சொல்… பொருள்… தெளிவு: இஸ்ரேல் பிடியில் ரஃபா

சொல்… பொருள்… தெளிவு: இஸ்ரேல் பிடியில் ரஃபா
Updated on
2 min read

“காஸாவின் ரஃபாவில் இஸ்ரேலின் தாக்குதல் பேரழிவுக்கு வழிவகுக்கும்; உணவுப் பற்றாக்குறையின் தீவிரப் பிடியில் சிக்கியுள்ள மக்களுக்கு உதவும் பணிகளை இந்தத் தாக்குதல் கடுமையாகப் பாதிக்கும்” என ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டர்ஸ் தெரிவித்திருக்கிறார்.

2023 அக்டோபர் 7 இல் இஸ்ரேல் மீது ஹமாஸ்நடத்திய தாக்குதலுக்கு இஸ்ரேல் பதில் தாக்குதலை இப்போதுவரை தொடர்ந்துவருகிறது. 200 நாள்களைக் கடந்தும் இருதரப்புக்கும் இடையே போர் தீவிரமாக நீடிக்கிறது. இப்போரில்இஸ்ரேல் தரப்பில் 1,170 பேர் பலியாகியுள்ளனர் என அந்நாட்டு அரசு குறிப்பிட்டுள்ளது. இஸ்ரேலைச் சேர்ந்த 128 பேர் ஹமாஸ் அமைப்பினரால் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் இறந்துவிட்டதாக இஸ்ரேல் கூறிவருகிறது. காஸாவில்இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 35,000க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். பெண்களும் குழந்தைகளுமே அதிகம் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், காஸாவின் தென் பகுதியில் உள்ள ரஃபா நகர் மீது ராணுவநடவடிக்கைகளை இஸ்ரேல் தீவிரப்படுத்திஉள்ளது. ரஃபாவிலிருந்து வெளியேறி, கடற்கரைப் பகுதியான அல் மகாஸிக்குச்(Al-Maghazi) செல்லுமாறு அங்குள்ள மக்களுக்கு இஸ்ரேல் அறிவுறுத்தியுள்ளது.

ரஃபா மீது தாக்குதல் ஏன்? - மே 5 அன்று, ரஃபாவுக்கு அருகே, ஹமாஸ் ஆயுதப் பிரிவினர் நடத்திய வான்வழித் தாக்குதலில் இஸ்ரேலின் நான்கு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து, ரஃபாவில் உள்ள ஹமாஸின் நிலைகளின்மீது தாக்குதல் தொடுக்க இஸ்ரேல் திட்டமிட்டது. ரஃபா மீதான தாக்குதலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட இஸ்ரேலின் நட்பு நாடுகள் பலவும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

வெளியேறும் பாலஸ்தீனர்கள்: இஸ்ரேல் படையெடுப்பு காரணமாக ரஃபாவில் வசிக்கும்பாலஸ்தீனர்கள் தங்கள் இருப்பிடங்களைவிட்டு வெளியேறத் தொடங்கியுள்ளனர். காஸா மீது இஸ்ரேல் படையினரின் கொடூரத் தாக்குதல் தொடங்கியதிலிருந்தே அங்கிருந்து இடம்பெயரும் மக்களை அரவணைக்கும் உயிர் நாடியாக ரஃபா இருந்துவந்தது.

10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தங்கியுள்ளனர். இந்நிலையில், இஸ்ரேலின் இந்நடவடிக்கை சொல்ல முடியாத துயரில் அம்மக்களை ஆழ்த்தியிருக்கிறது. ரஃபா பகுதி எகிப்தின் எல்லையில் அமைந்திருப்பதால் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐ.நா. உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகள் அளிக்கும் உணவு, மருந்து போன்ற நிவாரணப் பொருள்கள் ரஃபா வழியாக வந்தடைந்துகொண்டிருக்கின்றன.

இவ்வாறு பாலஸ்தீன மக்களுக்குச் சேவை மையமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் ரஃபாவின் மீதுதான் இஸ்ரேல் தற்போது தாக்குதலைத் தொடங்கியிருக்கிறது. ரஃபாவில் இஸ்ரேல் ராணுவம் குவிக்கப்பட்டிருப்பது ரத்த ஆறு ஓட வழிவகுத்துவிடும் என மனித உரிமை அமைப்புகள் பலவும் கவலை தெரிவித்துள்ளன.

மறுக்கும் இஸ்ரேல்: ரஃபா பகுதியை மனிதாபிமான உதவிகள் கொண்டுசெல்லப் பயன்படும் எல்லையாக இஸ்ரேல் பார்க்கவில்லை. மாறாக, பயங்கரவாத நோக்கங்களுக்கான மையமாகவே பார்க்கிறது. ரஃபாவை ஹமாஸின் கடைசிக் கோட்டை என்றே இஸ்ரேல் வரையறுக்கிறது.

“ரஃபாவில் அமைந்திருக்கிற ஹமாஸின் நிலைகளை அழித்தொழிக்காமல் ஹமாஸுக்கு எதிரான எங்கள் போர் முடிவடையாது” என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்திருக்கும் நிலையில், நிலைமை இன்னும் மோசமாகும் என்றே தெரிகிறது.

நட்பு நாடுகளுடன் விரிசல்: ஹமாஸ் மீதான தாக்குதலில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆயுதஉதவிகளை வழங்கிவருகிறது. இதன் காரணமாக சர்வதேச அரங்கில் அமெரிக்க அதிபர்ஜோ பைடன் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டிருக்கிறார்.

போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருள்களை அமெரிக்கா அனுப்பினாலும் இந்தப் போரில் அமெரிக்கா இரட்டை வேடம் போடுவதாகவே பரவலாக விமர்சிக்கப்பட்டது.

அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் மாணவர்கள், பேராசிரியர்கள் தீவிரப் போராட்டம் நடத்திவருகின்றனர். இச்சூழலில் ரஃபா மீதான தாக்குதல் விவகாரத்தில் அமெரிக்கா தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறது. “இஸ்ரேல் தன்னைத் தற்காத்துக்கொள்ள ஆயுதங்களை வழங்கத் தயாராக உள்ளோம்; ஆனால், எங்கள் ஆயுதங்கள் ஏற்கெனவே காஸா மக்களைக் கொன்றுவிட்டன. இனியும் மக்கள்மீது தாக்குதல் நடத்த இஸ்ரேலுக்கு ஆதரவு தர முடியாது” என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியிருக்கிறார்.

பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சர் டேவிட் கேமரூனும் ரஃபா மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு எதிர்ப்பைப் பதிவுசெய்திருக்கிறார். விமர்சனங்களைத் துளியும் பொருட்படுத்தாத இஸ்ரேல், “ரஃபா மீதான ராணுவ நடவடிக்கைகள் தொடரும். தேவைப்பட்டால் நாங்கள் தனித்தும் சண்டையிடுவோம்” எனப் பிடிவாதம் காட்டுகிறது.

தொடரும் பேச்சுவார்த்தை: போரை முடிவுக்குக் கொண்டுவர ஹமாஸ், இஸ்ரேல், அமெரிக்கா,கத்தார், எகிப்து பங்கேற்ற கெய்ரோ பேச்சுவார்த்தையில் மூன்று கட்டப் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. முதல் கட்டமாக, 40 நாள்களுக்குப் போர் நிறுத்தப்பட்டு, ஹமாஸ் வசம் இருக்கும் பிணைக் கைதிகளில் 33 பேரை விடுவிக்க வேண்டும்; இஸ்ரேலும் பாலஸ்தீனச் சிறைக் கைதிகளை விடுவிக்க வேண்டும்.

இரண்டாவது, போர் நிறுத்தம் மேலும் 42 நாள்களுக்கு நீடிக்கப்பட்டு, பிணைக் கைதிகள் அனைவரையும் ஹமாஸ் விடுவிக்க வேண்டும். இறுதியாக, உயிரிழந்த பிணைக் கைதிகளின் சடலங்களை ஹமாஸ் ஒப்படைக்க வேண்டும்; அதற்குப் பதிலாக நிரந்தரப் போர் நிறுத்தத்தை இஸ்ரேல் அறிவித்து, காஸாவிலிருந்து அதன் பாதுகாப்புப் படைகளைத் திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இப்பரிந்துரைகளை ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஏற்றுக்கொண்டார். ஆனால், பாதுகாப்புப் படைகள் வெளியேற்றம் உட்பட ஹமாஸின் இரண்டு கோரிக்கைகளை ஏற்க இஸ்ரேல் மறுத்துவிட்டது. பேச்சுவார்த்தை தொடர்கிறது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in