Last Updated : 10 Jul, 2024 09:33 AM

 

Published : 10 Jul 2024 09:33 AM
Last Updated : 10 Jul 2024 09:33 AM

புதிய குற்றவியல் சட்டங்கள் - சொல்… பொருள்… தெளிவு

புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1 முதல் அமல்படுத்தப்பட்டுவிட்டன. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக பாஜக தலைமையிலான அரசால் கொண்டுவரப்பட்டிருக்கும் இந்தச் சட்டங்கள் நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவிருக்கும் நிலையில், இச்சட்டங்களின் பின்னணி குறித்துத் தெரிந்துகொள்வது அவசியம்.

பின்னணி: 2022 ஆகஸ்ட் 15இல், இந்தியாவின் 76ஆவது சுதந்திர தின விழாவில் டெல்லி செங்கோட்டையில் உரையாற்றிய பிரதமர் மோடி, காலனிய மனப்பான்மையிலிருந்து நாடு விடுபட வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டினார். அதன் நீட்சியாக பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட குற்றவியல் சட்டங்களை மாற்றிப் புதிய சட்டங்களை உருவாக்க மத்திய அரசு தீர்மானித்தது. கரோனா பொதுமுடக்கக் காலத்தில், இச்சட்டங்களை உருவாக்குவது தொடர்பான ஆலோசனைகள் நடைபெற்றுவந்தன.

அதன்படி இந்தியத் தண்டனைச் சட்டம் 1860 (ஐபிசி [Indian Penal Code]) - பாரதிய நியாய சம்ஹிதா (பிஎன்எஸ்) என்றும்; இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1973 (சிஆர்பிசி [Code of Criminal Procedure]) – பாரதிய நாகரிக் சுரக் ஷா சம்ஹிதா (பிஎன்எஸ்எஸ்) என்றும்; இந்திய சாட்சி சட்டம் 1872 (ஐஇஏ[Indian Evidence Act]) – பாரதிய சாட்சிய அதினியம் (பிஎஸ்பி) என்றும் மாற்றப்பட்டிருக்கின்றன.

ஐபிசி என்பது குற்றங்கள், அதற்கான வரையறைகள், விளக்கங்கள், விதிவிலக்குகள், குறைந்தபட்ச அல்லது அதிகபட்சத் தண்டனைகள் ஆகிய விவரங்களை உள்ளடக்கிய தொகுப்பு. சிஆர்பிசி என்பது ஒரு குற்றத்தில் பாதிக்கப்பட்டவர்கள் - குற்றம் இழைத்தவர்கள் என இரண்டு தரப்பினரையும் காவல் துறை எப்படி அணுகுவது, வழக்கை நீதிமன்றம் வரை எப்படிக் கொண்டுசெல்வது என்பது தொடர்பானது. ஐஇஏ என்பது ஒரு குற்ற வழக்கின் சாட்சியங்களைக் கையாள்வது தொடர்பானது. இந்த மூன்று சட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்டிருக்கும் மாற்றங்கள்தான் தற்போது அமலுக்கு வந்திருக்கின்றன.

அறிமுகமும் நிறைவேற்றமும்: 2023 ஆகஸ்ட் 11 இல் மத்திய அரசால் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தச் சட்டங்கள், பாஜக எம்பி பிரிஜ் லால் தலைமையிலான 31 பேர் கொண்ட நாடாளுமன்ற நிலைக் குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டன. திருத்தங்களுடன் இந்தச் சட்டங்களை 2023 டிசம்பர் 12இல் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் தாக்கல் செய்தார்.

டிசம்பர் 21இல் மாநிலங்களவையில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையில் இல்லை. ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டதாக 140க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இச்சட்டங்கள் இந்தியர்களுக்காக இந்தியர்களால் உருவாக்கப்பட்டவை என உள் துறை அமைச்சர் அமித் ஷா பெருமிதம் தெரிவித்தார்.

அமலாக்கம்: புதிய சட்டங்களின் அடிப்படையில், ஜூலை 1 முதல் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுவருகின்றன. மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் மாவட்டத்தில் ஹாசிரா காவல் நிலையத்தில், திருட்டுச் சம்பவம் தொடர்பாகப் பதிவான வழக்கு - இச்சட்டத்தின்கீழ் பதிவுசெய்யப்பட்ட முதல் வழக்கு. நள்ளிரவு 12.10க்கு இந்த வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. இதையடுத்து, சத்தீஸ்கரின் கபீர்தாம் பகுதியில் அடிதடித் தகராறு தொடர்பாக இன்னொரு வழக்கு பதிவானது.

முக்கிய அம்சங்கள்: நாட்டின் எந்த மூலையில் குற்றம் நடந்தாலும், அதுதொடர்பான முதல் தகவல் அறிக்கையை எந்தக் காவல் நிலையத்திலும் பதிவுசெய்ய முடியும். தாமதத்தைத் தவிர்க்க ‘பூஜ்யம் எஃப்.ஐ.ஆர்’ என்னும் இந்த முறையானது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.

ஒரு நபர், காவல் நிலையத்துக்கு நேரில் செல்லாமலேயே மின்னணுத் தகவல் தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்திப் புகார் அளிக்க முடியும். முதல் தகவல் அறிக்கையை இலவசமாகப் பெற முடியும். மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள், குரல் அஞ்சல்கள் (voicemails), இருப்பிடத் தரவுகள் உள்ளிட்ட எண்ம ஆவணங்களும் இனி வழக்கு விசாரணைக்கான சான்றுகளாக ஏற்றுக்கொள்ளப்படும். அதேபோல், கைதுசெய்யப்படுபவர், அது குறித்துத் தான் விரும்பும் நபருக்குத் தகவல் அளிக்க வாய்ப்பளிக்கப்படுகிறது.

பெண்கள், 15 வயதுக்கு உள்பட்ட சிறார், 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர், உடல் குறைபாடு கொண்டவர்கள், கடும் நோய் பாதிப்புக்குள்ளானவர்கள் ஆகியோர் நேரடியாகக் காவல் நிலையத்துக்கு வர வேண்டியதில்லை. அவர்கள் இருக்கும் இடத்திலேயே காவல் துறையினரின் உதவி கிடைக்கப்பெறும்.

போலீஸார் சோதனை நடத்தச் செல்லும்போது, கேமராவில் அந்நிகழ்வுகளைப் பதிவுசெய்துகொள்ள வேண்டும் என்றும், குற்ற நிகழ்விடத்துக்குத் தடயவியல் நிபுணர்கள் செல்ல வேண்டும் என்றும் புதிய சட்டங்கள் கூறுகின்றன.

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளில் இரண்டு மாதங்களுக்குள் காவல் துறையினர் விசாரணையை நிறைவுசெய்துவிட வேண்டும். வழக்கின் முதல் விசாரணை தொடங்கிய நாளிலிருந்து, 60 நாள்களுக்குள் குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட்டுவிட வேண்டும் என்று சொல்லும் புதிய சட்டம், வழக்கின் வாதப் பிரதிவாதங்கள் நிறைவுற்ற 45 நாள்களுக்குள் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறது.

18 வயதுக்கு உள்பட்ட சிறுமி மீதான கூட்டுப் பாலியல் வன்கொடுமை, கும்பல் கொலை போன்ற கொடூரக் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்க இச்சட்டங்கள் பரிந்துரைக்கின்றன. திருமணம் செய்துகொள்வதாகவோ வேலை வாங்கித் தருவதாகவோ ஒரு பெண்ணுக்கு நம்பிக்கை அளித்து அவருடன் உடலுறவு வைத்துக்கொண்டு, ஏமாற்றுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.

விமர்சனங்கள்: முந்தைய சட்டத்தின்படி, மருத்துவர்கள் தமது பணியில் அலட்சியமாக இருந்ததாகக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் இரண்டு ஆண்டு சிறை அல்லது அபராதம் விதிக்கப்படும். புதிய சட்டத்தின் 106ஆவது பிரிவின்படி ஐந்து ஆண்டு சிறைத் தண்டனையும் அபராதமும் சேர்ந்தே விதிக்கப்படுகிறது. இது மருத்துவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை உருவாக்கியிருக்கிறது.

தேசத்துரோகச் சட்டம் ஒழிக்கப்பட்டுவிட்டது. எனினும், இந்திய இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாடு ஆகியவற்றுக்கு ஆபத்தை விளைவிக்கும் செயல்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்குக் கடும் தண்டனை விதிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இச்சட்டங்கள் ஒருவகையில் காவல் துறையினருக்குக் கடும் பணிச் சுமையை அதிகரிக்கும் என்றும், மறுபுறம் மக்கள் மீதான காவல் துறையின் அதிகாரத்தை அதிகரிக்கும் என்றும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. ஜூலை 1க்கு முன்பு பதிவான வழக்குகள் பழைய சட்டப் பிரிவுகளின் அடிப்படையிலேயே விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பதால் காவல் துறையினர், நீதித் துறையினர் மத்தியில் குழப்பம் நிலவுகிறது.

அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமாக - புதிய சட்டங்களுக்கு ஆங்கிலத்துக்குப் பதிலாக சம்ஸ்கிருதத்தில் பெயர்கள் இருப்பதாகவும் அவற்றைத் தடை செய்ய வேண்டும் என்றும் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x