அசாஞ்ச்: விடுதலையின் விலை என்ன?

அசாஞ்ச்: விடுதலையின் விலை என்ன?
Updated on
3 min read

‘அசாஞ்ச் தான் செய்த குற்றங்களுக்காகச் சிறையில் அடைக்கப்படவில்லை; பிறர் இழைத்த குற்றங்களை அம்பலப்படுத்தியதால்தான் அவருக்கு இந்த நிலை’ - சமீபத்தில் விடுதலையாகியிருக்கும் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் குறித்த அரசியல் விமர்சகர் ஜேம்ஸ் மெல்வில் தனது ‘எக்ஸ்’ தளப் பக்கத்தில் தெரிவித்திருந்த வார்த்தைகள் இவை.

14 ஆண்டுகாலத் தனிமை: 2010 இல் விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்ட காணொளியில், இராக் தலைநகர் பாக்தாதில், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு பத்திரிகையாளர்கள் உள்பட 10க்கும் மேற்பட்டோர் அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டரிலிருந்து குண்டுவீசிக் கொல்லப்பட்ட சம்பவம் பதிவாகியிருந்தது; கூடவே, கொல்லப்பட்டவர்கள் குறித்து வசைச்சொற்களும் ராணுவத்தினரின் எக்காளச் சிரிப்பும்.

‘தீவிரவாதத்துக்கு எதிரான உலகளாவிய போர்’ என்னும் பெயரில் ஆப்கானிஸ்தான், இராக் போன்ற நாடுகளில் அமெரிக்க ராணுவம் நிகழ்த்திய கொடுமைகளை விக்கிலீக்ஸ் வெட்டவெளிச்சமாக்கியது. உலகம் அதிர்ந்தது. அசாஞ்ச் குறிவைக்கப்பட்டார்.

2010 இல் அவர் மீது பாலியல் புகார் சுமத்தப்பட்டது (பின்னாள்களில் அது திரும்பப் பெறப்பட்டது). உளவு பார்த்ததாக அமெரிக்க நீதித் துறையும் வழக்கு தொடர்ந்தது. வழக்கு விசாரணைக்காக பிரிட்டன் சென்றவர் கைதுசெய்யப்பட்டார்.

2012இல் பிணையில் வெளிவந்தவர் லண்டனில் உள்ள ஈக்வடார் நாட்டின் தூதரக அலுவலகத்தில் தஞ்சமடைந்தார். 2019இல் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதும் மீண்டும் கைதுசெய்யப்பட்டார். இப்படி அமெரிக்கா தனது கூட்டாளிகளான பிரிட்டன், ஸ்வீடன் மூலம் தொடர்ந்து அவருக்கு அழுத்தம் தந்தது.

கடைசி நேர நிம்மதி: 14 ஆண்டுகாலச் சட்டப் போராட்டத்துக்குப் பின்னர் ஒருவழியாகத் தனது தாய்நாடான ஆஸ்திரேலியாவுக்கு ஒரு சுதந்திர மனிதராகத் தற்போது திரும்பிவிட்டார் அசாஞ்ச். அமெரிக்காவுக்கு அவரை நாடு கடத்துவது தொடர்பான வழக்கில், இன்னும் இரண்டு வாரங்களில் பிரிட்டனில் உள்ள நீதிமன்றத்தில் அவர் ஆஜராக வேண்டும் என்ற சூழலில் - கடைசி நேரத்தில் - இந்த விடுதலை சாத்தியமாகியிருக்கிறது.

அமெரிக்காவில் 18 குற்றவியல் வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில், அவருக்கு 175 ஆண்டுகள்வரை சிறைத்தண்டனை வழங்கப்படவும் சாத்தியம் இருந்தது. அதையெல்லாம் தவிர்க்க அவர் செய்ததெல்லாம் தன் மீதான குற்றச்சாட்டுகளை - அமெரிக்க நீதித் துறையுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி - அந்நாட்டின் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டதுதான்.

வடக்கு மரியானா தீவுகளின் தலைநகரான சைபானின் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜரான அசாஞ்சுக்கு, உளவு பார்த்தது தொடர்பான வழக்கில் ஏறத்தாழ ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படும் என்று அனுமானிக்கப்பட்டிருந்தது. லண்டனில் உள்ள பெல்மார்ஷ் சிறையில் அந்தத் தண்டனைக் காலத்தை ஏற்கெனவே கழித்துவிட்டதால் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

அனுமதியின்றி அமெரிக்காவுக்கு வரக் கூடாது என்றும் அவருக்குத் தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. சைபான், ஆஸ்திரேலியாவுக்கு அருகில் உள்ள பிரதேசம் என்பதால் மட்டுமல்ல, முதன்மை அமெரிக்க நிலத்துக்குள் நுழைய அவருக்குத் தயக்கம் இருந்த காரணத்தினாலும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. அசாஞ்ச் புதன்கிழமை (ஜூன் 26) அன்று மாலை 7.30 மணி அளவில் ஆஸ்திரேலியத் தலைநகர் கான்பெரா சென்றடைந்தபோது, அவரது ஆதரவாளர்கள் ஆரவாரித்தனர்.

விடுதலை சாத்தியமானது எப்படி? - 2022 மே மாதம், ஆஸ்திரேலியாவின் பிரதமராக ஆண்டனி அல்பனீஸ் பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர் அசாஞ்ச் விடுதலைக்கான சாதகமான அம்சங்கள் உருவாகின. அசாஞ்சின் செயல்பாடுகள் அனைத்தையும் ஆதரிக்கவில்லை என்றாலும், இனிமேலும் அவர் சிறையில் அடைபட்டிருக்கக் கூடாது என அல்பனீஸ் தொடர்ந்து வலியுறுத்திவந்தார்.

வெளிநாடுகளில் சிறையில் அடைபட்டிருக்கும் ஆஸ்திரேலியர்களைத் தாய்நாட்டுக்கு மீட்டுக் கொண்டுவருவதை ஒரு கொள்கையாகக் கொண்டிருக்கும் அல்பனீஸ் அரசு இதற்கான தீவிர முயற்சிகளில் இறங்கியது. ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் இதுதொடர்பாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அசாஞ்ச் விடுதலை தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் அல்பனீஸ் தொடர்ந்து வலியுறுத்திவந்தார். கடந்த ஆண்டு வாஷிங்டன் சென்றிருந்த ஆஸ்திரேலிய அரசியல் தலைவர்கள் இதுதொடர்பாக அமெரிக்கத் தலைவர்களிடமும் உயரதிகாரிகளிடமும் பேசினர். அமெரிக்க – ஆஸ்திரேலிய நல்லுறவைப் பேணும் வகையில் அசாஞ்ச் விடுதலையில் கூடுதல் முனைப்புக் காட்டப்பட்டது. இதற்கு பிரிட்டன் தரப்பும் ஒத்துழைப்பு நல்கியது.

வரவேற்பும் விமர்சனமும்: மனித உரிமைகள் தொடர்பான அக்கறையைத் தொடர்ந்து வெளிப்படுத்திவந்த அசாஞ்சின் விடுதலை வரவேற்புக்குரியது என ஐ.நா. தெரிவித்திருக்கிறது. எதிர்பார்த்தது போலவே, அமெரிக்க அதிகார வர்க்கம் அவரது விடுதலையை ரசிக்கவில்லை. அசாஞ்சின் விடுதலையில் எந்த விதத்திலும் பங்கேற்கவில்லை என்று வெள்ளை மாளிகை தெரிவித்திருக்கிறது.

“அதெல்லாம் அமெரிக்க நீதித் துறை சம்பந்தப்பட்டது” என்று வெள்ளை மாளிகைப் பாதுகாப்பு ஆலோசகர் ஜான் கிர்பி கூறியிருக்கிறார். அசாஞ்சின் விடுதலை மூலம் நீதி வழுவிவிட்டதாகவும், அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றியவர்களின் சேவையும் தியாகமும் அவமதிக்கப்பட்டுவிட்டதாகவும் முன்னாள் துணை அதிபர் மைக் பென்ஸ் விமர்சித்திருக்கிறார்.

விக்கிலீக்ஸின் செயல்பாடுகளால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று சைபான் நீதிமன்றமே தெரிவித்திருந்தாலும், அமெரிக்க வெளியுறவுத் துறை அதை ஏற்கவில்லை. ஒருவகையில் அசாஞ்சின் விடுதலை சுதந்திரச் சிந்தனையாளர்களால் வரவேற்கப்பட்டாலும், அதற்காக அவர் அமெரிக்க அரசிடம் சமரசம் செய்துகொண்டு - தன் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டு - விடுதலை பெற்றதைப் பலர் அவ்வளவாக ரசிக்கவில்லை.

அசாஞ்சின் வரிசையில், அமெரிக்கர்களின் தனிப்பட்ட விவரங்களை அந்நாட்டின் தேசியப் பாதுகாப்பு அமைப்பு (என்.எஸ்.ஏ.) உளவு பார்த்தது தொடர்பான தகவல்களைப் பகிரங்கப்படுத்திய எட்வர்டு ஸ்னோடென், இராக் மீதான அமெரிக்க ராணுவத்தின் ரகசியங்களை விக்கிலீக்ஸுக்கு வழங்கிய செல்சியா மேனிங் போன்றோர் உலகின் கவனம் ஈர்த்தவர்கள்.

ஸ்னோடென் வேறு வழியின்றி ரஷ்யாவில் தஞ்சமடைந்திருக்கிறார்; செல்சியாவுக்கு வழங்கப்பட்டிருந்த தண்டனை அப்போதைய அதிபர் ஒபாமாவால் குறைக்கப்பட்டு 2017இல் அவர் விடுவிக்கப்பட்டார். இணையத்தின் பயன்பாடு உலகின் மூலைமுடுக்கெல்லாம் பரவியிருக்கும் இன்றைய காலகட்டத்தில் ஊடகத் துறையில் எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன.

பெகாசஸ் வேவு மென்பொருள் மூலம் பல்வேறு நாடுகளில் எதிர்க்கட்சித் தலைவர்கள், ஊடகவியலாளர்கள், செயற்பாட்டாளர்கள் வேவு பார்க்கப்பட்டது தொடர்பான தகவல்களைப் பகிரங்கப்படுத்தும் அளவுக்கு ஊடகங்கள் துணிச்சலாகச் செயல்படுகின்றன. அவர்களுக்கெல்லாம் அசாஞ்ச் ஊக்கம் தருபவராகவே இருப்பார்.

2016 அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் தோல்வியடைய விக்கிலீக்ஸ் முக்கியக் காரணமாக இருந்தது. அந்தத் தேர்தலில், ரஷ்யாவின் உதவியுடன் ஜனநாயகக் கட்சியின் ஆவணங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டது, அசாஞ்ச் மீதான விமர்சனங்களில் முக்கியமானது (அந்தக் காலகட்டத்தில் ஈக்வடார் தூதரகத்தில் அசாஞ்ச் தங்கியிருந்தார்).

ஹிலாரி அதிபரானால் பிற நாடுகள் மீது அமெரிக்கா போர் தொடுப்பது தொடரும் என அசாஞ்ச் கருதியதாக அப்போது செய்திகள் வெளியாகின. ஒருவகையில், பிற நாடுகளில் நேரடியாக ராணுவத் தலையீடுகள் செய்வதை அமெரிக்கா குறைத்துக்கொண்டதற்கும் அசாஞ்ச் போன்றோரின் துணிச்சலான செயல்பாடுகள் காரணம் என்று சொல்லலாம்.

அதேவேளையில், இன்றும் உலகம் போர்களிலிருந்து மீண்டுவிடவில்லை. உக்ரைன், காஸா என உலகின் பல்வேறு பகுதிகளில் போர்கள், உள்நாட்டுக் கலகம் என மனித குலத்துக்கு எதிரான பேரழிவுச் செயல்பாடுகள் தொடரவே செய்கின்றன. இப்படியான தருணத்தில் அசாஞ்ச் போன்றோரின் செயல்பாடுகள் முக்கியமானவை.

மெளனம் கலையுமா? - தீர்ப்பை எதிர்கொள்வதற்காக சைபான் நீதிமன்றத்துக்குச் சென்றபோது மட்டுமல்ல, விடுதலையாகி வெளியில் வந்தபோதும், ஆஸ்திரேலியா திரும்பிய பின்னரும் செய்தியாளர்களிடம் அசாஞ்ச் எதுவும் பேசவில்லை.

கான்பெராவில்கூட அவரது மனைவி ஸ்டெல்லாதான் செய்தியாளர்களிடம் பேசினார். விக்கிலீக்ஸ் இணையதளத்தின் செயல்பாடுகள் தொடரும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. முன்புபோல அசாஞ்ச் அதிரடியாகச் செயல்படுவாரா, ஆஸ்திரேலிய அரசு அதை அனுமதிக்குமா என்பது போகப்போகத் தெரியும்!

- தொடர்புக்கு: chandramohan.v@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in