

இ
ந்திய வங்கிகளும் வங்கியல்லாத நிதி நிறுவனங்களும் கிரிப்டோ கரன்சிகளைப் பயன்படுத்தாமல் விலகியிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறது இந்திய ரிசர்வ் வங்கி. வினோதமான இந்த முடிவால் இந்தியாவுக்குத்தான் பெரும் நிதியிழப்பு என்று எச்சரிக்கிறார் அல்லுமா என்ற நிதி பரிமாற்ற நிறுவனத்தைத் தொடங்கியவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஆகாஷ் அகர்வால்.
கிரிப்டோ கரன்சி என்பது மெய்நிகர் பணம். பெரிய பணக்காரர்களும் முதலீட்டாளர்களும் சர்வதேச அளவில் இதைத்தான் இப்போது உலகப் பொதுச் செலாவணியாகப் பயன்படுத்துகிறார்கள். இதன் மதிப்பை சர்வதேசச் சந்தைதான் நிர்ணயிக்கிறது. இந்த கிரிப்டோ கரன்சி ஏதாவது சூதில் போய் முடியுமோ, இதைப் பயன்படுத்துவதை அங்கீகரித்தால் பொருளாதாரம் சீர்குலைந்துவிடுமோ என்று ரிசர்வ் வங்கி அஞ்சுகிறது. பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளிக்கவும், சட்டவிரோத பணப் பரிமாற்றங்களுக்கும் கிரிப்டோ கரன்சிகள் பயன்படுத்தப்படுமோ என்றும் அது கவலைப்படுகிறது. அதன் கவலையில் நியாயமில்லாமல் இல்லை. ஆனால் அவ்விரு சட்டவிரோத நடவடிக்கைகளும் அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட செலாவணிகளைக் கொண்டும் நடத்தப்படும்போது எப்படித் தடுக்க முடிகிறது?
கிரிப்டோ கரன்சிகளைச் சட்ட விரோதம் என்று கூறி ரிசர்வ் வங்கி தடை விதித்துவிடவில்லை; இந்தியாவில் அதைப் பயன்படுத்தக் கூடாது என்றும் தடுக்கவில்லை. கிரிப்டோ கரன்சி பரிமாற்றச் சந்தைகளை மூட வேண்டும் என்றும் உத்தரவிடவில்லை. கிரிப்டோ கரன்சிகளைக் கையால் தொடுவதற்குக்கூட கூசுகிறது என்பதைத் தவிர வேறு எதுவும் இதில் தெரியவில்லை.
இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவரும் ஆண்டுக்கு தலா ரூ.1.5 கோடியை வெளிநாடுகளில் தொழில், வியாபாரத்துக்காக முதலீடு செய்யலாம் என்று ரிசர்வ் வங்கியின் கொள்கை அனுமதிக்கிறது. இப்போது சுமார் 90 லட்சம் பேர் ‘பிட் காயின்’ உள்ளிட்ட கிரிப்டோ கரன்சிகளை இந்தியாவில் பயன்படுத்துகின்றனர். இதை இந்தியாவுக்குள் பயன்படுத்த அனுமதி மறுத்தால் கிட்டத்தட்ட ரூ.135 லட்சம் கோடி மதிப்புக்கு செலாவணி இந்தியாவை விட்டு வெளியேற வாய்ப்பு இருக்கிறது. இது இப்போதுள்ள நிலையில் மிகப் பெரிய இழப்பாகும்.
கிரிப்டோ கரன்சியை சர்வதேசச் சந்தையில் பயன்படுத்தும் இந்தியர்கள் அதை நிறுத்தப்போவதில்லை. கிரிப்டோ கரன்சிக்கு இந்தியச் செலாவணி கிடைக்காமல் ரிசர்வ் வங்கி தடுத்தாலும் கூட அவர்கள் ஒரு ரக மெய்நிகர் பணத்துக்கு ஈடாக இன்னொரு ரக மெய்நிகர் பணத்தைப் பயன்படுத்தத் தயங்கமாட்டார்கள். (பிட் காயின் என்பது கிரிப்டோ கரன்சிகளில் ஒரு விதம்.)
வெளிநாட்டு நிறுவனங்கள் கிரிப்டோ கரன்சியைத்தான் பரிமாற்றத்துக்குப் பயன்படுத்துகின்றன என்பதால் ரிசர்வ் வங்கி தனது நிலையை மறுபரிசீலனை செய்வது அவசியம். இல்லாவிட்டால் இந்தியர்களுக்கு தொழில், வியாபாரத் தொடர்புகளில் பின்னடைவு ஏற்படும்.
கிரிப்டோ கரன்சிகளில் புழங்கும் இந்தியர்களுக்காகத் தங்களுடைய நிறுவனம் பரிமாற்ற அலுவலகத்தை விரைவில் திறக்கப்போகிறது என்று அல்லுமா நிறுவனத் தலைமை நிர்வாகி ஆகாஷ் அகர்வால் தெரிவிக்கிறார். இந்தியாவில் இதற்குப் பெரிய சந்தை இருக்கிறது என்கிறார். அரசு இவ்விஷயத்தில் தெளிவான முடிவு எடுப்பது அவசியம்!
© தி இந்து ஆங்கிலம்.