Last Updated : 01 Apr, 2018 10:45 AM

 

Published : 01 Apr 2018 10:45 AM
Last Updated : 01 Apr 2018 10:45 AM

பெண்கள் என்ன கடைச் சரக்கா? நீதி கேட்கும் மதுரை மகள்

‘கலர்ஸ் டி.வி’யில் ஒளிப்பரப்பாகும் ஆர்யாவின் சுயம்வர நிகழ்ச்சியான, ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சிக்குத் தடைவிதிக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார் ஜானகியம்மாள்.

தேடிச்சென்றபோது ஆச்சரியம் காத்திருந்தது. வழக்குத் தொடுத்திருக்கும் ஜானகியம்மாளுக்கு வயது 50. சொந்த வீடுகூட இல்லாத ஏழை. கணவரை இழந்த இவர், ஆதரவற்றோர் உதவித்தொகை மூலம் வாழ்க்கையை நகர்த்துகிறார். மதுரை அரசு மருத்துவமனை சாலையில், பழுதடைந்த தனது பழவண்டிக் கடையை சரி செய்யும் முனைப்பில் இருந்தவரைச் சந்தித்ததும், “நீங்களும் இந்த நிகழ்ச்சியைப் பார்க்கிறீங்களா?” என்று ஆச்சரியமாகக் கேட்டோம்.

சிரித்தவர், “நான் தென் மாவட்ட பெண்கள் கூட்டமைப்பில் உறுப்பினரா இருக்கேன்பா. மத்த பெண்கள் மாதிரி, டிவி சீரியல் பார்க்கிற பழக்கம் கெடையாது. ஆனா, பொது வாழ்க்கையில இருக்கிறதால நிறைய பேரோடு பேசுவேன். அப்ப எங்க ஏரியா பொண்ணுங்கதான் சொன்னாங்க, ‘ச்சே, அந்த நிகழ்ச்சி ரொம்ப மோசம். கல்யாணம் பண்ணிக்கிறேங்கிற பேர்ல 18 பெண்களை வெச்சி கேவலப்படுத்தறாரு ஆர்யா. கட்டிப்பிடிக்கிறது, ஒருத்தர் மேல ஒருத்தர் படுத்துக்கிட்டு எக்ஸர்சைஸ் பண்றதுன்னு மோசமா போகுது. இதைத் தட்டிக்கேட்க யாருமில்லையா?’ன்னு கேட்டாங்க. அப்புறம்தான் நானும் அந்த நிகழ்ச்சியைப் பார்த்தேன்” என்றார்.

இவருக்கு அறிமுகமான பிரபல பெண் வழக்கறிஞர் ரஜினியும் இந்த நிகழ்ச்சி பற்றி இதுபோலவே வருத்தப்பட, இருவரும் சேர்ந்து வழக்குப் போட்டிருக்கிறார்கள். “ஒவ்வொரு பொண்ணும் அந்த நடிகரை இம்ப்ரஸ் பண்றேன்ங்கிற பேர்ல தன்னை மறந்து ஏதேதோ உளறுதுக. ஒவ்வொரு நாளும் அதுல ஒரு பொண்ணைத் தேர்ந்தெடுத்து ‘டேட்டிங்’ போறாரு ஆர்யா. அப்ப, தன்னைப் பத்துன ரகசியத்தைப் பூராம் ஆர்யாகிட்ட சொல்றதா நினைச்சி உலகத்துக்கே சொல்றாங்க அந்தப் பொண்ணுங்க. ‘நான் 2 பேரைக் காதலிச்சேன், ஒருத்தன்கூட உறவு வெச்சிருந்தேன்’ அப்படீனெல்லாம் ஊருக்கே தெரியும்படி சொல்லித்தான் ஒரு பொண்ணு தனக்கான கணவனைத் தேடிக்கணுமா? அநியாயத்துக்கும் அத்துமீறிட்டு, ‘நீங்க சரிப்பட்டு வரமாட்டீங்க’ன்னு ஒவ்வொரு பொண்ணையா ‘எலிமினேட்’ பண்றாங்க. அதுங்களும் அழுதுக்கிட்டே போகுதுங்க. பொண்ணுங்கன்னா இவங்களுக்கு இவ்வளவு கேவலமா?” என்று கேட்கிறார் ஜானகியம்மாள்.

“நிகழ்ச்சியில் பங்கேற்கும் பெண்கள் சுயவிருப்பத்தோடு கலந்துகொண்டிருக்கும்போது, நிகழ்ச்சியைத் தடைசெய்ய முடியுமா?” என்று வழக்கறிஞர் ரஜினியிடம் கேட்டோம். “வழக்கை எடுத்துக்கொண்ட நீதிபதிகளில் ஒருவரான நீதியரசர் ஹேமலதாவும் இதே கேள்வியை எழுப்பினார். என்னுடைய பதில் இதுதான். சினிமா நடிகர்களை தலைவராக, முதல்வராக கொண்டாடுகிற மாநிலம் இது. அந்தப் பெண்களும் அதேபோன்ற பிரமிப்பான மனநிலையில் கலந்துகொண்டிருக்கலாம். ஆனால், பாதிப்பு ஒட்டுமொத்த பெண் சமூகத்துக்கும்தான்.

பெண்ணுரிமைக்காகப் போராடியவர்களின் இத்தனை ஆண்டுகால உழைப்பையும் தவிடுபொடியாக்கிவிட்டு, மீண்டும் கற்காலத்துக்கே பெண்களை இழுத்துச்செல்கிறது இந்த நிகழ்ச்சி. வீட்டுக்கே போய் பெண் பார்த்தாலும்கூட, ‘பெண்ணுக்குப் பாடத் தெரியுமா, சமைக்கத் தெரியுமா?’ என்பது போன்ற கேள்விகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் இன்றைய சூழலில், ஒரு சர்வாதிகாரி போல 18 பெண்களை ஆடச் சொல்லி, பாடச் சொல்லி, சமைத்துத் தரச் சொல்லி, அந்தரங்கமாகப் பழகி சுயம்வரம் நடத்துகிறார் நடிகர் ஆர்யா. நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கிற நடிகை சங்கீதா இன்னும் மோசமாக அந்தப் பெண்களை இழிவுபடுத்துகிறார்.

‘உன்னை எனக்குப் பிடிக்கவில்லை’ என்று சொன்னதற்கே நடுரோட்டில், அந்தப் பெண்ணை கழுத்தை அறுத்துக்கொல்கிற வக்கிரங்கள் அரங்கேறும் சமூகம் இது. அப்படி இருக்க... தனக்கான ஜோடியை ஒரு ஆண் தேர்வு செய்வதற்கு சுயமரியாதை இழந்து கேவலமான பல ‘டெஸ்ட்டு’களை ஒரு பெண் கடந்து வரவேண்டும் என்று விஷம் விதைக்கப் பார்க்கிறது இந்த நிகழ்ச்சி. இதேபோல ஒரு பெண் வரிசையாக ஆண்களை அழைத்து, அவர்களின் தன்மானத்தை இதுபோல் காலில்போட்டு மிதித்து மாப்பிள்ளைத் தேர்வு நடத்தினால், இந்தச் சமூகம் இப்படி வேடிக்கைப் பார்க்குமா? எனவேதான், இந்த நிகழ்ச்சியைத் தடை செய்வதோடு அந்த டி.வி-யின் அதிகாரி, ஆர்யா, சங்கீதா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யக் கூறுகிறோம்.

ஒரு காட்சியில் நாயைப் பயன்படுத்தினால்கூட, அதனைத் துன்புறுத்தவில்லை என்று சான்றிதழ் கேட்கிறது சினிமா தணிக்கை வாரியம். அப்படியிருக்க, பெண்களை இவ்வளவு மட்டமாக நடத்துகிற நிகழ்ச்சிக்கு எப்படி அனுமதி கொடுத்தார்கள் என்று கேட்டோம். பதிலளிக்குமாறு சினிமா தணிக்கை வாரியத்துக்கும், மத்திய செய்தி ஒலிபரப்புத் துறைக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.” என்றார் ரஜினி.

ஆர்யாவிடம் கேட்டபோது, “மீடியாவுக்கு வெளியில் என்னுடைய சொந்த விஷயம் அல்லது சினிமா பத்தின்னா கேளுங்க. இது சேனலுக்கான நிகழ்ச்சி. அவங்க பதில் சொன்னாத்தான் சரியா இருக்கும்’’ என்றார். ‘கலர்ஸ் தமிழ்' பிசினஸ் ஹெட் அனுப் சந்திரசேகரிடம் கேட்டபோது, ‘‘நீதிமன்றம், வழக்கு என்று சட்டரீதியான விஷயமாக மாறியுள்ளதால் இதுகுறித்து தற்போது எதுவும் நான் பேசக்கூடாது’’ என்றார்.

படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x