Published : 20 Apr 2018 09:06 AM
Last Updated : 20 Apr 2018 09:06 AM

காவிரி சர்ச்சை: ஸ்கீமைவிட ஆபத்தானதா வரைவுத் திட்டம்?

கா

விரி நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்சினையைத் தீர்க்க காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதுதான் ஒரே வழி என்பது நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு. அதுகுறித்த வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பைச் செயல்படுத்த ‘ஸ்கீம்’ என்கிற திட்டத்தை உருவாக்கச் சொன்னது. அந்த ஸ்கீமுக்கு விளக்கம் கேட்டு மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியபோது, வரைவுத் திட்டத்தைக் கொடுங்கள் என்று கேட்டது. ஆக, நடுவர் மன்றத் தீர்ப்பை அமல்படுத்த ‘போர்டு’, ‘ஸ்கீம்’, ‘ட்ராஃப்ட்’ என்ற மூன்று பதங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மூன்றில் எது நல்லது? எது சரியானது? எது ஆபத்தானது?

நடுவர் மன்றம் சொன்ன வாரியம்

காவிரி மேலாண்மை வாரியம் பற்றிப் பேசிய நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு, அந்த வாரியத்துக்கு ஒரு முழு நேரத் தலைவரையும் இரு முழு நேர உறுப்பினர்களையும் மத்திய அரசு நியமிக்க வேண்டும் என்றது. அந்தத் தலைவரும் உறுப்பினர்களும் நீர்த்தேக்க நிர்வாகம், விவசாயம் உள்ளிட்ட துறைகளில் 15 முதல் 20 ஆண்டுகள் விரிவான கள அனுபவமும் நிபுணத்துவமும் பெற்ற தலைமைப் பொறியாளர்களாக இருக்க வேண்டும் என்றது.

மேலும், மத்திய விவசாயத் துறையும் நீர்ப்பாசனத் துறையும் தலைமைப் பொறியாளர்/ ஆணையர் அந்தஸ்து கொண்ட தலா ஓர் உறுப்பினரைப் பகுதிநேர உறுப்பினர்களாக வாரியத்துக்குப் பரிந்துரைக்க வேண்டும் என்றும், நான்கு மாநில அரசுகளும் தலா ஓர் உறுப்பினரை வாரியத்துக்குப் பரிந்துரைக்க வேண்டும் என்றும் அந்த உறுப்பினர்கள் பொதுப்பணி/விவசாயம்/நீர்வளத் துறையைச் சேர்ந்த தலைமைப் பொறியாளர் அந்தஸ்தில் இருக்க வேண்டும் என்றும் சொல்லியிருந்தது. இறுதியாக, காவிரி மாநிலங்களைச் சாராத கண்காணிப்புப் பொறியாளர் அந்தஸ்து கொண்ட ஒருவர் மேலாண்மை வாரியத்தின் செயலாளராக இருப்பார் என்றும் வழிகாட்டியிருந்தது.

மத்திய அரசின் ஒப்புதலுடன் மேலாண்மை வாரியம் நிறுவப்பட்ட நொடியிலிருந்து தமிழகத்தின் கீழ்பவானி, அமராவதி, மேட்டூர், கர்நாடகத்தின் ஹேமாவதி, ஹேரங்கி, கபினி, கிருஷ்ணராஜசாகர், கேரளத்தின் பாணாசுரசாகர் ஆகிய அணைகள் வாரியத்தின் ஒருங்கிணைந்த வழிகாட்டுதலின்படியே சம்பந்தப்பட்ட மாநில அரசுகளால் இயக்கப்படும் என்றது நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு.

வாரியத்தின் பணிகள்

ஒவ்வொரு ஆண்டின் ஜூன் முதல் தேதியன்றும் அந்த ஆண்டுக்கான நீர்த்தேவை குறித்து ஒவ்வொரு மாநில அரசும் தத்தமது பிரதிநிதிகளின் வழியே மேலாண்மை வாரியத்துக்கு அறிக்கை தந்துவிட வேண்டும். பாசனப் பரப்பு, சாகுபடிப் பருவம் ஆகியவற்றை ஆய்வுசெய்து, நடுவர் மன்றத் தீர்ப்பின் அடிப்படையில் உரிய நீரைத் திறந்துவிட, தான் உருவாக்கிய காவிரி ஒழுங்காற்றுக் குழுவுக்கு உத்தரவிடுவது மேலாண்மை வாரியத்தின் பணி. பற்றாக்குறை காலங்களில், நடுவர் மன்றத் தீர்ப்பு குறிப்பிட்டிருக்கும் விகிதத்தின்படி நீர்ப்பங்கீட்டு அளவை வாரியமே நிர்ணயிக்கும் என்று கூறியிருந்தது நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு. அணைக்கட்டுகளில் தேவைப்படும் ஹைட்ராலிக் கட்டமைப்புகளை உருவாக்கவும், அளவீட்டுக் கருவிகளைப் பொருத்தவும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு உத்தரவிடுவதும், பணிகளைக் கண்காணிப்பதும் வாரியத்தின் வரம்புக்குட்பட்டவை. வாரியம் விரும்பினால் எப்போது வேண்டுமானாலும் நீர்த்தேக்கங்களில் சேமிக்கப்பட்டிருக்கும் நீரின் அளவு, மழைநீர் அளவு, திறந்துவிடப்பட்ட நீரின் அளவு, பயன்படுத்தப்பட்ட நீரின் அளவு தொடர்பான விவரங்களை சம்பந்தப்பட்ட மாநில அரசுகளிடமிருந்து கேட்டுப்பெற முடியும்.

மேலாண்மை வாரிய உறுப்பினர்கள் விரும்பினால் எந்தவொரு அணைக்கட்டு, நீர்த்தேக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் எப்போது வேண்டுமானாலும் நேரில் சென்று பார்வையிடுவது, தகவல்களைக் கோருவது, அளவீட்டுக் கருவியைப் பொருத்தும் பணிகளைப் பார்வையிடுவது, கேள்வி எழுப்புவது, குறைகளைச் சுட்டிக்காட்டுவது, தேவையெனில் பணிகளை நிறுத்துவது போன்றவற்றைச் செய்ய முடியும்.

இறுதியாக, மேலாண்மை வாரியத்தின் பணிகளுக்கு சம்பந்தப்பட்ட மாநிலங்கள் ஒத்துழைக்க மறுத்தால், மத்திய அரசின் உதவியைக் கேட்க முடியும். இவைதான் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு சொன்ன காவிரி மேலாண்மை வாரியத்தின் நிர்வாக மற்றும் அதிகாரக் கட்டமைப்பு.

உச்ச நீதிமன்றம் சொன்ன ஸ்கீம்

நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பு வெளியானது முதல் காவிரி மேலாண்மை வாரியம் வேண்டும் என்பதை மந்திரம்போல ஓயாமல் உச்சரித்துவருகிறது தமிழகம். ஆனால் அதற்கு எதிராக அனைத்து அரசியல் தந்திரங்களும் பயன்படுத்தப்படுகின்றன. என்ன தீர்வு தரப்போகிறது உச்ச நீதிமன்றம் என்று நான்கு மாநிலங்களும் ஆவலுடன் காத்திருந்த சமயத்தில், நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பைச் செயல்படுத்த ‘ஸ்கீம்’ என்கிற திட்டத்தை உருவாக்குங்கள் என்று சொல்லி, அதற்கு ஆறு வார காலக் கெடுவை நிர்ணயித்தது உச்ச நீதிமன்றம்.

அந்த ஆறுவாரம் முழுவதும் ஒரே விஷயம்தான் திரும்பத்திரும்பப் பேசப்பட்டது. ஆம், உச்ச நீதிமன்றம் சொன்ன ஸ்கீம் என்பது நடுவர் மன்றம் சொன்ன காவிரி மேலாண்மை வாரியம்தான் என்றது தமிழக அரசு. “இல்லவே இல்லை, ஸ்கீம் என்பது புதிதாக உருவாக்க வேண்டிய திட்டம்” என்றது கர்நாடகம். இறுதியாக, கெடு தேதி முடிந்த மறுநாள் ‘ஸ்கீம்’ என்றால் என்னவென்று உச்ச நீதிமன்றத்திடம் விளக்கம் கேட்டது மத்திய அரசு.

அந்த விளக்கம் கோரிய மனுவில்தான் ‘ஸ்கீம்’ என்ற பதத்தை மத்திய அரசு எப்படிப் புரிந்துகொண்டது அல்லது புரிந்துகொள்ள விரும்புகிறது என்பது வெளிப்படையாகத் தெரியவந்தது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ள ‘ஸ்கீம்’ என்றால் என்ன, அதன் அடிப்படையில் உருவாக்கப்படும் அமைப்பு வெறும் தொழில்நுட்பக் குழுவா அல்லது மேலாண்மை வல்லுனர்களை உள்ளடக்கியதா, நடுவர் மன்றத்தின் பரிந்துரையிலிருந்து மாறுபட்ட மேலாண்மை வாரியத்தை அமைக்கலாமா என்ற மூன்று கேள்விகளை எழுப்பியது மத்திய அரசு.

அந்தக் கேள்விகளின் மூலம், நடுவர் மன்றம் வழிகாட்டியபடி வாரியத்தை அமைக்க மத்திய அரசு விரும்பவில்லை அல்லது வாரியத்துக்கு மாற்றாக, தான் விரும்பிய வடிவத்தில் ஒரு அமைப்பை உருவாக்க மத்திய அரசு அமைக்க விரும்புகிறது என்பது தெளிவானது.

வரைவுத் திட்டம் பின்னடைவு

மத்திய அரசின் விளக்கம் கோரும் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மே 3-க்குள் வரைவுத் திட்டத்தைத் தாக்கல்செய்ய உத்தரவிட்டது. ஆக, வாரியம் என்று ஆரம்பித்து, ஸ்கீம் என்று நகர்ந்து, இறுதியாக ‘டிராஃப்ட்’ என்கிற வரைவுத் திட்டத்தில் வந்து நிற்கிறது காவிரி விவகாரம். இந்த இடம்தான் மிகவும் ஆபத்தானது என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள். வரலாறும் அப்படித்தான் சொல்கிறது.

ஆம், நடுவர் மன்றம் சொன்ன காவிரி மேலாண்மை வாரியம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்குத் தெள்ளத்தெளிவான வரையறை இருக்கிறது. ஒருவேளை, உச்ச நீதிமன்றம் சொன்ன ‘ஸ்கீம்’ என்கிற திட்டத்தை மத்திய அரசு உருவாக்கித் தந்துவிட்டால், அதை நேரடியாகச் செயல்வடிவத்துக்குக் கொண்டுவந்து விடலாம். கடந்த காலங்களில் அதற்கான உதாரணங்கள் ஏராளம் இருக்கின்றன. காவிரி விவகாரத்திலேயே நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பைச் செயல்படுத்த அப்போதைய பிரதமர் வாஜ்பாய் ஒரு திட்டத்தை (ஸ்கீம்) வகுத்துக் கொடுத்தார். அந்தத் திட்டத்தின் மீது சில விமர்சனங்கள் இருந்தாலும் அது செயல்வடிவம் பெற்றது வரலாறு.

ஆனால் தற்போது உச்ச நீதிமன்றம் சொல்லியிருக்கும் வரைவுத்திட்டம் என்பது சற்று ஆபத்தானது என்று கருத சாட்சியம் தேடி வெகுதூரம் செல்லவேண்டியதில்லை. காவிரி விவகாரத்திலேயே உதாரணம் இருக்கிறது.

காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர்பாக 1924-ல் ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன் அம்சங்கள் குறித்து 50 ஆண்டுகள் கழித்து (அதாவது, 1974-ல்) மறுஆய்வு செய்ய வேண்டும். ஐம்பதாண்டுகளில் பெற்ற அனுபவத்தின் வெளிச்சத்தில் எதிர்காலத்தில் விளைநிலப் பரப்பை அதிகரிப்பது, ஒப்பந்த அம்சங்களை மாற்றியமைப்பது, புதிய அம்சங்களைச் சேர்ப்பது உள்ளிட்டவற்றை இருதரப்புகளும் பேசி இறுதி செய்ய வேண்டும் என்பதுதான் அந்த ஒப்பந்தத்தின் முக்கியமான அம்சம்.

மீண்டும் பழைய நிலை?

அதன்படியே 1924 காவிரி ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்ய வேண்டிய சூழல் 1970-களின் தொடக்கத்தில் உருவானது. அதற்காக ஒப்பந்த வரைவு ஒன்றை மத்திய அரசு தயாரித்தது.அதன் அம்சங்கள் கர்நாடகத்துக்கும் திருப்தி தரவில்லை. தமிழகத்துக்கும் மகிழ்ச்சி கொடுக்கவில்லை. நெருக்கடிநிலை அமலாவதற்கு முன்பு மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சராக கே.சி.பந்த் இருந்தபோது ஒரு ஒப்பந்த வரைவு தயாரிக்கப்பட்டது. ஆனால், தமிழகமும் கர்நாடகமும் அதை ஏற்கவில்லை.

பிறகு, நெருக்கடிநிலைக் காலகட்டத்தில் மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சராக ஜெகஜீவன்ராம் இருந்தபோது ஒப்பந்த வரைவு சற்றே திருத்தப்பட்டது. ஆனால் அதுவும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளால் ஏற்கப்படவில்லை. நெருக்கடிநிலைக்குப் பிறகு மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சிமாற்றம் ஏற்பட்ட பிறகும்கூட அந்த ஒப்பந்த வரைவு ஏற்கப்படவில்லை. ஆயிற்று, 45 ஆண்டுகள். இன்றுவரையிலும் காவிரி ஒப்பந்த வரைவு அப்படியே நிலுவையில் இருக்கிறது.

1970-களில் இருந்த இதே நிலைதான் தற்போதும் உருவாகியிருக்கிறது. வாரியம் ஸ்கீமாக மாறி, வரைவுத்திட்டமாக உருமாறி நிற்கிறது. காவிரி ஒப்பந்த வரைவுக்கு நேர்ந்த கதி உச்ச நீதிமன்றம் சொன்ன வரைவுத்திட்டத்துக்கும் ஏற்பட்டுவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பெரும் பொறுப்பு தமிழகத்தின் இன்றைய ஆட்சியாளர்களுக்கும் நாளைய ஆட்சியாளர்களுக்கும் நிறையவே இருக்கிறது!

- ஆர்.முத்துக்குமார், எழுத்தாளர். ‘காவிரி: அரசியலும் வரலாறும்’, ‘தமிழக அரசியல் வரலாறு’

உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

தொடர்புக்கு: writermuthukumar@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x