விலக மறுக்கும் திரைகள் 20: பெண்களின் சொத்துரிமையும் சாதியச் சமூகங்களும்

விலக மறுக்கும் திரைகள் 20: பெண்களின் சொத்துரிமையும் சாதியச் சமூகங்களும்
Updated on
2 min read

அண்ணல் அம்பேத்கர் ஏற்படுத்திய பெண்களுக்கான சொத்துரிமை, 1989ல் ஏற்பட்ட மு. கருணாநிதியின் ஆட்சியில்தான் தமிழ்நாட்டுப் பெண்களுக்குக் கைவசமானது. ஆனால், இப்போதும் முழுமையாக அது பெண்களைச் சென்றடைந்திருக்கிறதா என்கிற ஐயம் எழும் அளவுக்குச் சில நடைமுறைகள் நடந்தேறிக்கொண்டிருப்பது மிகுந்த கவலைக்குரியது.

தர்மபுரி பகுதியைச் சார்ந்த 60 வயதை நெருங்கிக்கொண்டிருக்கும் பெண் ஒருவர் – ஏற்கெனவே கணவரை இழந்து மகனுடன் வசிப்பவர் – தங்கள் நிலத்தில் கடுமையாக உழைக்கக்கூடியவர்; தந்தைக்குப் பிறகு தாய்க்குச் சொத்தில் முன்னுரிமை என்கிற நிலையை மறந்து, தாய்க்குச் சொத்தில் எந்தப் பங்கும் அளிக்க முடியாது என வீட்டை விட்டு அடித்துத் துரத்தியிருக்கிறார் அவரது மகன். அதேபோல் சுய சாதியில் உறவுக்காரரைக் காதல் மணம் புரிந்துகொண்ட சகோதரிக்கும் சொத்தில் பங்கு கிடையாது என்பதும் அவரது நிலைப்பாடாக உள்ளது. உயில் என எதுவும் தந்தை எழுதி வைக்காத நிலையில், தான் வைத்ததே சட்டம், தனக்கு மட்டுமே அந்தச் சொத்தில் பங்கு என்பதே அவரது கொள்கை.

ஊர் முழுவதும் ஒரே சாதிக்காரர்களாகவும் உறவினர்களாகவும் இருக்கும்போது சாதியப் பின்புலமும் அவர்களின் ஆதரவும் இதன் ஆணிவேராக இருக்கிறது. காவல் நிலையத்திலும் அந்தப் பாவப்பட்ட பெண்ணுக்கு எந்த ஆதரவும் இல்லை. வயதான தாய் என்பவள் மகனுக்கு அடங்கி நடக்க வேண்டும் என்கிற மனுவின் நீதியே காவல் துறையினராலும் எடுத்தாளப்படுகிறது என்பதே நடைமுறை. எவராயினும் ஆண் மையச் சிந்தனையுடன் மட்டுமே செயல்படுகிறார்கள். இது ஒரு குடும்பத்தின் பிரச்சினையாக மட்டும் பார்க்க வேண்டிய ஒன்றல்ல, இது பெண்களின் உரிமைப் பிரச்சினை; ஒட்டுமொத்தச் சமூகத்தின் பிரச்சினையாகக் கையாளப்பட வேண்டிய ஒன்று.

தேவை தீவிரக் கண்காணிப்பு... இது ஒற்றைச் சம்பவம் மட்டுமல்ல; இந்த ஒரு கிராமத்தில் மட்டுமே நடப்பதும் அல்ல. தமிழ்நாட்டின் பெரும்பாலான கிராமங்களில், பெரும்பாலான சாதிக் குழுக்களில் இதுவே நடைமுறையாக, எழுதப்படாத சட்டமாக இருக்கிறது என்பதை யாரிடம் சொல்லி நோக முடியும்? காவல் துறை, நீதித் துறையிலும் இத்தகைய நபர்களே நிறைந்திருப்பதால், அவர்கள் ஆண்களாக மட்டுமே செயல்படுவதால் பெண்கள் செய்வதறியாது திகைக்க வேண்டிய நிலை. இதைப் பற்றி எல்லாம் கேள்விப்படும்போது நாம் கடந்த நூற்றாண்டில்தான் வாழ்கிறோமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

பரம்பரைச் சொத்தில் பெண்களுக்கும் உரிமை உண்டு என்பதை ஆணித்தரமாக எடுத்துச்சொல்ல வேண்டிய அவசியமும் தேவையும் ஏற்பட்டிருக்கிறது. ஆங்காங்கே உள்ள பெண்கள் அமைப்புகள் இவற்றைக் கண்காணிக்க வேண்டிய, எடுத்துச்சொல்ல வேண்டிய தேவையும் எழுந்திருக்கிறது. சொத்துரிமை பற்றிய விளக்கங்களும் விழிப்புணர்வும் பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் உரியவைதான்.

அருகிப்போன மஞ்சக்காணி நிலங்கள்: விவசாய விளைநிலங்கள் பெரும்பான்மை அளவில் பெண்கள் பெயரில் இல்லை என்பது நாடறிந்த செய்தி. அத்துடன், பெண்களுக்குச் சொத்துரிமை அளிப்பதையும்கூடப் பொதுச் சமூகம் எந்தக் கண்ணோட்டத்துடன் பார்க்கிறது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். முன்பெல்லாம் ‘மஞ்சக்காணி’ என்கிற பெயரில், மிகக் குறைந்த பரப்பளவு கொண்ட நிலம் தாய் வீட்டுச் சீராகக் கொடுக்கப்பட்டது உண்டு. அது தலைமுறை தலைமுறையாகத் தாய் வழியாக மகள்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டது. அதுவும் நல்ல வசதி வாய்ப்புள்ள பெரு நிலக்கிழார்களின் குடும்பங்களில் மட்டுமே நிகழ்ந்தது. இவ்வாறு மகள்களுக்கு நிலத்தைச் சீராக அளிப்பது படிப்படியாகக் குறைந்துபோனது.

இதற்கு மாறாகச் சீர்வரிசையில் நகைகளையோ, பணத்தையோ கூடுதலாக அளிக்கிறார்களே தவிர, வேறொரு வீட்டுக்கு மருமகளாகச் சென்றுவிட்ட மகளுக்குத் தங்கள் நிலத்தை அளிக்க முன்வருவதில்லை. மகன்களுக்கு மட்டுமே நிலத்தில் முன்னுரிமை என்கிற நிலையை எழுதப்படாத சட்டமாக உருவாக்கி வைத்திருக்கிறார்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட மகன்கள் இருந்தால் பங்கிட்டுக்கொள்ளத் தயாராக இருப்பவர்கள், மருமகனைச் சற்று தள்ளியே வைக்கிறார்கள்.

இந்த லட்சணத்தில் மகள் தன் விருப்பப்படி வேறொரு நபரை மணந்துகொண்டால் - அது சுய சாதியில் அமைந்தாலும் - சொத்தில் யாரும் பங்கு கொடுக்க விரும்புவதில்லை. நிலைமை இப்படியிருக்க, சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்களின் நிலை பற்றிப் பேசுவதற்கு இங்கு ஏதாவது மிச்சம் இருக்கிறதா? கிராமப்புறங்களில் சாதியை ஒருபோதும் கைவிட முடியாமல் இருப்பவர்கள், இப்போது நகர்ப்புறங்களுக்கும் கூடுதலாக இடம்பெயர்ந்திருக்கிறார்கள் என்கிற முன்னேற்றம் (!) தவிர, இதில் பேசுவதற்கு ஏதுமற்ற கையறு நிலையில்தான் சாதியச் சமூகமும் பெண்களும் ஆணவக்கொலைகளும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து, பிரிக்க இயலாதபடி இறுகிக்கிடக்கின்றன. பெண்களின் சொத்துரிமையையும் இந்தப் பட்டியலில் இப்போது பல கிராமங்கள் இணைத்துக் கொண்டிருக்கின்றன என்பதை வளர்ச்சி என்பதா, ஒட்டுமொத்த மக்கள் சமூகத்தின் வீழ்ச்சி என்பதா?

பெண் சொத்தைக் குறிவைக்கும் புகுந்த வீட்டார்: குறைந்த அளவு நிலம் வைத்திருப்பவர்களே இங்கு பிரச்சினைக்கு உரியவர்கள். அவ்வாறான நிலையில், பொதுவாகவே பெண்கள் விட்டுக்கொடுத்துச் செல்லவும், தங்கள் சகோதரர்களே அதனை எடுத்துக்கொள்ளட்டும் என்கிற எண்ணமோ அல்லது அவர்களை விரோதித்துக் கொள்ள வேண்டாம் என்கிற மனநிலையையோ கொண்டவர்கள். சொத்தின் பரிமாணம் மிகமிகக் குறைந்த அளவே எனும்போது அதில் எந்தப் பங்கும் வேண்டாம் என்ற தீர்க்கமான முடிவையும் எடுக்கக்கூடியவர்கள்.

படித்த பெண்கள் ஒருபுறம் எனில், படிக்காத, படித்திருந்தாலும் தங்கள் உரிமைகளைப் பரவலாக அறிந்துகொள்ளாத, கிணற்றுத் தவளைகளாக இருத்தி வைக்கப்பட்டிருக்கும் பெண்கள் எண்ணிக்கையே இங்கு அதிகம். மனைவியின் குடும்பத்தில் சொத்து என ஒன்றிருக்கிறது என அறிந்தால், அதை எவ்வாறேனும் வாங்கி வந்துவிடும் பிடிவாதம் கொண்ட மூர்க்க ஆண்களின் எண்ணிக்கையும்கூட இங்கு அதிகமே. இங்குதான் திருமணத்தின்போது அளிக்கப்படும் (வல்லடியாக வலிந்து கேட்டுப் பெறப்படும்) சீர்வரிசையின் பங்கும் முதன்மை வகிக்கிறது என்பதையும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in