சுடுகாட்டுக்கு வந்த பெண்

சுடுகாட்டுக்கு வந்த பெண்
Updated on
2 min read

பிறப்பு முதல் இறப்பு வரை எல்லா நிகழ்வுகளிலும் தேவையான அடிப்படை வேலைகள், சடங்கு சம்பிரதாயங்களின் ஊடாக நிறைவேற்றிக்கொள்ளப்படுகின்றன. அந்தந்த ஊர்களுக்கான மருத்துவப் பணியை மேற்கொண்டு வந்த சமூகத்தினர், முடிதிருத்துநர் என்கிற தொழில் வரையறைக்குள் சுருக்கப்பட்டு விட்டனர். சலவைத் தொழிலில் ஈடுபட்டு வந்த வகுப்பினரிலும், தற்போது அவர்களது கடைசித் தலைமுறை அத்தொழிலை மேற்கொண்டு வருகிறது. எனினும் சடங்குகளில் இவர்களது பங்கேற்பு தவிர்க்க முடியாததாகவே உள்ளது. குழந்தை பிறக்கும்போதும் பெண் பூப்பெய்தும்போதும் சலவைத் தொழிலாளியின் ஒத்துழைப்பு அவசியம் ஆகிறது. முடி திருத்துநர்களின் உதவி இன்றி இறப்புச் சடங்குகள் நிறைவடைவதில்லை. ஒரு சிற்றூரில் இத்தகைய வேலைகளையும் சடங்குகளையும் செய்ய இருந்த கடைசி நபரும் இல்லாமல் போகும்போது என்ன நிகழும்? இப்படியொரு நிலையை எதிர்கொள்ள ஒரு கிராமம் எடுத்த முடிவையும் அதன் தொடர்ச்சியான நிகழ்வுகளையும் ‘நடபாவாடை’ நாடகம் பேசுகிறது. அண்மையில் சென்னை சின்மயா நகரில் உள்ள கூத்துப்பட்டறை அரங்கில் இந்நாடகம் நடத்தப்பட்டது. தொழில்முறை அரங்கச் செயல்பாட்டாளரான சி. இராமசாமி இயக்கியுள்ளார்.

நடபாவாடை என்பது பிணம் சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்லப்படும்போது, வீட்டிலிருந்து வீதிவரைக்கும் அதற்குப் பாதை அமைப்பதுபோல நான்கைந்து புடவைகளை மாறி மாறி விரிக்கும் வழக்கத்தைக் குறிக்கும். இறப்புச் சடங்குகளில் ஒன்றாகச் சலவைத் தொழிலாளர் நடபாவாடை விரிக்கும் வேலையையும் முன்பு செய்து வந்தனர். நாடகத்தில், நடபாவாடை விரிக்கும் வேலையை குமாரி என்பவர் மாய்ந்து மாய்ந்து செய்கிறார். துணி வெளுக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்த அவரது கணவன் இறந்த பின்னர், பொறுப்பை குமாரி தலையில் அவ்வூர் சுமத்துகிறது. பெண்களுக்குத் தடை விதிக்கப்பட்ட சுடுகாடு, அவரது பணியிடமாக மாறுகிறது. வருமானத்துக்கு வேறு வழியற்ற குமாரியும் அதை ஏற்றுக்கொள்கிறார். ஒவ்வொரு முறையும் சடங்குகளை அவர் மூலமாகச் செய்து முடிக்கும் ஊர்க்காரர்கள், அவரது அடிப்படைத் தேவைகள் குறித்துக் கவலைப்படுவதில்லை. தான் பணிபுரியும் களத்தில் மக்களை நெறிப்படுத்துபவராக குமாரி இருக்கிறாள். ஆதரவற்றோர் இறந்தாலும், வழக்கமான சடங்குகளில் எதுவும் விடுபட்டுவிடக் கூடாது என அவரது உள்ளம் பதறுகிறது.

இறுதி ஊர்வலங்களும் உன்மத்த நடனங்களும் பிரிக்கப்பட முடியாதவை. நாடகத்தில் பிணமே எழுந்து ஆடுகின்றது. சடங்குகளை நடத்துவதில் கவனம் செலுத்தும் குமாரி, இந்தக் கொண்டாட்டத்தைச் சலனமின்றி வெறிக்கிறவராகவே இருக்கிறார். இறுதியில் அவரும் ஆட்டத்தில் இழுத்துச் செல்லப்படுகிறார். சிறு தயக்கத்துக்குப் பின்னர், குமாரி சாமி வந்ததுபோல ஆடித் தீர்க்கிறார்.

குமாரி, கற்பனைப் பாத்திரமல்ல. பாண்டிச்சேரி அருகே வாழ்ந்து வரும் குமாரியம்மாள் என்பவரது வாழ்வை மையமாகக் கொண்டு இச்சமூகத்தினரின் கையறுநிலையையும் அவர்களில் பெண்களின் பரிதவிப்பையும் நாடகம் பேசுகிறது. பாலினம் சார்ந்த இனவரைவியல் நோக்கிலான ஆய்வுக்காக குமாரியம்மாவோடு உரையாடி வந்த இராமசாமி, அவரது நிலையை நாடகமாக எழுதினார். நாடகத்துக்கான கலை இயக்கம், அரங்க வடிவமைப்பு போன்றவற்றையும் செய்துள்ளார். குமாரி பற்றிய சித்திரிப்பு, நாடகத்தில் இரண்டு கதாபாத்திரங்கள் மூலம் வெளிப்படுத்தப்படுகிறது. அர்ச்சனா செல்வராஜ், அபிநயா ஆகிய இரு கலைஞர்களும் தனித்தனி நடிப்பு முறை கொண்டிருந்தாலும், குமாரியம்மாவைப் பிரதிபலிப்பதில் பிறழ்வு ஏற்படவில்லை. பிணமாக(பிணங்களாக!) நடித்த மாணிக்க வேல், இறந்தவருக்கு உறவினராக நடித்த தமிழரசன், குமாரியின் உறவினராக வரும் தேவி ஆகியோரின் பங்களிப்பும் நிறைவானதாக இருந்தது. சுரேன் சேகரனின் இசையமைப்பும் சுதன் செய்த ஒளிவடிவமைப்பும் நாடகத்தின் பேசுபொருளுக்குப் பொருத்தமாக அமைந்திருந்தன.

“குமாரியம்மா முன்னிலையில்தான் இந்நாடகம் முதன்முதலில் நிகழ்த்தப்பட்டது. நாடகத்தில் சடங்குகள் இடம்பெறுகையில், அவர் நடிகர்களிடம் தனது இடத்திலிருந்தபடி திருத்தங்கள் கூறினார். பார்வையாளராக இருந்த குமாரியம்மா முடிவில் நிகழ்த்துநராக மாறிவிட்டார். தற்போதும் அவர் அதே வேலையைச் செய்து வந்தாலும், அவரது மகன்கள் வேறு வேலைகளுக்குச் சென்றுவிட்டனர். அவரது வாழ்வில் அந்தளவுக்கு ஒரு முன்னேற்றம் நடந்துள்ளது. மனித வாழ்க்கையின் முக்கியமான கட்டங்களில் துணையாக வரும் குமாரியம்மா போன்றோர் உதிரிகள் ஆக்கப்பட்டு விடக் கூடாது’ என்கிறார் இராமசாமி. இந்த நாடகம் சொல்லும் சேதியும் இதுதான்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in