உடல் அதிகபட்ச புனைவும் யதார்த்தமுமாகும்! - நேர்காணல்: எழுத்தாளர் ரமேஷ் பிரேதன்

உடல் அதிகபட்ச புனைவும் யதார்த்தமுமாகும்! - நேர்காணல்: எழுத்தாளர் ரமேஷ் பிரேதன்
Updated on
2 min read

ரமேஷ் பிரேதன், கவிஞர், புனைகதையாளர். நவீனமும் தொன்மமும் இவரது புனைவுகளில் முயங்கி, வாசகருக்கான அசாதாரணச் சித்திரங்களை உருவாக்கும். ஏற்கெனவே உருவாக்கப்பட்ட சித்தாந்தங்களைக் கொண்டு இருபத்தொன்றாம் நூற்றாண்டை அணுகுவது, இவரது புனைவுகளின் விசேஷமான தன்மை. ‘காமத்துப்பா’ என்னும் தலைப்பில் இவரது முந்நூறு கவிதைகள் கொண்ட தொகுப்பு யாவரும் பதிப்பக (தொடர்புக்கு: 90424 61472) வெளியீடாக வந்துள்ளது. அது குறித்த உரையாடல் இது.

ஆண் கூற்று, பெண் கூற்று, ஆபெண் கூற்று என மூன்று வழிகளில் இந்தத் தொகுப்பு புனையப்பட்டுள்ளது. எந்தச் சிந்தனை இந்தக் கருவை நோக்கி உங்களை அழைத்துச் சென்றது?

சங்க இலக்கியம் தொட்டு இன்றுவரை தலைவன் கூற்று, தலைவி கூற்று என்றுதான் தமிழ்க் கவிதை மரபு பயின்றுவருகிறது. இதில் திருநங்கையர் கூற்று என்பது இல்லை. அது மெளனமாக்கப்பட்டுள்ளது.திருநங்கையர் கூற்று சொல்லப்படவில்லை. இங்கொன்றும் அங்கொன்றுமாக இருக்கிறது. ஒரு சட்டகத்துடன் செயல்பட்டு ஒரு பனுவலாகக் கட்டமைக்கப்படவில்லை. அதையும் உள்படுத்தி மூன்று கூற்றுகளையும் உருவாக்க வேண்டும் என நினைத்தேன். ஆபெண் (திருநங்கையர்) கூற்றைத் தமிழ்க் கவிதையின் தொடர்ச்சியாக இதன் வழி வைக்கிறேன். இதைத் தாண்டியும் இது செல்லும்.

கவிதை பொதுவாக ஒரு திறப்புக்கான போர்த்துதலை, ஒரு மர்மத்தைக் கொண்டிருக்க வேண்டும் எனப் பொது அபிப்ராயம் இருக்கிறது. அது ஒரு திறந்த அறிக்கையாக இருக்கலாமா?

இருக்கலாம். இது ஒரு அரசியல் பிரகடனம்தானே. இது திட்டமிட்டுச் செய்யப்பட்டதுதான். ‘காமத்துப் பால்’ அரசியல் அறிக்கை என்றுதான் சொல்கிறேன். இதிலுள்ள 300 கவிதைகளும் அரசியல் அறிக்கைதான். இதில் ஆண், பெண், ஆபெண் (திருநங்கையர்) ஆகிய மூன்று பாலினமும் பங்கெடுக்கின்றன.

ஆபெண் என்கிற சொற்பிரயோகம் உங்களுடையதுதான் இல்லையா?

ஆமாம். தொடர்ந்து இந்தச் சொல்லை பயன்படுத்திவருகிறேன். ஆபெண்ணைக் குறிக்க வேறு சொற்கள் பயன்பட்டுவந்துள்ளன. ஒரு ஆட்சி மாற்றம் வந்தபோது அந்த அரசு அந்தச் சொல்லைத் திருநங்கையர் என மாற்றியது. இது எனக்குப் பிடிக்கவில்லை. அதனால் ஆண், பெண் ஆகிய சொற்களுக்குப் பொதுவாக உள்ள ணகர ‘ண்’யைச் சேர்த்து ஆபெண் என்கிற புதிய சொல்லை உருவாக்கினேன். ‘ஆண் எழுத்து பெண் எழுத்து=ஆபெண் எழுத்து’ என்கிற தலைப்பில் ஒரு புனை கதைத் தொகுப்பும் வெளியிட்டுள்ளேன்.

ஆண் கூற்றுக் கவிதைகளில் வெளிப்படும் ஒரு தணிவு பெண் கூற்றில் இல்லை. மாறாக மூர்க்கம் இருக்கிறது. ஆண், பெண் ஆகிய இரு நிலைகளிலும் நீங்களே இருப்பதால் இது எப்படி நிகழ்ந்தது? திட்டமிடப்பட்டதா, உள்ளர்த்தம் பொதிந்ததா?

ஆமாம். ஆனால், அதைத் திட்டமிட்டுச் செய்யவில்லை. அது இயற்கையாகவே அமைந்ததுதான். நீங்கள் கேட்கும்போது நானும் அதை உணர்கிறேன். பெண்ணியப் பார்வையில் அது மூர்க்கமானதுதான். பெண்ணின் காமத்தைத் தேர்வுசெய்யும் நிலையில் ஆண் இல்லை. அது ஆணையும் கடந்தது. அதுபோல் ஆணின் காமத்தை இயக்குபவளும் பெண்தான்.

ஆபெண் கூற்றை உரைநடை வடிவில் எழுதியிருக்கிறீர்கள்...

ஆண், பெண் கூற்றுகளிலிருந்து இதை வேறுபடுத்திக் காட்ட நினைத்தேன். அதனால் உரைநடை வடிவில் எழுதினேன். ஏற்கெனவே பல உரைநடைக் கவிதைகள் எழுதியிருக்கிறேன். உடலியல் ரீதியாக மாறுபட்டு இருப்பதால் கவிதை வடிவ ரீதியிலும் வேறாக இருக்க வேண்டும் என்பதற்காகத் திட்டமிட்டு உருவாக்கியதுதான் இந்த வடிவம்.

தமிழ்க் கவிதை, புனைவு வெளியில் பாதிப்பை விளைவித்த முன்னோடி நீங்கள். முரண்நகையாக அதிகம் கவனமும் பெறாதவர். உங்கள் எழுத்துகள் ரகசியமாக வாசிக்கப்படுவதன் காரணம் என்ன?

வெளிப்படையாகச் சொல்வதென்றால் பயம்தான். இதனால் நான் கோடீஸ்வரன் ஆகப் போவதில்லை. சிற்றிலக்கியமே 300, 500 பிரதிகள் அச்சடிக்கப்படும் சிறு துறைதான். பிஓடி வந்த பிறகு வெறும் 100 பிரதிகள்தான். இதற்குள் இந்த இருட்டடிப்பு என்பது அவல நகைச்சுவைதான்.்

இன்றைக்குத் தமிழ் நவீனக் கவிதை ஓசைக்கும், செளந்தர்யத்துக்கும் முக்கியத்துவம் கொடுப்பதாக மாறியிருக்கிறது. உங்கள் கவிதைகளில் இந்தச் செளந்தர்யம் உண்டு.

தமிழ் மொழியே இசையால் ஆனதுதான். தமிழைச் சிறப்பாகப் பயன்படுத்தும்போது தானாக அது வெளிப்படும். பாரதியிடமும் பாரதிதாசனிடமும் அந்த இசை நயம் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். இவர்கள் இருவரையும் என் பள்ளிப் பருவத்திலேயே பயின்றுள்ளேன். அதனால் மொழி தரும் ஒரு கொடையை, வேண்டாம் என்று ஒதுக்க நான் தயாராக இல்லை. தேவைப்படும்போது அந்த நயத்தை எடுத்துக்கொள்கிறேன்.

பெண் உடல் ஒரு புனைவு எனச் சொல்கிறீர்கள். அது யதார்த்தம் இல்லையா?

உடல் அதிகபட்ச புனைவாகும்; அதிகபட்ச யதார்த்தமுமாகும். அதை அணுகுவதைப் பொறுத்து, காதலனுக்குக் காதலியின் உடல் அதிகபட்சப் புனைவாக இருக்கும். இதே உடல் உருவாக்கிய புனைவு மாறக்கூடும். பெண்ணை நாம் தாயாக, மனைவியாக, மகளாக அடையாளப்படுத்துகிறோம். ஒரே உடல் மூன்று அவதாரங்கள் எடுக்கிறது. ஒரே உடல் மூன்றுவிதமான பிரதிகளாக மாறுகிறது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in