

தீவிர புனைவிலக்கியம் ஓர் இருவாழ் உயிரினம். அது சமகாலத்திலும் காலாதீதத்திலுமாக ஒரே நேரத்தில் உயிர் வாழும். கல்லூரிக் காதலர்களுக்கு இடையிலான உரையாடலை விவரிக்கும் பாவனையில் அது காலாதீதமான மனித உறவுகளைப் பற்றி வேறு எதையோ பேசிக்கொண்டிருக்கும். கஷ்ட ஜீவனம்தான். ஆனால், அதுதான் அதன் இயல்பு. இந்த இருவாழ்வித் தன்மையைச் சரியாகக் கையாள்வது ஒரு புனைவாசிரியரின் அடிப்படைக் கடமைகளுள் ஒன்று. அந்தக் கடமையில் தவறும் படைப்புகள் ஒன்று முற்றிலுமாகக் காலாதீதத்தின் பக்கம் சாய முற்பட்டுச் சமகால வாழ்வோடு யாதொரு பந்தமும் அற்ற வெற்றுப் பிரகடனங்களையும் பிரசங்கங்களையும் முன்வைக்கின்றன. அல்லது சமகாலத்தின் சிக்கல்களை உண்மையாகப் பிரதிநிதித்துவப்படுத்துவதான பாவனையில் வெளி அட்டையில் மட்டுமே புனைவாக மாறுவேடமிட்ட அரசாங்க ஆவணக் காப்பகங்களுக்கு உகந்த தஸ்தாவேஜுகளாக மாறிவிடுகின்றன. இந்தச் சூழலில் மேற்கூறப்பட்ட இருவாழ்வித் தன்மையைச் சரியாகக் கையாண்டிருக்கும் சமீபத்திய படைப்புகளுள் ஒன்று, எழுத்தாளர் விஜய ராவணனின் ‘இரட்டை இயேசு’.
இந்தத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் ஆறு நெடுங்கதைகளும் வெவ்வேறு களங்களையும் கூறும் முறைகளையும் கொண்டவை. போர், பெருநோய், புலம்பெயர்வு, பிறழுலகு என வெவ்வேறு பின்புலங்களில் சமகால உலகளாவிய பிரச்சினைகளையும் அவற்றின் அடிநாதமாகத் திகழும் காலாதீதமான மானுடச் சிக்கல்களையும் கையாளுபவை. ஒவ்வொரு நெடுங்கதையும் தேவையான பிரத்யேகமான கூறும் முறைகளையும் கொண்டவை. மாய யதார்த்த பாணிக் கதைகள், அறிவியல் புனைவுத்தன்மை மிக்க கதைகள், யதார்த்த பாணிக் கதைகள் என வெவ்வேறு வகையான கதைகளை இந்தத் தொகுப்பு கொண்டிருக்கிறது. இத்தகைய களம், கூறும்முறை சார்ந்த சோதனைகள் சமகாலத் தமிழ்ப் புனைவிலக்கியத்தில் புதிய சாத்தியங்களை உருவாக்க அவசியமானவை. ஆனால், கதைகளின் களங்கள் சார்ந்தும் கூறும்முறைகள் சார்ந்தும் சோதனை முயற்சிகளில் ஈடுபடும் எழுத்தாளர் விஜய ராவணன் மொழி அளவில் மட்டும் இறுக்கமான நவீனத்துவ மொழியையே கையாண்டிருக்கிறார்.
மேலோட்டமான வாசிப்பிற்கு நூதனமான களங்களின் பிரத்யேகமான சிக்கல்களாக மட்டுமே தோன்றும் இக்கதைகள், உண்மையில் ஒட்டுமொத்தமாக இந்தத் தலைமுறையின் அடிப்படையான சிக்கல்களையே ஆதாரமாகக் கொண்டுள்ளன. தனிமை, அடையாளச் சிக்கல், புலம்பெயர்வு, பொருள் ஈட்டுவதன் மூலமாக வரும் உளச்சோர்வு, அந்நியமாதல் எனச் சமகாலத் தலைமுறையின் முதன்மைச் சிக்கல்களையே இந்தக் கதைகள் பேசுகின்றன. ஆனால், அவற்றைக் குறித்து நேரடியாகப் பிலாக்கணம் செய்யாமல், புனைவின் சாத்தியங்களைப் பயன்படுத்தி, அவற்றை மானுடப் பொதுமைக்கான சிக்கல்களாக ஆராய முற்படுகின்றன. அதன் விளைவாக அவை சமகாலத்திலிருந்து காலாதீதத்தை எட்டுகின்றன. இந்த நகர்வை அடையத் தேவையான கால அவகாசமும் இந்தக் கதைகளுக்கு வழங்கப்படுகிறது.
சமகாலப் புனைவுகளைப் பீடித்திருக்கும் அவசரம் எனும் நோய் இந்தத் தொகுப்பில் பெரும்பாலும் காணப்படவில்லை. இந்தத் தொகுப்பில் உள்ள கதைகள் எவையும் தமிழ் நிலத்தோடோ பண்பாட்டோடோ தொடர்புடையவை அல்ல. அந்நிய நாடுகள், கற்பனையான உலகங்கள், புதிய படிமங்கள் எனத் தமிழ் வாழ்க்கையோடு தொடர்பற்ற களங்களில் அமைக்கப்பட்டிருக்கும் இக்கதைகள் விலகலும் அந்நியத்தன்மையும் கொண்டிருக்கின்றன. மேலும், நிறமற்ற வானவில், தங்க மீன்களைப் பிரசவிக்கும் பெண், கண்ணாடி உலகம், கிறிஸ்துவுடன் சிலுவையில் அறையப்படுபவன் என இக்கதைகள் உருவாக்கும் புதிய படிமங்களும் வலுவானவையாகவே இருக்கின்றன.
ஆனால், அதுவே இந்தத் தொகுப்பின் பலமாகவும் பலவீனமாகவும் ஒரே நேரத்தில் செயல்படுகிறது. அந்த விலகலையும் அந்நியத்தன்மையையும் பயன்படுத்தி, இந்தத் தொகுப்பு ஒரு நம்பகத்தன்மை மிக்க உலகத்தைக் கட்டமைக்கிறது. அதன் வழியே வாசகனின் மனச்சாய்வுகளை நீக்கித் தன் அசலான கேள்விகளை வாசகன் நேர்கொண்டு பார்க்க இக்கதைகள் உதவுகின்றன. ஆனால், அந்த அந்நியத்தன்மையே இக்கதைகள் உருவாக்க வேண்டிய தாக்கத்தை மட்டுப்படுத்தவும் செய்கிறது.
அந்நிய நிலங்களில் அமைக்கப்பட்ட கதைகளாக இவை இருப்பினும், அவற்றில் வெளிப்படும் எழுத்தாளனின் குரல் மிகத் தெளிவாக உலகமயமாக்கலுக்குப் பிந்தைய பெருநகர் வாழ் இளைஞனுடையதாகவே இருக்கிறது. தன் வாழ் நிலத்தில் எவ்விதப் பிடிப்பும் அற்ற நீர்ப்பாசி மனிதர்களின் கதைகளாக வடிவமைக்கப்பட்டிருக்கும் இவற்றின் அடிநாதமாக இருக்கும் தனிமையும், கைவிடப்பட்ட தன்மையும் உலக அளவிலான பெருநகர வாழ்விற்கே உரியவைதாம். கதைகள் எங்கும் விரவிக்கிடக்கும் அகதிகளும் அந்நியர்களும் இதனைத் தொடர்ந்து உறுதிப்படுத்துகின்றனர். நவீன வாழ்க்கையின் மீதான கசப்பு இக்கதைகளில் இருப்பினும், அவ்வாழ்க்கையை வாழ்வதற்குத் தள்ளப்பட்ட மனிதர்களை இக்கதைகள் பரிவுடனேயே அணுகுகின்றன. சில வேளைகளில் மிக மெல்லிய குரலில் அவர்களுக்கு நம்பிக்கையும் ஆறுதலும் அளிக்கின்றன.
நவீனத் தமிழ்ப் புனைவிலக்கியத்தின் வளமும் மரபும் நாம் அறிந்தவையே. எனவே, அதன் நூற்றாண்டு காலச் செழுமையைக் கருத்தில் கொண்டே இன்று புனைவில் பிரவேசிக்கும் எழுத்தாளர்களை மதிப்பிட வேண்டும். ஆனால், அவ்வாறு மதிப்பிடுகையில் உலக அளவிலான சமகாலப் போக்குகளையும் கருத்தில் கொள்வது அவசியம். அவ்வகையில் உலகமயமாக்கலுக்குப் பிந்தைய கடந்த முப்பது ஆண்டுகளில், தமிழ் வாழ்க்கையின் தனித்துவமான உப பகுதியாக உருவாகியிருக்கும் பெருநகர வாழ்க்கையிலிருந்து முளைத்திருக்கும் நம்பிக்கையான புதிய படைப்பாளியாக விஜய ராவணனைக் கொள்ள முடியும். எழுத்தாளர் அ.முத்துலிங்கம் போன்ற முன்னோடிகளின் படைப்புகளின் வாயிலாகத் தமிழ் நிலத்திற்கு அப்பாலும் யாதும் ஊரென விரிந்துகொண்டிருக்கும் தமிழ்ப் புனைவுகளுக்கு விஜய ராவணன் நல்லதொரு வருகை. ஆனால், எத்தகைய நூதனமான நிலத்திலோ, காலத்திலோ, களத்திலோ நிகழ்ந்தபோதும் புனைவுகள் இருவாழ்விகளே. எனவே, புனைவெழுத்தாளன் ஒரு நாளும் சுற்றுலா வழிகாட்டியாகவோ கண்கட்டு வித்தைக்காரனாகவோ ஆகிவிடலாகாது. ஏனெனில், புனைவுகள் நிலத்தினும் காலத்தினும் மட்டுமல்ல, எழுத்தாளனினும் பெரியவை.
- விக்னேஷ் ஹரிஹரன்
எழுத்தாளர்
தொடர்புக்கு: vigneshari2205@gmail.com
---------------------------