

புலிட்சர் விருது பெற்ற நாடகம் ‘ஹவ் ஐ லேர்ன்ட் டு டிரைவ்’ (How I Learned to Drive). இது புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளர் பவ்லா வோகல் 1997இல் எழுதிய நாடகமாகும். இதை அடிப்படையாகக்கொண்டு திரைப்பட நடிகை, நாடக இயக்குநர் அபர்னா கோபிநாத், ‘ஸ்டாப், லுக், பட் பிரொசீட்’ (Stop, Look, But Proceed!) என்கிற தலைப்பில் ஒரு நாடகத்தை இயக்கியுள்ளார்.
ஆங்கில மூலத்தில் இடம்பெற்றிருந்த அங்கிள் பெக் என்கிற கதாபாத்திரம், லிட்டில் பிட் என்கிற சிறுமியிடம் தகாத உறவைக் கொண்டிருக்கும். பெக், அந்தக் குழந்தையினுடைய அத்தையின் கணவர். குடும்பத்திற்குள் நடக்கும் பாலியல் வன்முறையைச் சித்தரிக்கும் நாடகம் அது. பெக் அங்கிள் கதாபாத்திரத்துக்கு அபர்னா, ‘குட் அங்கிள்’ எனப் பெயர் வைத்திருக்கிறார். அந்தக் கதாபாத்திரம் எப்படிப்பட்டது என்பதை ஒரு முரணுடன் மாற்றியிருக்கிறார் இயக்குநர். லிட்டில் பிட் என்ற சிறுமிக்கான கதாபாத்திரம் புக்கூ என மாற்றப்பட்டிருக்கிறது. புக்கூ என்னும் இந்த ஒரே கதாபாத்திரத்தில் பிரகதி, ஃபவாஸ், சஞ்சனா, சீமா எனப் பலரும் நடித்திருக்கிறார்கள். இது புதுமையான முயற்சி. இதன் வழி இந்த வன்முறை காலங்காலமாக எல்லார் மீதும் நிகழ்த்தப்படுவதையும் இயக்குநர் சொல்கிறார்.
நாடகத்தின் கருப்பொருளைத் தீவிரமாக்கப் பொம்மைகளையும் சிறப்பாகப் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர். பாவைக்கூத்துபோல வெளிச்சத்தில் பொம்மைகளும் அபிநயம் பிடிப்பது நல்ல அனுபவமாக இருந்தது. திரைப்படத்தில் வரும் பிளாஷ்பேக் காட்சியைப் போலப் பயன்படுத்தியிருந்த விதமும் நேர்க்கோட்டில் இல்லாத (non-linear) விவரிப்பு முறையும் ஒரு திரைப்படம் பார்க்கும் அனுபவத்தைத் தருகிறது.
இந்நாடகம் எழுதப்பட்டு 27 ஆண்டுகள் கடந்த பிறகும், சமகாலத்தில் பெண் குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளோடு தொடர்புபடுத்திக்கொள்ள முடியும் அளவுக்கு, பெண்களைச் சுற்றிச்சுழலும் வன்முறைகளின் தீவிரம் இன்னும் மோசமாகிக்கொண்டே இருக்கிறது. தமிழ், ஆங்கிலம், மலையாளம், கொஞ்சம் இந்தி எனப் பல மொழிகள் நாடகத்தில் பேசப்படுகின்றன. பாபு என்ற சிறுவனை ஆசை வார்த்தை கூறித் தன் ஆசைக்கு அடிபணிய வைக்கும் ஒரு காட்சியை, டார்ச் லைட் வெளிச்சத்தில் வெள்ளைத் திரையில் காட்டப்படும் மீனுக்குத் தூண்டில் போடும் ஒருவனுடன் ஒப்பிட்டு, பெண் குழந்தைகள் மட்டுமின்றி ஆண் குழந்தைகளும் இதனால் பாதிப்புக்குள்ளாகிறார்கள் என்பதையும் இந்த நாடகம் சித்தரிக்கிறது.
தீவிரமான நாடகங்களுக்கு மத்தியில், முன்னுக்குப் பின் வசனத்தை உச்சரிப்பதில் நடிகர்களுக்குள் சிக்கல்கள் இருந்தாலும் அதைப் பகடி செய்துகொண்டு, புதிய அலை நாடக பாணியில் மாற்ற முயன்றிருக்கிறார்கள்.
வளரும் பருவத்தில் பெண்கள் கற்றுக்கொள்ள விரும்பும் நடனம், இசை, வாகனம் ஓட்டுவது போன்றவற்றில் கற்றுக்கொடுக்கிறேன் பேர்வழி என்று ஆர்வமாகப் புன்னகைத்தபடி நிற்கும் பக்கத்து வீட்டு மாமாவையும், நெருங்கிய வட்டத்திற்குள் இருக்கும் சொந்தங்களையும், அலைபேசியைப் பார்த்தபடியே மனைவி சொல்வதைக் காதில் போட்டுக்கொள்ளாத கணவன்களும் “மாமா எது சொன்னாலும், உன் நல்லதுக்குத்தான் சொல்வார்” என்று பிள்ளைகளைவிட மற்றவர்களை நம்பும் பெற்றோர்களும் உண்மை நிலைமையை உணர வேண்டியதன் அவசியத்தை நினைவூட்டுகிறது இந்த நாடகம். பெற்றோர், குறிப்பாக பெண் குழந்தைகளின் பெற்றோர் அவசியம் பார்க்க வேண்டிய நாடகம்.
(இந்த நாடகம், இன்று (30.06.24) மாலை 7 மணிக்கு சென்னை, விருகம்பாக்கத்தில் கூத்துப்பட்டறை அரங்கில் நடைபெறவுள்ளது. அனுமதி இலவசம். தொடர்புக்கு: 044-4860 7655)
- ஜி.ஏ.கௌதம்
திரைப்படத் தொகுப்பாளர்
தொடர்புக்கு: goodbadeditor@gmail.com