

தமிழகக் கலைவெளியில் ஒரு படைப்பாளியாகவும் செயல்பாட்டாளராகவும் 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தீர்க்கமாகப் பணியாற்றி வருபவர் கீதா ஹட்சன். சுயமாகக் கற்றறிந்த ஓவியப் பயிற்சிகளிலிருந்தும் அவதானிப்புகளிலிருந்தும் தனக்கான படைப்புலகைக் கண்டடையும் பிரயாசைகளிலிருந்தும் தன்னை உருவாக்கிக்கொண்டவர். அறிதல் பயணத்தின் அத்தியாவசியமான முதல் படிநிலை, அறிந்தவற்றிலிருந்து விடுதலை பெறுவதுதான். கல்விப் புலம்சார் பயிற்சிகளை இவர் பெற்றிராததால் இந்த விடுபடுதலின் சிரமம் இவருக்கு இருக்கவில்லை. அதேவேளை, நம் மரபுக் கலைகள் - நவீன கலைகளின் வளங்களுடன் கொண்ட உறவின் செழுமையோடும் தனித்துவத் திறன்களோடும் தன்னை மேம்படுத்தியபடி, தன் கலைப் பயணத்தைத் தொடர்ந்துகொண்டிருக்கும் கலை ஆளுமை இவர்.
தன் வாழ்வின் தேர்வாகக் கலையை ஏற்றுக்கொண்டு, அயரா உத்வேகத்துடன் செயல்படத் தொடங்கிய கீதா, இத்தேர்வின் ஆரம்ப காலத்திலிருந்தே ஒரு கலை இயக்கச் செயல்பாட்டாளராகவும் தொடர்ந்து தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளார். இவரது 30 ஆண்டு காலக் கலைப் பயணத்தில் 50க்கும் மேற்பட்ட கலை ஆவணப் படங்களை உருவாக்கியிருக்கிறார். அவை, நம் நவீன ஓவியர்கள், சிற்பிகள் பற்றிய ஆவணங்களாகவும், நம் கோயில் கலைகள், நாட்டார் கலைகள், பழங்குடியினர் கலைகள், கலையின் தொன்ம வெளிப்பாடான பாறை ஓவியங்கள் ஆகியவற்றின் ஆவணங்களாகவும் விரிந்த கோலங்கள் கொண்டவை. இதுவரை நம் காலத்திய நவீன கலைஞர்கள் குறித்து மட்டும் 25க்கும் மேற்பட்ட ஆவணப் படங்களை உருவாக்கியிருக்கிறார். இந்தியாவின் பல நகரங்களில் மட்டுமல்லாமல், அயல்நாடுகளிலும் அவற்றைத் திரையிட்டிருக்கிறார்.
இவை சூரியமூர்த்தி, அச்சுதன் கூடலூர், ஆர்.பி.பாஸ்கரன், வித்யாசங்கர் ஸ்தபதி, பி.பெருமாள், அல்ஃபோன்ஸா, சி.டக்ளஸ், மரிய அந்தோணி ராஜ் என விரிந்த பரப்பைக் கொண்டவை. ஆவணப் படங்களை எடுப்பதிலும் அவற்றைக் காட்சிப்படுத்துவதிலும் இன்றுவரை தணியாத ஆர்வத்துடன் கவனம் செலுத்திவருகிறார். ‘தட்சிண் சித்ரா’வில் பல வருடங்கள் கலைக் கண்காட்சிகளை நெறிப்படுத்தி நடத்திய அனுபவங்கள், நம் கலைப் படைப்பாளிகளோடும் கலைகளோடும் நெருக்கமான உறவை இவருக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. மேலும், அந்த அமைப்பின் அடிப்படை நோக்கமான நம் பாரம்பரியக் கலை வளங்களைப் போற்றுவதும் பாதுகாப்பதும் கவனப்படுத்துவதுமான செயல்பாடுகள், இவருக்கு ஒரு பாதை வகுத்துக் கொடுத்திருக்கின்றன. அந்தப் பாதையில் இவர் மேற்கொண்ட பயணங்கள் நம் காலத்துக்கான கொடையாக வெளிப்பட்டிருக்கின்றன.
சுவர்ச் சித்திரத்தன்மை ஓவியங்கள்
நம் கோயில் கலைகள் பற்றிய ஆவணப்படுத்தல், இந்தப் பயணத்தின் ஓர் அம்சமாக அமைந்தது. கோயில் சார்ந்து கலைகள் உருவான நெடிய பாரம்பரியம் கொண்டது நம் சமூகம். நம்முடைய கோயில் சிற்பங்களும் சுவர்ச் சித்திரங்களும் நம் கலைப் பெருமிதங்கள். நம்முடைய நவீன சிற்பிகளும் ஓவியர்களும் இவற்றின் வளமான தாக்கங்களைத் தம் கலைப் பயணத்தில் அடைந்திருக்கிறார்கள். நம்முடைய கோயில் கலைகள் பற்றிய அறிதல்களுக்காகவும் ஆவணப்படுத்தலுக்காகவும் இவர் மேற்கொண்ட பயணம் நம்முடைய தமிழ்நாட்டுக் கோயில்களின் சுவரோவியங்கள்மீது ஓர் அலாதியான கவர்ச்சியை அவருள் விளைவித்தது. வசீகர ஈர்ப்பும், ஒரு நிகழ்ச்சி பற்றிய குறுங்கதைத் தன்மையும், வண்ணங்களின் பொலிவும், வடிவ அழகும் கொண்ட நம் சுவரோவிய மரபின் ஈடுபாட்டிலிருந்து இவர் தனக்கான பிரத்தியேகப் படைப்புகளை ‘சுவரோவியங்கள்’ என்கிற வரிசையாக உருவாக்கினார்.
ஒருவகையில் இவை பிரதியாக்க முயற்சிதான்; எனினும், பொதுவாகச் சுவர்ச் சித்திரங்கள் உட்கொண்டிருக்கும் ஒரு நிகழ்ச்சி பற்றிய குறுங்கதைத் தன்மையிலிருந்து, ஒரு சிறு பகுதியை மட்டும் தன் கேன்வாஸிற்கு நேர்த்தியாக இடமாற்றம் செய்கிறார் கீதா. சுவர்ச் சித்திரத்தின் நிகழ்ச்சித் தன்மையிலிருந்து அது துண்டிக்கப்பட்டு, தனித்ததொரு படைப்புப் பொருளாக உருமாற்றம் பெறுகிறது. இப்படித்தான் இவருடைய சுவரோவியப் பெண்கள் உருக்கொள்கிறார்கள். இந்தப் பரிவர்த்தனையின்போது செயல்படும் கீதாவின் படைப்பு மனம், சுவர்ச் சித்திரத்தின் கதைத் தன்மைக்கு மாற்றாக ஒரு கவித்துவத் தருணத்தைத் தன் கேன்வாஸில் வசப்படுத்துகிறது.
வான்காவின் பிரத்யேகமான சூரியகாந்தி ஓவியங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. அவை வாழ்வுக்கும் காலத்துக்குமான உறவில் வான்கா படைத்திருக்கும் பரிபூரணக் கலை வெளிப்பாடுகள். சூரியகாந்திப் பூக்களை, இயற்கை தன்னகத்தே கொண்டிருக்கும் வாழ்வாதார சக்திக்கான ஒரு குறியீடாக வான்கா கருதினார். “சூரியகாந்தி ஓவியங்களில் மனிதனுக்கும் பிரபஞ்சத்துக்குமான ஒரு தெளிந்த உறவைத் தான் வாழும் காலத்தில் மிக அற்புதமாக வசப்படுத்தியிருக்கிறார்” என்று சிலாகிக்கிறார் எழுத்தாளர் டி.எச்.லாரன்ஸ். அவற்றின் பாதிப்புகளிலிருந்தும் ஆகர்சிப்புகளிலிருந்தும் கீதா உருவாக்கிய சூரியகாந்தி வரிசை ஓவியங்கள் இவருடைய கலை நேர்த்திக்கும் தனித்துவ வெளிப்பாட்டுக்குமான அடையாளம். வான்காவின் சூரியகாந்திகள் சூரியத் தகிப்பு கொண்டவை எனில், கீதா ஹட்சனின் சூரியகாந்திகள் நிலவின் குளுமை கொண்டவை. கீதாவின் சூரியகாந்திகளை நாம் வியந்து காணும் தருணங்களில் அவையும் தம் ஒளிரும் கண்களால் நம்மோடு உறவாடுகின்றன.
அரூபமும் ரூபமும்
கீதா, தன் இடையறாத கலைப் பயணத்தில் இன்று ஒரு தேர்ந்த அரூப ஓவியராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். இந்த முழுமையான அரூப ஓவியக் கலைவெளியையும் ஒரு சீரான வளர்ச்சியில்தான் இவர் கண்டடைந்திருக்கிறார். சுவரோவியங்கள் வரிசை, சூரியகாந்தி வரிசையைத் தொடர்ந்து, இவர் அரூபமும் உருவமும் ஊடாடிய படைப்புவெளிக்குள் பிரவேசித்தார். அரூபவெளியில் இவருடைய சுவரோவியப் பெண்கள் வந்தமர்ந்தனர். அதனையடுத்து, இசைரூபமான கலை வெளிப்பாட்டுக்கான உந்துதலில் இவருடைய ‘இசை’ ஓவிய வரிசை உருவானது. இந்த வரிசை ஓவியங்கள்தான், இவர் படைப்புகள் மீதான என் ஈர்ப்புக்கு முதல் ஆதாரமாக அமைந்தவை. இவருடைய பிரத்யேக வண்ணமான அடர்சிவப்பின் பல்வேறு சாயல்களும் தொனிகளும் மேவிய அரூப வெளியில் இசைக்கருவிகளின் உருவங்கள் ஓர் அழகிய வெளிப்பாடாக இடம்பெற்றன. இசையின் அரூப அழகையும் லயத்தையும் இந்த வரிசை ஓவியங்கள் வசப்படுத்தின.
இப்போது முழுமையான அரூப ஓவியராக, அவருடைய பிரத்யேக வண்ணமான அடர்சிவப்பின் எண்ணற்ற சாயல்களில், தொனி அழகோடு ஓர் அற்புத வண்ண ஆலாபனையை நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். இவ்வரிசை ஓவியங்களில் ஊடுபாவாக இழையோடும் கறுப்பு, வெள்ளை, பழுப்பு வண்ணங்களின் திட்டுக்களும் ஒரு மேலான சஞ்சாரத்துக்குத் துணைபுரிகின்றன. நம் மனதின் நாண்களை அலாதியாக மீட்டுகின்றன. கீதாவின் ஓவியங்களோடும் ஆவணப்படங்களோடும் நாம் கொள்ளும் உறவு, ஒரு செழுமையான கலை அனுபவமாக அமையும்.
- கவிஞர், கலை விமர்சகர்
தொடர்புக்கு:kaalamkalaimohan@gmail.com