

இளையராஜாவின் தொடர்பில் காப்புரிமை குறித்து எழுத்தாளர்கள் அண்மையில் எழுதித் தீர்த்துவிட்டார்கள். அது ஒருபுறம் இருக்கட்டும். எழுத்தின் காப்புரிமை (copyright) பற்றி எழுத்தாளர்கள் இப்படி எப்போதாவது கவலைப்பட்டனரா? அரையம் (Royalty) பற்றி விவாதித்தனரா?
காப்புரிமைச் சங்கம்: சினிமா, சின்னத்திரை தயாரிப்பாளர்களுக்கு (SCRIPT), நிகழ்த்துக் கலையினருக்கு (IPRS), ஒலித்தட்டுக்காரர்களுக்கு (PPL) எல்லாம் பதிவுபெற்ற சங்கங்கள் இருக்கின்றன. அதுபோல எழுத்தாளர்களுக்குக் காப்புரிமைச் சங்கம் ஏதேனும் இருக்கிறதா? ‘ஆத்தர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா’ என்ற இந்திய அளவிலான எழுத்தாளர் அமைப்பு, காப்புரிமைப் பிரச்சினையில் தலையிடுவதில்லை.
காப்புரிமைச் சங்கங்கள் என்பவை எழுத்தாளர்களுக்கு உதவுவதற்காக அவர்களால் உருவாக்கப்படுபவை. நூலாசிரியரின் அனுமதியைப் பதிப்பாளர்களுக்கும் வணிகப் பயன்பாட்டாளர்களுக்கும் வழங்குவதும் உரிமைத்தொகையைப் பெற்று எழுத்தாளர்களுக்கு வழங்குவதுமான இடைநிலைப் பணிகளைச் செய்பவை. எழுத்தாளர்களுக்குத் தேவைப்படும் இப்படி ஓர் அமைப்பு இன்று தமிழ்நாட்டில் நான் அறிந்து - இல்லை. இந்தத் திசையில் ஒரு முயற்சி கு.அழகிரிசாமி காலத்தில் நிகழ்ந்துள்ளது.
“மயிலாப்பூர் காந்தி அமைதி நிலையக் கட்டிடத்தில் நடைபெற்ற எழுத்தாளர் கூட்டத்துக்குப் போனேன். பதிப்புரிமையைப் பாதுகாக்க ஒரு சங்கம் தொடங்குவது என்று முடிவு செய்யப்பட்டது. என்னையும் ஆர்.வி.யையும் நா.பார்த்தசாரதியையும் Steering Committee ஆக நியமித்தார்கள்” (கு.அழகிரிசாமி நாள்குறிப்பு, 4 அக்டோபர் 1969).
இந்த முன்னெடுப்பு வளர்ந்ததாகத் தெரியவில்லை. தமிழ் எழுத்தாளர் கூட்டுறவுச் சங்கம் ஒன்று 1960களில் செயல்பட்டது. அது நூலை அச்சிடுவதில் காட்டிய ஆர்வத்தைக் காப்புரிமைப் பிரச்சினையில் செலுத்தவில்லை.
காப்புரிமைக் காலம்: 1957இல் காப்புரிமைச் சட்டம் உருவானபோது, அது ஆசிரியர் வாழ்காலமும் பிறகு 50 ஆண்டுகளும் என்பதாக இருந்தது. தாகூரின் படைப்புகளுக்கு அவர் இறந்து 50 ஆண்டுகளான பின் அதாவது, 1991இல் காப்புரிமை முடிவுக்கு வந்தது. அதற்கான உரிமையை வைத்திருந்த விசுவபாரதி பல்கலைக்கழகம் மேலும் 10 ஆண்டுகளுக்குக் காப்புரிமையை நீட்டிக்க அரசிடம் கோரி அதைப் பெற்றது.
பிறகு எல்லோருக்கும் நீட்டிக்கப்பட்டது. ஆக, ஓர் எழுத்தாளர் இறந்த பிறகு 60 ஆண்டுகள் வரை காப்புரிமை அவரது மரபுரிமையர் வசம் இருக்கும். பிறகு, பொதுவெளிக்கு வரும். எழுத்தாளர்கள் வடுவூர் துரைசாமி ஐயங்கார், மு.சி.பூரணலிங்கம் பிள்ளை ஆகியோர் முறையே 1942இலும் 1947இலும் மறைந்தனர்.
அவர்கள் படைப்புகள் 2002இலும் 2007இலும் தாமாகவே பொதுவெளிக்கு வந்துவிட்டன. எவர் வேண்டுமானாலும் பதிப்பித்து விற்றுக்கொள்ளலாம் என்கிற நிலையில், அரசாங்கம் அவ்வுரிமையைக் காசு கொடுத்து வாங்கி மக்களுக்கு அளித்தது. இதைச் சமாளிக்கவோ என்னவோ அரசாங்கம் அத்தொகையைப் பரிவுத்தொகை என்றது. அண்மையில் மறைந்த அஸ்வகோஷ் தான் எழுதிய, ‘நாளை வரும் வெள்ளம்’ நூலின் காப்புரிமையை நூலை வெளியிடும்போதே பொதுவாக்கினார். அது வேறு.
விசுவபாரதிக்குக் காப்புரிமை ஆண்டை நீட்டித்துக்கொள்ளும் வலுவிருந்தது. ஆனால், எழுத்தாளர்களுக்கோ இருக்கும் காப்புரிமையைக் காப்பாற்றிக்கொள்ளும் திறன்கூட இல்லை.
எழுத்தாளர் அனுபவம்: “இந்த என் நாவலை (‘டாக்டர் அனுராதா’) ஒரு சினிமா கம்பெனியார் படம் பிடிக்க விரும்பினார்கள். நான் ரூபாய் 3,000 கேட்டேன். அதைக் கொடுக்க இஷ்டம் இல்லாமல், அந்த கம்பெனியார் என் கதையைத் தங்கள் திரைக்கதையின் முதல் பாதியாக வைத்துக்கொண்டு, பின்பாதியைத் தங்கள் இஷ்டம்போல எழுதிச் சேர்த்து, ஒரு மட்டமான படத்தைத் தயாரித்து வெளியிட்டுவிட்டார்கள்.
வழக்கு தொடர்வதற்கு எனக்கு அப்போது பண வசதியும் இல்லை. கால அவகாசமும் இல்லை” என்றார் கு.அழகிரிசாமி (‘டாக்டர் அனுராதா முன்னுரையில்’). இது 1950களின் கதை. இன்றைய நிலையைத் தினசரிகளைத் திருப்பித் தெரிந்துகொள்ளலாம்.
பதிப்பாளர் அனுபவம்: தமிழின் முன்னோடிப் பதிப்பாளுமை வை.கோவிந்தன். அவர் தன் பெரும் செல்வத்தை இழந்ததற்கான பல காரணங்களுள் காப்புரிமை மீறலும் ஒன்று. அவர் ஆங்கிலம்-ஆங்கிலம்-தமிழ் அகராதி ஒன்றைத் தயாரித்துத் தர தி.நா.சுப்பிரமணியத்தைக் கேட்டுக்கொண்டார்.
பாதியளவு உழைத்துச் செய்த அவர், உடல் நலம் இழந்ததால் மீதியைப் புழக்கத்திலிருந்த அகராதியைப் பார்த்து எழுதிக் கொடுத்துவிட்டார். இதை அறியாத வை.கோவிந்தனும் தி.நா.சுப்பிரமணியம் பெயரில் வெளியிட்டுவிட்டார். அந்த அகராதிக்காரர்கள் வழக்குத் தொடுத்து வென்றனர். வை.கோவிந்தன் பெரிய அளவுக்கு நஷ்டஈடு தர வேண்டியிருந்தது. ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி இதைப் பற்றி வருந்தி வருந்திச் சொல்வார்.
அறியாமை அனுபவம்: பிரபஞ்சன் உயிரோடிருந்த சமயம். சென்னையில் தன்னாட்சிக் கல்லூரி ஒன்றின் துறைத் தலைவரிடம் அவரை அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது. “பிரபஞ்சனை எனக்கு மட்டுமல்ல, என் கல்லூரி மாணவியருக்கும் நன்றாகத் தெரியும். அவரது கதை எங்கள் கல்லூரியில் சென்ற ஆண்டு பாடமாய் இருந்தது” என்றார் பெருமையுடன்.
“அவரிடம் அனுமதி வாங்கினீர்களா, பணம் கொடுத்தீர்களா?” என்று கேட்டேன். அப்படியெல்லாம் செய்ய வேண்டுமா என்பதுபோல அவர் என்னைப் பார்த்தார். பிரபஞ்சன் (வழக்கம்போல்) சிரித்துக்கொண்டு நின்றார். ஏமாற்றும் நோக்கத்துடன் நடக்கும் செயல்களின் அளவுக்கு, இதுபோல் அறியாமையால் நேர்பவற்றின் அளவும் இருக்கும். அறியாமைக்கு இன்னொரு சான்றும் தரலாம்.
தமக்குப் பலரிடமிருந்து வந்த கடிதங்களை நூலாக்கிச் சிலர் வெளியிடுகின்றனர். 1957ஆம் ஆண்டுச் சட்டப்படி, உண்மையில் கடிதம் எழுதியவருக்குத்தான் காப்புரிமை உண்டு; கடிதத்தைப் பெற்றவருக்கு அல்ல. திருகாணியைத் திருகி கோணத்தைச் சரிபார்த்தவருக்குத்தான் போட்டோக்களின் உரிமை இருப்பதுபோல. படத்தில் இடம்பெற்றவருக்கு அறவுரிமை மட்டுமே உண்டு. இந்தச் சட்ட விதிகள் பல நூறாண்டு விவாதங்களுக்குப் பிறகு உருவாகி வந்தவை.
எனவே, காப்புரிமையின் வெற்றி என்பது பலர் ஒத்துழைப்பில் நிலைகொண்டுள்ளது. உரிமை பெற்ற ஆசிரியர் அல்லது மரபுரிமையர், பதிப்பாளர்கள், வாசகர்கள், காப்புரிமையைப் பாதுகாக்கும் அமைப்புகள், தவறு நேர்ந்தால் சட்டத்தைச் சுட்டிக்காட்டும் அமைப்பு ஆகிய இந்த ஐவரும் சரியாகச் செயல்பட்டால், காப்புரிமையின் பயன் ஆசிரியரைச் சாரும். அதுவரையும் அரையம் என்பது கிடைத்த வரை லாபம் என்கிற கதைதான்!
- தொடர்புக்கு: athiy61@yahoo.co.in