கலந்தாய்வுகளில் வெளிப்படைத்தன்மை அவசியம்

கலந்தாய்வுகளில் வெளிப்படைத்தன்மை அவசியம்
Updated on
2 min read

நீட் தேர்வு முடிவுகளில் காணப்பட்ட பல முரண்பாடுகள், அதன் நம்பகத்தன்மையைக் கேள்விக்கு உட்படுத்துவதாக இருந்தன. இந்நிலையில், தேர்வுக்குப் பிந்தைய கலந்தாய்வு முறையிலும் மாற்றம் தேவை என்கிற கோரிக்கை தமிழகத்தில் தற்போது ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மத்திய அரசு சார்பிலும் தமிழக அரசு சார்பிலும் தனித்தனிக் கலந்தாய்வுகள் நடைபெறுகின்றன. கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்களின் தரவரிசை எண், இடஒதுக்கீட்டின்படி அவர்களுக்கான வாய்ப்பு, கல்லூரிக்கான அவர்களது முன்னுரிமை போன்றவற்றின் அடிப்படையில் அவர்களுக்கு அரசுக் கல்லூரியிலோ, தனியார் கல்லூரியிலோ இடம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. நீட் தேர்வு அறிமுகமானதற்குப் பின்னர், அண்மைக் காலமாக ‘சாய்ஸ் ஃபில்லிங்’ (choice filling) என்பதன் அடிப்படையில், கலந்தாய்வு நடைபெறுகிறது. இணையவழியில் நடைபெறும் இந்தக் கலந்தாய்வில் மாணவர்கள் வீட்டிலிருந்தே பங்கேற்க இயலும். அவர்களிடம் ஒரு திறன்பேசியோ, மடிக்கணினியோ இருந்தால் போதும்.

மறைந்திருக்கும் சிக்கல்: தமிழக அரசு மருத்துவக் கல்வி ஆராய்ச்சி இயக்ககத்தின் tnmedicalselection.net என்கிற இணைய தளம் மூலம், தாங்கள் தேர்வுசெய்ய விரும்பும் கல்லூரிகளைப் பட்டியலிடலாம். அவர்களது தரவரிசைக்கு ஏற்பவும் பட்டியலில் அவர்கள் தந்துள்ள முன்னுரிமைக்கு ஏற்பவும் அவர்களுக்குக் கல்லூரி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தாங்கள் பயில விரும்பும் கல்லூரியைத் தேர்வுசெய்வதில் மாணவர்களுக்கு முழுச் சுதந்திரம் அளிப்பதாக, ‘சாய்ஸ் ஃபில்லிங்’ முறை பாராட்டப்பட்டாலும், இம்முறை மாணவர்களுக்கான நல்ல வாய்ப்புகளை மறைப்பதாகவும் கூறப்படுகிறது. தமிழகம் முழுதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளின் நிறைகுறைகள் தெரியாமல் மாணவர்கள் பட்டியலிட நேர்வதாகவும், இதனால் அவர்கள் விரும்பும் கல்லூரியைத் தவறவிடுவதாகவும் கல்வியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

“சில ஆண்டுகளுக்கு முன், சென்னை மாநகராட்சிப் பள்ளி ஒன்றில் படித்து அதிக மதிப்பெண் பெற்ற மாணவர் ஒருவர், பொறியியல் பயில விரும்பினார். ஆனால், அவர் ‘சாய்ஸ் ஃபில்லிங்’ முறையில் தவறான வழிகாட்டலால் தனியார் கல்லூரியில் பயிலும்படி நேர்ந்தது. அவருக்கு அரசுக் கல்லூரியில் இடம் கிடைக்கும் வாய்ப்பு இருந்தும், அதற்கு மாறாக நடந்ததற்கு ‘சாய்ஸ் ஃபில்லிங்’ முறையில் உள்ள வரம்புகள்தான் காரணம். அதில் பட்டியலை முன்வைத்துவிட்டால் அதுவே உறுதி செய்யப்பட்டுவிடும். ‘தரவரிசையில் முன்னணியில் உள்ள மாணவர், கட்டமைப்பில் பின்தங்கிய தனியார் கல்லூரியைத் தேர்வு செய்துள்ளாரே’ என்றெல்லாம் கணினி சிந்திக்காது.

மாணவர்களுக்கு உதவ முயலும் பெரியவர்களுக்கே கல்லூரிகளைப் பட்டியலிடுவது கடினமாக உள்ளது. கிராமப்புற மாணவர்கள் நிலை இன்னும் மோசம். அவர்கள் தங்களது தரவரிசைக்கு ஏற்ப எல்லாக் கல்லூரிகளையும் சீர்தூக்கிப் பார்த்துப் பட்டியலிடுவது சாத்தியமற்றது. ஒரு மாணவன் நீட் தேர்வில் வெற்றி பெற அவரது குடும்பமே தவமாய்த் தவமிருக்க வேண்டியிருக்கிறது. இப்படி வாழ்க்கையைப் பணயம் வைத்துத் தேர்ச்சிபெறும் மாணவர்கள், ‘சாய்ஸ் ஃபில்லிங்’ முறையால் பொருத்தமற்ற கல்லூரியில் பயிலும் சூழல் ஏற்படுகிறது அல்லது அடுத்த கலந்தாய்வுக்காக ஒரு வருடம் காத்திருக்க வேண்டியுள்ளது” என்கிறார் ஒரு கல்வியாளர். தகுதியுள்ள மாணவர்கள் அரசுக் கல்லூரி இடங்களைத் தவறவிடுவதும் அந்த இடங்கள் ‘தகுதி’ அற்ற மாணவர்களுக்கு ஒதுக்கப்படுவதுமான மோசடி நடைபெறவும் ‘சாய்ஸ் ஃபில்லிங்’ முறை மறைமுகமாக உதவுவதாகக் கூறப்படுகிறது.

ஒற்றைச் சாளர முறையின் சாதகங்கள்: எம்.ஜி.ஆர் ஆட்சியில் 1984இல் பொறியியல், மருத்துவப் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு எழுதும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. 1997இல், அன்றைய தமிழக முதல்வர் மு.கருணாநிதி நியமித்த கல்வியாளர் மு.அனந்தகிருஷ்ணன் தலைமையிலான குழு, நுழைவுத் தேர்வு முறையுடன், ஒற்றைச் சாளர முறை (single window system) வழியிலான கலந்தாய்வையும் சேர்த்து நடத்தும்படி பரிந்துரைத்தது. அதன்படி, நேரடிக் கலந்தாய்வு சென்னை, கோவை, மதுரை போன்ற நகரங்களில் நடத்தப்பட்டது. ஒரு பெரிய பந்தலின்கீழ் அகன்ற மின்திரை அமைக்கப்பட்டிருக்கும். அதில் தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகள், படிப்புகள், இடங்களின் எண்ணிக்கை உள்ளிட்ட அனைத்து விவரங்களும் காட்டப்படும். மாணவரும் பெற்றோரும் அங்குள்ள பணியாளர்களுடன் கலந்தாலோசித்துச் சரியான கல்லூரியைத் தேர்வுசெய்ய முடிந்தது. இதில் ஒளிவுமறைவுக்கு இடமே இல்லை. ஒற்றைச் சாளர முறை அமலில் இருந்தபோது, தகுதியுள்ள மாணவர்களுக்கு அவர்கள் விரும்பிய கல்லூரிகளில் இடம் கிடைக்கும் சூழல் அதிகம் இருந்தது. இதே முறைதான் மருத்துவப் படிப்புகளுக்கும் பின்பற்றப்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள மாணவர்கள், 2009லிருந்து கலந்தாய்வுக்காக சென்னைக்கு வர வேண்டியிருந்தது என்பது மட்டுமே இதிலுள்ள குறை.

அதிமுக அரசு, கலந்தாய்வுமுறையை எளிமைப்படுத்தும் நோக்கத்துடன், பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வை 2018இல் இணையவழி முறைக்கு மாற்றியது. மருத்துவத்துக்கான தேசிய அளவிலான கலந்தாய்வுகள், ஏற்கெனவே இணையவழியில் நடைபெற்று வந்தநிலையில், தமிழக அரசு நடத்தும் மருத்துவக் கலந்தாய்வும் 2019இல் இணையவழிக்கு மாறியது. இம்முறையில் மாணவர்கள் எண்ணற்ற கல்லூரிகளைத் தங்கள் விருப்பப் பட்டியலில் வைக்க முடியும். இதன் மூலம் கல்லூரியைத் தேர்வு செய்வதில் அவர்களுக்கு வாய்ப்புகள் அதிகரித்திருப்பதுபோலத் தோற்றமளித்தாலும், இம்முறையில் வெளிப்படைத்
தன்மை இல்லை. எந்தக் கல்லூரியில் எத்தனை இடங்கள் உள்ளன என்கிற தகவல் மாணவர்களுக்குத் தெரிவிக்கப்படுவதில்லை.

“நீட் தேர்வுக் கெடுபிடிகளை எப்படியோ சமாளித்து வெற்றி பெறும் மாணவர்கள், அடுத்து எதிர்கொள்ள வேண்டிய பெரும் சவாலாக ‘சாய்ஸ் ஃபில்லிங்’ உள்ளது. இம்முறையால் மாணவர்களுக்கு இழப்புகள்தான் அதிகம். நீட் தேர்வையும் தேசிய அளவிலான கலந்தாய்வையும் நடத்தும் பொறுப்பு மத்திய அரசிடம் உள்ளது. அதைத் தமிழக அரசு மாற்ற இயலாது. ஆனால் மாநில அளவிலான கலந்தாய்வுக்கான ‘சாய்ஸ் ஃபில்லிங்’ முறையை மாற்றும் அதிகாரம் தமிழக அரசுக்கு இருக்கிறது. உயர் கல்வியில் சமூக நீதி வேண்டி நீட் தேர்வை எதிர்த்துவரும் தமிழக அரசு, கலந்தாய்வில் வெளிப்படைத்தன்மையை முன்வைக்கும் ஒற்றைச் சாளர முறையை மீண்டும் கொண்டுவர வேண்டும்” என்கின்றனர் கல்வியாளர்கள்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in