Last Updated : 13 May, 2024 10:05 AM

 

Published : 13 May 2024 10:05 AM
Last Updated : 13 May 2024 10:05 AM

மக்களவை மகா யுத்தம்: ஒடிஷா சொல்லும் செய்தி என்ன?

இரண்டு மாதங்களுக்கு முன்பு, ஒடிஷாவின் ஜாஜ்பூரில் நடைபெற்ற கூட்டத்தில், ‘‘மக்களின் மனம் கவர்ந்த முதல்வர்’’ என்று நவீன் பட்நாயக்கைப் பாராட்டித் தள்ளிய பிரதமர் மோடி, இப்போது பிஜு ஜனதா தளம் அஸ்தமனமாகப் போகிறது என்று ஆரூடம் சொல்லிவருகிறார். இதைக் கேட்டுச் சிரிக்கும் நவீன், இது ஒரு பகல் கனவு என்று பகடி செய்கிறார்.

சென்ற மாதம் வரை பாஜகவும் பிஜு ஜனதா தளமும் கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிரதானப் போட்டியே இந்த இரு கட்சிகளுக்கும் இடையில்தான் என்பதே இன்றைய நிலவரம். மக்களவை, சட்டமன்றம் என இரண்டுக்கும் மே 13 (இன்று), மே 20, 25 மற்றும் ஜூன் 1 என நான்கு கட்டங்களாகத் தேர்தலைச் சந்திக்கும் ஒடிஷாவில் எப்படி இருக்கிறது தேர்தல் களம்?

பழைய நண்பர்கள்: 1997இல் ஜனதா தளத்திலிருந்து தனிக்கட்சியாக பிஜு ஜனதா தளம் கட்சி உருவானதில் பாஜகவின் பங்கு முக்கியமானது. 1998 முதல் 2009வரை பாஜக கூட்டணியில் பிஜு ஜனதா தளம் இருந்தது. வாஜ்பாய் அரசில் அமைச்சராகவும் (1998-2000) நவீன் பதவிவகித்திருக்கிறார்.

2009 இல் தொகுதிப் பங்கீடு விஷயத்தில் எழுந்த முரண்களால் கூட்டணி முறிந்தது. பல ஆண்டுகளாக பாஜகவுடன் கூட்டணியில் இல்லை என்றாலும், காஷ்மீரில் 370ஆவது சட்டக்கூறு நீக்கம், குடியுரிமைத் திருத்தச் சட்டம் எனப் பல முக்கிய மசோதாக்களுக்கு ஆதரவளித்தது, மோடியை அவ்வப்போது புகழ்வது என நவீனின் அரசியல் நகர்வுகள் சாதுரியமாகவே இருந்துவந்தன.

மறுபுறம், பிஜு ஜனதா தளத்திலிருந்து எம்எல்ஏ-க்கள், எம்.பி-க்கள் பாஜகவுக்குத் தாவிவருகின்றனர். பாஜகவிலிருந்தும் பிஜு ஜனதா தளத்துக்குப் பலர் சென்றிருக்கிறார்கள். இப்படி ஒரு விநோதமான உறவை இரு தரப்பும்பேணிவருகின்றன.

உண்மையில், பிஜு ஜனதா தளத்துடனான நட்புறவால் ஒடிஷாவில் தனித்த செல்வாக்கு பெறும் வாய்ப்பைப் பல ஆண்டுகளாக பாஜக இழந்திருந்தது. மென் இந்துத்துவப் போக்கை ஒரு தற்காப்பு ஆயுதமாக பிஜு ஜனதா தளம் கடைப்பிடிப்பதால், பாஜகவின் ‘வழக்கமான’ வியூகங்களும் இங்கு பெரிய அளவில் பலன் அளித்துவிடவில்லை.

24 ஆண்டுகளாக முதல்வராகப் பதவிவகித்துவரும் நவீன் இன்றுவரை ‘ஆட்சிக்கு எதிரான மனநிலை’ (anti incumbency) உருவாகாத அளவுக்குச் சிறப்பாகச் செயல்பட்டுவருகிறார். ஒடிஷாவை வறுமையின் பிடியிலிருந்தும், இயற்கைச் சீற்றங்களின் பாதிப்புகளிலிருந்தும் மீட்டெடுத்தது, கல்வி, சுகாதாரக்கட்டமைப்பு, விளையாட்டுத் துறையை மேம்படுத்தியது என மகத்தான பணிகளைச் செய்திருக்கிறார். எனினும்,சிங்கமானாலும் முதுமை தட்டினால் சிக்கல்தானே!

பாஜகவின் புதிய ஆயுதம்: நவீனுக்கு இப்போது வயது 77. திருமணமாகாதவர். நவீனின் அண்ணன் பிரேமின் மகன் அருண் பட்நாயக் - மகள் காயத்ரி ஆகியோருக்குக் கட்சியில் முக்கியத்துவம் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில், நவீனின் அரசியல் வாரிசு வி.கே.பாண்டியன்தான் எனப் பேசப்படுகிறது. முதல்வரின் தனிச் செயலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்தவரும், 2023 நவம்பரில் பிஜு ஜனதா தளத்தில் சேர்ந்தவருமான பாண்டியன் ஐஏஎஸ் தான் கட்சிக்குள்ளும் வெளியிலும் நவீனின் பிரதிநிதியாகச் செயல்படுகிறார்.

வேறு எந்த வகையிலும் நவீனை எதிர்கொள்ள முடியாத பாஜக, தமிழ்நாட்டைச் சேர்ந்த ‘வெளியா’ளான பாண்டியனின் இந்த வளர்ச்சியை வைத்தே எதிர் வியூகம் வகுத்துவருகிறது. ஒடிஷாவின் சம்பல்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், “முதல்வர் நவீன் பட்நாயக்கை அமைச்சர்கள், உயரதிகாரிகள் போன்றோராலேயே சந்திக்க முடிவதில்லை.

சில மாதங்களுக்கு முன்னர் அரசு அதிகாரியாக இருந்த பாண்டியன், தற்போது பிஜு ஜனதா தளம் கட்சியையே தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்” என்று சாடுகிறார். ‘ஒடியா அஸ்மிதா’ (ஒடிஷாவின் சுயமரியாதை), ஒடிய மொழிப் பாரம்பரியம் போன்றவை பாண்டியனின் வருகையால் ஆபத்துக்கு உள்ளாகியிருப்பதாக பாஜக விமர்சிக்கிறது.

பாஜகவுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தையிலும் பாண்டியனுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்தது. டெல்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், தனியாகக் களம் காணப்போவதாக பாஜக அறிவித்துவிட்டது. சட்டமன்றத் தேர்தலில் பிஜு ஜனதா தளமும், மக்களவைத் தேர்தலில் பாஜகவும் அதிக இடங்களை எதிர்பார்த்ததாலேயே கூட்டணி முயற்சி தோல்வியில் முடிந்தது என்கிறார்கள்.

கூட்டணி சாத்தியமாகாமல் போனதற்குப் பாண்டியன்தான் காரணம் என்கிற கோபம் பாஜகவினரிடம் உண்டு. தங்கள் கட்சி மீண்டும் ஆட்சியமைக்க பாஜகவின் துணை தேவையில்லை என்று பாண்டியன் பட்டவர்த்தனமாகப் பேசுகிறார். 2014, 2019 தேர்தல்களில் நவீனின் பிரச்சார வியூகங்களை வகுப்பதில் பங்களித்த பாண்டியன், தங்கள் கட்சியில் பிளவை ஏற்படுத்த பாஜக முயற்சிப்பதாகக் குற்றம்சாட்டுகிறார். ஆனால், பாஜகவுக்குத் தாவிய பலர், பாண்டியனின் ஆதிக்கத்தை விரும்பாமல்தான் இந்த முடிவை எடுத்ததாகப் பேசிவருகிறார்கள்.

கள நிலவரம்: மோடி அலை வீசிய 2014 மக்களவைத் தேர்தலிலேயே ஒடிஷாவில் மொத்தம் உள்ள 21 இடங்களில், 20இல் பிஜு ஜனதா தளம் வென்றது. பாஜகவுக்கு ஒரே ஒரு இடம் கிடைத்தது. எனினும், 2019 தேர்தலில் பாஜக 8 இடங்களில் வென்று காட்டியது (காங்கிரஸ் ஒரே ஒரு இடத்தில் வென்றது. மூன்றாவது இடத்தில் இருக்கும் காங்கிரஸ்,இந்தத் தேர்தலில் பாஜகவைப் பின்னுக்குத் தள்ள முயல்கிறது). 2019 சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் உள்ள 147 தொகுதிகளில் 23இல் பாஜக வென்றது.

பாஜகவின் வாக்கு சதவீதமும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்தது. 2017 உள்ளாட்சித் தேர்தலில் மொத்தம் உள்ள 846 இடங்களில், 297ஐக் கைப்பற்றிஆளுங்கட்சிக்கு அதிர்ச்சியளித்தது. ஆனால், 2022 உள்ளாட்சித் தேர்தலில் 766 இடங்களில் வென்று பிஜு ஜனதா தளம் பதிலடி கொடுத்தது. விடாக்கண்டனான பாஜக இந்த முறை மக்களவையில் தங்கள் வெற்றித் தொகுதிகளை அதிகரிக்கவும், ஒடிஷாவில் ஆட்சியைப் பிடிக்கவும் திட்டமிடுகிறது.

“நான் இங்கு வந்ததே ஜூன் 10ஆம் தேதி பாஜக முதல்வர் பதவியேற்கும் விழாவில் பங்கேற்க உங்களுக்கெல்லாம் அழைப்பு விடுப்பதற்காகத்தான்” என்று நவீனின் சொந்த மாவட்டமான கஞ்சமில் உள்ள பெர்ஹாம்பூரில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் மோடி அதீத நம்பிக்கையுடன் பேசினார். மத்திய அரசு அனுப்பும் நிதியைச் சரியாகப் பயன்படுத்தாமல் ஊழல் செய்வதாகவும் நவீனின் அரசை அவர் சாடிவருகிறார்.

ஒடிஷாவின் பழங்குடிச் சமூகத்தைச் சேர்ந்த திரெளபதி முர்முவைக் குடியரசுத் தலைவராக்கியதைத் தங்கள் சாதனைகளில் ஒன்றாகமுன்னிறுத்தும் மோடி, முர்முவுக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தியதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கும் குட்டு வைக்கிறார். அதேவேளையில், முதல்வர் வேட்பாளராக இதுவரை யாரையும் பாஜக முன்னிறுத்தவில்லை.

நடுத்தர வர்க்கத்தினர், இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் ஆகியோரைக் கவரும் வகையிலான வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை பிஜு ஜனதா தளம் வெளியிட்டிருக்கிறது. 100 யூனிட் வரை இலவச மின்சாரம், அடுத்த ஐந்து ஆண்டுகளில் 2 லட்சம் பேருக்கு அரசுப் பணி என்பன உள்ளிட்டவை முக்கியமானவை.

பாஜக 3.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு என நலத்திட்டங்களை வாக்குறுதிகளாகத் தந்தாலும், ராமர் கோயிலுக்கு இலவசப் பயணம் என வழக்கமான ஆன்மிக அஸ்திரங்களையும் வீசுகிறது.

எல்லாவற்றையும் தாண்டி, தேர்தல் முடிவுகளைப் பொறுத்து பாஜகவுடன் தேர்தலுக்குப் பிறகான கூட்டணிக்கும் பிஜு ஜனதா தளம் தயாராக இருப்பதாக ஒரு பேச்சு உண்டு. இதுதொடர்பான கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த பாண்டியன், “தேர்தல் நடந்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில், ஊகங்களின் அடிப்படையில் எதையும் சொல்ல முடியாது” என்று கூறியிருக்கிறார். ஆக, ஒடிஷாவில் நிறைய திருப்பங்களை எதிர்பார்க்கலாம்!

- தொடர்புக்கு: chandramohan.v@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x