வன வளர்ப்பில் சமூகங்களுக்கு அக்கறை வேண்டாமா?: புதிய வனங்கள் உருவாக்கப்பட்டதாகக் கூறியிருப்பது கேள்விக்குரியது

வன வளர்ப்பில் சமூகங்களுக்கு அக்கறை வேண்டாமா?: புதிய வனங்கள் உருவாக்கப்பட்டதாகக் கூறியிருப்பது கேள்விக்குரியது
Updated on
2 min read

ந்தியாவின் வனப்பரப்பு ஓரளவுக்கு அதிகரித்திருக்கிறது என்று ‘இந்தியாவில் வனங்களின் நிலை அறிக்கை 2017’ தெரிவிக்கிறது. அதே வேளையில், ‘மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவமாறுதலுக்கான துறை' 2018-ம் ஆண்டுக்கான தேசிய வரைவு வனக்கொள்கையை வெளியிட்டிருக்கிறது. வனப்பரப்பை அதிகப்படுத்த வேண்டும், வன நிர்வாகத்தில் சமூகங்களின் பங்களிப்பு அதிகமாக வேண்டும் என்றும் தொழில் துறைப் பயன்பாட்டுக்காக ‘வணிகப் பயிர்த் தோட்டங்கள்' அமைக்கப்பட வேண்டும் என்றும் அது வலியுறுத்துகிறது. இந்தக் கொள்கையை இறுதிசெய்வதற்கு முன்னால் நாம் எழுப்ப வேண்டிய கேள்வி, இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் வனங்களுடைய பங்கு எவ்வளவு?

2015 முதல் 2017 வரையிலான காலத்தில் வனப் பரப்பு 0.21% அதிகரித்திருக்கிறது என்று வன நிலவர அறிக்கை தெரிவிக்கிறது. இதே காலத்தில் சில பகுதிகளில் வனங்கள் மிகுந்த அடர்த்தியானவையாக மாறிவிட்டதாகவும் கூறுகிறது. அதே சமயம் 2014 முதல் 2017 வரையில் 36,575 ஹெக்டேர் வன நிலங்கள் சட்டபூர்வமாகவே 1,419 வளர்ச்சித் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டதாகவும் அமைச்சகம் ஒப்புக்கொள்கிறது. வனப்பரப்பு அதிகமான அதேவேளையில் வன நிலங்களின் கணிசமான பரப்பு தொழிற்சாலைகள் அமைப்பதற்காகத் தரப்பட்டிருக் கிறது.

புதிய வனங்கள் உருவாக்கப்பட்டதாகக் கூறியிருப்பது கேள்விக்குரியது. வணிகப் பயிர்களைச் சாகுபடி செய்யும் தோட்டங்களையும் சேர்த்து 'வனம்' என்று கூறிவிடுகிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளிலேயே இந்திய வனங்களில் சில அடர்ந்த வனங்களாகிவிட்டன என்பதை நம்புவதற்கே இயலவில்லை; வனங்கள் அடர் வனங்களாவது இவ்வளவு விரைவில் நிகழ்ந்துவிடாது, அதற்குப் பல ஆண்டுகள் தேவைப்படும் என்கின்றனர் சுற்றுச்சூழல் நிபுணர்கள்.

ஒவ்வொரு உள்ளாட்சி மன்றத்திலும் பல்லுயிர் பெருக்க மேலாண்மைக் குழு நியமிக்கப்பட வேண்டும் என்று 2002-ல் இயற்றப்பட்ட பல்லுயிர்ப் பெருக்கச் சட்டம் கூறுகிறது. இந்தக் குழு மக்களுக்கான பல்லுயிர் பதிவேட்டைத் தயாரிக்கும். வனங்கள் என்று வகைப்படுத்தப்படாத இடங்களில் வசிக்கும் பழங்குடிகள்கூட இதில் உறுப்பினர்களாகச் சேர்க்கப்படுவார்கள். இந்தப் பதிவேட்டைத் தயாரிக்க வேண்டும் என்றால் முன்தயாரிப்புக்காக அந்தப் பகுதியில் காணப்படும் தாவரங்கள், உணவு மூலங்கள், வன விலங்குகள், மருத்துவ மூலங்கள் ஆகியவற்றைக் கணக்கிட்டுப் பதிவுசெய்ய வேண்டும். பல்லுயிர்ப் பெருக்க நிதியை உருவாக்கவும், அந்தப் பல்லுயிர்களைப் பாதுகாக்கவும், முடிவுகளை எடுக்கவும் பதிவேடுகள் கைகொடுக்கும்.

பல்லுயிர்ப் பெருக்க பதிவேடு சக்திவாய்ந்த ஆதாரமாகத் திகழும். ஒரு வனப்பகுதியில் உயிரின மாற்றங்கள் எப்படி ஏற்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளவும் வனங்களின் வெவ்வேறு பகுதிகள் எப்படிப்பட்டவை என்று புரிந்துகொண்டு மதிப்பிடவும் உதவும். கலாச்சாரமும் இயற்கையும் பல்லுயிர்ப் பெருக்கத்தில் ஆற்றும் பங்களிப்பையும் புரிந்துகொள்ள முடியும். மேற்கு மலைத் தொடர்ச்சிப் பகுதியில் தோடவர்கள் என்ற பழங்குடிகள் வாழும் பகுதிகளில் பல இடங்கள் பறவைகள் வந்து தங்கும் இடங்களாகத் தொடர்கின்றன. இம்மக்கள் சுற்றுச்சூழல் கெடாமல் பாதுகாப்பதுடன் அங்கு பறவைகள், தாவரங்கள், பிராணிகள், மிருகங்கள் வாழவும் வளரவும் தொடர்ந்து உதவுகின்றனர். அவற்றுடன் அவர்கள் இரண்டறக் கலந்து வாழ்கின்றனர். பாதுகாப்புத் தேவைப்படும் வனங்கள் எவை என்று அடையாளம் காணவும் இந்தப் பதிவேடு உதவும். மக்கள் பல்லுயிர்ப் பெருக்க பதிவேடும், பல்லுயிர் நிர்வாகக் குழுக்களும் வன வரைவுக் கொள்கையில் இணைக்கப்படாவிட்டால் திறமையான, இயற்கையான வனக் கண்காணிப்பை இழந்துவிடுவோம். பழமையான வனக் காப்பு உத்திகளுடன் நவீன சாதனங்களையும், டிஜிட்டல்மய மான வன வரைபடங்களையும் பயன்படுத்தி வனங்களைக் காக்க வேண்டும்.

வனங்கள் என்பவை அரசின் கட்டுப்பாட்டுக்கு உள்பட்டவை, வனத்துறையால் நிர்வகிக்கப்படுபவை என்ற கண்ணோட்டமே பல ஆண்டுகளாக நிலவி வந்தது. முதல் முறையாக வன வரைவுக் கொள்கையானது இந்தக் கண்ணோட்டத்தைத் தாண்டியிருக்கிறது.

வனப்பகுதியை விரிவுபடுத்த வேண்டும், வணிகப் பயன்பாட்டுக்காக வனங்களைப் பராமரிக்க வேண்டும், வன வளர்ச்சிக்கு அரசும் தனியார் துறையும் கூட்டு சேர்ந்து உழைக்க வேண்டும் என்று வரைவு வனக் கொள்கை கூறுகிறது.

வனங்களுக்கு நேரக்கூடிய ஆபத்துகளை வரைவுக் கொள்கை அடையாளம் காண்கிறது. ஆனால், சமூகங்கள் இதில் பங்கேற்க முறைமையை அளிக்கவில்லை. வனங்களின் நிலங்களைத் தனியாரும் பிறரும் ஆக்கிரமிப்பது, சட்டவிரோதமாக மரங்களை வெட்டுவது, திடீர் திடீரென வனங்களில் தீப்பற்றி எரிவது, வனங்களைப் பாழாக்கக்கூடிய களைகள் ஊடுருவுவது, வன நிலங்கள் மேய்ச்சல் நிலங்களாகப் பயன்படுத்தப்படுவது போன்றவை ஆபத்துகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றைத் தடுக்கவும் வனங்களைப் பாதுகாக்கவும் வனப்பரப்பை அதிகரிக்கவும் வனங்களில் வாழும் சமூகங்களையும் பங்கேற்பாளராக மாற்ற வேண்டும் என்கிறது வரைவுக் கொள்கை.

இப்போதுள்ள வனங்களில் கனிம அகழ்வு உள்ளிட்ட தொழில்வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளக்கூடாது, அப்படிச் செய்தால் வன அழிவுக்கு அதுவே மிகப் பெரிய காரணமாகிவிடும் என்று அது எச்சரிக்கிறது. வன வளத்தைப் பரவலாக்க வேண்டும், அது வெறும் வணிகத்துக்கானது மட்டுமல்ல, கலாச்சார மதிப்பு மிக்கது, அடிக்கடி மறந்துவிடும் வன வளம் தொடர்பான தகவல்களை நினைவுபடுத்திச் செயலாக்க உதவும். அது வெளிப்படைத்தன்மையை நமது கொள்கைக்கு அளிக்கும். அத்துடன் நம்முடைய பாரம்பரியத்தை அங்கீகரித்தாகவும் இருக்கும்.

- நேஹா சின்ஹா, காட்டுயிர் பாதுகாவலர்.

தமிழில்: சாரி, © தி இந்து ஆங்கிலம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in