அஞ்சலி | இரா.சம்பந்தன்: இறுதிவரை அரசியல் களத்தில்...

அஞ்சலி | இரா.சம்பந்தன்: இறுதிவரை அரசியல் களத்தில்...
Updated on
1 min read

இலங்கைத் தமிழர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்துவந்த மூத்த தலைவரான இரா.சம்பந்தன் ஜூன் 30 அன்று தனது 91ஆம் வயதில் காலமானார்.

வழக்கறிஞரான இவர் இலங்கைத் தமிழரசு கட்சியின் தலைவராகச் செயல்பட்டவர். தமிழர் நலனுக்காகப் பல்வேறு கட்சிகள் ‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு’ என்னும் பெயரில் ஒன்றிணைந்து செயல்பட்டன. அதன் தலைவராக சம்பந்தன் பொறுப்பு வகித்துவந்தார். அதுவே இவரது முதன்மை அடையாளமாக விளங்கியது.

இலங்கை அரசியல் அமைப்பின் வரம்புகளுக்கு உட்பட்டுத் தமிழர் போராட்டங்களை வழிநடத்துபவராக இருந்த சம்பந்தன், 1977இல் நடைபெற்ற இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் கிழக்குத் திரிகோணமலை தொகுதியிலிருந்து முதன்முதலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இறக்கும்போது ஆறாம் முறையாக இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகித்துவந்தார். 2015-2018இல் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகச் செயல்பட்டார்.

இதுவரை இலங்கையில் அமிர்தலிங்கத்தை அடுத்து, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தமிழர் சம்பந்தன் மட்டுமே. இலங்கைப் போரில் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள், காணாமல்போன தமிழர்கள் குறித்த விசாரணை, தமிழர் இடங்கள் ஆக்கிரமிக்கப்படுதல் போன்றவை குறித்த கேள்விகளை உயிர்ப்பாக வைத்திருந்ததில் சம்பந்தனுக்கு முக்கியமான இடம் உண்டு.

அனுபவம், செல்வாக்கு, தனிப்பட்ட திறன் ஆகியவற்றை உள்ளடக்கிய சம்பந்தனது ஆளுமை சார்ந்து அவர் இன்னும் பெரிய அளவில், தமிழருக்கான உரிமையை நிலைநாட்டும் நடவடிக்கைகளில் தாக்கம் செலுத்தியிருக்கலாம் என்கிற விமர்சனமும் முன்வைக்கப்படுகிறது. தான் வாழ்ந்த காலத்திலேயே இத்தகைய கருத்துகளை எதிர்கொண்ட சம்பந்தன், அரசியல் களத்தில் இறுதி மூச்சு வரை நிற்க வேண்டும் என்று விரும்பினார். அதுவே நிகழ்ந்துள்ளது எனலாம்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in