

தமிழ்நாடு முழுக்கப் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குக் கோடைகாலச் சிறப்புப் பயிற்சி முகாம்கள் பல்வேறு துறை சார்ந்து நிகழ்ந்துவருகின்றன. கலை இலக்கியம் சார்ந்து, தமிழ்நாடு அரசு தீவிரமாக முன்னெடுத்துவரும் இலக்கியத் திருவிழாக்கள், மாபெரும் தமிழ்க் கனவு, மாவட்டம் தோறும் புத்தகக் காட்சிகள் போன்றவை மாணவர்கள் மத்தியில் இலக்கியம், பண்பாடு குறித்த ஒரு புத்துணர்வை ஏற்படுத்தியிருக்கின்றன. இதன் தொடர்ச்சியாகப் பொது நூலகத் துறையின் சென்னை மாநகர நூலக ஆணைக் குழுவின் சார்பாகக் கல்லூரி மாணவர்களுக்கு ஒரு தொடர் பயிலரங்கை நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.
மே 6 முதல் 20 வரை மேடைப் பேச்சு, உரைநடை - புனைவிலக்கியம், கவிதை, ஊடகவியல், திரைக்கதை எழுதுதல் ஆகிய ஐந்து முக்கியமான தலைப்புகளில் ஒவ்வொரு துறைசார்ந்தும் தலா மூன்று நாள் வீதம் பதினைந்து நாள்களுக்கு இந்தப் பயிலரங்குகள் அண்ணா நூற்றாண்டு நூலகத்திலும் தேவநேயப் பாவாணர் மாவட்ட மைய நூலகத்திலும் நடைபெற்றன. அந்தந்தத் துறை சார்ந்த ஆளுமைகள் தங்கள் அனுபவங்களையும் வழிகாட்டுதல்களையும் மாணவர்களுக்கு வழங்கினார்கள்.
அந்தந்தத் துறைகளில் மெய்யாக ஆர்வமுள்ள மாணவர்கள் மட்டுமே இதில் பங்கேற்க வேண்டும் என்ற திட்டத்தின் அடிப்படையில், மாணவர்களுக்கு நேரடியாக அழைப்பு விடுத்தோம். சென்னையில் உள்ள கல்லூரிகளில் மட்டுமல்ல திருச்சி, நெல்லை, வேலூர் போன்ற பல மாவட்டங்களில் இருந்தும் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தார்கள். வெளியூரிலிருந்து இப்பயிற்சிக்காக வந்த பல மாணவிகள் விடுதிகளில் தங்கி இப்பயிலரங்கில் பங்கேற்றார்கள்.
ஒரு மாணவி திருப்பத்தூரிலிருந்து தினமும் அதிகாலை 3 மணிக்குப் புறப்பட்டு, காலை 10 மணிக்குப் பயிலரங்குக்கு வந்துவிட்டு மதியம் புறப்பட்டு இரவு வீடுபோய்ச் சேர்வார். பார்வையற்ற மூன்று மாணவர்கள் ஊடகவியல் பயிலரங்கில் பங்கேற்றார்கள். மாணவர்களிடம் உற்சாகத்தையும் ஈடுபாட்டையும் காண முடிந்தது. ஒவ்வொரு துறை சார்ந்து மட்டும் பங்கேற்ற மாணவர்கள் இருக்கிறார்கள். 15 நாள்களும் எல்லா அமர்விலும் பங்கேற்ற மாணவர்களும் இருக்கிறார்கள். தினமும் 4 மணி நேரத்துக்கும் மேலான அமர்வுகளில் கவனச்சிதறல் இன்றி முழு ஈடுபாட்டை வெளிப்படுத்தினார்கள்.
நமது பாடத்திட்டத்தில் நவீனக் கலை இலக்கியம் அறிமுகமாகியிருக்கிறது. மாணவர்கள் அவ்வப்போது இலக்கிய சொற்பொழிவுகளைக் கேட்கிறார்கள். ஆனால், அவர்களின் படைப்பாற்றல் திறனை மேம்படுத்துவதற்கான ஒரு தொடர் பயிற்சி தேவைப்படுகிறது. அவர்களுடைய கலை இலக்கியப் புரிதல்கள் மேலோட்டமாக நின்றுவிடுகின்றன. ஒருவர் கவிதை எழுத விரும்பினால், நமது மொழியின் முதன்மையான கவிஞர்கள் குறித்த பரந்த வாசிப்பனுபவம் இருக்க வேண்டும். ஊடகத்துக்கு வர விரும்பினால் அது குறித்த வழிகாட்டுதல்கள் வேண்டும். உரைநடை எழுதுவது, திரைக்கதை எழுதுவது, மேடையில் பேசுவது எல்லாமே தனித் திறன்களைக் கோருவது மட்டுமல்ல. இவை ஒன்றுக்கொன்று நெருக்கமான தொடர்புடையவை. இந்தத் தொடர் பயிற்சி மூலமாக பேச்சாற்றலும் எழுத்தாற்றலும் கொண்டவர்களாக மாணவர்கள் உருவாவதற்கான உந்துதலையும் திறப்பையும் அளிக்க விரும்பினோம்.
ஐந்து துறைகள் சார்ந்தும் வெ.இறையன்பு, கோ.ஒளிவண்ணன், ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மோனிகா ரோஷினி, மதுமலர், சரிதா ஜோ, வான்மதி ஜகன், பா.ராகவன், ந.முருகேச பாண்டியன், அழகிய பெரியவன், விழியன், இமையம், கரன் கார்க்கி, இளங்கோ கிருஷ்ணன், பாரதி கிருஷ்ணகுமார், கனிமொழி. ஜி, மனுஷ்யபுத்திரன், இரா.பச்சியப்பன், இளம்பிறை, இந்திரன், வெய்யில், மு.குணசேகரன், நக்கீரன் கோபால், கோவி.லெனின், ச.கார்த்திகைச் செல்வன், சுகிதா சாரங்கராஜ், பா.ம.மகிழ்நன், ‘நீயா நானா’ அந்தோணி, ப.ரகுமான், நெல்சன் சேவியர், இயக்குநர் லிங்குசாமி, இயக்குநர் லெனின் பாரதி, திரைக்கதை ஆசிரியர் சங்கர் தாஸ், பட்டுக்கோட்டை பிரபாகர், ஜா.தீபா, கேபிள் சங்கர், பாஸ்கர் சக்தி, இயக்குநர் ஒபேலி என். கிருஷ்ணா, எழுத்தாளர் சாரு நிவேதிதா முதலான ஆளுமைகளைப் பயிலரங்கில் உரையாட வைத்தோம்.
உரையாடிய அனைவரும் சமூக நீதி, சமூகப் பொறுப்பு என்கிற அடிப்படையிலேயே தங்கள் திறன்களை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்பதை மாணவர்கள் மனதில் ஆழமாகப் பதியவைத்தனர். இந்தப் பயிற்சிகளை வேலைவாய்ப்புக்கான ஓர் அடித்தளமாகவும் எப்படி ஆக்கிக்கொள்வது என்கிற வழிகாட்டுதலும் வழங்கப்பட்டது.