக் காற்றில், குளிரக் குளிரச் சாரலும் வந்தது. காவிரியில் நீரும் காற்றில் சாரலும், நாச்சியார்களுடன் பெருமாளும், முழு நிலவும், மெல்லிய இசையுமாக - தெப்பம் சிருங்காரத்தின் பூரணம். எத்தனை வடிவங்களில் இந்தக் காட்சி நம் திரைப்படங்களில் விரிந்திருக்கிறது! அதே மரபு, அதே நிகழ்வு. ஆனாலும், புதுப் பூச்சில் மிளிரும் தொல் உணர்வு இது; மனிதர்களுக்குச் சலிக்காது.

மெலட்டூருக்குச் சென்றுகொண்டிருந்தேன். ஒரு திருப்பத்தில், தரையில் இறங்கிய மின்னல்போல் வெட்டாறு என்ற பழங்காவிரி நெளிந்து கிடந்தது. கண்ணைப் பெயர்த்து வேறு எதைப் பார்க்க? நீர் அற்ற கோடையாகத் தெரியவில்லை. இடம் நிரக்க இருந்தவர் எழுந்து போனாலும், இருந்த இடம் அவரால் நிரம்பியே இருக்கும்; அங்கே வெறுமை நுழையாது.

காவிரியில் ஓட்டம் இல்லை; ஆனால், அங்கே நீர்ச் சலனத்தின் நிரந்தரம் மனத்துக்குத் தட்டியது. தெய்வங்கள் அவரவரின் பாதங்களாகி, அவை பதிந்த தடங்களை நாம் வணங்குவதில்லையா? பழங்காவிரியின் பாதச் சுவடுகளைக் கையெடுத்துக் கும்பிட்டபடியே நகர்ந்தேன்.

- தொடர்புக்கு: profjayaraman@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in