அஞ்சலி: பெ.குகானந்தம் - எளிய மக்களை நேசித்த மருத்துவர்

அஞ்சலி: பெ.குகானந்தம் - எளிய மக்களை நேசித்த மருத்துவர்
Updated on
2 min read

சிகிச்சைகளின் மூலம் உயிர்காக்கும் பணியை மருத்துவர்கள் செய்கிறார்கள். சில மருத்துவர்கள் அதையும் தாண்டிப் பொதுச் சுகாதாரத்தை மேம்படுத்துவதன் மூலம் மக்களின் ஆயுளை நீட்டித்து வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்துகிறார்கள். அத்தகையவர்களில் ஒருவரான மருத்துவர் பெ.குகானந்தம் (68), உடல்நலக் குறைவால் ஜூன் 24 அன்று காலமானார்.

சென்னை மாநகராட்சியின் முன்னாள் நகரச் சுகாதார அலுவலராக இருந்த குகானந்தத்தின் மறைவையொட்டி அரசியல் தலைவர்கள், மாநகராட்சி அதிகாரிகள், மருத்துவர்கள், மூத்த பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் வெளியிட்ட அஞ்சலிக் குறிப்புகள் சென்னையின் பொதுச் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் அவருடைய பங்களிப்பையும் எளிய மக்களின் உடல்நலன் குறித்து அவருக்கு இருந்த தீராத அக்கறையையும் பறைசாற்றுகின்றன.

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் எளிய பின்னணியைக் கொண்ட குடும்பத்தில் பிறந்தவரான குகானந்தம், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரியிலும் சென்னை மருத்துவக் கல்லூரியிலும் மருத்துவப் பட்டங்களைப் பெற்றவர். அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட வெளிநாடுகளில் தொற்றுநோய்கள், எய்ட்ஸ் ஆகியவற்றுக்கான சிறப்புப் படிப்புகளை முடித்தவர். 1987இல் சென்னை மாநகராட்சிப் பணியில் சேர்ந்தார். தொற்றுநோய் மருத்துவ நிபுணரான அவர், தண்டையார்பேட்டையில் உள்ள தொற்றுநோய்கள் மருத்துவமனையின் தலைமைப் பொறுப்பில் நியமிக்கப்பட்டார்.

2023 டிசம்பரில் ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் எழுதிய கட்டுரை ஒன்றில் வடசென்னை குடிசைப் பகுதி மக்களுக்காக ஒரு ரூபாய் கட்டணத்தில் செயல்பட்ட 24 மணி நேர மருத்துவமனை, ‘வெட்டியான்கள்’ என்று அழைக்கப்பட்ட தொழிலாளர்கள் சுடுகாடு/இடுகாடு உதவியாளர்கள் என்னும் பெயரில் சென்னை மாநகராட்சியின் நிரந்தர ஊழியர்களாக ஆக்கப்பட்டது உள்ளிட்ட தனது பணிக்கால அனுபவங்களை குகானந்தம் நினைவுகூர்ந்திருந்தார். குடிசைப் பகுதி மக்கள் மீது மிகுந்த அக்கறைகொண்டிருந்த அவர், அவர்களின் வாழ்விடங்கள் மேம்படுத்தப்பட வேண்டும் என்றும் அம்மக்கள் தொலைதூரப் பகுதிகளுக்கு மாற்றப்படக் கூடாது என்றும் தொடர்ந்து வலியுறுத்திவந்தார்.

1992-93இல் சென்னையில் காலரா பரவல் அதிகரித்தபோது குகானந்தம் தலைமையிலான குழு காலரா கிருமியில் புதிய துணைவகையை அடையாளம் கண்டது நோய்ப் பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளுக்கு வலுசேர்த்தது. 2007இல் அவர் நகர சுகாதார அலுவலர் ஆனார். 2009-2014 காலகட்டத்தில் டெங்கு நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்தது. சுகாதாரப் பணியாளர்கள் பகுதிவாரியாகப் பிரிக்கப்பட்டு வீடு வீடாகச் சென்று தொற்றுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். வாரத்துக்கு 500 வீடுகளில் டெங்கு கொசு உற்பத்தியைத் தடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

காலரா, டயரியா, டெங்கு போன்ற நோய்களின் தடுப்பு, கட்டுப்பாடு, நோயாளிகளைக் கையாளுதல் போன்ற அனைத்திலும் நிபுணராகத் திகழ்ந்தவர் அவர். காலரா போன்ற நோய்களைத் தடுப்பதற்காக நகரின் குடிநீர் தரத்தை மேம்படுத்துவதிலும் அவர் பங்களித்திருக்கிறார். ‘அம்மா உணவகம்’ தொடங்கப்படுவதற்கு முக்கியக் காரணமானவர் குகானந்தம்.

பணி ஓய்வு பெற்ற பிறகும் பொதுச் சுகாதாரத் திட்டங்களிலும் நடவடிக்கைகளிலும் தொடர்ந்து அவர் பங்களித்துவந்தார். கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் மாநில அரசு அமைத்த நோய்த் தடுப்பு சிறப்புக் குழுவில் இடம்பெற்ற குகானந்தம் அரசுக்கு உரிய ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கினார். தனது நிபுணத்துவத்தையும் நெடிய அனுபவத்தையும் பயன்படுத்தி கரோனா காலத்தில் பல உயிர்களைக் காப்பாற்ற அவர் உதவியதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மருத்துவம் வணிகமயமாகிவரும் காலத்தில் எளிய மக்களை நேசித்த குகானந்தத்தின் மறைவு மருத்துவத் துறைக்கும் பொதுமக்களுக்கும் பேரிழப்பே.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in