

பாண்டிய நாட்டில் அர்ச்சுனாபுரம் பகுதியின் தலைவர் மறைவுக்குப் பிறகு, அதன் தலைமைப் பொறுப்புக்கு அவருடைய மகன் நல்லதம்பி வருகிறான். இவனது தங்கைதான் நல்லதங்காள். அண்ணன் - தங்கை உறவுக்கு எடுத்துக்காட்டாக இவர்கள் பார்க்கப்படுகிறார்கள். சிவகங்கை பகுதியைச் சார்ந்த காசிராஜன் என்பவருக்குத் தங்கையைத் திருமணம் செய்துகொடுக்கிறான் நல்லதம்பி. நல்லதங்காளுக்கு நான்கு ஆண் குழந்தைகளும் மூன்று பெண் குழந்தைகளுமாக ஏழு குழந்தைகள் பிறக்கின்றன.
காலம் நல்லதங்காளின் வாழ்க்கையைப் புரட்டிப் போடுகிறது. வாழ்க்கைப்பட்ட ஊரில் மிகப்பெரிய பஞ்சம். மக்கள், கூட்டம் கூட்டமாக ஊரைவிட்டு வெளியேறுகின்றனர். நல்லதங்காளும் தன் குழந்தைகளை அழைத்துக்கொண்டு பிறந்த வீட்டுக்குச் செல்ல முற்படுகிறாள். காசிராஜன் தடுக்கிறான். “நன்றாக வாழ்ந்தபோது நீ பிறந்த வீட்டுக்குப் போகலாம். வறுமையில் இருக்கும்போது அங்கே போவது சரியாக இருக்காது. கூலி வேலை செய்தேனும் பிழைத்துக்கொள்ளலாம்” என்கிறான்.
நல்லதங்காள், தன் அண்ணனை நம்பி அர்ச்சுனாபுரத்துக்கு வருகிறாள். நல்லதம்பிக்கும் தங்கையின் நிலை கனவாக வருகிறது; எதிரே தேடி வருகிறான். காட்டில் வழியைத் தவறவிட்ட தங்கையின் நிலையைக் கண்டு, நல்லதம்பி பெரும் துயரமடைகிறான். நல்லதங்காளை வீட்டுக்கு அனுப்பிவிட்டு வேட்டையாடுகிறான். நல்லதம்பியின் மனைவி மூளி அலங்காரி. அவள், கதவைக்கூடத் திறக்காமல் நல்லதங்காளை அவமானப்படுத்துகிறாள். குழந்தைகள் பசியால் அழுகின்றன. நல்லதங்காள் தன் குழந்தைகளை அழைத்துக்கொண்டு அவ்விடத்தைவிட்டு வெளியேறுகிறாள்.
தான் செல்லும் தடத்தை அண்ணனுக்குத் தெரிவிக்கத் தழைகளை ஒடித்துப் போடுகிறாள். தன் ஏழு குழந்தைகளுடன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொள்கிறாள். செய்தியறிந்த நல்லதம்பி, தன் மனைவியைக் கொன்றுவிட்டுத் தானும் தற்கொலை செய்துகொள்கிறான். சிவபெருமான் இவர்களை மீண்டும் உயிர்ப்பிக்கச் செய்கிறார். இவர்கள் மறுத்து, தெய்வநிலையை அடைகின்றனர். விருதுநகர் மாவட்டம், அர்ச்சுனாபுரத்தில் நல்லதங்காளுக்குக் கோயில் கட்டி இன்றும் வழிபட்டுவருகிறார்கள்.
எழுத்தாளர் தேவிபாரதி நல்லதங்காள் தொன்மத்தை நவீனப்படுத்தி ‘உயிர்த்தெழுதலின் சாபம்’ என்கிற சிறுகதையாக எழுதியுள்ளார். நல்லதங்காள் தொன்மக் கதை பல்வேறு வடிவங்களைக் கொண்டது. இவர் புகழேந்திப் புலவரின் அம்மானைப் பாடலின் கதை வடிவத்தைத் தன் சிறுகதைக்குப் பயன்படுத்திக் கொண்டுள்ளார்.
நல்லதங்காள் இறப்பிலிருந்தே கதை தொடங்குகிறது. முன்னும் பின்னுமாக நல்லதங்காளின் இளமைக்காலம் நினைவுகூரப்படுகிறது. நல்லான், நல்லாள் என்ற இரு கதாபாத்திரங்களின் வழியாகக் கதை சொல்லப்படுகிறது. இறந்த தங்கையையும் குழந்தைகளையும் முனிவரின் மந்திரத்தைக் கொண்டு உயிர்ப்பிக்கிறான் நல்லான். அவளை மீண்டும் வீட்டுக்கு அழைக்கிறான். ‘யாரோட வீட்டுக்கு அண்ணா?’ என்கிறாள் நல்லாள். ‘என்னுடையதும் உன்னுடையதும் எனப் பொதுவான அடையாளமுள்ள வீடு இப்போது எதுவுமில்லை அண்ணா’ என்ற நல்லாளின் கேள்விதான் இக்கதையின் மையம். திருமணத்துக்குப் பிறகு பிறந்த வீட்டிற்கும் பெண்களுக்குமான உரிமையை இக்கதை மிகத் தீவிரமாகப் பேசியிருக்கிறது. அதற்கு நல்லதங்காள் என்ற தொன்மம் தேவிபாரதிக்குப் பயன்பட்டிருக்கிறது.
நல்லதங்காள், தன் ஏழு குழந்தைகளுடன் தன் கை வீங்கும் அளவுக்கு அண்ணனின் வீட்டுக் கதவைத் தட்டுகிறாள். அண்ணி கதவைத் திறக்க மறுக்கிறாள். கணவனின் சொத்துகள் அனைத்தையும் தனது சொத்தாக மூளி அலங்காரி கருதுகிறாள். திருமணம் செய்துகொண்ட பெண்கள் தம் பெற்றோர் இருக்கும்வரைதான் பிறந்த வீடுகளுக்கு உரிமையுடன் செல்ல முடியும். அதன் பிறகு, பிறந்த வீட்டுடன் இயல்பாகவே ஓர் அந்நியத்தன்மை வந்துவிடுவதைத் தற்போதும் பார்க்கலாம். சமூகக் கட்டமைப்பிலேயே இந்தப் பிரச்சினை இருப்பதாகத்தான் தேவிபாரதி கருதுகிறார். இவரது குரலில்தான் நல்லாள் பேசுகிறாள்.
நல்லாள், தன் அண்ணியைக் குறை சொல்லவில்லை. மூளி அலங்காரி, சமூகம் உருவாக்கிய ஓர் உதிரி. ‘அவளுக்கு அது அவளோட வீடு, பேதை அவ. உலக நியதி அதுதானே?’ என்கிறாள். பெண்களுக்குப் பிறந்த வீடு நிலையானது இல்லை என்பதற்கு நல்லதங்காள் கதைதான் சிறந்த உதாரணமாகப் பார்க்கப்படுகிறது. மூளி அலங்காரியைப் பழிவாங்குவதென்பது பெண்ணுக்கும் புகுந்த வீட்டிற்குமான உறவையும் அற்றுப்போகச் செய்துவிடும் என்று நல்லாள் கருதுகிறாள். தொன்மத்தில் மூளி அலங்காரி மோசமானவளாகச் சித்திரிக்கப்படுகிறாள். தேவிபாரதி, இந்தக் கதாபாத்திரத்தைச் சமூகத்தின் ஒரு பகுதியாகப் பார்க்கிறார். வரலாற்றில் புறக்கணிக்கப்பட்ட இதுபோன்ற எதிர்மறைக் கதாபாத்திரங்களை நவீன இலக்கியங்கள்தாம் பொருட்படுத்தின; அவர்கள் தரப்பு நியாயங்களைப் பேசின. மூளி அலங்காரி கதாபாத்திரத்தையும் அப்படித்தான் அணுக வேண்டும்.
நல்லாள் இறந்துவிட்டதாகவே உலகம் கருதுகிறது. நல்லாள் மீண்டும் உயிர்த்தெழுதலை ஒரு சாபமாகவே கருதுகிறாள். அவள் தன் குழந்தைகளுடன் காட்டிலேயே வாழ்கிறாள். அந்த வாழ்க்கை அவளுக்குப் பிடித்திருக்கிறது. மனிதர்களுடன் வாழ்வதைவிட விலங்குகளுடன் வாழ்வதை அவள் சௌகரியமாக உணர்கிறாள். ஆனாலும் பல யுகங்களுக்குப் பிறகு குழந்தைகளுடன் நாட்டுக்குள் வருகிறாள். இந்த உலகம்; இந்த உலகத்தைத் தன் ஆளுகையின்கீழ் வைத்திருக்கும் ஆண்களின் மனநிலை என எதுவுமே மாறவில்லை.
ராட்டினக்காரியாகத் தன் வாழ்க்கையை மீண்டும் தொடங்குகிறாள் நல்லாள். ஆனால், அவளுக்குக் கிடைத்தது வேசி என்கிற பட்டம்தான். ராட்டினக்காரனுடன் பிறந்த தன் எட்டாவது குழந்தையையும் அழைத்துக்கொண்டு மீண்டும் கிணற்றுக்கே செல்கிறாள் நல்லாள். நல்லதங்காளின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு அண்ணன் வீட்டுக் கதவு திறந்தது; பச்சை வாழைமட்டை எரிந்தது. பெண்கள் அவளைப் பத்தினித் தெய்வமாக வணங்குகின்றனர். ஆனால், யதார்த்தத்தில் ஒரு ராட்டினக்காரனால் வேசி என இகழப்படுகிறாள். தொன்மத்துக்கும் யதார்த்தத்துக்கும் இதுதான் வித்தியாசம். நல்லாள் இரண்டாவது முறையாகத் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு ராட்டினக்காரனைத் திரும்பிப் பார்க்கிறாள். அந்தப் பார்வை ஒட்டுமொத்தச் சமூகத்தின் மீதான அவளது அதிருப்தியை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது.