தொடு திரையால் என்னை தொந்தரவு செய்ய முடியாது என்று உரக்கச் சொல்வோம்! - மனநல வழிகாட்டுதல்
“என்னன்னு தெரியல கொஞ்ச நாளா யார் கிட்டயும் சரியா பேச மாட்டேங்கிறான்... ரூமுக்குள்ளே போய் தனியா கதவைச் சாத்திக்கிறான்” | “என் மூக்கு சரியாயில்ல உடம்பு குண்டா இருக்கு எல்லாரும் போட்டோ பாத்துட்டு கிண்டல் பண்றாங்க..எனக்கு மூக்கை மாத்திக் கொடும்மான்னு அழுறா சார் என் பொண்ணு…” - இப்படிப்பட்ட பிரச்சினைகளுடன் வரும் பள்ளி குழந்தைகள் பலரை என்னை போன்ற மனநல மருத்துவர்கள் தினந்தோறும் சந்தித்து கொண்டிருக்கிறோம். மேற்சொன்ன சிக்கல்களுக்கும் இளையோரின் சமூக ஊடக பயன்பாட்டுக்கும் நெருங்கிய தொடர்புள்ளது.
மூளையில் சுரக்கும் டொபமின் (dopamine) வேதிப்பொருளும் மூளையின் சில பகுதிகளும் பங்கெடுப்பதன் மூலம் மது முதலான போதைப் பழக்கங்களுக்கு அடிமை ஆகிறோம். அதற்குச் சற்றும் குறைந்ததில்லை சமூக ஊடகம். அதனால்தான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிலிருந்து மீண்டு வரச் சிரமப்படுகிறோம். ஸ்மார்ட்போனை பிடுங்கினால் குழந்தைகளுக்கு வரும் கோபத்தைக் கூர்ந்து கவனியுங்கள், புரியும். விருப்பக்குறிகள் விழவேண்டும், நமது சேனல் பரபரப்பாக வேண்டும், அதன் மூலம் கோடி கோடியாக வேலைக்குச் செல்லாமலே சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்தில் எத்தனை இளைஞர்கள் யூடியூப் போன்றவற்றில் பதிவிடுவதற்காக நேரத்தையும் பணத்தையும் செலவிட்டு ரிஸ்க் எடுக்கிறார்கள்.
இன்னொரு புறம் தன்னை கேவலமாகப் பேசி மனதைக் கொல்லும் நபர்களால் cyber bullying என்று சொல்லப்படும் காரியங்களால் தற்கொலை முயற்சியில் ஈடுபடும் சிறார்கள் அதிகம்.
'நோ’ சொல்லும் நாடு: 13 முதல் 18 வயது வரையிலான சிறார்களை எடுத்துக்கொண்டால் ஒரு நாளைக்கு 6இலிருந்து 9 மணி நேரம்வரை சமூக ஊடக பயன்பாட்டில் செலவிடுகின்றனர் என்கிறது புள்ளி விவரம். பிரான்ஸ் நாட்டில் இப்பிரச்சினை கைமீறி போனதால் அந்நாட்டு அரசு ஆய்வுக்குழு நியமித்தது. அந்த குழு வெளியிட்ட ஆய்வறிக்கையில் இடம்பெற்ற முக்கிய பரிந்துரைகள்:
# 13 வயதுவரை குழந்தைகள் ஸ்மார்ட்போன்களை அண்டவே கூடாது.
# 18 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது. குறிப்பாக டிக்டாக், ஸ்நாப் சாட் மற்றும் இன்ஸ்டாகிராம் கூடவே கூடாது. இந்தப் பரிந்துரைகள் விரைவில் சட்டமாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று பிரான்ஸ் உஷாரானது போல் நாளை எல்லா நாடுகளிலும் நடக்கலாம்.
தொழில்நுட்பத்தின் அடுத்த அடுத்த வளர்ச்சியென்பது மென்மேலும் அதனை நாம் பயன்படுத்த தூண்டும் வகையில்தான் வடிவமைக்கப்படும். அதைப் பற்றி எந்த பன்னாட்டு நிறுவனங்களும் கவலைப் படப்போவதில்லை. நம் பிள்ளைகளின் மனநலன் மற்றும் உடல்நலன் பற்றி நாம்தான் கவலை கொள்ள வேண்டும்.
தடுக்க வழி உண்டா? - குழந்தைகள் எதையும் தாமாக செய்வதில்லை. பெற்றவர்களும் மற்றவர்களும் செய்வதைதான் அவர்களும் செய்கின்றனர். மாலை அனைவரும் வீட்டில் கூடும்போது போன் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். அதிலேயே மூழ்கிவிட்டு குழந்தைகளையும் அந்நியப்படுத்தும் தவறை பெற்றோர் செய்யலாகாது.
எத்தனையோ நல்ல விஷயங்களுக்கு சமூக ஊடகங்களைப் பயன்படுத்தலாம். தொலைந்த நட்பைப் புதுப்பிக்க, அரிதான நம் திறமையை வெளிச்சம் போட்டுக்காட்ட, நியாயமான காரணத்திற்காக நிதி திரட்ட, ஏதேனும் உதவி வேண்டியவர்களுக்கு அதை கிடைக்கச் செய்ய எனப்பலவாறு நல்ல செயல்களுக்கும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தலாம்.
சமூக ஊடகப் பயன்பாட்டின் நன்மை தீமைகளைக் குழந்தைகளும் அறியச் செய்ய வேண்டும். தொடுதிரையும் இணையமும் நம்மை அடிமைப்படுத்தி மன நோயாளியாக்கும் வல்லமை பெற்றவை என்பதைப் பள்ளிகள் முதல் பக்கத்து வீடுவரை உள்ள குழந்தைகளுக்குத் தெரியப்படுத்தி ஒரு விழிப்புணர்வு இயக்கமாகவே எடுத்துச் செல்ல வேண்டும்.
எந்தத் தொடு திரையாலும் என்னைத் தொந்தரவு செய்ய முடியாது என்ற தன்னம்பிக்கை என்னும் இரும்புத்திரையைத் தம்மைச் சுற்றிக் குழந்தைகள் போட்டுக் கொள்ள வேண்டும். அதற்கு பெற்றோர் முதல் அரசாங்கம்வரை இணைந்து செயலாற்ற வேண்டிய நேரம் வந்து விட்டது.
- கட்டுரையாளர்: மனநல மருத்துவர், ‘இணையச் சிறையின் பணயக் கைதிகள்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்; தொடர்புக்கு: drmohanv18@gmail.com
| ஜூன் 30 - உலக சமூக ஊடக நாள் |
