

அத்யாத்ம ராமாயணத்தின்படி சீதையை ராமன் சந்தேகப்பட்டதும் அவளை மீண்டும் காட்டிற்கு அனுப்பியதும் திட்டமிட்டு நடத்தப்பட்ட நாடகம். ராம அவதாரத்தை முடிவுக்குக் கொண்டு வரவே இப்படியொரு நாடகம் நிகழ்த்தப்பட்டதாக இக்காவியம் கூறுகிறது. சீதையின் மறைவிற்குப் பிறகு ராமனும் சரயு நதியில் மூழ்கி இப்பிறப்பை முடித்துக் கொள்கிறார். இந்தத் தொன்மத்தை அடிப்படையாகக் கொண்டு ‘ஜல சமாதி’ என்றொரு சிறுகதையை எழுதியிருக்கிறார் எழுத்தாளர் கல்யாணராமன்.
ராமன் என்ற கதாபாத்திரத்தின் போதாமைகளை விமர்சனத்துக்கு உட்படுத்தியே பல புனைவுகள் எழுதப்பட்டிருக்கின்றன. இந்தக் கதை அதிலிருந்து முற்றிலும் வேறானது. ராமனின் அந்திமக் காலம் நெருங்குகிறது. ஒரு மாதத்திற்குள் ராமன் காலனிடம் சரணடைந்தாக வேண்டும். இதுவரையிலான தன் வாழ்க்கையைத் தொகுத்துப் பார்க்கிறார் ராமன். இந்த இடத்தில்தான் பிரதி, ராமனின் பக்கம் சாய்ந்துவிடுகிறது. தன்மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை எல்லாம் நினைத்துப் பார்க்கிறார் ராமன். கோசலை, சீதை, பரதன், அனுமன் ஆகியோரின் அன்பு ஒரு கட்டத்தில் அலுத்துவிட்டதை உணர்கிறார். தாடகைக்குச் செய்த அநீதி அவரது மனக்கண் முன் வந்துபோகிறது. சீதையை மணந்ததற்குப் பிறகே தனக்கு ஓர் அடையாளம் ஏற்பட்டதாக அவர் கருதுகிறார்.
தாடகை, அகலிகை, கைகேயி, ஊர்மிளை, சூர்ப்பனகை, மண்டோதரி, சீதை என எல்லாரும் அவரது அகத்தில் வந்துபோகிறார்கள். இவர்களது கண்ணீருக்கு ஏதோவொரு விதத்தில் தான் காரணமாக இருந்திருக்க வாய்ப்பிருப்பதாக அவர் கருதுகிறார். இவர்களிடம் மனப்பூர்வமாக மன்னிப்புக் கோருவதன் மூலமாக இந்தத் துயரத்திலிருந்து விடுபட முடியுமெனக் கருதுகிறார் ராமன். கல்யாணராமன் தன் பிரதியில் அதற்கொரு இடத்தை ராமனுக்கு உருவாக்கிக் கொடுக்கிறார். ராமனது புனிதம் இதன்மூலமாக மீட்டெடுக்கப்படும் என்று நம்புகிறார். இப்படியொரு பார்வைக்கு வாசகனைப் பிரதி அழைத்துச்செல்கிறது.
கல்யாணராமன் தொண்ணூறுகளுக்குப் பிறகு எழுதவந்தவர். நவீன வாழ்க்கையின் சிக்கல்களையும் அது உருவாக்கும் பதற்றங்களையும் கவிதைகளாக எழுதியவர். இவரது ‘நரகத்திலிருந்து ஒரு குரல்’ (1998) என்கிற கவிதைத் தொகுப்பு, நவீனத்தன்மைகளை உள்வாங்கிக்கொள்ள இயலாமல், மூச்சுமுட்டும் நகர மனிதனின் குரலாக எதிரொலித்தது. இவரது புனைவுமொழி, மரபின் வேரும் நவீனத்துவத்தின் கிளையையும் கொண்டது. மூன்று கவிதைத் தொகுப்புகளும் ‘விபரீத ராஜ யோகம்’ என்றொரு சிறுகதைத் தொகுப்பும் இவரது படைப்புகள்.
கவிதை, சிறுகதை ஆகிய இரண்டு வடிவங்களிலும் தொன்மம் சார்ந்த கதையாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதிவருகிறார். ராமாயணம், மகாபாரதம் ஆகிய இரண்டு தொன்மப் பிரதிகளுமே இவரது எழுத்தில் அதிக இடையீடுகளை ஏற்படுத்தியிருக்கின்றன. இதன் தொடர்ச்சியாகவே ‘ஜல சமாதி’ என்கிற புனைவை உள்வாங்கிக்கொள்ள வேண்டும். ராமன் என்கிற கதாபாத்திரத்தின் மீதான கறைகளைக் கழுவவே இப்புனைவு முயன்றிருக்கிறது என்கிற கோணத்திலும் இதனை வாசிக்கலாம். சரி, தவறு என்பதைக் கடந்து, வாழ்க்கையின் இறுதித் தருணத்தில் அனைவரிடமும் சரணடைதல் என்கிற பாதையை ராமன் தேர்ந்தெடுக்கிறார். கல்யாணராமன் அதற்கான வெளியைத் தன் புனைவில் ராமனுக்கு அளித்திருக்கிறார். இதுவொரு பார்வை. ராமன் தரப்பு நியாயங்களைப் பேசுவதற்கும் நவீனப் பிரதிகள் இடமளிக்கும் என்பதற்கு இக்கதை ஓர் உதாரணம்.
காலனும் ராமனும் உரையாடிக் கொண்டிருக்கின்றனர். அந்த நேரத்தில் துர்வாசர் வருகிறார். ராமனிடம் அளித்த உறுதியை மீறி லக்குவணன் அவரை உள்ளே அனுமதிக்கிறார். அதற்கான தண்டனையாகச் சரயு நதியில் மூழ்கி இறந்துபோகிறார் லக்குவணன் என்று அத்யாத்ம ராமாயணம் கூறுகிறது. துர்வாசர் சாபத்தால் லக்குவணன் இறந்துபோனதாகக் கல்யாணராமன் எழுதியிருக்கிறார். இங்கு ராமன் மீது லக்குவணன் கொண்டிருந்த தொன்ம மதிப்பு காப்பாற்றப்படுகிறது. அதேபோல, ராமன் மட்டுமே சரயு நதியில் இறந்துபோனதாக ‘ஜல சமாதி’ கூறுகிறது. கோசல நாட்டைத் தன் இரண்டு மகன்களுக்கும் பிரித்துக் கொடுத்துவிட்டு, பரதன், சத்துருக்கனன், விபீஷணன், சுக்கிரீவன் ஆகியோருடன் ராமன் ஜல சமாதி அடைந்ததாக அத்யாத்ம ராமாயணம் கூறுகிறது. இது பௌராணிகக் கதை. நவீனப் பிரதிகள் இதனை எப்படியும் கையாளலாம்.
கல்யாணராமன், ராமன் என்கிற முதன்மைக் கதாபாத்திரத்தை மட்டுமே தன் புனைவுக்கு எடுத்துக்கொண்டிருக்கிறார். ராமனின் அந்திமக் காலத்தை அவ்வளவு உணர்வுக் கொந்தளிப்புடன் இக்கதை அணுகியிருக்கிறது. ராமன் என்கிற பெயர் அவரது வரலாற்றையும் சேர்த்துதான் அடையாளப்படுத்தும். தொன்மம் சார்ந்த பெயர்கள் ஒரு சுமைதான். ராமனாக வாழ்வதில் உள்ள நெருக்கடிகள் ராமனுக்குத்தான் தெரியும்.