விலக மறுக்கும் திரைகள் -18: தட்டுத் தடுமாறும் விழுமியங்கள்

விலக மறுக்கும் திரைகள் -18: தட்டுத் தடுமாறும் விழுமியங்கள்
Updated on
3 min read

ஒருவர் குற்றம் இழைத்தால் அதற்கான தண்டனையை முழுமையாக அனுபவிக்க வேண்டும், அதனால் மனமாற்றம் நிகழ வேண்டும் என்பதே உலக வழக்கு. ஆனால், நம் சட்டங்களில் இருக்கும் சில பிரிவுகளால், குற்றவாளிகளில் சிலர் மைனர்கள் (18 வயதுக்கு உட்பட்டவர்கள்) என்பதால், வயதைக் காரணம் காட்டிக் குறைந்த தண்டனை பெற்று, விரைவில் வெளியே வந்துவிடுகின்றனர்.

நிர்பயா பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட குற்றவாளிகளில் ஒருவர், குற்றம் இழைக்கப்பட்டபோது மைனர் என்பதால், மிகக் குறைந்த காலமே தண்டனை பெற்று விடுதலையானார். ஆனால், அவர் இழைத்த குற்றச்செயலோ மைனர்கள் செய்யும் குற்றமல்ல என்பதும் குறிப்பிடப்பட வேண்டியதாகிறது.

பொறுப்பற்ற வளர்ப்பு முறை: தற்போது அதே நிலை மீண்டும் வேறொரு வடிவத்தில் தலைதூக்கியிருக்கிறது. சமீபத்தில் மகாராஷ்டிர மாநிலம் புணே நகரில் இரவு 10 மணிக்கு நண்பர்கள் புடைசூழச் சில சிறுவர்கள் (!?) ஹோட்டலில் விருந்துக்குச் சென்றிருக்கிறார்கள். நள்ளிரவு 12 மணி வரை மது வகையறாக்களுடன் தொடர்ந்த விருந்து முடிவுக்கு வரவில்லை.

அங்கிருந்து இடம்பெயர்ந்து மீண்டும் ஒரு விடுதியில் 1 மணி வரையிலும் மதுவும் கேளிக்கையுமாகக் கழிந்துள்ளது. சமூகத்தின் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த இவர்கள் அனைவரும் அத்துடன் நிறுத்திக்கொள்ளாமல், போதையின் கிறக்கத்தில் 200 கி.மீ. வேகத்தில் காரை ஓட்டிச் சென்றிருக்கிறார்கள்.

விளைவு - ஓர் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில், அதில் பயணித்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காரை ஓட்டிச் சென்ற சிறுவனுக்கு (!?) 17 வயதும் 8 மாதங்களும் மட்டுமே பூர்த்தியாகி இருக்கிறது. எனவே, அவன் மைனர் என்கிற வகைக்குள் வருகிறான்.

18 வயது நிறைவடைவதற்கு முன்னதாகவே தாராளமாகச் செலவழிக்கப் பணம், விலை உயர்ந்த கார், நண்பர்களுடன் மது விருந்து, உல்லாசம் என எதைப் பற்றியும் கவலைகொள்ளாமல் சிறகடித்துப் பறக்கும் இலகுவான வாழ்க்கை. ஆனால் இதே வயதில், தாங்கள் விரும்பிய கல்வியைக்கூடக் கற்க முடியாமல், பகுதி நேரமாகக் கிடைக்கும் பணியையும் செய்து கொண்டு வாழ வேண்டிய நிலையில் இருப்பவர்கள் எண்ணிக்கையே இங்கு பெருவாரியானது.

இந்த விபத்தில் முதல் குற்றவாளிகளாகப் பெற்றோரைத்தான் கைதுசெய்ய வேண்டும். பொறுப்பற்ற முறையில் பிள்ளைகளை வளர்த்துச் சமூகத்தில் நடமாட விடுவதால் நிகழும் கேடுகள்தானே இவை?

கேள்விக்குள்ளாகும் நீதி: இரண்டு உயிர்களைக் கொன்ற பின்னரும் அந்தச் சிறுவனுக்கு உடனடியாகப் பிணை வழங்கப்பட்டதும் அதைத் தொடர்ந்து நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளும் ஒட்டுமொத்த சமூகத்தையும் பேரதிர்ச்சியில் உறைய வைத்தன. ‘போக்குவரத்து போலீஸாருடன் வீதியில் நின்று போக்குவரத்தினை ஒழுங்குபடுத்த வேண்டும்; அனுபவபூர்வமாகத் தான் அறிந்து கொண்ட போக்குவரத்து விதிகள் குறித்து, அறிக்கையினைத் தயாரித்து ஆர்.டி.ஓ.விடம் அளிக்க வேண்டும்; சாலை விபத்துகள், அவை நிகழாமல் இருப்பதற்கான ஆலோசனைகளை 300 சொற்களில் கட்டுரையாக்கி அளிக்க வேண்டும்; இனி வரும் காலத்தில் விபத்துகள் நடப்பதை நேரில் கண்டால், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி புரிய வேண்டும். குற்றம்சாட்டப்பட்டவர் மதுப்பழக்கத்திலிருந்து முற்றிலும் விடுபட மனநல மருத்துவர்களிடம் ஆலோசனையும் சிகிச்சையும் பெற வேண்டும்’ என நீள்கின்றன மென்மையான ஒத்தடம் போன்ற அந்த நிபந்தனைகள்.

கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், அந்த மைனருக்குப் பிணை ரத்து செய்யப்பட்டுள்ளது. சிறுவன் ஓட்டிச் சென்ற காரில் பதிவெண் பலகை இல்லை என்பதால், வழக்கு வேறு சட்ட விதிகளுக்கு உட்பட்டு மாற்றம் பெற்றிருக்கிறது. அதன்படி, சிறுவன் தண்டிக்கப்படுவதற்கும் சிறைத்தண்டனை பெறுவதற்கும்கூட வாய்ப்புகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதற்கிடையே, மைனரின் தந்தையும் ரியல் எஸ்டேட் அதிபருமான விஷால் அகர்வால் கைதுசெய்யப்பட்டு, ஜூன் 7 வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் 14, 17 வயதுள்ள இரண்டு சிறுமிகள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். அதில் 17 வயதுச் சிறுமி கர்ப்பமடைந்திருப்பதும், பெற்றோரை இழந்து உறவுகளின் பாதுகாப்பில் இருக்கும் அந்தச் சிறுமியின் எதிர்காலம் இனி என்னவாகும் என்பதும் பெரும் கேள்விக்குறிகள்.

இந்த வன்கொடுமையை நிகழ்த்தியவர்களில் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் மூவர் உள்பட, ஒன்பது பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் 19 வயதில் மூவர், 21, 22, 24 வயதில் மூவர் என்பதும் பேரவலம் அல்லவா? இளைய சமுதாயம் எதை நோக்கிச் செல்கிறது?

சமூகச் சிந்தனை என்ன விலை? - பொதுவாகவே, ஈராயிரக் குழவிகள் எனக் குறிப்பிடப்படும் இத்தலைமுறையினரின் செயல்பாடுகள் எரிச்சலூட்டக்கூடியவையாகவும் பதற்றம் அளிப்பவையாகவும் இருக்கின்றன. யூடியூபர் டி.டி.எஃப். வாசன் உள்படப் பலரையும் அப்படிக் குறிப்பிடலாம்.

அவர்களின் தவறான செய்கைகளை முன்னுதாரணமாகக் கொள்வதுடன் அவர்களையே தங்களின் நாயகர்களாகவும் வரித்துக்கொண்டிருக்கும் பெருங்கூட்டம், அதையே சாகசம் என எண்ணி, அவ்வாறே செயல்படுபவர்களாகவும் இருப்பது, சமூகத்தில் பெரும் ஆபத்தை விளைவிக்கக் கூடியதல்லாமல் வேறென்ன செய்யும்? விழுமியங்கள் குறித்த அக்கறை எதுவும் அவர்களிடம் இல்லை.

விலை உயர்ந்த இரு சக்கர வாகனம், கார், கைபேசி, அதில் அனைத்து வகை அவலங்களும் காட்சிகளாகக் கிடைப்பதால் அவற்றில் மூழ்கித் திளைத்தல், போதை-மதுப் பழக்கத்துக்கு அடிமையாதல், பெண்களைச் சீண்டுதல், பாலியல்ரீதியான குற்றங்களில் ஈடுபடுதல் என மிக இளம் வயதிலேயே கட்டற்ற வாழ்க்கையைத் தேர்வுசெய்து, தங்கள் பெற்றோருக்கும் மற்றவர்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக உருவாகி நிற்கிறார்கள் இவர்கள்.

பெண்ணைப் பெற்றவர்கள் அடிவயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டிருப்பதாகப் புலம்பிக்கொண்டிருந்த காலம் மலையேறிவிட்டது, ஆண் பிள்ளைகளைப் பெற்றவர்களும் மிகமிக எச்சரிக்கையுடன் தங்கள் பிள்ளைகளை வளர்ப்பதிலும் கண்காணிப்பதிலும் தீவிரக் கவனம் செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

கண்காணிப்பில்லாமல் தங்கள் விருப்பம்போல் அவர்களைச் செயல்பட அனுமதித்தால், பின்னர் வரும் அவ்வளவு பிரச்சினைகளுக்கும் முகம் கொடுக்க வேண்டியவர்களாகப் பெற்றோர் இருக்க வேண்டிய நிலை ஏற்படும். அதே நேரம், இவர்கள் வயதில் தங்கள் துறைகளில் முனைப்புடன் கவனம் செலுத்திச் சாதித்துக்கொண்டிருப்பவர்களும் இருக்கிறார்கள் என்பது சற்றே ஆறுதல்.

- தொடர்புக்கு: asixjeeko@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in