

கற்பு குறித்து உரையாடும்போதெல்லாம், அந்த உரையாடலில் இருவர் பெயர் நிச்சயம் இடம்பெறும்; ஒருவர் சீதை; மற்றொருவர் அகலிகை. இவருமே தொன்மமாக நிலைபெற்றுவிட்ட படிமங்கள். ஆண்கள் தங்கள் அதிகாரத்தை நிலைநாட்டிக்கொள்ள, இவ்விருவருமே தொடர்ந்து பயன்பட்டுவருகிறார்கள். வேத காலத்திலிருந்தே அகலிகையின் கதை வெவ்வேறு வடிவங்களில் சொல்லப்பட்டுவருகிறது. ஏனெனில், அகலிகை என்னும் இத்தொன்மம் படைப்பாளர்களின் அட்சயப் பாத்திரமாக விளங்கிவருகிறது. கற்பு என்னும் கதையாடல்தான் இன்றுவரை அகலிகையைப் பாதுகாத்து வருகிறது எனக் கருதவும் இடமிருக்கிறது. காதல், காமம் ஆகிய இரண்டு நிலைகளிலிருந்தும் அகலிகை பேசப்படுகிறாள். அகலிகையின் கற்பிழப்பைப் பலர் தங்களைப் புனிதப்படுத்திக்கொள்ளப் பயன்படுத்திக் கொண்டனர்.
கூட்டு நனவிலி மனத்தில் தொன்மமாகப் படிந்துவிட்ட அகலிகை என்னும் கதாபாத்திரத்தைக் காலந்தோறும் படைப்பாளர்கள் எவ்வாறு அணுகியுள்ளனர் என்கிற வரலாறு மிக சுவாரசியமானது. இந்திரன், அகலிகையின் காதலன் என்கிறது ஒரு பிரதி; கௌதமருடனான திருமணத்திற்குப் பிறகு உடன்பட்டே அகலிகை இந்திரனுடன் உறவு கொண்டாள் என்கிறது ஒரு பிரதி; இந்திரன், கௌதமர் உருவத்தில் வந்து அகலிகையை ஏமாற்றி உறவு கொண்டான் என்கிறது ஒரு பிரதி; இந்திரனால் அகலிகை வன்புணரப்பட்டாள் என்கிறது மற்றொரு பிரதி. இவ்வாறு காலந்தோறும் அகலிகை என்கிற தொன்மக் கதாபாத்திரத்தைத் தங்களது விருப்பத்திற்கும் அரசியலுக்கும் ஏற்பப் படைப்பாளர்கள் பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.
அகலிகை குறித்து எழுதப்பட்டுள்ள காவியங்கள், கவிதைகள், சிறுகதைகள், நாடகங்கள் ஆகியவற்றின் மீதான விமர்சனப் பார்வையை எழுத்தாளர் மு.சீமானம்பலம், ‘அகலிகை: தொன்மமும் புனைவும்’ என்ற நூலாக எழுதியுள்ளார். இவர் அகலிகை குறித்த ஆய்வில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவருகிறார். ‘அகலிகை’ என்றொரு நூலையும் இவர் தொகுத்துள்ளார். ‘அகலிகை: தொன்மமும் புனைவும்’ என்கிற இந்நூலை வாசிக்கும்போது, இலக்கிய வரலாற்றில் அகலிகை எவ்வளவு முக்கியமான ஒருத்தியாக இருந்திருக்கிறாள் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடையப் பிறந்தவள் அகலிகை. இந்திரனும் கௌதமரும் அகலிகை மீது விருப்பம் கொள்கின்றனர். இருவரும் தங்கள் விருப்பத்தைப் பிரம்மனிடம் தெரிவிக்க, பிரம்மன் இரு முகம் கொண்ட பசுவை யார் முதலில் சுற்றி வருகிறார்களோ அவர்களுக்கே அகலிகை கிடைக்கப் பெறுவாள் எனக் கூறுகிறார். கௌதமர் நாரதரின் உதவியுடன் அக்காமதேனுவைக் கண்டு, அகலிகையைத் திருமணம் செய்துகொள்கிறார். திருமணத்திற்குப் பிறகும் இந்திரன் அகலிகையை மறக்கவில்லை. கௌதமரைப் பழிவாங்க நினைக்கிறான். கௌதமரின் உருவத்தைக் கொண்டே அதனைச் செயல்படுத்துகிறான். இரு ஆண்களின் வன்மத்திற்கு இடையில் அகப்பட்டுக் கொள்கிறாள் அகலிகை. இந்திரனின் காமமும் தீர்க்கப்பட வேண்டும்; அகலிகையின் கற்பும் காப்பாற்றப்பட வேண்டும்; ராமனும் தெய்வ நிலைக்கு உயர்த்தப்பட வேண்டும். இப்படிப் பல பார்வைகள் அகலிகை கதையில் மறைந்துள்ளன.
வியாசர், வால்மீகி, கம்பர் ஆகியோர் காவியங்களிலும் வெ.ப.சுப்பிரமணிய முதலியார், ச.து.சு.யோகியார், ந.பிச்சமூர்த்தி, கம்பதாசன், மஹாகவி, தமிழ்ஒளி, சிற்பி, வைரமுத்து, ஞானி, வாலி உள்ளிட்ட பதின்மூன்று கவிஞர்களின் கவிதைகளிலும் புதுமைப்பித்தன், பெ.கோ.சுந்தரராஜன், அகிலன், டி.கே.சீனிவாசன், எம்.வி.வெங்கட்ராம், மு.தளையசிங்கம் உள்ளிட்ட பத்து எழுத்தாளர்களின் சிறுகதைகளிலும் கு.ப.ரா. பிரபஞ்சன், வ.ராமசாமி, திவிஜேந்திரலால் ராய் ஆகியோர் நாடகங்களிலும் அகலிகையைப் படைத்துள்ளனர். இவர்கள் படைப்பின் மீதான திறனாய்வுதான் இந்நூல்.
ஒவ்வொருவரின் படைப்பிற்குப் பின்புள்ள அரசியலை மு.சீமானம்பலம் தெளிவாகப் புரிந்துகொண்டு விளக்கியிருக்கிறார். உதாரணமாக, வால்மீகியின் பார்வையிலிருந்து விலகி, கம்பர் முற்றிலும் வேறான அகலிகையைப் படைத்திருக்கிறார். ராமனின் கால் துகள் அனைத்து அற்புதங்களையும் நிகழ்த்துவதாகக் கம்பர் காட்டியுள்ளார் என்ற விமர்சனத்தை நூலாசிரியர் முன்வைக்கிறார். வெ.ப.சுப்பிரமணிய முதலியாரின் ‘அகலிகை வெண்பா’ ஆண்களின் பக்கம் நின்று உரையாடுகிறது. ந.பிச்சமூர்த்தியின் ‘உயிர்மகள்’ கவிதை, ‘உடைமைச் சமூகத்திற்கு எல்லாமே உடைமைதான்’ என்ற இடத்தை அடைந்திருப்பதாக ஆசிரியர் கண்டுணர்ந்திருக்கிறார்.
புதுமைப்பித்தனின் அகலிகை நவீனத்தன்மை கொண்டவள். ராமனையும் கேள்வி கேட்பவள். அவள் தரப்பு நியாயத்தைத் துணிந்து சொல்பவள். அதே நேரத்தில், ஒருமுறை தவறிழைத்தவளைத் தர்மம் மன்னித்தாலும் சமூகம் மன்னிக்காது; இத்தகைய உலகிலிருந்து தன்னை முழுமையாக விடுவித்துக்கொள்ள மீண்டும் கல்லாதல் என்கிற முடிவைப் புதுமைப்பித்தனின் அகலிகை எடுக்கிறாள். கற்பு நெறியைப் பெண்கள்மீது வலையாக வீசிப் பெண்களைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் இறுக்க இச்சமூகம் முயல்கிறது. தாய்வழிச் சமூகத்தின் உடைப்பில் தோன்றிய ஆண்வழிச் சமூகம், ஆணாதிக்கத்தைப் பெண்கள்மீது வெவ்வேறு வழிகளில் அழுத்துகிறது. கணவனின் கட்டளைக்கு மனைவி அடங்குதல், காமத்தை ஒடுக்குதல் போன்ற பலவற்றுக்கும் அகலிகை முன்னுதாரணமாகத் திகழ்கிறாள். அகலிகை வரலாறு பெண்களை ஒடுக்குவதற்கு இன்றும் பயன்படுத்தப்படுகிறது என்பதை நுட்பமாக இப்பிரதி முன்வைக்கிறது. அவ்வகையில் இது முக்கியமான நூலாகும்.
அகலிகை என்கிற தொல் கதாபாத்திரத்தின் வழியாக ஆண்மையச் சமூகத்தைப் புரிந்துகொள்ள இயலும். அதற்கும் இந்நூல் திறப்பை ஏற்படுத்துகிறது. அதிகாரம் ஒவ்வொரு காலத்திலும் பெண்கள்மீது எப்படியெல்லாம் தன் ஆதிக்கத்தைச் செலுத்தியுள்ளது என்பதையும் அகலிகையைக் கொண்டு புரிந்துகொள்ள முடியும்.
- ச.நந்தினி
முனைவர் பட்ட ஆய்வு மாணவர்
| அகலிகை: தொன்மமும் புனைவும் மு.சீமானம் பலம் நியூ செஞ்சுரிபுக் ஹவுஸ் (பி) லிட் விலை: ரூ.190. தொடர்புக்கு: 044-26251968 |