

பல ஆண்டுகளாக நீடித்துவரும் இஸ்ரேல் - பாலஸ்தீனப் பிரச்சினை இன்றைக்கு உச்சத்தை அடைந்திருக்கிறது. கடந்த அக்டோபர் 7ஆம் தேதி பாலஸ்தீன தீவிரவாத இயக்கமான ஹமாஸ், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி 1,300க்கும் அதிகமான இஸ்ரேலியர்களைக் கொன்ற சம்பவம்தான் இன்றைய சிக்கலைத் தொடங்கிவைத்தது.
போரில் யாரெல்லாம் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டுமோ அவர்கள்தான் மிகுதியாக காஸாவில் கொன்று குவிக்கப்பட்டிருக்கிறார்கள். காஸா மீதான தாக்குதலை இன்றுவரை தொடரும் இஸ்ரேல், இதுவரை 35,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களைக் கொன்று குவித்திருக்கிறது.
இதில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள், பெண்கள், முதியோர். அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட 2,000 பவுண்டு எடை கொண்ட குண்டுகள்காஸாவின் கட்டிடங்களைக் கிட்டத்தட்ட தரைமட்டமாக்கிவிட்டன. இது போன்ற குண்டுகள் இந்நூற்றாண்டில் குறைந்த அளவே பயன்படுத்தப்பட்டிருப்பதாகச் செய்திகள் கூறுகின்றன.
காஸாவில் அப்பாவி மக்களின் பாதுகாப்பிடங்களாகத் திகழ்ந்த அகதி முகாம்களும் மருத்துவமனைகளும் இஸ்ரேலின் குண்டுவீச்சுக்குத் தப்பவில்லை. சிகிச்சையில் இருந்த குழந்தைகள் உள்ளிட்ட ஏராளமான நோயாளிகள் கொல்லப்பட்டனர்.
சுடுகாடாக மாறிய காஸா: பாலஸ்தீனத்தில் காஸா என்ற ஒரு வசிப்பிடம் இப்போது இல்லை. அது சுடுகாடாக மாற்றப்பட்டுவிட்டது - எப்படி நாஸிக்களின் ஜெர்மனி யூத மக்களின் சுடுகாடாக மாற்றப்பட்டதோ அதேபோல.
ஹிரோஷிமாவில் போடப்பட்ட அணுகுண்டு ஆற்றலைவிடப் பல மடங்கு அழிவைத் தரும் சக்திவாய்ந்த குண்டுகள் காஸாவில் போடப்பட்டிருக்கின்றன. உலகின் முன்னணிப் பத்திரிகையாளர்களின் இருப்பிடங்கள் தேடித் தேடி அழிக்கப்பட்டிருக்கின்றன. காஸாவில் பசிப்பிணி போக்கிய World Central Kitchen என்னும் தொண்டு நிறுவனத்தின் வாகனங்கள் மீதும் குண்டு வீசித் தாக்கி அழித்திருக்கிறது இஸ்ரேல்.
அவரவர் நியாயங்கள் மட்டும் தொடர்ச்சியாகப் பேசப்படுகின்றன. பின்விளைவுகளைத் தெரிந்தே தீவிரவாதத் தாக்குதல் நடத்திய ஹமாஸ் தீவிரவாதிகள் ஒருபுறம்; அந்த அமைப்பை முழுவதும் ஒழிப்பதே தனது ஒரே குறிக்கோள் எனச் சொல்லும் இஸ்ரேல் மறுபுறம்.
இப்போது ஹமாஸ் பதுங்கியிருக்கும் காஸாவின் மற்றுமொரு முக்கியமான குடியிருப்பான ரஃபாவைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தத் தொடங்கிவிட்டது. கிட்டத்தட்ட 10 லட்சம் மக்கள் வசிக்கும் ரஃபாவில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல் பாலஸ்தீனியர்களுக்குப் பேரழிவாக முடியும்.
இஸ்ரேல் இழைக்கும் போர்க் குற்றம்: காஸாவின் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களும் பாலஸ்தீனர்களின் பெரும் உயிரிழப்பும் இஸ்ரேலின் போர்க் குற்றமாகக் கருதப்படும். “பாலஸ்தீனர்கள் மீதான இன அழிப்பாக இதைக் கொள்ள முடியாவிட்டாலும், இது மிகப்பெரும் போர்க் குற்றம் மட்டுமல்லாது, மனித குலத்துக்கு எதிரான குற்றமுமாகும்” எனப் பேரழிவு - இனஅழிப்பு ஆய்வுத் துறையைச் சேர்ந்த பிரௌன் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒமர் பார்டோவ் கூறுகிறார்.
ஆனால், இதே நிலை நீடித்தால் இப்போர்க் குற்றமானது பாலஸ்தீனர்களின் இன அழிப்பில்தான் போய் முடியும். இதைத் தடுத்துநிறுத்த நமக்கு இன்னமும் கால அவகாசம் உள்ளது எனவும் அவர் கூறுகிறார்.
அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸின் தாக்குதலுக்குப் பிறகு பேசிய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, “காஸா மக்கள் மிகப்பெரும் விலையைத் தர வேண்டியிருக்கும். இஸ்ரேலிய ராணுவப் படைகள் காஸாவின் மக்கள் நெருக்கம் மிகுந்த நகர்ப்பகுதிகளைத் தரைமட்டமாக்குவார்கள்” என்று பகிரங்கமாக அச்சுறுத்தினார். இவ்வளவு நாள்களுக்குப் பிறகும் தனது ஆணவப் போக்கிலிருந்து அவர் பின்வாங்கவில்லை.
பழைய ஏற்பாட்டுக் கதைகளை நினைவுகூர்ந்து அக்டோபர் 28ஆம் தேதி ஆற்றிய உரையில், “அமலேக்கியர்கள் இஸ்ரவேலர்களுக்கு என்ன செய்தார்கள், மாறாக அமலேக்கியர்கள் எப்படித் தோற்கடிக்கப்பட்டார்கள் என எந்த இஸ்ரேலியனும் மறக்கமாட்டான். அமலேக்கியர் ஒவ்வொருவரும் - ஆண், பெண், குழந்தைகள், விலங்குகள் என அனைவரும் அழிக்கப்பட வேண்டும்” எனப் பேசிய நெதன்யாகுவின் செயல்கள் எப்படி இருக்கும் என எவரும் சொல்லத் தேவையில்லை.
இஸ்ரேல் அதிகார வர்க்கத்தின் இனவெறி: அக்டோபர் 9ஆம் தேதி இஸ்ரேலின் பாதுகாப்புத் துறை அமைச்சர் யோவ் காலன்ட் இப்படிக் கூறினார்: “மனித விலங்குகளோடு இப்போது சண்டையிட்டுக் கொண்டிருக்கிறோம். அதற்குத் தகுந்த முறையில் நாம் செயல்படுவோம்” - மனித நாகரிகமற்ற இக்கருத்துகள் நமக்கு உணர்த்துவது பாலஸ்தீன இன அழிப்பை நோக்கியே இஸ்ரேல் பயணிக்கிறது என்பதைத்தான்.
இஸ்ரேலின் உயர் ராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் காஸன் ஏலியன், காஸாவில் அம்மக்களை நோக்கி அரபு மொழியில் இப்படிக் கூறுகிறார்: “மனித விலங்குகள் இப்படித்தான் நடத்தப்பட வேண்டும். மின்சாரம் கிடையாது. குடிநீர் கிடையாது. எங்கும் அழிவுதான். நரகத்தை மட்டுமே நீங்கள் யாசித்தீர்கள். இப்போது நரகம் உங்களுக்குக் கிடைத்திருக்கிறது.”
ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியான ஜியோரா ஐலாண்ட் ஓர் இஸ்ரேலிய நாளிதழில் இப்படி எழுதியிருக்கிறார்: ‘காஸாவை மனிதர்கள் வாழத் தகுதியற்ற இடமாக மாற்றுவதே இஸ்ரேலின் இப்போதைய இலக்கு. இஸ்ரேலுக்கு வேறு வழி ஏதும் இல்லை. மிகப்பெரும் மனிதப் பேரழிவை அங்கு ஏற்படுத்துவதன் மூலமே இக்குறிக்கோளை இஸ்ரேல் அடைய முடியும்’. அவரே வேறொரு கட்டுரையில் இப்படிக் கூறியிருக்கிறார்: ‘காஸாவில் இனி மனிதர்களின் நடமாட்டமே இருக்க முடியாது.’
இப்படியாகத்தான் இஸ்ரேலிய உயர் அதிகார வர்க்கத்தினர் பலரும் பாலஸ்தீன மக்களின் மீது தொடர்ச்சியாக வெறுப்பை உமிழ்ந்துவருகிறார்கள். அதனால்தான் பாலஸ்தீன மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் இன அழிப்பு வடிவத்தைப் பெற்றுவிடுமோ என்று அஞ்ச வேண்டியுள்ளது.
ஊசலாடும் உயிர்கள்: காஸா மீதான இஸ்ரேலியத் தாக்குதலை நிறுத்துவதற்கு ஐ.நா., உள்ளிட்ட சர்வதேசச் சமூகம் எடுத்துக்கொண்ட முயற்சிகள் தோல்வியையே தழுவியிருக்கின்றன. மிகப்பெரும் பேரழிவையும், பெரும் பஞ்சத்தையும் பாலஸ்தீன மக்கள் தினம்தினம் சந்தித்து வருகிறார்கள்.
சிலுவைப் போர்கள் பல நூறு ஆண்டுகளாக நடைபெற்றதை அறிவோம். குதிரைகளையும், வாள்களையும் கொண்டு போரிட்டவர்கள் அவர்கள்.நேர்மையானவர்களும்கூட. ஏனென்றால், பெண்களையும், குழந்தைகளையும், முதியோரையும் அவர்கள் கொன்றழிக்கவில்லை. ஒன்றிரண்டு விதிவிலக்குகள் இருந்திருக்கலாம்.
ஒன்று தெரியுமா? சிலுவைப் போரின் ஒரு காலக்கட்டத்தில் போரில் வென்ற ஓர் இஸ்லாமிய மன்னன், சிலுவைப் படை வீரர்களைப் பத்திரமாகத் தங்கள் நாட்டுக்குப் போக அனுமதித்தான். ஆனால், அவர்கள் மீண்டும் பெரும் படையுடன் வந்து தங்களுக்கு மன்னிப்பு வழங்கிய அதே மன்னனைத் துவம்சம் செய்த வரலாற்றுக் குறிப்புகளும் உண்டு.
நவீனப் போர் வரலாற்றில் எதிரிகளுக்கிடையே மன்னிப்புச் சம்பவங்கள் நடந்தது கிடையாது. ஆனால், நிறைய பேரங்கள் நடப்பதுண்டு. போரை நிறுத்தச் செய்வதற்கு இஸ்ரேலிடம் தொடர்ச்சியாக அமெரிக்கா, கத்தார், எகிப்து உள்ளிட்ட நாடுகள் பேசிவருகின்றன. ஆனாலும் காஸாவின் ரஃபா நகரின் மீது இஸ்ரேல் தாக்குதலைத் தொடுக்க ஆரம்பித்துவிட்டது. உலக நாடுகள் வேடிக்கை பார்க்க இப்போது 10 லட்சம் பாலஸ்தீனர்களின் உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கிறது.
- c.shanmughasundaram@gmail.com