பால சாகித்திய புரஸ்கார் | யூமா வாசுகி: சிறார் இலக்கிய முன்னத்தி ஏர்
தமிழ்ச் சிறார் இலக்கியத்திற்கு யூமா வாசுகி மகத்தான பங்களிப்பு செய்துவருகிறார். அவரின் ‘ரத்த உறவு’ எனும் நாவலிலேயே சிறார் உலகம் மிக நுட்பமாகப் பதிவாகியிருக்கும். அவரின் பல கவிதைகள்கூடக் குழந்தைகள் தன்னியல்பு குலையாமல் ஆடும் மைதானமாக மாறியிருக்கும்.
தமிழில் முன் மாதிரியான சிறார் இலக்கியப் படைப்புகளைத் தேடிக்கொண்டிருந்தவர்களுக்கு இவை முன்னத்தி ஏராகக் கிடைத்தன. சிறார் இலக்கியத்தில் கதையின் கருப்பொருளும் மொழிநடையும்தான் ஓர் எல்லைக்குள் பயணிக்க வேண்டும். ஆனால், படைப்புத்தன்மை என்பது அனைத்து வகை இலக்கியத்திற்கும் பொதுவானதே. அதில் சமரசம் கூடாது என்பதைச் சக படைப்பாளிகளுக்கு உணர்த்துவதாக இருந்தது. அதையொட்டியே சிறார் படைப்பாளிகள் பலர் உருவாகினர்.
அதன் பின் ‘தூய கண்ணீர்’, ‘தேநீர்க் குடில்’ என யூமா வாசுகி நேரடியாகவே சிறாருக்கு எழுதத் தொடங்கினார். தமிழ்ச் சிறார் இலக்கியக் களம் இன்னும் பண்படத் தொடங்கியது. இப்போது, விருதுபெற்றிருக்கும் ‘தன்வியின் பிறந்தநாள்’ நூலும் சிறந்த கதைகளை உள்ளடக்கியதே. பெரியவர்களால் உள்ளே நுழையக்கூட முடியாத அதிபுனைவு வெளிதான் சிறார் உலகம். அங்கு குருவிக்கும் மனிதருக்கும் நாய்க்கும் சிறுகுச்சிக்கும் அன்பு பரிமாறுவதில் பேதம் இருக்காது. இந்தப் பேருண்மையை யூமாவின் இந்தக் கதைகளின் வழியே நாம் இன்னும் நெருக்கமாக உணர முடியும்.
தொலைக்காட்சியில் கோஷமிடும் தொண்டனைப் பார்த்துத் தன் மனித நண்பனை ‘தலைவரே’ என்று மியாமிக்கத் தொடங்குகிறது ஒரு பூனை. அதனோடு பயணிக்கும் ஜெய், ஊரெல்லாம் சுற்றச் சுற்ற அவனின் இணைத் தோழனாய் வலம் வருவதாய் ஒரு கதை. காலைப் பொழுதில் செடியில் மலர்ந்திருக்கும் பூக்களை எண்ணத் தொடங்குகிறார் ஒரு சிறுமி. ஓரிரு எண்ணிக்கைக்குப் பிறகு அந்தப் பூக்களின் அழகை ரசிக்க எண்ணல் தடைபடுகிறது. அடுத்த நாள் அதேபோல பூக்களை எண்ணத் தொடங்குகிறாள். இலையின் மீதூறும் ஒரு புழுவைப் பார்த்து வியக்கிறாள்; ரசிக்கிறாள்; அதன் பின்னே செல்கிறாள். எண்ணல் தடைபடுகிறது. இப்படி ஒவ்வொரு நாளாக விரிய விரிய ரசனையின் சுகத்தை அவள் உணர்கிறாள். வாசிக்கும் சிறாரும் உணர்வார்கள்.
சமகாலச் சிறார் இலக்கியம் சிறப்புக் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், அனைத்து மதத்தினரையும் உள்ளடக்கல் என, முந்தைய தலைமுறை தொட மறந்தவற்றையும் பேசிவருகிறது. இந்தத் தொகுப்புக் கதைகள் நெடுகிலும் ஜெய்யும் ஜான்சனும் ‘சலாம்பாய்’ என இயல்பாய் உலவுகிறார்கள். அதிலும் ‘குணசுந்தரி எழுதிய தேர்வு’ எனும் கதை மிக முக்கியமானது. இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்டவரின் மகள் குணசுந்தரி. அவள் ஒரு சிறப்புக் குழந்தை. அவள் படிக்கும் பள்ளியை, ஆசிரியர்களை, சக மாணவர்களை, பள்ளித் தோட்டத்தை எத்தனை நேசிக்கிறாள் என்பதை வாசிக்கையில் நம்மை நெகிழ வைத்துவிடும். இப்படித் தொகுப்பின் அனைத்துக் கதைகள் குறித்தும் விரித்துச் சொல்ல ஏராளமிருக்கிறது. அதனால்தான் விருது சூடியிருக்கிறது இந்நூல்.
சாதிக்கு எதிரான ‘தூய கண்ணீர்’ ஆகட்டும், சிறப்புக் குழந்தைகள் குறித்த கதைகளாகட்டும் சிறார் இலக்கியத்தில் தவிர்க்கப்பட்ட குரல்களை ஒலிக்க வைக்கிறார் யூமா வாசுகி. அவரின் எழுத்துப் பயணம் சிறார் இலக்கியத்தில் மறுமலர்ச்சியையே அளிக்கும் என உறுதியாகச் சொல்லலாம்.
தான்வியின் பிறந்தநாள்
யூமா வாசுகி
பாரதி புத்தகாலயம்
விலை: ரூ.120
தொடர்புக்கு: 044-24332424
