

ஆ.மாதவனைப் பற்றிக் கூறும்பொழுது பலரும் அவரது ‘கிருஷ்ணப் பருந்து’ நாவலையும், ‘கடைத்தெருக் கதை’களையும் முன்னிறுத்துவார்கள். இரண்டும் அவரது சாதனைகள் என்பதில் ஐயமில்லை. ஆனால், ‘புனலும் மணலும்’ காலத்திற்குச் சற்றுமுன்னரே சிந்தித்த நாவல் என்றே சொல்ல வேண்டும். தமிழகத்தில் மணற்கொள்ளை ஒரு சுற்றுச்சூழல் அச்சுறுத்தல் என எல்லோரும் கருத ஆரம்பிக்கும் முன்னே, அதை மையமாக வைத்து மாதவன் எழுதிய நாவல் இது. அந்த விதத்தில் இந்த நாவல் சிறப்புக்குரிய ஒன்று.
வெறுப்பு இந்த நாவலின் முக்கியக் கருப்பொருள். தண்ணீர் குடித்தும் போகாத அடிநாக்கில் தங்கிய கசப்புபோல் அடிமனத்தின் வெறுப்பு. நாவலின் மையக் கதாபாத்திரமான அங்குச்சாமி, தங்கம்மையை விரும்பி மணக்கிறார். தங்கம்மையின் மகள், பங்கி. அதனால் அங்குச்சாமிக்கு மகள் முறையாகிறாள் பங்கி. ஆனாலும் அவலட்சணமாக இருப்பதாலோ என்னவோ பங்கியை அங்குச்சாமி வெறுக்கிறார். அவளைக் கரித்துக்கொட்டுகிறார். இந்த வெறுப்புதான் நாவலின் சரடு எனலாம். அது ஒரு சாவில் கொண்டுபோய் நாவலை முடித்துவைக்கிறது. இந்த வெறுப்பு ஒரு ஆண் மனத்தின் வெளிப்பாடு. எவ்வளவுதான் விருப்பப்பட்டு ஒரு பெண்ணை மணமுடித்தாலும் அவள் பெற்ற மகளைத் தன்னுடையதாக எண்ண ஒருபோதும் ஆண் மனம் சம்மதிப்பதில்லை. இதுவும் ஒரு காரணம்தான்.
ஆற்றையும் மணலையும் நம்பிய வாழ்வாதாரத்தை இந்த நாவலில் கொண்டுவந்திருக்கிறார் ஆ.மாதவன். மணலைக் கொள்ளையடிக்கிறோம் என்பதை உணராது, மணல், நதி அளிக்கும் கொடை என்று நம்பி வாழ்ந்த மக்களைக் காட்சிப்படுத்திஇருக்கிறார். பல்வேறு சாதி, மத மக்களும் இணக்கமாக வாழ்ந்த எழுபதுகளின் இந்தியா இந்த நாவலில் சித்தரிக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் பற்றிய புரிதலுடன் மாதவன் இந்த நாவலை எழுதியிருக்கிறார். உணர்வுபூர்வமான கதையை உள்புறமாகச் சொன்னாலும் மணல் அள்ளுவது குறித்தான ஆபத்தான விளைவைப் புறவயமாகப் பதிவுசெய்கிறது இந்த நாவல். அங்குச்சாமி மணல் அள்ளும் குத்தகைதாரர் ஆகிறார். அவர் மணல் அள்ளியதால் ஆற்றில் ஒரு பெரிய குழியே உருவாகிவிடுகிறது. அந்தக் குழியில் ஒரு யானை மாட்டிக்கொள்கிறது. யானையை மீட்கப் பெரும் பிரயத்தனமே நடக்கிறது. நாவலில் இந்தக் காட்சியை மாதவன் சிறப்பாகச் சித்தரித்திருப்பார். அந்த யானை மீட்பு நிகழ்வை மக்களுடன் மக்களாக அதற்குக் காரணமான அங்குச்சாமியும் வேடிக்கை பார்க்கிறார். அந்த யானை மீட்பு நிகழ்வில் தடுமாறி விழுந்து அங்குச்சாமியின் கையில் காயம் ஏற்படுகிறது. இந்தக் காயத்தை ஒரு தண்டனையாகப் பார்க்கலாம். இந்தக் காட்சியை மாதவன் ஒரு படிமமாக நாவலில் சித்தரித்துள்ளார் எனலாம். நாவல் இதை வைத்து முன்னே நகர்ந்து செல்கிறது.
அதையடுத்து, மணல் படுகை குறைந்துகொண்டே வருகிறது. நதியின் ஆழம் அதிகரித்துச் சுழிகள் ஏற்படுகின்றன. கதையின் இறுதிக்கட்டத்திற்கு ஒரு வகையில் மணல் அள்ளுதலே காரணியாக இருக்கப்போவதையும் நாவல் சொல்லிப் பாய்கிறது. நகரமயமாதலை ஆங்காங்கே பேச்சினூடே அழகாகக் கொண்டுவந்திருக்கிறார் மாதவன். முதலில் உரிமையாக இருந்த இடம் அரசாங்கத்திடம் பறிபோகிறது. காவலர் கல்லூரி வருகிறது. இதுபோலக் கண்ணுக்குத் தெரியாத மாற்றங்களை ஆங்காங்கே ஓரிரு வரியில் கூறிவிட்டு, அங்குச்சாமி உடல்நலம் தேறி வீதியில் வலம் வருகையில் எல்லாமும் மாறி இருப்பதாகக் காண்கையில் நகரமயமாதல் முழுவீச்சை அடைகிறது.
பங்கி ஒரு மறக்க முடியாத கதாபாத்திரம். அவலட்சணமாகப் பிறந்ததில் அவள் தவறு என்ன இருக்கிறது? அழகான தாய்க்குப் பிறந்ததால் அந்த அகோரம் கூடுதலாக வெளித்தெரிகிறது. காலமெல்லாம் கரித்துக்கொட்டும் வளர்ப்புத் தந்தைக்கும் (அவளைப் பொறுத்தவரையில் அவரே தந்தை) பணிவிடைகள் செய்கிறாள். அவரிடம் திட்டுகள் வாங்கினாலும் இந்தப் பணிவிடையை மனம் உவந்து செய்கிறாள். அவளுக்கும் அங்குச்சாமிக்கும் இடையிலான உறவு என்று சொல்லக்கூடிய அவளது தாய் தங்கம்மை இறந்த பிறகும் அங்குச்சாமியை அவள் கைவிடவில்லை. வெளியில் செல்ல முடியாத அவனுக்குக் கஞ்சி ஊற்றுகிறாள். அங்குச்சாமியின் வளர்ப்பு மகனான தாமோதரனின் பிரியத்தை, அக்கம்பக்கத்துப் பெண்கள் சொல்வதுபோல் தனக்குச் சாதகமாக மாற்றிக்கொள்ளவும் அவள் முயல்வதில்லை. மனதார அவனுக்கு நல்ல பெண் கிடைக்க வேண்டுகிறாள்.
முதல் இரண்டு அத்தியாயங்கள் மையக் கதைக்குள் செல்லாமல், நதியையும், சுற்றுப்புறத்தையும் வர்ணிப்பது ஒரு நல்ல உத்தி. வாசகர்களைக் கதைக் களத்திற்குள் மொத்தமாக நுழைய வைத்துவிட்டுப் பின் கதையை ஆரம்பிக்கிறார் மாதவன். அமைதியான நதியில் ஆரம்பித்து, ஆர்ப்பாட்டமான நதியில் முடித்துவைக்கிறார். மாதவன், நீல.பத்மநாபன் போன்றோர், கதைகளில் யதார்த்தத்திற்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை, விழுமியங்களுக்குக் கொடுக்க மாட்டார்கள். சில கதாபாத்திரங்களைக் குரூரமானவர்களாகவும், ஒழுக்க மதிப்பீடுகள் இல்லாதவர்களாகவும் நாம் உணர்வதன் காரணம் இதுதான். அங்குச்சாமி, தங்கம்மைக்கு நல்ல கணவர்; அவள் அம்மையால் பெரிதாகப் பாதிக்கப்பட்ட போதும் அவளை விட்டு அகலாதவர்; எங்கிருந்தோ வந்த தாமோதரனைச் சொந்தப் பிள்ளையாகக் கருதுபவர்; அக்கம்பக்கத்தோருக்கும் நல்லவர். ஆனால், பங்கி என்ற கண்ணாடியின் மூலம் பார்க்கையில் அவர் எவ்வளவு கெட்டவர். மனிதர்கள் நல்லவர்களாகவும் அதே நேரத்தில் கெட்டவர்களாகவும் இருப்பது இப்படித்தான்.
நாற்பது வருடங்களுக்குப் பின் இந்தக் கட்டுரை எழுதுவதற்காக நாவலை மீண்டும் வாசித்தேன். கதை நன்றாக நினைவிருக்கிறது, ஆனால் என் பார்வை மாறியிருக்கிறது. மேலும் அங்குச்சாமி மீதும் பரிதாபம் எழுகிறது. இந்தக் காலகட்டத்தில் நாவல் தன்னைப் புதுப்பித்துக் கொண்டிருந்திருக்க வேண்டும். அதனால்தான் இதை கிளாசிக் நாவல் என்கிறோம், இல்லையா?