

ஒரு காலத்தில் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் போன்ற பணிகளுக்கான அகில இந்தியக் குடிமைப் பணித் தேர்வு மீதான ஈர்ப்பு தமிழ்நாட்டு இளைஞர்கள் மத்தியில் அபரிமிதமாக இருந்தது. அதிக எண்ணிக்கையில் குடிமைப் பணி அதிகாரிகளை உருவாக்கும் மாநிலமாகத் தமிழ்நாடு 1960களில் இருந்தது. ஆனால், இன்றைய கள நிலவரமோ அதற்கு நேர் எதிராக இருக்கிறது.
பின்தங்கிவிட்ட தமிழகம்: 2023 இல் இந்தியா முழுவதும் 13 லட்சம் பேர் குடிமைப் பணித் தேர்வு எழுதினர். அவர்களில் 1,016 பேர்தான் தேர்ச்சி பெற்றனர்; இவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் 45 பேர். தரவரிசைப் பட்டியலில் முதல் 100 பேரில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் 5 பேர்தான். 2022இல் முதல் 100 பேரில் தமிழர் ஒருவர்கூட இல்லை.
தமிழ்நாட்டிலிருந்து குடிமைப் பணியில் சேருவோர் எண்ணிக்கை 1980களிலிருந்தே இறங்குவரிசைக்கு மாறிவிட்டதாகக் கூறுகிறார், 1964இல் ஐஏஎஸ் பணியில் சேர்ந்த எம்.ஜி.தேவசகாயம். தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்பத் துறை அறிமுகமான பின்னர் குடிமைப் பணிகளில் சேர்வதை லட்சியமாகக் கொண்டிருந்தவர்களில் பெரும்பான்மையினர், கணினி அறிவியல் படித்து வெளிநாட்டில் பணிபுரிவதைத் தேர்வுசெய்தனர். அந்தப் போக்கு கடந்த 30 ஆண்டுகளில் தீவிரமடைந்துவிட்டது. வட மாநிலங்களில் இத்தகைய மனத்தடை இல்லை.
முதன்மைத் தேர்வின் சவால்: மத்தியக் குடிமைப் பணித் தேர்வு ஆணையம் (UPSC) நடத்தும் குடிமைப் பணித் தேர்வு, உலகின் கடினமான தேர்வுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அதேவேளையில், முதன்மைத் தேர்வில் மானுடவியல், சமூக அறிவியல், பன்னாட்டு உறவுகள், புவியியல் போன்றவற்றை விருப்பப் பாடங்களாகத் தேர்ந்தெடுப்பது வெற்றிவாய்ப்புக்கு வழிவகுக்கும். 2017-2021 காலக்கட்டத்தில் முதன்மைத் தேர்வில் வெற்றிபெற்ற பலர், இவற்றையே தேர்வுசெய்திருந்தனர்.
தமிழ்நாட்டு இளைஞர்கள், இத்தகைய துறைகளை இளங்கலையிலோ, முதுகலையிலோ தேர்வுசெய்வது இன்றைக்கு அரிதாகிவிட்டது. முதனிலைத் தேர்வில் விருப்பப் பாடத்தைத் தேர்வுசெய்யும் முறை, முன்பு இருந்தது. ஒருவர் உயர் கல்வியில் படித்த அனுபவத்தை வைத்தே இத்தேர்வில் வெற்றிபெற முடிந்தது. தற்போது முதனிலைத் தேர்வில் விருப்பப் பாடம் இல்லை. இது அனைத்து மாநிலத்தினருக்குமே முதல் கட்டத்தைத் தாண்டுவதற்கான தடையாக உள்ளது.
மொழிப் பிரச்சினை: எழுத்துத் தேர்வுகளில் இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டுமே வினாக்கள் கேட்கப்படுகின்றன. அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது பட்டியலில் உள்ள 22 மொழிகளில் ஏதேனும் ஒன்றில் விடை எழுதலாம் எனினும், தேர்வு எழுதுபவர் ஆங்கிலத்தில் மிகுந்த தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே வினாக்களைப் புரிந்துகொள்ள இயலும்.
இந்தி பேசும் மாநிலத்தினருக்கு இந்தத் தடை இல்லை. அவர்களுக்கு நன்கு பரிச்சயமான மொழியில் வினாக்கள் இருப்பதும் விடையையும் அதே மொழியில் எழுத முடிவதும் தேர்வின் தீவிரத்தைக் குறைத்துவிடுகின்றன.
மதுரையைச் சேர்ந்த எஸ்.பாலமுருகன், இந்தப் பிரச்சினையை முன்வைத்து 2023இல் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்தார். இதற்கான தீர்வைப் பரிசீலிக்கும்படி உயர் நீதிமன்றம் தேர்வாணையத்துக்கு உத்தரவிட்டது. எனினும், தீர்வு கிடைக்கவில்லை.
கற்பிதங்கள்: குடிமைப் பணித் தேர்வு எழுதுபவருக்கு புவியில் உள்ள அனைத்தையும் குறித்து அடிப்படை நிலையில் தெரிந்திருக்க வேண்டும்; ஒரு நாளைக்கு 15 மணி நேரம் படிக்க வேண்டியிருக்கும் என்றெல்லாம் கற்பிதங்கள் உண்டு. ஆனால், தேர்வர்கள் பாடத்திட்டத்திலிருந்து விலகிச் செல்லாமல் இருப்பதுதான் முக்கியம். பல முறை முயன்ற பிறகு தேர்ச்சி பெற்றோரும் உண்டு.
முதல் முயற்சியிலேயே வென்றவர்களும் உண்டு. பயிற்சி மையங்களில் சேராமல் வெற்றிபெற்றவர்களும் இருக்கின்றனர். ஒவ்வொருவருக்கும் வெற்றிக்கான காரணம் வேறுபடும். அளவுக்கு மீறிய தகவல்களும் இலக்கின்றி வாங்கிக் குவிக்கப்படும் நூல்களும் தேர்வர்களுக்குச் சுமையாக ஆகிவிடுகின்றன.
“தேர்வர்களுக்கு வழிகாட்டல்தான் முதன்மையான தேவை. பயிற்சி மையத்தை அந்த அளவுக்கு மட்டும் அவர்கள் பயன்படுத்திக்கொண்டால் போதுமானது. சில மையங்கள், தேவையற்ற தகவல்களை அளித்து, அவர்களைக் குழம்ப வைத்துவிடுகின்றன” என்கிறார் மூன்று முறை நேர்முகத் தேர்வு வரை முன்னேறிய ஒருவர்.
தேர்ச்சி பெறவில்லை எனில்? - குடிமைப் பணித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை எனில், அதுவரை செலவழிக்கப்பட்ட காலமும் உழைப்பும் வீண்தான். ஆனால், வட மாநில இளைஞர்களுக்கு இதில் சாதகமான சூழல் உள்ளது. இந்தி தொடர்பு மொழியாக உள்ள மற்ற மாநிலங்களில் உள்ள அரசுப் பணித் தேர்வுகளை எழுதி, அவர்கள் வேலை பெற முடியும். அவர்களுக்கு இருக்கும் உத்தரவாதம், தமிழ் இளைஞர்களுக்கு இல்லை.
இங்கு டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் மட்டும்தான் அவர்களுக்கு இருக்கிற ஒரே வாய்ப்பு. இறுதிக்கட்டம் வரை சென்று தேர்ச்சி பெற இயலாதவர்கள், பொதுத் துறை நிறுவனங்களில் பணியமர்த்தப்படும் வாய்ப்புகள் மத்திய அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ளன. விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தேசிய அனல் மின் கழகம் போன்றவையும் இவர்களைப் பணியமர்த்துவதில் ஆர்வம் காட்டுகின்றன.
மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு நலத்திட்டங்களில் உதவும் வகையில் ‘LAMP’ திட்டம் போன்றவற்றில் இத்தகைய இளைஞர்கள் தற்காலிகமாகப் பணியமர்த்தப்படுகின்றனர். மத்திய அரசு உதவித்தொகை வழங்குகிறது. தமிழ்நாட்டிலும் இதுபோல உதவித்தொகை வழங்கப்பட்டாலும், மாற்று வேலைவாய்ப்புகளை அதிகரிக்க வேண்டிய தேவை உள்ளது. 234 சட்டமன்றத் தொகுதிகளில் இவர்களுக்குத் தற்காலிகப் பணியை அரசு வழங்கலாம்.
அரசியல் குறுக்கீடு: தமிழ்நாட்டிலிருந்து செல்லும் இளைஞர்கள், நேர்முகத் தேர்வில் திட்டமிட்டு வடிகட்டப்படுவதாகவும் தமிழகப் போட்டித் தேர்வுப் பயிற்சியாளர்கள் சிலரிடம் அதிருப்தி காணப்படுகிறது. “குடிமைப் பணியாளர் தேர்வு ஆணையத்தில் என்ன நடக்கிறது என்றே மக்களுக்குத் தெரியாது.
பணிக்குத் தேர்வானவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் முசௌரியில் உள்ள அகாடமி, ஒருகாலத்தில் அதிகாரிகளுக்கும் பயிற்சி பெறுவோருக்கும் இடையே ஆரோக்கியமான விவாதங்கள் நடக்கும் இடமாக இருந்தது. நாங்கள் அங்கு பயிற்சி பெற்றபோது, வகுப்பில் உயர்அதிகாரிகளிடம் எதிர்க்கருத்துகளை முன்வைத்திருக்கிறோம். ஆனால், அங்கு இப்போது சூழல் மாறிவிட்டதாகவும், பயிற்சியின் தரம் குறைந்துவிட்டதாகவும்கூறப்படுகிறது” என்கிறார் எம்.ஜி.தேவசகாயம்.
நேர்முகத் தேர்வுகளில் பங்குபெற்ற சிலரின் அனுபவங்கள் இக்கருத்தை உறுதிப்படுத்தினாலும், இன்னொரு பக்கத்தையும் உணர்த்துகின்றன. “தமிழகத்திலிருந்து செல்பவர்களுக்கு இந்தி தெரியாத நிலை, சில சந்தர்ப்பங்களில் நேர்முகத் தேர்வில் பாதகத்தை ஏற்படுத்துவது உண்டு.
ஐந்து, ஆறு பேர் சேர்ந்து நடத்தும் நேர்காணலில் மொத்தக் குழுவினரும் பாரபட்சத்துடன் நடந்துகொள்ள வாய்ப்பு இல்லை. நேர்முகத் தேர்வுக்கான வினாக்கள் ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு தலைப்பில் இருக்கும். யாரும் அதைக் கணிக்கவே முடியாது. எந்தக் குழு யாரை நேர்காணல் செய்யப்போகிறது என்பதையெல்லாம் தனிப்பட்ட ஒருவர் தீர்மானிக்க முடியாது.
பாடத்திட்டம் ஆண்டுதோறும் மாற்றியமைக்கப்படுகிறது. முன்பு தேர்வு எழுதியவர்களின் கருத்துகள் பெறப்பட்டுத் தேர்வு நடைமுறைகளில் மாற்றங்களும் செய்யப்படுகின்றன. இவையெல்லாம் தேர்வு ஆணையம் பாரபட்சம் இன்றிச் செயல்படுவதை உறுதிப்படுத்துகிற நடவடிக்கைகள்” என அவர்கள் நம்பிக்கை அளிக்கின்றனர்.
அரசுகளின் கடமை: வெளியூர்களிலிருந்து சென்னைக்குவந்து, ‘அம்மா உணவக’ங்களில் சாப்பிட்டுக் குடிமைப் பணித் தேர்வுக்குத் தயாராகும் ஏழ்மையான இளைஞர்களும் போட்டியில் உள்ளனர். தமிழ்நாடு அரசு செயல்படுத்திவரும் ‘நான் முதல்வன்’ திட்டம் இவர்களின் பொருளாதார நெருக்கடிகளைக் குறைக்கிறது.
தகுதித்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படும் 1,000 இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.7,500 உதவித்தொகையை அரசு வழங்குகிறது. இந்த உதவி அவர்களுக்கு 10 மாதங்களுக்கு அளிக்கப்படும். www.civilservicecoching.com என்கிற இணையதளம்வழி இவர்களுக்கு வழிகாட்டலும் வழங்கப்படுகிறது.
குடிமைப் பணித் தேர்வர்களின் தேவையை உணர்ந்துள்ள தமிழ்நாடு அரசு, அடிப்படை மாற்றங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். குடிமைப் பணித் தேர்வு முறை லட்சக்கணக்கான இளைஞர்களின் காலத்தையும் உழைப்பையும் வீணடிப்பதாக உள்ளது எனப் பிரதமருக்கான ஆலோசனைக் குழுவில் உள்ள பொருளாதார வல்லுநர் சஞ்சீவ் சன்யால் அண்மையில் கூறியிருந்தார். இத்தகைய விமர்சனங்களில் உள்ள நியாயமான கருத்துகளை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.
- தொடர்புக்கு: anandchelliah@hindutamil.co.in