கேரளத்தில் கணக்கைத் தொடங்கிவிட்டதா பாஜக? | மக்களவை மகா யுத்தம்

கேரளத்தில் கணக்கைத் தொடங்கிவிட்டதா பாஜக? | மக்களவை மகா யுத்தம்
Updated on
2 min read

வட மாநிலங்களில் பாஜக எதிர்ப்பு பரவலாகிவருவது மக்களவைத் தேர்தலில் தெரிந்துவிட்டது. மறுபுறம் கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம் போன்ற தென் மாநிலங்களில் பாஜகவுக்கான ஆதரவு பெருகிவருவதையும் பார்க்க முடிகிறது. அந்த வகையில், பல்வேறு அம்சங்களால் கேரளம் கூடுதல் கவனம் பெறுகிறது.

கேரள அரசியல் சூழல்: மக்களவைத் தேர்தலில் கேரளத்தில் இடது ஜனநாயக முன்னணியின் வீழ்ச்சி ஒன்றும் புதிதல்ல. 2019 மக்களவைத் தேர்தலில் அத்திங்கூர் தொகுதியில் மட்டும்தான் இடது ஜனநாயக முன்னணி வென்றிருந்தது. தற்போது ராதாகிருஷ்ணன் போட்டியிட்ட ஆலத்தூர் தொகுதியில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. இடது ஜனநாயக முன்னணியை வீழ்த்திய காங்கிரஸின் வெற்றி ஒருபுறமிருக்க, திருச்சூர் தொகுதியில் நடிகரும் பாஜக வேட்பாளருமான சுரேஷ் கோபிக்குக் கிடைத்த வெற்றி சமூக வலைதளங்களில் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.

கேரள அரசியலில் இடது ஜனநாயக முன்னணியும், ஐக்கிய ஜனநாயக முன்னணியும் ஆளுங்கட்சியாகவும் எதிர்க்கட்சியாகவும் மாறி மாறித் தொடர்கின்றன. தமிழ்நாட்டிலும் மற்ற மாநிலங்களிலும் காங்கிரஸுடன் கூட்டணியில் இருக்கும் இடதுசாரிக் கட்சிகள், கேரளத்தில் தனித்த கூட்டணியுடன் காங்கிரஸை எதிர்கொள்கின்றன. பொதுவாக,சட்டமன்றத் தேர்தல்களிலும் உள்ளாட்சித் தேர்தல்களிலும் இடதுசாரிகளைத் தேர்ந்தெடுக்கும் மக்கள், நாடாளுமன்றத் தேர்தல்களில் காங்கிரஸுக்கே வாக்களிக்கிறார்கள். 2019ஆம் ஆண்டும் இதுதான் நிகழ்ந்தது; தற்போதும் இதே நிலைதான்.

வாக்குக் கணக்குகள்: 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி 47 சதவீதமும் இடது ஜனநாயக முன்னணி 36 சதவீதமும் பெற்றிருந்தன. 2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் 42 சதவீதமும் இடது ஜனநாயக முன்னணி 35 சதவீதமும் பெற்றுள்ளன. கடந்த தேர்தலைவிட இடது ஜனநாயக முன்னணி ஒரு சதவீத வாக்குகளையே இழந்துள்ளது. காங்கிரஸ் கூட்டணி ஐந்து சதவீத வாக்குகளை இழந்துள்ளது.

தேர்தல் முடிவுகள் குறித்துப் பேசிய முதல்வர் பினராயி விஜயன்,“கேரளத்தில் இடது ஜனநாயக முன்னணி பின்னடைவைச் சந்தித்துள்ளது. மக்கள் மத்தியில் தற்போதைய மாநில அரசு குறித்துப் பரவிய தவறான கருத்துகளைக் களைவதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும். திருச்சூரில் பாஜக கால் பதித்ததையும் தீவிரமாகக் கருதி, இனி வரும் காலங்களில் செயல்படுவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பாஜக வென்றதன் பின்னணி: திருச்சூரில் சுரேஷ் கோபி 4,12,388 வாக்குகளுடன் வெற்றி பெற்றார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாகப் போட்டியிட்ட சுனில் குமார் 3,37,652 வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தார். ஆனால், காங்கிரஸ் சார்பாகப் போட்டியிட்ட முரளிதரன் 3,28,124 வாக்குகளைப் பெற்று மூன்றாம்இடத்துக்குத் தள்ளப்பட்டார். இந்திய கம்யூனிஸ்ட்கட்சிக்கு முன்பைவிட 16,000க்கும் மேல் வாக்குகள் அதிகரித்துள்ளன. ஆனால், காங்கிரஸ் 80 ஆயிரம் வாக்குகளுக்கு மேலாக இழந்துள்ளது. சுரேஷ் கோபி 74,736 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆக காங்கிரஸுக்குக் கிடைக்க வேண்டிய வாக்குகள் சிதறியதால்தான் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

திருச்சூரில் பாஜகவின் Project Gopi என்கிற திட்டமும் பாஜகவின் வெற்றிக்கு மற்றொரு காரணம். 2014 தேர்தலில் அங்கு 11.1 சதவீதம் வாக்குகளைப் பெற்ற பாஜக, 2019இல் அதே திருச்சூரில் 28.2 சதவீதமாகத் தன்னுடைய வாக்குகளை அதிகரித்தாலும் தேர்தலில் தோல்வியுற்றது. அதன் பிறகு, சுரேஷ் கோபி எங்குமே செல்லாமல் திருச்சூரிலேயே செயல்பட்டுள்ளார். இதன் மூலம் கட்சியைக் கடந்து மக்களிடத்தில் செல்வாக்கைப் பெருக்கியுள்ளார். ஒட்டுமொத்தமாக, கேரளத்தில் கடந்த தேர்தலில் 13% வாக்குகளைப் பெற்றிருந்த பாஜக இந்தத் தேர்தலில் 16.68 சதவீத வாக்குகளைப் பெற்றிருக்கிறது. கேரளத்தில் இதுவரை அக்கட்சிக்குக் கிடைத்திராத வாக்கு விகிதம் இது.

இனி என்ன? பாஜகவின் இதே திட்டம் கேரளத்தின் நீமம் தொகுதியிலும் அரங்கேற்றப்பட்டது. பாஜகவை முன்னிறுத்தி 1999, 2004, 2014 மக்களவைத் தேர்தல்களில் ராஜகோபால் போட்டியிட்டார். மூன்று முறையும் தோல்வியுற்றார். வாக்குகள் கணிசமாக அதிகரித்துவந்தன. ஒரே தொகுதியில் தொடர்ச்சியாகப் போட்டியிட்டதால், 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளரான சிவன் குட்டியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். ஆனால், அடுத்த சட்டமன்றத் தேர்தலிலேயே பாஜகவைக் கேரள மக்கள் தோற்கடித்தனர்.

மக்களவைத் தேர்தலில் இடது ஜனநாயக முன்னணியின் தோல்வி சட்டமன்றத்திலும் உள்ளாட்சித் தேர்தல்களிலும் பிரதிபலிக்குமா என உறுதியாகச் சொல்ல முடியாது. கடந்த முறையும் நாடாளுமன்றத்தில் தோல்வியுற்றபோதும் உள்ளாட்சி அமைப்புகளையும் சட்டமன்றத்தையும் இடதுசாரிகள் தன்வசப்படுத்தினர். கேரளத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக முதல்முறையாகத் தன் கணக்கைத் தொடங்கியிருக்கிறது. எனவே, இனி வருங்காலங்களில் கருத்தியல் போர் தீவிரமடையும். வலதுசாரி அரசியலை கேரள மக்கள் ஆதரிக்கப் போகிறார்களா எதிர்க்கப் போகிறார்களா என்பது போகப் போகத் தெரியும்.

- கு.சௌமியா

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in