Last Updated : 15 May, 2024 06:18 AM

 

Published : 15 May 2024 06:18 AM
Last Updated : 15 May 2024 06:18 AM

மரியா மீஸ்: மகளிருக்கான தனித்த குரல்

பெண்களின் உழைப்புக்கும் சமூகத்தின் பொருளாதார உற்பத்தி உறவுகளுக்கும் இடையிலான உறவை ஆய்வுசெய்தது மட்டுமல்லாமல், அது குறித்துத் தொடர்ச்சியாகப் பேசியும் எழுதியும் வந்தவர் மரியா மீஸ் (Maria Mies). சமூகவியல் பேராசிரியராகவும் மார்க்சியப் பெண்ணியவாதியாகவும் அறியப்பட்டவர். 1931இல் ஜெர்மனியில் பிறந்த அவர், பெண்களைப் பற்றி ஆராயும் விருப்பத்தோடு 1963இல் இந்தியா வந்தார்.

தமது கற்பித்தல் பணியினூடாக உலகளவில் நடந்துவரும் மாற்றங்களைக் கவனித்து, பெண்களின் வாழ்க்கையில் அவை ஏற்படுத்தும் தாக்கத்தைப் பதிவுசெய்தார். இந்தியாவில் இருந்தபோது, காலனியக் கால இந்தியாவில் பெண்களின் உழைப்பு, தொழில் முனைவு பற்றிய ஆய்வில் கவனம் செலுத்தினார்.

அவரது ஆய்வுகள் சமூகவியல், பொருளாதாரம், பெண்ணியம், சுற்றுச்சூழலியம் ஆகியவற்றை ஒன்றோடு ஒன்று பிணைத்துப் பார்க்கும் புதிய சிந்தனைமுறை உருவாகக் காரணமாக அமைந்தன. அந்த வகையில், மரியாவின் ஆய்வுகள் முக்கியமானவை.

சரிகைத் தொழிலும் பட்டியல் சாதியும்: சென்னை மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்த கோதாவரி மாவட்டத்தின் நரசாபூரைச் சேர்ந்த பட்டியல் சாதிப் பெண்கள் சரிகைத் தொழில் செய்ததையும், அவர்களில் ஆண்கள் தொழில்முனைவோராக இருந்ததையும் பதிவுசெய்திருக்கிறார் மரியா மீஸ். இது பட்டியல் சாதியினர் பற்றிச் சொல்லப்பட்டுவரும் எதிர்மறையான பிம்பத்தை மறுக்கும் தரவாகும்.

1837இல் கோதாவரி பகுதிக்குக் கிறித்துவச் சமயப் பணிக்காக வந்த ஜார்ஜ் பீர், வில்லியம் பெளடன், மேக்ரே ஆகியோர் தமது ஊழியத்தின் ஒரு பகுதியாகப் பெண்களின் மேம்பாட்டுக்காகச் சரிகை பின்னும் தொழிலைக் கற்றுக்கொடுத்தனர் என்று மரியா மீஸ் ‘The Lace Makers of Narsapur’ என்னும் நூலில் சொல்லியிருப்பதாக ‘Dalit Lacemakers of Narsapuram: How They Found Dignity And Livelihood In 19th Century’ என்னும் கட்டுரையில் ஸ்ரீ ஹர்சா சாய் மத்தா குறிப்பிட்டிருக்கிறார்.

1896-97இல் சர்ச் மிஷனரி சொசைட்டி சார்பாகச் சமயப் பணிக்கு வந்த ஜான் கெய்ன் என்பவரும் அவருடைய மனைவியும் சமயப் பணியின் ஒரு பகுதியாக இன்றைய தெலங்கானாவின் தும்முகுடேம் பகுதியில் உண்டு உறைவிடப் பள்ளியை உருவாக்கினர். அதில் பட்டியல் சாதிப் பெண்கள் அதிகளவில் தங்கிப் பயின்றார்கள். அவர்களுக்கு ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் படிப்பைத் தாண்டிய தொழிற்கல்வி என்கிற வகைமையில் சரிகை பின்னும் தொழில் கற்றுக்கொடுக்கப்பட்டது.

அதற்கான தொழிற்சாலையையும் அவர்கள் நிறுவினர். இப்படித்தான் சரிகைத் தொழில் இந்தியாவில் பட்டியல் சாதிப் பெண்களிடம் பரவியது. இது பற்றி 1915இல் சென்னையிலிருந்து வெளியான கோதாவரி மாவட்ட விவரத்தொகுப்பில் (Madras District Gazetteers, Godavari, Page No.112) குறிப்பிடப்பட்டுள்ளது.

1900இல் கிறிஸ்துவத்தைத் தழுவிய பட்டியல் சாதியினரான ஜோசப், ஜோனா ஆகியோர் மிஷனரிகளிடம் இருந்த சரிகைத் தொழிலைக் கையிலெடுத்துத் தொழில்முனைவோர் ஆகினர். அதற்கான வாய்ப்பையும் வசதியையும் அன்றைய அரசும் மிஷனரியும் அவர்களுக்குச் செய்துகொடுத்தன.

இந்தச் செய்தியை அரசு, மிஷனரிகளின் ஆவணங்களைத் தாண்டித் தனிநபராக முதன்முதலில் பதிவுசெய்தவர் மரியா மீஸ். காலனிய காலத்தில் பட்டியல் சாதியினர் தொழில்முனைவோராகவும் இருந்தனர் என்பதற்கு அவரது ஆய்வு முக்கியச் சான்றாக உள்ளது.

ஆய்வுகளும் தன்வரலாறும்: 1973இல் மரியா மீஸ் ‘Indian Women and Patriarchy’ என்ற புத்தகத்தை ஜெர்மனியிலும், 1980இல் இந்தியாவிலும் வெளியிட்டார். இதில் ஒரு தனிப்பட்ட பெண் கடுமையான ஆணாதிக்கக் குடும்ப அமைப்பிலிருந்து வெளியேற எத்தனிக்கும்போது எதிர்கொள்ளும் பண்பாட்டுச் சிக்கல், கூட்டுக் குடும்பத்தின் ‘பாரம்பரியம்’ என்பதற்கும் சுதந்திரமான பெண்ணின் வாழ்க்கை வெளிக்கும் இடையிலான மோதல் ஆகியன குறித்து ஆராய்ந்திருந்தார்.

1981இல் ‘The Social Origins of the Sexual Division of Labour’ என்னும் பெண்ணிய நோக்கிலான நூலை வெளியிட்டார். அதில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் பாரபட்சமான கருத்தியல்களால் உண்டாகும் பிரச்சினைகள், அதைச் சரிசெய்வதற்கான வழிமுறைகள், பெண் உற்பத்தித் திறன், அதிலிருந்து வேறுபடும் ஆண் உற்பத்தித் திறன் ஆகியவற்றை விளக்கியிருந்தார். இந்நூலில் உழைப்பு பற்றிச் சொல்லும் பகுதி நுட்பமான எடுத்துரைப்பைக் கொண்டது.

உழைப்பு என்று வருகிறபோது ‘மனிதன்’ என்கிற சொல் பெண்ணை விலக்கி ஆணை மட்டுமே உள்ளடக்கியதாக இருக்கிறது. அதாவது, ‘மனிதனின் உழைப்பு’ என்பது ஆணின் உழைப்பை மட்டுமே குறிக்கிறது. பெண்ணின் உழைப்பு, ‘உழைப்பு’ என்ற வரையறைக்குள் வைக்கப்படவில்லை. உதாரணமாக, ஒரு மரம் வளர்ந்து பூத்துக் காய்த்துக் கனி தருவது எப்படி இயற்கையானதோ அது போன்றதுதான் பெண்ணின் உழைப்பும். அதற்கு எந்தவிதப் பொருளாதார மதிப்பும் இல்லை.

இயற்கை நிகழ்வு போன்று அது நடந்துகொண்டே இருக்க வேண்டும் என்று சமூகம் விரும்புகிறது. ஆணின் உழைப்பு சமூகத்தின் உற்பத்தி உறவோடு தொடர்புடையதாகவும் மதிப்பு கொண்டதாகவும் கருதப்படுவது போன்ற தன்மை பெண்ணின் உழைப்புக்கு இல்லை என்று உழைப்பில் நிலவும் பாலின வேறுபாட்டை விவரிக்கும் மரியா மீஸ், உண்மையில் உற்பத்திக் காரணியாக இருப்பது பெண்தான்; பெண்ணால்தான் இவ்வுலகத்தில் அனைத்தும் சாத்தியமாகியிருக்கிறது என்கிறார்.

1986இல் ‘Patriarchy and Accumulation on a World Scale: Women in the International Division of Labour’ என்கிற நூலை அவர் வெளியிட்டார். இது உழைப்பில் இருக்கும் பாலினப் பிரிவின் தோற்றத்தையும் காலனித்துவம், பெண்களை இல்லத்தரசிகளாக்கும் உத்தி ஆகியவற்றின் வரலாற்றையும் பதிவுசெய்திருந்தது.

1980களில் உலகமயமாக்கலையொட்டி உருவான புதிய சர்வதேசத் தொழிலாளர்கள், உற்பத்தியாளர்கள், நுகர்வோர் - ஆகியோரில் பெண்கள் வகிக்கும் இடம் பற்றிக் கேள்வி எழுப்பிய வகையில், அக்காலத்திய பொருளாதார அறிஞர்களால் முக்கியமான நூலாகக் குறிப்பிடப்பட்ட இது, பெண்ணியக் கோட்பாட்டுக்கான உதாரண நூலாகவும் பேசப்பட்டது.

இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ள முதலாளித்துவ ஆணாதிக்கம் பற்றிய கோட்பாட்டு விளக்கங்கள் இன்றைக்கும் பொருத்தப்பாடு உடையனவாக இருக்கின்றன.

விரிவான ஆய்வுகள் தேவை: 2010இல் ‘The Village and the World: My Life, Our Times’ என்னும் தலைப்பில் மரியா மீஸ் தன்னுடைய சுயசரிதையை வெளியிட்டார். அதில் இந்தியாவுக்கு வந்து ஆய்வு நடத்தியது, இந்தியப் பெண்களிடமிருந்து கற்றுக்கொண்டது, இந்திய சமூக அமைப்பைப் புரிந்துகொண்டது ஆகியவற்றை ஒரு பெண்ணியவாதியாகப் பதிவுசெய்திருந்தார்.

இருபதாம் நூற்றாண்டின் அரசியல் கண்ணோட்டத்துடன் சுரண்டல், அடக்குமுறை, வன்முறை, உலகப் போர்களினால் உண்டான பாதிப்பு, அதனால் உலகளவில் நிகழ்ந்த அதிகார மாற்றங்களால் சமூகம் எதிர்கொண்ட சவால்கள் ஆகியவற்றைத் தனித்துவத்தோடு விவரித்திருந்தார். உலகமயமாக்கப்பட்ட உலகத்தில் பெண்களின் அரசியல், சமூகவியல் குறித்த இடத்தையும் இருப்பையும் அறிந்துகொள்ள இந்நூல் உதவும்.

தனது வாழ்நாள் முழுக்கப் பெண்களின் சமூக விடுதலைக்காகப் பணிசெய்த மரியா மீஸ், 2023 மே 15 அன்று காலமானார். இன்றைக்குக் கல்விப் புலங்களிலும் கலை இலக்கியச் செயல்பாடுகளிலும் பெண்கள் குறித்த புரிதல் முற்போக்குத் தன்மையை அடைந்திருப்பதற்குக் காரணமான செயல்பாட்டாளர்களுள் மரியா மீஸும் ஒருவர்.

அவருடைய ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு பெண்ணிய, சமூகவியல் ஆய்வுகளை இன்னும் விரிந்த அளவில் எடுத்துச்செல்ல வேண்டும். அதுதான் மரியா மீஸின் கடைசிக் கால ஆசையாகவும் இருந்தது.

மே 15: மரியா மீஸின் முதல் ஆண்டு நினைவு நாள்

- jeyaseelanphd@yahoo.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x