

பிரபலமான ஆளுமைகளின் பேச்சுகள், எழுத்துகள் மற்றும் சமூக நடத்தைகள் காலத்தால் அழிக்க முடியாதவை. தங்கள் ஆளுமைத்தன்மையின் மூலமாக வரலாற்றில் முத்திரை பதித்தவர்கள், பதித்துவருபவர்களை உளப் பகுப்பாய்வு (Psychoanalysis) செய்வது சிக்மண்ட் ஃப்ராய்டின் காலத்திலிருந்து நடந்து வருகிறது.
ரத்தப் பரிசோதனை அல்லது ஸ்கேன் மூலமாக மனிதர்களின் உடல் உறுப்புகள் எப்படி வேலை செய்கின்றன என்று அறிய முடியுமோ, அப்படியே உளப் பகுப்பாய்வின் மூலம் ஒருவரின் நனவிலி மனதின் (Unconscious mind) நோக்கத்தை அறிந்துகொள்ள முடியும். உடல் பரிசோதனைகளின் அளவுக்கு உளப்பகுப்பாய்வுகள் நம்பகத்தன்மை கொண்டவையல்ல என்றாலும், அந்த மனிதரின் வெளிநடவடிக்கைகளை ஒப்பிட்டு உறுதிசெய்ய முடியும்.
காந்தியின் உள் எதிரி: என்றைக்கோ ஒரு நாள் பேசுவதை வைத்து ஒரு பிரபலத்தின் ஆளுமைத்தன்மையை அறிந்து கொள்ள முடியாது. ஆனால், ஒருவர் அடிக்கடி வெளியிடும் கருத்துக்கள் அல்லது தொடர் நடவடிக்கைகளின் மூலம் அறிந்துகொள்ள முடியும். அப்படி மகாத்மா காந்தியின் சுயசரிதை, வாழ்க்கை முறைகளை வைத்து உளப் பகுப்பாய்வு செய்தவர்தான் பிரபல சமூக உளவியலாளரான எரிக் எரிக்சன் (Erik Erikson).
அவர் காந்தியைப் பற்றி எழுதிய Gandhi’s Truth: On the Origins of Militant Nonviolence (‘காந்தியின் உண்மைகள்: அகிம்சைப் போராட்டத்தின் தோற்றம்’) என்ற புத்தகம் 1970இல் அவருக்கு புலிட்சர் விருதைப் பெற்றுக்கொடுத்தது; நாம் அதை அறிந்துகொள்வது இன்றைக்குக் காலத்தின் கட்டாயமாயிருக்கிறது.
உளப் பகுப்பாய்வு முறை என்பது ஒரு மனிதன் தன் நனவிலி மனதின் முரண்பாடுகளைப் புரிந்துகொள்ள முயலும்போது, மற்றொரு மனிதனின் நனவிலி மனதின் முரண்பாடுகளைப் புரிந்துகொள்ள வழிவகுக்கும் பகுப்பாய்வாகும். அது ‘உள் எதிரி’யை வன்முறையின்றி எதிர்கொள்கிறது.
காந்தியின் அகிம்சைப் போராட்டத்தின் அடிப்படைகளான உண்மை, சுயவெறுப்பு, வன்முறையற்ற போராட்டம் ஆகியவை சிக்மண்ட் ஃப்ராய்டின் உளப் பகுப்பாய்வு முறைக்கு ஒத்ததாக இருந்ததாக எரிக்சன் எழுதியுள்ளார். உண்மை, சுயவெறுப்பு இரண்டும் அவரது நனவிலி மனதின் முரண்பாடுகளைக் களைந்ததால், வன்முறையற்ற போராட்டத்தின் மூலம் பிற மனிதர்களின் - குறிப்பாக ஆங்கிலேயர்களின் நனவிலி மனதின் முரண்பாடுகளோடு சவால்விட முடிந்தது.
இதனால்தான் சுதந்திரப் போராட்டத்தின்போது பல ஆயிரம் பேரைத் துப்பாக்கிக் குண்டுகளால் துளைத்திருந்த, வானளாவிய அதிகாரம் படைத்திருந்த காலனியாதிக்க சக்திகளால், காந்தியின் மீது துப்பாக்கியை நீட்ட முடியவில்லை. உள் எதிரியை வன்முறையின்றி எதிர்கொள்ள காந்தி பழக்கியிருந்ததால்தான் வெளி எதிரியை வன்முறையின்றி எதிர்கொள்ள முடிந்தது.
தன்னை மட்டுமல்லாது, தன்னைச் சார்ந்தவர்களையும் அப்படிப் பழக்கியதால்தான் வெளி எதிரியாலும் காந்தி மீது வன்முறையைப் பிரயோகிக்க முடியாமல் போனது. இதுதான் காந்திய சக்தி. உள் மனிதரின் வன்முறையற்ற போராட்டம் அறிவியல்பூர்வமாக இருக்க வேண்டும் என்று ஃப்ராய்ட் நம்பினார்; உள் மனிதரின் அகிம்சைப் போராட்டம் ஒரு ஆன்மிகப் பயணம் என்று காந்தி நம்பினார்.
காந்தி தன் மீதும், தேசிய சேவைக்கு அர்ப்பணித்த மக்களின் மீது சுமத்திய தியாகங்களின் விளைவுதான் விடுதலை. இந்த வெற்றிதான் காந்தியை இன்றுவரை ரூபாய் நோட்டுகளில்கூடத் தினமும் நம்மோடு பழகும் ஒரு மகாத்மாவாக மாற்றியது.
இருதுருவ மனநிலை: இதுபோன்ற உளப் பகுப்பாய்வுகள் இந்தியாவில் அரிது. ஆனால் கீழ்ப்பாக்கம் மனநலக் காப்பகத்தின் முன்னாள் இயக்குநரான மறைந்த பேராசிரியர் ஓ.சோமசுந்தரம், இந்திய அளவில் சில ஆளுமைகளைப் பற்றி செய்த உளப் பகுப்பாய்வுகள் மனநல மருத்துவ வட்டாரத்தில் பிரபலமானவை.
கவிஞர், பாடலாசிரியர், நாவலாசிரியர், பத்திரிகையாளர், பக்தியுள்ள எழுத்தாளர், திரைப்படக் கதையாசிரியர் எனப் பன்முகத்தன்மையுடைய கண்ணதாசனைப் பற்றி அவர் உளப் பகுப்பாய்வு செய்து வெளியிட்ட கட்டுரைகள், படைப்பாற்றல் மிக்க ஆளுமைகளில் பலர் சிறிய அளவிலான இருதுருவ மனநிலைக்கு ஆளாயிருக்கிறார்கள் அல்லது இருதுருவ மனநிலைக்கு ஆளானவர்களில் சிலருக்குப் படைப்பாற்றல் அதிகம் வெளிப்படுகிறது என்கிற கூற்றை மீண்டும் நிரூபித்தது.
தீவிர மன அழுத்தத்தில் உள்ள ஒரு நபரின் மனநிலையை அப்பட்டமாக வெளிப்படுத்தும் ஏராளமான வரிகளை அவருடைய பாடல்களில் காணலாம். ‘மயக்கம் எனது தாயகம், மௌனம் எனது தாய்மொழி, கலக்கம் எனது காவியம், நான் கண்ணீர் வரைந்த ஓவியம்’, ‘எங்கே நிம்மதி எங்கே நிம்மதி, அங்கே எனக்கோர் இடம் வேண்டும்’ உள்பட பல பாடல் வரிகள் வெறும் சோகம் இழையோடும் வரிகளாக மட்டுமல்ல, மன அழுத்த மனநிலையில் (Depressed state) இருக்கும் ஒருவரின் நோயறிதல் கோட்பாட்டைப் பூர்த்திசெய்வதாகவே இருக்கும்.
பல பாடல் வரிகள் இருதுருவ மனநிலையின் மற்றொரு துருவமான மன எழுச்சியின் (Elation) வெளிப்பாடாகவும் இருக்கும். உதாரணமாக ‘ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு’ என்று ஆரம்பித்து, ‘நான் நிரந்தரமானவன் அழிவதில்லை, எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை’ என்று முடியும் பாடல் வரிகளைச் சொல்லலாம்.
இம்மனநிலை தீவிரமடையும்போது ‘உலகம் பிறந்தது எனக்காக, ஓடும் நதிகளும் எனக்காக’ என்று ஆரம்பித்து எல்லாமே எனக்காக என்ற எழுச்சியையும் (Exaltation) வெளிப்படுத்துகிறது. கண்ணதாசனின் இருதுருவ மனநிலையை, அவரது பாடல் வரிகளின் மூலம் மட்டுமல்ல, அவரின் வாழ்க்கை சரிதையிலிருந்தும் சோமசுந்தரம் எடுத்துக்காட்டினார்.
இதுபோன்ற ஆளுமைகளின் உளப் பகுப்பாய்வுகள், அவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்று கூறும் நோக்கில் செய்யப்படுபவை அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மாறாக, அவர்கள் என்ன மனநிலையில் இருந்தார்கள், இருப்பார்கள் என்பதையே அவை வெளிப்படுத்துகின்றன.
கருத்து சரியா? - சமீபத்தில் பிரதமர் மோடி ‘தான் தெய்விகமாகத் தோன்றியவர்’ (Divine origin) என்று பேசியுள்ளது ஊடகங்களிலும், அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சுமார் 32 வருடங்களுக்கு முன்பு மோடியைப் பேட்டி கண்ட உளவியலாளரும், ஊடகவியலாளருமான ஆஷிஷ் நந்தியின் கருத்துகளைப் பலர் இன்று சுட்டிக்காட்டி வருகின்றனர்.
மேலும் 2016 இல் ‘தி வயர்’ வலைதளத்துக்கு அவர் கொடுத்திருந்த பேட்டியில், “மோடி ஆற்றல் மிக்கவர், கடின உழைப்பாளி என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில், ஒவ்வொருவரும் வரலாற்றில் ஓர் அடையாளத்தைப் பதித்துவிட்டுப்போக விரும்புகிறார்கள். அவர் எதையாவது செய்ய வேண்டும் என்ற தீவிர ஆசையால் உந்தப்பட்டுள்ளார், ஆனால் அதைச் செய்வதற்கான கற்பனையோ, சக்தியோ அவரிடம் இல்லை” என்று ஆஷிஷ் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்திரா காந்தியும் அவரது மகன் சஞ்சய் காந்தியும் இதேபோன்று வளர்ச்சியின் வேகத்தை விரைவுபடுத்தும் முயற்சியைச் சிறிய அளவில் செய்தார்கள். அது அவர்களை ஓரளவு சர்வாதிகாரத்தன்மை / இரக்கமற்ற தன்மையை நோக்கி நகர்த்தியது. இதுபோன்ற மனநிலை, பாகுபாடு, அனுசரணையற்ற உறவுமுறைக்கு வழிவகுத்து எதேச்சதிகாரத்தை நோக்கிக் கொண்டுசெல்லும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘தான் தெய்விகமாகத் தோன்றியவர்’ என்று பிரதமர் மோடி சொன்னது அவரது நனவிலி மனதின் வேட்கையா அல்லது அவரது தொண்டர்கள் தொடர்ந்து முன்வைக்கும் இதுபோன்ற துதிகளின் தாக்கமா அல்லது தேர்தல் பிரச்சார உத்தியா என்பது இன்னும் சில நாள்களில் தெரியவரும்.
- தொடர்புக்கு: godsonpsychiatrist@gmail.com