கல்லூரி காலிப் பணியிடம் குழப்பங்களுக்கு முடிவு வருமா?

கல்லூரி காலிப் பணியிடம் குழப்பங்களுக்கு முடிவு வருமா?
Updated on
3 min read

தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக அரசுக் கலை அறிவியல் கல்லூரிகளில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் கல்வியின் தரமும் மாணவர்களின் நலனும் பாதிக்கப்பட்டுள்ளன என்பது பலரும் அறிந்ததுதான். பெரும் காலதாமதத்துக்குப் பிறகு பணியிடங்களை நிரப்புவதற்கான ஆணைகள் வந்தன. ஆனால், அதை ஒட்டித் தொடரப்பட்ட வழக்குகளும் அரசின் நடவடிக்கைகளும் இந்தப் பணியிடங்கள் நிரப்பப்படுமா என்கிற ஐயத்தை எழுப்பியிருக்கின்றன.

தமிழ்நாடு அரசின் கலை அறிவியல் கல்லூரிகளிலும், கல்வியியல் கல்லூரிகளிலும் உள்ள 4,000 உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான ஆணை கடந்த மார்ச் இரண்டாவது வாரத்தில் வெளியிடப்பட்டது. இதற்கு எதிராக கெளரவ விரிவுரையாளர்கள் தரப்பில் ஒரு வழக்கும், சுயநிதிக் கல்லூரி / பிரிவு ஆசிரியர்கள் தரப்பில் ஒரு வழக்கும் தொடரப்பட்டன.

கெளரவ விரிவுரையாளர்களின் வழக்கின் தீர்ப்பு ஏப்ரல் 2ஆம் தேதி வழங்கப்பட்டது. சுயநிதிக் கல்லூரி / பிரிவு ஆசிரியர்கள் வழக்கின் தீர்ப்பு ஏப்ரல் 15ஆம் தேதி வழங்கப்பட்டது. முதல் வழக்கில் அரசு மேல் முறையீடு செய்துள்ளது. இது போன்ற குழப்பங்களுக்கு என்ன காரணம்?

முந்தைய சூழல்: 1987இல் ஆசிரியர் தேர்வு வாரியம் உருவாக்கப்பட்டது. முதலில் பள்ளி ஆசிரியர்களை மட்டுமே தேர்வுசெய்த ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு, அடுத்த சில ஆண்டுகளில் அரசுக் கல்லூரி ஆசிரியர்களைத் தேர்வுசெய்யும் பொறுப்பும் கொடுக்கப்பட்டது. 1994இல் முதன்முதலாகத் தேர்வு வாரியத்தின் வாயிலாகக் கல்லூரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன.

தற்காலிகப் பேராசிரியர்கள் நியமனம் என்பது 1970களின் நடுப்பகுதியிலேயே தொடங்கப்பட்டுவிட்டது. ஒரு கட்டத்தில் அவர்களை நிரந்தர ஆசிரியர்களாக மாற்றும் நிலை ஆரம்பத்தில் இருந்துள்ளது. ஆனால், 80களில் நிலைமை மாறியது. தற்காலிக ஆசிரியர்களை நிரந்தரமாக்குவது நிறுத்தப்பட்டது.

இதை எதிர்த்து நிரந்தர ஆசிரியர் சங்கங்கள் 80களின் இறுதியிலும் 90களின் தொடக்கத்திலும் பெரிய போராட்டங்களை நடத்தி, பல ஆயிரம் தற்காலிக ஆசிரியர்கள் நிரந்தர ஆசிரியர்களாக மாற்றப்பட்டுள்ளனர். ஆனால் அதற்குப் பிறகும், தற்காலிகப் பேராசிரியர்கள் நியமனம் கெளரவ விரிவுரையாளர்கள் என்கிற பெயரில் தொடரவே செய்துள்ளது.

1996இல் நிரந்தரக் கல்லூரி ஆசிரியர்களை நியமிப்பதற்குத் தேர்வுமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. 1998, 2000ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பணி நியமனங்களின்போதும் இதே நடைமுறைதான் பின்பற்றப்பட்டுள்ளது. அதற்குப் பிறகு, 2007இல்தான் நிரந்தரப் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.

அப்போது பணி நியமன முறையில் மாற்றம்செய்து, தேர்வு நடத்தாமல் பணி அனுபவம், முனைவர் பட்டக் கல்வித் தகுதி போன்றவற்றுக்குக் குறிப்பிட்ட மதிப்பெண்ணும் நேர்முகத் தேர்வுக்கு 10 மதிப்பெண்ணும் வழங்கி, அதன் அடிப்படையில் ஆசிரியர்கள் தேர்வுசெய்யப்பட்டனர். இதே முறை 2008, 2009, 2011, 2015ஆம் ஆண்டுகளின்போதும் பின்பற்றப்பட்டது.

அதற்குப் பிறகு, 2019ஆம் ஆண்டு 2,331 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டது. 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அதற்கு விண்ணப்பித்ததாகவும் சொல்லப்படுகிறது. இவற்றை நிரப்பாமலேயே 2020 மார்ச் மாதம் 1,146 கெளரவ விரிவுரையாளர்களைப் பணி நிரந்தரம் செய்யும் ஆணை ஒன்றை அரசு வெளியிட்டது.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பணி நிரந்தர வேலைகள் நேர்மையாக நடைபெறவில்லை என்று பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் வந்தன. சுயநிதிக் கல்லூரி / பிரிவு ஆசிரியர்கள் சிலர் நீதிமன்றம் சென்றனர். இந்த இழுபறிகளுக்கு நடுவில் இரண்டு பணியிடங்களையும் நிரப்பாமலேயே சென்றது முந்தைய அரசு.

புதிய அரசும் புதிய அணுகுமுறையும்: 2021இல் புதிதாகப் பொறுப்பேற்ற திமுக அரசு வெறுமனே பணி அனுபவம், முனைவர் பட்டம் ஆகியவற்றை வைத்துப் பேராசிரியர்களை நியமித்ததால் நிறையக் குழப்பங்கள் ஏற்படுவதாகப் பேசப்பட்டது. பின்னர், அனைவரும் இனி எழுத்துத் தேர்வு மூலம்தான் நியமிக்கப்படுவார்கள் எனப் புதிய ஆணை வெளியிடப்பட்டது.

இதைப் பின்பற்றிப் புதிதாக 4,000 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. மேலும், கெளரவ விரிவுரையாளர்களுக்குப் பணி அனுபவத்துக்குச் சிறப்பு மதிப்பெண் வழங்கப்படும் என்றும் அறிவித்தது.

இதனை எதிர்த்து சுயநிதிக் கல்லூரி / பிரிவு ஆசிரியர்கள் நீதிமன்றம் செல்வார்கள் என்று அரசுக்கு நன்றாகவே தெரியும். அப்படியிருந்தும் அரசு இந்த முடிவை எடுத்ததுதான் விமர்சனத்துக்கு வழிவகுத்திருக்கிறது.

அரசு செய்ய வேண்டியது என்ன? - 30 ஆண்டுகளுக்கு முன்பு, நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்கப்படும் அதே வழிமுறையைப் பின்பற்றித் தற்காலிக ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டார்கள். இடஒதுக்கீடும் முறையாகப் பின்பற்றப்பட்டது. ஆனால், கெளரவ விரிவுரையாளர் நியமனம் தொடங்கிய பின்னர் மேற்சொன்னவை எல்லாம் நடைபெறவில்லை என்று தெரிகிறது.

எனவே, கெளரவ விரிவுரையாளர்களை அப்படியே பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று அரசிடம் முறையிடுவது சவாலாக உள்ளது. மேலும், சுயநிதிக் கல்லூரிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் மோசமான சூழலில் பணிபுரிகின்றனர். மத்திய அரசின் கொள்கையுடன் மாநில அரசின் தவறான செயல்பாடுகளும் இதற்குக் காரணமாகும்.

இந்தப் பிரச்சினைகள் ஒருபுறம் இருந்தாலும், 1,146 கெளரவ விரிவுரையாளர்களைப் பணி நிரந்தரம் செய்யலாம் என்கிற முந்தைய அரசின் முடிவைத் தற்போதைய அரசு பின்பற்றி, இந்தப் பணியிடங்களுக்குக் கெளரவ விரிவுரையாளர்களை உடனடியாக நியமிக்க வேண்டும். மேலும், மீதமுள்ள 2,854 காலிப் பணியிடங்களையும் சமீபத்திய ஆணையில் குறிப்பிட்டுள்ள கால அவகாசத்துக்குள் நிரப்ப வேண்டும்.

முக்கியமாக, இந்த இரண்டு காலிப் பணியிடங்களுக்கும் ஒரே மாதிரியான பணிநியமன முறையைப் பின்பற்றுவது அவசியமாகும்; அதாவது, எழுத்துத் தேர்வு என்பது இரண்டுக்கும் கட்டாயம் நடத்தப்பட வேண்டும்.

இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்து நேர்முகத் தேர்வில் பணி அனுபவம் அடிப்படையில் ஓர் ஆண்டுக்கு 2 மதிப்பெண் என அதிகபட்சம் 7.5 ஆண்டுகள் கணக்கில் கொள்ளப்பட வேண்டும்.

மேலும், அரசுக் கல்லூரிகளில் இன்னும் 3,000 காலிப் பணியிடங்கள் இருப்பதாக ஆசிரியர் சங்கங்கள் கூறுகின்றன. அதையும் இந்த ஆண்டே நிரப்ப வேண்டும். அதேபோல் அரசு ஒவ்வோர் ஆண்டும் காலிப் பணியிடங்களை நிரப்பி ‘கெளரவ விரிவுரையாளர்கள்’ என்ற முறையை முடிவுக்குக் கொண்டுவருவதுதான் எதிர்காலத்தில் இது போன்ற பிரச்சினைகள் வராமல் இருக்க ஒரே தீர்வு.

கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக நடைமுறைப்படுத்தப்படும் நவதாராளவாதப் பொருளாதாரக் கொள்கையின் விளைவாக, அரசுத் துறைகளில் நிரந்தரத் தொழிலாளர்களின் எண்ணிக்கையைவிட ஒப்பந்தத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது; ஒரே துறையில் அரசு நிறுவனத்தைவிட எண்ணிக்கையில் பல மடங்கு தனியார் நிறுவனங்கள் செயல்படுவதும் நடந்துள்ளது.

உதாரணமாக, 1980-81ஆம் ஆண்டுக் கணக்குப்படி 51 அரசுக் கலை அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டன. அன்றைக்குச் சுயநிதிக் கல்லூரிகளே இல்லை. ஆனால், 2023-24 கணக்குப்படி 163 அரசுக் கல்லூரிகளும் 633 சுயநிதிக் கல்லூரிகளும் உள்ளன.

அரசிடம் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களும் மோசமான பணிச் சூழலிலும் குறைவான ஊதியத்திலும் பணிபுரிகின்றனர். இந்தச் சூழலில் அரசு அறிவிக்கும் சொற்பமான நிரந்தரப் பணிகளுக்கு இவர்கள் போட்டியிடுவதும் அதில் சிலர் நீதிமன்றத்துக்குச் செல்வதும் தொடர்கதைதான்.

உயர் கல்வியில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது என்று மார்தட்டிக்கொள்ளும் நாம், இந்தச் சாதனையின் பெரும்பங்கு சொற்ப சம்பளத்தில் பணிபுரியும் கெளரவ விரிவுரையாளர்கள்/ சுயநிதிக் கல்லூரி / பிரிவுப் பேராசிரியர்களுக்கு உண்டு என்பதை மறந்துவிடக் கூடாது. இவர்களுக்கு உரிய நியாயம் கிடைக்க அரசு வழிவகை செய்ய வேண்டும்!

- தொடர்புக்கு: arunkannandrf@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in