

ஆகஸ்ட் 2, 1944. போலந்தின் ஆஷ்விட்ஸ் வதை முகாமில், ஹிட்லரின் நாஜிப் படைகளால் சிறை வைக்கப்பட்டிருந்தவர்களில் 2,897 ரோமா மக்கள் (ஜிப்ஸி இனத்தினர்) டிரக்குகளில் ஏற்றப்பட்டு விஷவாயு அறைகளுக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். சில மணி நேரங்களிலேயே ஒருவர் பாக்கியில்லாமல் கொல்லப்பட்டனர். இரண்டாம் உலகப் போரின் முடிவில் 1945-ல் மேற்கத்திய நாடுகளின் படைகள் ஆஷ்விட்ஸ் வதை முகாமில் இருந்தவர்களை விடுவித்தனர். எனினும், ரோமா மக்கள் யாரும் அப்போது உயிருடன் மிஞ்சவில்லை.
ஆகஸ்ட் 2-ம் தேதியை ரோமா மக்கள் இனப்படுகொலை என்று அறிவிக்க வேண்டும் என்று அம்மக்கள் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர். எனினும், நாஜிக்களால் ரோமா மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதை அங்கீகரிக்க, ஜெர்மனி அதிகாரிகளும் அந்நாட்டின் பிற நிறுவனங்களும் தொடர்ந்து மறுத்துவருகின்றனர். இந்தப் புறக்கணிப்பின் காரணமாக, ஐரோப்பாவில் வசிக்கும் ரோமா மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள நேர்கிறது. மிகவும் தாமதமாக, 1982-ல்தான் மேற்கு ஜெர்மனி, ரோமா மக்கள் இனப்படுகொலை சம்பவத்தை அங்கீகரித்தது. எனினும், அரசின் நஷ்டஈடு கிடைப்பதற்கு முன்னரே பல ரோமா மக்கள் மரணமடைந்துவிட்டனர்.
ஐரோப்பாவில், ரோமா இன மக்களைப் போல இனவெறுப்பையும் புறக்கணிப்பையும் சந்திப்பவர்கள் யாருமில்லை. சமூகத்தின் அவலங்களுக்கும் குற்றச் செயல்களுக்கும் அந்த இன மக்கள்தான் காரணம் என்று குற்றம்சாட்ட ஐரோப்பாவின் அரசியல்வாதிகளும் தயங்குவதில்லை. பிரான்ஸின் முன்னாள் அதிபர் ஒருவர், ருமேனியாவின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஒருவர், டென்மார்க்கின் முன்னாள் சட்டத் துறை அமைச்சர் ஒருவர், இத்தாலியின் முன்னாள் பிரதமர் மற்றும் பிரிட்டன் எம்.பி. ஒருவர் என்று இந்தப் பட்டியல் மிக நீளமானது.
ரோமா மக்கள் இனப்படுகொலையை அங்கீகரிப்பதன் அவசியம் என்ன? அப்படி அங்கீகரிப்பதன்மூலம், இன்று வரை அந்த இன மக்கள் சந்தித்துவரும் இனவெறுப்பைப் பற்றிய விழிப்புணர்வை உலகம் அறியச் செய்யலாம். மேலும், இந்த மக்கள்மீது வெறுப்பைக் கக்கும்வகையில் பேசும் அரசியல் தலைவர்கள், பதவிநீக்கம் செய்யப்பட வேண்டும். ஐரோப்பிய அரசியல் தலைவர்கள், உண்மையாகவே தலைவர்களாக நடந்துகொண்டால் மட்டுமே, அந்த மக்கள் மீதான வெறுப்பை வேரறுக்க முடியும்.
- அல்ஜஸீரா தலையங்கம்