

லோகேஷ் ரகுராமன் எழுதி, இந்தத் தொகுப்பில் இல்லாத கதைகளையும் வாசித்திருக்கிறேன். இணைய இதழ்களில் அவர் எழுதிய சில கதைகளை அவர் இந்தத் தொகுப்பில் தொகுக்கவில்லை. 2020க்குப் பிறகான காலகட்டச் சிறுகதைகளை அவர் இதில் தொகுத்துள்ளார். பொதுவாக, எழுத்தாளர்களின் கதைகளைத் தனித் தனியாக வாசிப்பதற்கும் தொகுப்பாக வாசிப்பதற்கும் வேறுபாடு உண்டு. தொகுப்பாக வாசிக்கும்போது, அந்த எழுத்தாளரைப் பற்றிய விரிவான பார்வை கிடைக்கும். லோகேஷின் இந்தத் தொகுப்பை வாசித்தபோது எனக்கு அப்படியான பார்வை கிடைத்தது.
இந்தத் தொகுப்பில் பத்துக் கதைகள் உள்ளன. ஒவ்வொரு கதைகளிலும் லோகேஷ் விதவிதமான கதை சொல்லல் முறைகளைப் பின்பற்றியிருக்கிறார். உதாரணமாக, இந்தத் தொகுப்பின் தலைப்புக் கதையான ‘விஷ்ணு வந்தா’ரை எடுத்துக்கொள்ளலாம். பிராமணக் குடும்பத்தைப் பின்னணியாகக் கொண்ட கதை. இதில் எழுத்தாளர் தி.ஜானகிராமன் பாணியில் இருக்கும். அதுபோல் ‘அது நீ’ என்கிற கதை பைபிள் மொழிப் பாதிப்பில் உருவான கதை. இயேசு உயிர்த்தெழுவதைப் பற்றிய கதை. ‘இடிந்த வானம்’ என்கிற கதையில் மொழிபெயர்ப்புக்கு உரிய விவரிப்பு மொழியைக் கொண்டிருப்பார். ‘கடல் கசந்தது’ என்கிற கதையில் எவ்விதமான குறியீடோ மொழிச் சிக்கலோ இல்லாமல் எழுதியிருப்பார்.
மிக எளிய சொற்களைக் கொண்டு இந்தக் கதை எழுதப்பட்டிருக்கும். இதுபோல் பல முயற்சிகளைச் செய்து பார்த்துள்ளார் லோகேஷ். இந்தப் பத்துக் கதைகளிலும் பொதுவான விஷயம், அதுகொண்டிருக்கும் தகவல்கள் எனச் சொல்லலாம். அவர் புனைவுக்கு வெளியில் நிறைய வாசிக்கிறார் என்பதற்கான சான்றாக இந்தக் கதைகள் புதுப் புதுத் தகவல்களைக் கொண்டிருக்கும். ‘நவம்’ கதை வழி எண்கள் பற்றி, அதன் இயல்புகள் பற்றிச் சொல்லியிருக்கிறார். நத்தையைப் பற்றியும் ஓர் கதை இருக்கிறது. ‘பாஞ்சசன்யம்’ என்கிற அந்தக் கதை ஓர் அறிவியல் புனைவு. ஆனால், அது உணர்வுபூர்வமாக வாசகருடன் உரையாடக் கூடியதாக அதை லோகேஷ் எழுதியிருப்பார். கணவனுக்கும் மனைவிக்குமான உறவை வியப்பூட்டும் வகையில் ஓர் அறிவியல் புனைவு கொண்டு நகர்த்தியிருப்பார்.
‘கடல் கசந்தது’ மிக எளிய விவரிப்புள்ள சமகாலக் கதை. தன் மகனின் இழப்பை விவரிக்கும் ஒரு தந்தையின் கதை. தொடக்கம் முதலே அது வாசகனை நெருக்கம் கொள்ள வைக்கும் நுட்பத்தை லோகேஷ் அதில் வைத்திருப்பார். இன்றைய காலப் பிரச்சினைகளும் ஓர் உள்ளோட்டமாகச் சொல்லப்பட்டிருக்கும். கணவன்-மனைவிக்கு இடையிலான முரண்கள் எல்லாம் கதைக்குள் திருத்தமாகச் சொல்லப்பட்டிருக்கும். லோகேஷ் கதைகளில் வாசகர்கள் வாசிப்புச் சுவாரசியத்தையும் தாண்டிய சமகாலத்தைப் பற்றிய பார்வையை உணர முடியும் எனலாம்.
- ஹரீஷ், எழுத்தாளர்
--------------------------------------
விஷ்ணு வந்தார்
லோகேஷ் ரகுராமன்
சால்ட் பதிப்பகம்
விலை: ரூ.300
தொடர்புக்கு: 8939409893