

ஹாருகி முரகாமி உலகம் முழுவதும் பிரபலமாக அறியப்படும் ஜப்பானிய எழுத்தாளர். நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் என்று இவரது படைப்புகள் 50க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.
பூனைகளுடன் பேசும் முதியவர், இருவருக்கு மட்டும் புலப்படும் இரண்டு நிலவுகளைக் கொண்ட உலகம், காகத்தின் அசரீரியைப் பின்பற்றிச் செல்லும் இளைஞன், வானத்திலிருந்து பெய்யும் மீன் மழை, ஒரு நாள் நடுநிசிக் கனவில் சந்திக்கும் அதிர்ச்சிக்குப் பிறகு என்றென்றைக்கும் பேச்சுத் திறனை இழக்கும் சிறுவன், கனவில்நிகழும் உடலுறவில் நிஜத்தில் கருத்தரித்தல், ஒரு வாக்கியத்தையும் அடுத்த வாக்கியத்தையும் தொடர்புபடுத்தி வாசிக்க இயலாத டிஸ்லெக்ஸியா என்னும் வாசிப்புக்குறைபாடுடைய பெண் எழுதும் அபாயகரமான பின்னணி கொண்ட நாவல், தண்ணீரின் நெருக்கத்தை வைத்து ஆரூடம் கூறும் இளம்பெண், பெயர் அடையாளத்தைத் திருடிச் செல்லும் குரங்கு, புத்தகங்களைப் படித்தவரின் மூளையை உண்ணும் கிழவர், தொடர்ந்து பதினேழு நாள்களாகத் தூங்காமல் எவ்வித நோய் அறிகுறியுமின்றி விழிப்பில் இருக்கும் பெண் என்று முரகாமியின் புனைவுகளில் மையக்கதாபாத்திரத்தின் விதியைத் தீர்மானிப்பதில் விசித்திரமான குணாம்சங்கள் கொண்ட துணைக் கதாபாத்திரங்களும் சூழலும்முக்கியப் பங்காற்றுகின்றன.
கருந்துளைப் பாதை
‘தி விண்ட் அப் பேர்ட் க்ரானிக்கல்’ (The Wind up Bird Chronicle) நாவலின் மையக் கதாபாத்திரமான தோரூ கதாவின் (Toru Okada) மனைவி, காரணம் எதையும் சொல்லாமலே ஒரு நாள் காணாமல் போகிறாள். மனைவியைத் தேடுவது ஒருபுறம் என்றால், அவள் தன்னை விட்டுச் சென்றதற்கான காரணங்கள் என்னவாக இருக்கும் என்று தன் கடந்த காலத்தில் கவனிக்கத் தவறிய, மனைவியின் நுட்பமான எதிர்வினைகளை மீளாய்வு செய்ய அவன் தேர்வுசெய்யும் இடம் பயன்பாட்டில் இல்லாத நீரற்ற ஆழமான கிணறு. நிஜவுலகிற்கும் அருவமான அதன் இணைவுலகிற்கும் பாலமாக இருக்கிறது அந்தக் கிணறு. முரகாமியின் நாவல்களில் நனவோடை உத்தியில் கதையின் பெரும்பகுதியைக் கொண்ட நாவல் இது. முரகாமியின் அபாரமான கற்பனை ஆற்றல் தன்னிகரற்ற வீச்சுடன் வெளிப்படுவதும் இந்த நாவலில்தான். ‘காஃப்கா கடற்கரையில்’ நாவலில் ஒன்றுக்கொன்று நேரடியான தொடர்புகளற்ற இரண்டு இணை உலகப் பயணங்கள் ஒரு கட்டத்தில் ஒன்றிணைகின்றன.
முரகாமி ஒரு பரிசோதனை முயற்சியில் தன் எழுத்துநடை மீது படிந்துள்ள முத்திரையை அகற்ற முழுக்க முழுக்க யதார்த்தபாணியில் எழுதிய காதல் கதை ‘நோர்வீஜியன் வுட்', அவருக்கு முதன்முதலாக உலகளாவிய கவனத்தைப் பெற்றுத்தந்தது. ஆனால், முரகாமிக்கே உரித்தான அவரது தனித்துவ பாணியில் எழுதப்பட்ட காதல் கதை என்று ‘1க்யூ84’ (1Q84) நாவலைச் சொல்லலாம். முரகாமியின் ‘மேக்னம் ஒபஸ்’ என்கிற புகழ்பெற்ற நாவலில் ஒரு நெரிசல் மிகுந்த நெடுஞ்சாலை டிராபிக்கில் இருந்து வெளியேற அயமாமே (Aomame) தேர்வுசெய்யும் இன்னும் முழுதாகக் கட்டி முடிக்கப்படாத சாலையோரச் சுழற்படிக்கட்டு ஒரு கருந்துளைப் பாதையைப் போல் அவளை இன்னொரு உலகுக்குக் கூட்டிச் செல்கிறது.
சுழல் பாதைகளின் உலகம்
பின்புலம் சரியாகத் தெரியாத டிஸ்லெக்ஸியா குறைபாடு கொண்ட ஓர் இளம்பெண் எழுதும் நாவலொன்றை அவருக்குப் பதில் எழுதிக்கொடுக்கும் (Ghost writing) ரகசிய ஒப்பந்தத்தில் இணையும் டெங்கோ (Tengo) தன்னைச் சுற்றியுள்ள உலகம்தான் அவ்வாறு எழுதப்பட்ட நாவலின் அம்சங்களைக் கொண்டிருப்பதைக் கவனிக்கிறான். கதை நிகழும் வருடம் 1984. டெங்கோ, அயமாமே ஆகிய இருவரின் நிஜ உலக வாழ்கைப் பாதைகளும் ‘1க்யூ84’ இல் (1984இன் பிரதி உலகம்) சங்கமிக்கின்றன.
‘கில்லிங் கமண்டடோர்’ (Killing Commendatore) நாவலில் மனிதர்களை மாதிரியாகக் கொண்டு அவர்களின் உருவப்படங்களை வரைந்து தரும் பெயர் குறிப்பிடப்படாத ஓவியன்தான் மையக் கதாபாத்திரம். பயன்பாட்டில் இல்லாத நண்பனின் வீட்டில் தனிமையில் வசிக்க நேரும் அவன், அப்போது வரை யார் கண்ணுக்கும் படாமல் ரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருக்கும் ஓவியம் ஒன்றைப் பார்க்கிறான். அது அவனுடைய நண்பனின் தந்தையால் வரையப்பட்டது. இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் நாஸி ஆக்கிரமிப்பு ஜெர்மனியில் ஒரு ஓவியரிடம் ஓவியம் பயின்ற அவர் ஜப்பான் திரும்பி வந்து பல ஓவியங்களை வரைந்துள்ளார். ஆனால், மற்ற எல்லா ஓவியங்களிலும் இல்லாத கவனத்தைக் கவரும் சிறப்பம்சம் இந்த ஓவியத்தில் இருக்கிறது. முழுக்க முழுக்க மேலைநாட்டு பாதிப்பில் இருக்கும் அவருடைய ஏனைய எல்லா ஓவியங்களையும் போல் அல்லாது, குறிப்பிட்ட இந்த ஓவியம் மட்டும் அசலான ஜப்பானிய மரபில் வரையப்பட்டிருக்கிறது. ஓவியத்தில் பொதிந்திருக்கும் மர்மங்களை அறிய அந்த ஓவியன் மேற்கொள்ளும் முயற்சி அவனை இட்டுச்செல்லும் சுழற்பாதைகள் சூழ்ந்த பயணமே ஒட்டுமொத்த நாவல்.
‘ஸ்லீப்’ (Sleep) சிறுகதையில் பதினேழு நாள்களாகத் தூக்கம் இல்லாமல் இருக்கும் ஒரு பெண் தனது கடந்த கால நினைவுகளையும், நிகழ்காலச் செயல்பாடுகளையும் விவரித்துச்செல்கிறார். பெண்ணின் தூக்கமின்மை பற்றிஅவரது கணவனோ, மகனோ தெரிந்து வைத்திருப்பதில்லை. திருமண வாழ்க்கை அந்தப் பெண்ணின் பதின் பருவ ஆசைகளை மறக்கடிக்கச் செய்திருப்பதை மெல்லமெல்ல உணர்ந்து, அதற்குக் காரணம் கணவனின் நடத்தையே என்பதைப் புரிந்துகொள்கிறார். அந்த அறிதல், அவரது இருப்பின் அர்த்தமற்ற தன்மையைத் தொந்தரவுசெய்ய ஆரம்பிக்கிறது. ஆரம்பத்தில் இந்தத்தூக்கமின்மையைப் பற்றிப் பயந்துகொண்டிருந்த அப்பெண், ஒரு நிலையில் தனதுதனித்தன்மையின் அடையாளமே இதுதான் என்று அதைப் பெருமிதத்துடன் ஏற்கிறார்.
ஓட்டத்தின் தூண்டல்
முரகாமியின் நாவல்களை வாசிக்க விரும்பும் வாசகர் முதலில் சில சிறுகதைகள் வழியாகப் போதுமான பரிச்சயம் செய்துகொள்ள விரும்பினால், அவசியம் வாசித்துப் பார்க்கவேண்டிய சிறுகதை ‘விநோத நூலகம்’. எழுதுவதற்கான அகத்தூண்டல், தனக்கு ஓடுவதன் மூலம் கிடைக்கிறது என்று சொல்லும்முரகாமி ஒரு தீவிரமான மாரத்தான் ஓட்ட வீரரும்கூட. தனது எழுத்துமுறைக்கும் மாரத்தான் ஓட்டப்பயிற்சிக்கும் இடையேயான தொடர்புகளை விவரித்து எழுதியுள்ள கட்டுரைத்தொகுப்பான 'வாட் ஐ டாக் வென் ஐ டாக் அபவுட் ரன்னிங்’ (What I Talk About When I Talk About Running) முரகாமியின் புனைவுகளையே படித்திராதவர்கள் மத்தியிலும் பரவலாகக் கவனம் பெற்ற நூல். ஆறு வருடஇடைவெளிக்குப் பிறகு இவரது பதினைந்தாவது நாவலான The City And It's Uncertain Walls ஆங்கிலப் பதிப்பு வருகிற நவம்பரில் வெளியாகிறது.
அசாதாரணச் சூழலுக்குள் அகப்பட்டுக்கொண்ட ஒரு சாதாரணமானவன் எதிர்கொள்ளும் புதிரான நிகழ்வுகளும் அவற்றினூடாக அவன் மேற்கொள்ளும் சாகசங்களும் முரகாமியின் புனைவுலகப் பின்னணியில் பிரதானமானவை. வெகுஜன வாசகர்கள் முதல் தீவிர இலக்கிய வாசகர்கள் வரை முரகாமியின் படைப்புகள் பரவலான கவனத்தைப் பெற்றதற்கு இந்த அம்சம் முக்கியமான காரணம்.
- ரஞ்சித்குமார்,
எழுத்தாளர்