சாட்சியமாக இருப்பது தான் செய்தியாளரின் பணி! - போர் செய்தியாளர் அஞ்சன் சுந்தரம் நேர்காணல்
போர் குறித்த தலைப்புச் செய்திகளால் நிறைந்திருக்கும் காலகட்டத்தில் வாழ்கிறோம். உயிரைப் பணயம் வைத்து, அந்தச் செய்திகளை வெளிக் கொண்டுவரும் போர் செய்தியாளர்களைப் பற்றியும் நாம் அறிந்திருக்க வேண்டியது அவசியம். ‘நம் காலத்தின் மிகச் சிறந்த செய்தியாளர்களில் ஒருவர்’ எனப் பாராட்டப்படும் அஞ்சன் சுந்தரம், இன்று களத்திலிருக்கும் போர் செய்தியாளர்களில் முக்கியமானவர்.
இந்தியாவில் பிறந்தவரான அஞ்சன், கணிதவியலாளராக வாழ்க்கையைத் தொடங்கினாலும் ஆப்ரிக்க நாடுகளில் நிலவிய போர்ச் சூழல் அவரை இதழியலுக்குள் கொண்டுவந்தது. காங்கோ, ருவாண்டா போன்ற நாடுகளில் இருந்து அவர் வழங்கிய செய்திகளைப் போலவே அந்த அனுபவங்களைத் தொகுத்து அவர் எழுதிய நூல்களும் முக்கியமானவை. ‘Breakup: A Marriage in Wartime’ [Simon & Schuster வெளியீடு] என்கிற அவரது சமீபத்திய நூலை ஒட்டி மின்னஞ்சல்வழி நடந்த உரையாடலின் பகுதிகள்:
போர் செய்தியாளராக இருப்பதன் முக்கியத்துவம் என்ன? உங்கள் பொதுவான மனநிலை, எண்ணவோட்டங்கள் பற்றிப் பகிர்ந்துகொள்ள இயலுமா? - போரில் முதலில் பலியாவது ‘உண்மை’தான் என்று ஒருவர் எப்போதோ சொன்னார். அணுகுவதற்கு மிகவும் கடினமான, மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்குச் சென்று, அங்கிருந்து செய்தி சேகரிப்பதற்கான சாத்தியம் போர் செய்தியாளருக்கு உண்டு. அத்தகைய கடினமான பணி, நிலவரத்தை ஏற்றுக்கொள்ளும் தன்மையை வேண்டுவது.
எந்தப் பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும், நான் நுழைவதற்கு மிகவும் ஆபத்தான ஒரு இடத்தில், என்னால் அடைய முடியாது என்கிற நிலையில் உண்மை உள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள நான் தயாராக இருக்க வேண்டும். போர் மண்டலங்களில் (போர் செய்தியாளர்கள் போன்ற) சாட்சிகள் இல்லையென்றால், வன்முறையை நிகழ்த்தக்கூடியவர்கள், அவர்கள் நிகழ்த்தும் வன்முறை-குற்றங்களைப் பற்றிப் பொய் கூறுவார்கள்.
முழு கிராமங்களையும் அழித்துவிட்டு உலகத்திடம் பொய் சொல்வார்கள். போர் செய்தியாளர் என்கிற சாட்சியம் இல்லாமல், பொய்கள் ஆதிக்கம் பெற்று எந்த வகையான நீதியும் கிடைப்பதிலிருந்து மக்களின் உரிமைகள் மீறப்படும். போர் செய்தியாளரின் அடிப்படைப் பணி என்பது சாட்சியமாக இருப்பதுதான்.
போர்களில் இருந்து மனிதகுலம் தன்னை விடுவித்துக் கொள்வதுதான் எப்போது? - நான் பொதுவாக இரண்டு வகையான போர்களைப் பார்க்கிறேன்: ஒன்று, உரிமைகள் மறுக்கப்பட்டவர்கள் தங்கள் மக்கள், நிலம், பண்பாடு, நீதி போன்ற விழுமியங்கள் போன்ற அனைத்தையும் பாதுகாக்கத் தங்களிடம் உள்ள அனைத்தையும் கொண்டு போரிடும் நீதிக்கான போர். இந்த வகையான போர் ஒப்பீட்டளவில் அரிதான ஒன்று; ஆனால், என்னுடைய இதழியல் பயணம் இதைத் தேடித்தான் செல்கிறது. இரண்டாவது வகையான போர், மிகப் பரவலான ஒரு வகைதான், உதவியின்றிக் கைவிடப்பட்டதாக நினைப்பவர்களால் நிகழ்த்தப்படுவது.
ஒரு கருத்து வேறுபாடு ஏற்படுகிறது, அதைப் பேசித் தீர்க்கத் தவறுகிறார்கள், முடிவில் கைவிடப்பட்டவர்களாகக் கருதுகிறார்கள், எனவே வார்த்தைகளைத் தவிர்த்து வன்முறையைக் கையிலெடுக்கிறார்கள். இந்த மாதிரியான வன்முறையைப் போர்ப் பகுதிகளிலும் உள்நாட்டுச் சண்டைகளிலும் பார்க்கிறேன்.
வன்முறையைத் தூண்டுபவர்களில் பெரும்பான்மையானோர் தாங்களே பாதிக்கப்பட்டவர்கள், கைவிடப்பட்டவர்கள் எனக் கருதுவதாக நினைக்கிறேன். வன்முறையைத் தவிர தங்களுக்கு வேறு தேர்வு இல்லை எனப் பெரும்பாலும் அவர்கள் கூறுவார்கள்; ஆனால், அது உண்மை அல்ல.
உங்கள் முனைவர் பட்ட ஆய்வு பின்காலனியச் செய்திவழங்கலில் மையம்கொண்டிருக்கிறது. சர்வதேசச் செய்தி அமைப்பின் மீது காலனியத்தின் தாக்கம் பற்றி விளக்க முடியுமா? - சர்வதேசச் செய்தியாளர்கள் உலக மையங்களான நியூ யார்க், லண்டன் போன்ற நகரங்களில் இருந்தே சிற்றூர்களுக்குப் பயணிக்கிறார்கள். அங்கு உள்ளூர் செய்தியாளர்களிடமிருந்து தகவல்களை அகழ்ந்துகொண்டு, அதை மேற்கின் நுகர்வுக்காக மாற்றுகிறார்கள். இந்தச் செயல்பாட்டில் இதழியல் பாராட்டுகளையும் பணப் பரிசுகளையும் அவர்கள் பெறுகிறார்கள்.
இந்தக் காலனித்துவ அமைப்பு, தெற்குலகில் (எடுத்துக்காட்டாக, இந்தியாவிலும் ஆப்ரிக்காவிலும்) உள்ள மக்களின் வாழ்க்கையை மதிப்பிழக்கச் செய்யும் முறைப்படுத்தப்பட்ட செய்திக் கட்டுரைகளுக்கு வழிவகுத்தது.
மேற்கத்திய செய்தி அமைப்புகளைப் பற்றிப் புகார் செய்வதற்குப் பதிலாக, தெற்குலகு சொந்தமான சர்வதேசச் செய்திவழங்கலைத் தெற்குலகில் உள்ள மக்களின் வாழ்க்கைக்கு அதிக மதிப்பைக் கொடுக்கும் வழிகளில் முடுக்கிவிடுவதே தீர்வு எனக் கருதுகிறேன். இது சில நாள்பட்ட போர்களைக் குறைக்கவும் உதவும்.
மயன்மார் போன்ற இந்தியாவின் அண்டை நாடுகளில்கூட இந்தியச் செய்தியாளர்களை நீங்கள் எதிர்கொண்டதில்லை எனப் பேட்டி ஒன்றில் கூறியுள்ளீர்கள். ஆங்கிலம் தாண்டி இந்திய மொழிகளில் நேரடியாக உலக விவகாரங்களைச் செய்தியாக்குவதற்குச் சாத்தியம் உள்ள வழிகள் யாவை? - அடிப்படையில், இந்தியச் செய்தி நிறுவனங்களும் இந்திய அரசாங்கமும் உலக விவகாரங்களில் இந்தியக் கண்ணோட்டத்தை முன்வைப்பதில் மதிப்பைக் காண வேண்டும். ஒருவரின் கண்ணோட்டம் சர்வதேச அளவில் மதிக்கப்படுவதும் கருதப்படுவதும் மென் சக்தியின் (soft power) ஒரு வடிவமாகும்; மேலும், உலகளவில் மேற்குலகின் அதிகாரத்தைச் சமநிலைப்படுத்துவதில் செய்தி நிறுவனங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
இந்தியர்கள் உலக விவகாரங்களில் ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளனர் - உதாரணமாக, இந்தியாவின் அண்டை நாடுகளைப் பற்றிய செய்திகளில் உள்ளூர் மொழி செய்திவழங்கல் முன்கை எடுக்கும் சாத்தியத்தைக் கொண்டுள்ளது என நம்புகிறேன். மயன்மார், சீனா, கம்போடியா போன்ற நாடுகளைப் பற்றிய பரந்த புரிதலைத் தூண்டுவதற்கான ஒரு வழியாக இந்திய மொழிகளில் செய்திகளை வழங்கலாம்.
ஒட்டுமொத்தமாக இதழியல் இன்று எதிர்கொண்டிருக்கும் சவால்களும் சாத்தியங்களும் என்னென்ன? - இதழியல் நெருக்கடியில் உள்ளது. வாழ்க்கையை நடத்துவதற்குச் சுயாதீன இதழாளர்கள் ஒன்று சுதந்திரமான பணக்காரர்களாக இருக்க வேண்டும் அல்லது தச்சு வேலை போன்ற நடைமுறைத் திறன்களைக் கொண்டிருக்க வேண்டும் என ஓர் இதழாளர் சமீபத்தில் என்னிடம் கூறினார்.
உலகெங்கிலும் அரசாங்கங்களால் இதழியல் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. ஜூலியன் அசாஞ்சின் வழக்கு ஒரு தெளிவான உதாரணம். இருப்பினும், முன்பைவிட அதிகமான செய்தி நிறுவனங்கள் இணைந்து பணியாற்றுவது போன்ற சுவாரஸ்யமான வாய்ப்புகளைப் பார்க்கிறேன். அதிகமான மக்களைச் சென்றடைவதற்கும் நிலையானதாக மாறுவதற்கும் இதழியல் அதனதன் வடிவங்களில் மேம்பாட்டைக் கொண்டுவர வேண்டும் என்று நம்புகிறேன்; அத்தகைய பரிணாமங்களைத் தற்போது ஆராய்ந்து வருகிறேன்.
காலநிலை மாற்றம் பற்றிய நூல் ஒன்றை நீங்கள் எழுதிக்கொண்டிருப்பதாக அறிகிறேன். ஊடகத்தில் உள்ள எவருக்கும் காலநிலை மாற்றம் சார்ந்த அறிதல் அவசியமானது என நினைக்கிறீர்களா? - நாகரிகம் அதன் தற்போதைய வடிவத்துக்கு நெருக்கமான நிலையில் தொடர்ந்து நீடிப்பது தொடர்பான தாக்கங்களுடன் காலநிலை மாற்றத்துக்கு எதிரான போர் நமது காலத்தின் மிகப்பெரிய போர்களில் ஒன்று என நம்புகிறேன்; மேலும், பரந்த அளவில் இயற்கையை மதிப்பதும் பாதுகாப்பதும்.
தொழில்நுட்பத்திலும் (நான் பயின்ற) கணிதத்திலும் பல்லாயிரம் ஆண்டுகளாக முன்னேற்றம்-மரபு, எதிர்காலம்-கடந்தகாலம் ஆகியவை சார்ந்த கருத்தாக்கங்களின் போராகவும் அது இருக்கிறது. இதழியல் கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான தலைப்பு இது.
உங்கள் சமீபத்திய நூலான ‘பிரேக் அப்’பின் பின்னணியில், ஒரு போர் செய்தியாளராக, வாழ்க்கையைப் பற்றி நீங்கள் கண்டறிந்த அல்லது உங்களுக்குப் புலப்பட்ட உண்மை எதுவென நினைக்கிறீர்கள்? - ஊக்கமும் தைரியமும் அளிக்கும் மக்களுக்குச் சேவை செய்யும் பாக்கியத்தைப் பெற்றிருப்பது எனக்கு ஒரு நோக்கத்தை வழங்குகிறது, என் வாழ்க்கைக்கு அர்த்தமளிக்கிறது என்பதை நான் உணர்ந்தேன். மேலும், இந்த நோக்கத்தை எனது வாசகர்களுக்கும் என் மகளுக்கும் தெரிவிக்க முடிந்தால், என் பணியின் மிகப் பெரிய பங்கினைச் செய்துவிட்ட நிறைவைப் பெறுவேன்.
உலகில் பல போர்கள் தெளிவின்றி நடத்தப்படுகின்றன. வன்முறையைப் பிரயோகிப்பவர்களுக்கு எதிராக மக்கள் தங்கள் உடலை, தங்கள் குழந்தைகளின் உடல்களை ஆயுதமாக எறிகின்றனர். நான் சிறிதளவு துணிவதன் மூலம் அவர்களுக்குச் சிறிய அளவில் உதவ முயல்கிறேன்.
- தொடர்புக்கு: arunprasath.s@hindutamil.co.in
