

“சார், இன்று மாலை உங்களை நடைப்பயிற்சியில் சந்திக்க வரலாமா? உங்கள் Walking partners-க்கு (நடைப்பயிற்சி நண்பர்கள்) ஒன்றும் பிரச்சினை இல்லையே?” என்று கேட்டார் நண்பர் அருண் பிரசாத். என்னைப் பற்றிக் கவலைப்படாமல் நண்பர்களின் பிரச்சினையைக் கேட்டது வித்தியாசமாக இருந்தது.
எனினும் நண்பர்களிடம் கேட்க அவகாசம் இல்லை; அதனால் வாருங்கள் என்று சொல்லிவிட்டேன். என் நிஜமான பிரச்சினை அவர் வருவது அல்ல, அவர் குறிப்பிட்ட ‘வாக்கிங் பார்ட்னர்ஸ்’ என்ற சொற்சேர்க்கை பற்றியது.
வாக்கிங் என்பதுடன் ‘பார்ட்னர்’ (Partner) சேருமா, ‘மேட்’ (Mate) இணையுமா என்பதுதான் என் சிக்கல். ‘லைஃப் பார்ட்னர்’, ‘பிசினஸ் பார்ட்னர்’ என்பனவும் ‘கிளாஸ்மேட்’, ‘ரூம்மேட்’ முதலியனவும் பிரபலமான வழக்குகள்.
இன்றைய எந்தப் பிரச்சினைக்கும் முதலுதவிப் பெட்டி கைபேசிதான். அதனிடம் கேட்டேன். அது ‘வாக்கிங் பார்ட்னர்’ என்பது சரியான பயன்பாடு என்று சொல்லிவிட்டது. ஆனால், எங்கெல்லாம் பார்ட்னர் வருவார், எப்போதெல்லாம் மேட் தொடர்வார் என்று அது சொல்லவில்லை.
சொற்களுக்குப் பொருள் தரும் பொது அகராதி, ஒரு மொழியில் எது மரபு என்பதைத் தெரிந்துகொள்ளப் பயன்படாது. அதற்கு ஓரளவுக்கு இணைப்பொருள் சொற்களஞ்சியம் (Thesaurus) உதவலாம். இன்னும் கூடுதலாக அறிய பயன்பாட்டு அகராதியைத் (Usage Dictionary) திருப்ப வேண்டும். ஆக, இவற்றில் எல்லாம் வாக்கிங் என்பதுடன் ‘பார்ட்னர்’ வருகிறாரா, ‘மேட்’ தொடர்கிறாரா என்று கவனித்தேன்.
‘பார்ட்னர்’ என்பதற்கு வாழ்க்கையிலும் வணிகத்திலும் துணைவர், பங்காளி என்கிற வகையில் பொது அகராதி பொருள் தந்திருந்தது. இணைப்பொருள் சொற்களஞ்சியமோ Ally, Associate, Collegue, Consort என பார்ட்னருக்கு 34 இணைச் சொற்களைக் காட்டியது. அதில் mate ஒன்று.
மிகவும் பொருத்தம், பொருத்தம், சுமாரான பொருத்தம் என அவற்றை மூன்று தரங்களாகவும் பிரித்திருந்தது. என்னிடம் உள்ள பயன்பாட்டு அகராதியைப் புரட்டினேன். வாழ்க்கை, தொழில் இவற்றோடு நாட்டியம், விளையாட்டு ஆகியவற்றில் துணையாக வருபவரை ‘பார்ட்னர்’ எனச் சொல்லலாம் என்றது.
பிறகு, வேர்ச் சொற்களைத் தேடிப் புரிந்துகொள்ள முயன்றேன். ஒரே மேசையில் உணவருந்தும் செயலைக் குறிக்கும் ge-mate என்ற ஜெர்மன் மொழிச் சொல்லிலிருந்து பொ.ஆ. (கி.பி.) 1300ஆம் ஆண்டில் ஆங்கிலத்துக்கு ‘மேட்’ வந்ததாம். பகிர்ந்துகொள்ளுதல் என்ற பொருளமைந்த லத்தீன் சொல்லிலிருந்து ‘பார்ட்னர்’ ஆங்கிலத்துக்கு வந்தார் என்று தெரிந்தது. நடைப்பயிற்சியில் உடன் வருவதுதானே நிகழ்கிறது!
கடைசியாக Collocations அகராதியைத் தேடினேன். திருமண உறவு, செயல்பாடு (ஏறுதல், ஆடுதல், விளையாடுதல், பயிற்சி பெறுதல், பயணம் செய்தல் போன்றன), தொழில், சர்வதேச உறவுகள் போன்றவற்றில் ‘பார்ட்னர்’ பெயரடையாகப் (Adjective) பயன்படுத்தப்படுகிறது என்கிற விளக்கம் கிடைத்தது.
‘மேட்’ என்பது துணைவர், நண்பர் என்ற வகையில் துணையாக வருபவரைக் குறிக்கும் பெயரடை என்றது. இவற்றை யோசித்ததில் பயிற்சி, பயணம் என்ற இரண்டு விதங்களுள் பயிற்சித் துணைவர் என்ற வகையில் அடங்கும் ‘வாக்கிங் பார்ட்னர்’ என்பது மரபான சொற்சேர்க்கை என அமைதி பெற்றேன்.
ஆங்கிலத்தில் உள்ளதுபோல Collocation அகராதி தமிழில் உண்டா? திவாகரம், பிங்கலம், சூடாமணி போன்ற பல நிகண்டுகளும் எதுகை அகராதி, வாழ்வியல் அகராதி, வட்டார அகராதி முதலிய விதவிதமான அகராதிகளும் உள்ள தமிழில் இப்படி ஒன்றைச் செய்யாமலா இருப்பர்? வாய்ச்சொல் வீரர்கள் அளவுக்கு அதிக எண்ணிக்கையில் இல்லையாயினும் செயல்வீரர்களும் தமிழில் இல்லாமல் போய்விடவில்லை.
பா.ரா.சுப்பிரமணியனின் முயற்சியில் தற்காலத் தமிழ்ச் சொற்சேர்க்கை அகராதி (தமிழ் - ஆங்கிலம்) ஒன்று 2016இல் வெளிவந்துள்ளது. ‘கொலக்கேஷன்’ என்கிற ஆங்கிலச் சொல்லைச் சொற்சேர்க்கை என்று மொழிபெயர்த்துள்ளனர். வேறு எப்படிச் சொல்வதாம்?
‘முக்கனிகள்’ என்பது தமிழ் மரபு. தவறில்லை என்றாலும் ‘முப்பழங்கள்’ என்று பொதுவாகச் சொல்வதில்லை. ‘closed my Umbrella’ என்ற ஆங்கிலத் தொடரைத் தமிழாக்கும்போது, குடையை மூடினேன் என்றா சொல்வது? குடையை மடக்கினேன் என்பதே தமிழில் மரபு. ‘அன்னமிட்டகை’ (give) என்பது ஒரு மரபான தமிழ்த் தொடர். அன்னத்தைப் படைத்தலும் (offer), அன்னம் பாலித்தலும் (provide) கூட மரபுகள். ஆனால், அன்னம் ‘போடுதல்’ என்பது வழக்கில் இல்லை.
இந்த வகை விளக்கங்கள் கொண்ட சொற்சேர்க்கை அகராதியில் இந்தச் சிக்கலுக்குத் தீர்வைத் தேடினேன். ரூம் மேட் என்று ஒரு பயன்பாட்டைச் சுட்டியுள்ளனர். ‘பலத்த மழை, பலத்த காற்று’ என்பன தமிழ் வழக்குகள். ஆங்கிலத்தில் அவற்றை Heavy rain, Strong wind என்பது மரபு. Strong rain என்றோ Heavy wind என்றோ சொல்வதில்லை. இவ்வகை மரபுகளை எடுத்துக்காட்டுவதுதான் சொற்சேர்க்கை அகராதியின் வேலை.
‘உன் அப்பா நல்ல விசுவாசி, நீயும் அப்படியே இரு’, ‘உன் விசுவாசத்தைக் காட்ட இதுவா நேரம்?’ என்பன மரபான தமிழ்த் தொடர்கள். ‘காட்டு’, ‘இரு’ என்ற சொற்களைத் தவிர, வேறு பிரபலமான பொருத்தமான சொற்களால் பொது வாசகருக்கு எளிதில் புரியவைப்பது சிரமம்.
மொழி மரபைப் பொன்னைப் போலப் போற்றுவது பழமைவாதம் அல்ல. மொழியைப் பொருள் தொடர்ச்சியோடு ஆயிரக்கணக்கான ஆண்டுகளையும் தாண்டிக் கொண்டுசெல்ல ஓர் எளிய வழி. புதியன சேரலாம்; சேர வேண்டும். பொருள் தொடர்ச்சி அறாமல். அதுதான் மொழிக்கு வலிமை.
விசுவாசம் என்கிற பெயர் கொண்ட தமிழ்நாடு அரசு ஊழியர் ஒருவர் இருந்தார். முந்தைய அரசால் அவருக்கு வழங்கப்பட்ட ஒரு தண்டனையைப் பிந்தைய அரசு நீக்கியது. அந்த அறிவிப்பு புதிய அரசின் முதல்வர் முன்னால் அறிவிக்கப்படுகிறது. “விசுவாசத்தை யாராவது தண்டிப்பார்களா?” என இடைமறித்துச் சொன்னார் அமர்ந்திருந்த முதல்வர். அரங்கு ரசித்துச் சிரித்தது. யார் அந்த முதல்வர் எனச் சொல்ல வேண்டுமா? ‘விசுவாசத்தை என்னிடம் காட்டுங்கள்’ என்பது இடைமறிப்பின் உட்கிடை!
- தொடர்புக்கு: athiy61@yahoo.co.in