

பிரான்ஸ் காஃப்கா உலகப் புகழ்பெற்ற ஜெர்மன் எழுத்தாளர். காஃப்காவின் புகழ்பெற்ற சிறுகதைகளில் ஒன்றான ‘A Hunger Artist’ (‘பட்டினிக் கலைஞன்’ என்கிற தலைப்பில் இதை சி.சு.செல்லப்பா மொழிபெயர்த்துள்ளார்) 1924இல் வெளிவந்தது. உலகின் சிறந்த சிறுகதைகளில் ஒன்றான அதற்கு இது நூற்றாண்டு. இந்தக் கதை அதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பே ஜெர்மனில் வெளியாகியிருந்தாலும் 1924இல் வெளிவந்த மொழிபெயர்ப்பே அதற்குச் சர்வதேசக் கவனத்தைப் பெற்றுத்தந்தது. அந்த வகையில் இந்தக் கதை இந்த ஆண்டில் நினைவுபடுத்தப்படுகிறது.
பொ.ஆ. (கி.பி.) 17, 18ஆம் நூற்றாண்டுகளில் பட்டினிக் கலைஞர்கள் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இருந்திருக்கிறார்கள். இவர்கள் பொதுஇடங்களில் பட்டினி கிடப்பார்கள். இதை வேடிக்கை பார்க்க மக்கள் கூட்டம் வருமாம். இந்தப் பட்டினி 40 நாள்கள் வரை தொடரும். பிறகு, இந்தப் பட்டினிக் கலைக்கு மதிப்பில்லாமல் பட்டினிக் கலைஞர்களும் இல்லாமல் ஆகிவிட்டார்கள். இதை காஃப்கா தன் கதையின் உருவகமாகச் சுவீகரித்துள்ளார்.
பட்டினிக் கலையின் மீது உன்மத்தம் கொண்ட ஒரு கலைஞனை இந்தக் கதை சித்தரிக்கிறது. பட்டினிக் கலை செழித்திருந்த காலகட்டம் கதையின் தொடக்கத்தில் சொல்லப்படுகிறது. சிறார்களுக்குப் பட்டினிக் கலைஞன் வேடிக்கைப் பொருளாகவும் பெரியவர்களுக்கு நகைப்புக்கு உரியவனாகவும் இருந்துள்ளான். பட்டினிக் கலைஞனை மக்கள் பார்க்க, முண்டியடித்த காலகட்டம் இதில் ஓர்க்கப்படுகிறது. பட்டினிக் கலைஞர்கள் சாப்பிடுகிறார்களா என்பதைக் கண்காணிக்க மூன்று வேளைகளிலும் காவலர்கள் கூண்டைச் சுற்றிச் சுற்றி வந்தார்கள். பட்டினிக் கலை வழக்கத்தில் இருந்த காலகட்டத்திலும் இந்தப் பட்டினிக் கலைஞர்கள், காவலர்களை ஏமாற்றிச் சாப்பிடுவது உண்டாம். காஃப்காவின் நாயகனான இந்தப் பட்டினிக் கலைஞன், தெரியாமல் சாப்பிட்டுக்கொள்ளட்டும் எனக் காவலர்களே ஒதுங்கிவிடுகிறார்கள். ஆனால், உண்மையான கலைஞனான அவனுக்கு, அது பெரும் சங்கடத்தை ஏற்படுத்துகிறது.
ஒருகட்டத்தில் பட்டினிக் கலை வீழ்ச்சி அடைகிறது; அது அவனைச் சங்கடப்படுத்துகிறது. அவன் ஒரு சர்க்கஸில் சேர்கிறான். விலங்குக் கூண்டுகளுக்கு இடையில் ஒரு கூண்டில் இருக்கிறான். ஆனால், முன்புபோல் அவனால் மக்களின் பாராட்டைப் பெற முடியவில்லை. அருகிலிருக்கும் விலங்கைப் பார்க்க வருபவர்கள், இவனையும் பார்க்கிறார்கள். ஒரு நாள் பட்டினிக் கலைஞன் இருக்கும் கூண்டைப் பார்க்கும் சர்க்கஸ் மேலாளர், அது ஏன் பயன்படுத்தப்படாமல் இக்கிறது என்று கேட்கிறார். சர்க்கஸ் ஆள் ஒருவர் நினைவில் துழாவி, அதில் பட்டினிக் கலைஞன் இருக்கும் விஷயத்தைச் சொல்கிறார். வைக்கோல் குவியல்களுக்கு இடையில் எலும்பும் தோலுமான பட்டினிக் கலைஞனைத் தேடி எடுக்கிறார்கள். அவன் தன் கலையைக் குறித்துப் பேசிவிட்டு இறந்துபோகிறான். அவன் கடைசியாகப் பேசிய வார்த்தைகள் இந்தக் கதையின் உருவகத்தன்மைக்கு வலுச்சேர்க்கின்றன: “நான் பட்டினி இருந்துதான் ஆக வேண்டும். என்னால் இல்லாமல் இருக்க முடியாது”, “ஏனென்றால் எனக்குப் பிடித்த உணவு எதையும் நான் காண முடியவில்லை. அதைக் கண்டிருந்தால் உங்களையும் மற்றவர்களைப் போலவும் சாப்பிட்டிருப்பேன்”
பட்டினிக் கலைஞன் மக்களின் பாராட்டுக்கும் புகழுக்கும் ஏங்குபவன். ஆனால், காஃப்கா அவனுக்குப் பெயர்கூட வைக்கவில்லை. கலை தரும் அந்த அவஸ்தையை இந்தக் கதையில் திருத்தமாகச் சித்தரித்திருப்பார். அசோகமித்திரனின் ‘புலிக்கலைஞன்’ தனது புலிவேஷத்தைத் தூக்கிக்கொண்டு, மாறிவிட்ட காலத்திற்குள் பாய்வதை இந்தக் கதையுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். புலிக்கலைஞனாக இருப்பதன் துயரத்தையும் தாண்டி, அவன் அதை விடாப்பிடியாகப் பிடித்துக்கொண்டிருக்கிறான். இதில் பட்டினிக் கலைஞனைப் போல் புலிக்கலைஞனும் பட்டினி கிடக்கிறான். ஒன்று கலை, மற்றொன்று கலைக்காக. மனித மனத்தின் லட்சியவாதப் பிடிபாடுகளாகவும் இதைப் பார்க்கலாம்.
பட்டினிக் கலைஞன் ஏமாற்றுவதற்கான வாய்ப்பு இருந்தும் நேர்மையான கலைஞனாக இருக்கிறான். லெளகீகம் வெல்ல முடியாத இடத்துக்கு இந்தக் கலையின் உன்மத்தம் அவனை இட்டுச் செல்கிறது. இந்த உன்மத்தம் இல்லாதிருந்தால் அவனும் மற்றவர்களைப் போல் வாழ்ந்திருக்கலாம். ‘சங்கிலியால் பிணைக்கப்பட்டிருப்பது சமயங்களில் சுதந்திரமாக இருப்பதைவிடப் பாதுகாப்பானது’ என்கிற காஃப்காவின் மேற்கோளையும் இந்த இடத்தில் பொருத்திப் பார்க்கலாம். கால மாற்றம் இந்தக் கலையை மதிப்பற்றதாக்கிவிட்டது. இந்தக் கலைக்கான இடத்தில், அரசியல் போராட்ட முறைகளையும் வைத்துப் பார்க்கலாம். காஃப்காவின் கதையில் பட்டினிக் கலைஞன் இறந்ததும் கதை முடியவில்லை. அந்தக் கூண்டுக்குள் ஒரு சிறுத்தையைக் கொண்டுவந்து விடுகிறார்கள். இதுதான் விஷேசமான அம்சம். அதற்கு உணவு வழங்கப்படுகிறது. அது நன்றாகச் சாப்பிடுகிறது. மக்கள் அதை வேடிக்கை பார்க்கக் கூடுவதுடன் கதை முடிகிறது. இந்த இடத்தில் புதிய கதையை நாம் வாசித்துப் பார்க்கலாம்.