கலைவெளிப் பயணம் - 4: கலை ஆன்மிகத்தில் சுடரும் ஓவியர்

கலைவெளிப் பயணம் - 4: கலை ஆன்மிகத்தில் சுடரும் ஓவியர்
Updated on
3 min read

கருத்துலகின் அடர்த்தியோடும், புதிர்த்தன்மையின் வசீகரத்தோடும், பிரத்தியேகமான அழகியல் நுட்பங்களோடும் அரூபப் பின்புலத்தில் உருவ ஓவியங்களை உருவாக்கும் டக்ளஸ், இன்று உலக அளவில் அறியப்பட்ட பெருமிதத்திற்குரிய நம் ஓவியர். நவீன மனிதனின் அடிப்படைப் பிரச்சினைகளில் உழன்று, அதனூடாகப் பெற்ற பெறுமதியான எண்ண ஓட்டங்களைத் தன் ஊடகத்தின் வழி கலை ஆற்றலோடு வெளிப்படுத்தும் படைப்புச் சக்தி கொண்டவர். இவருடைய ஆத்மார்த்தமான கலை நம்பிக்கையும், கலைவழி ஆன்மிகத் தேடலும் பிறப்பிக்கும் படைப்புகள் நம் மீட்சிக்கான உருவகங்கள்.

ஓவியக் கலை சார்ந்த வாழ்க்கையை மட்டுமே தன்னுடைய ஒரே தேர்வாகக் கொண்டு 1970ஆம் ஆண்டு, தன்னுடைய 19ஆவது வயதில், சென்னை ஓவியக் கல்லூரியில் டக்ளஸ் மாணவராகச் சேர்ந்தார். அக்காலத்தில் கலைக் கல்லூரியின் பயிற்சிச் சூழல், பரவசமளிக்கக்கூடியதாக இருந்தது. மிகச் சிறந்த கலை ஆளுமைகள் தங்கள் கலை வாழ்வின் மிகச் சிறந்த படைப்புகளை ஓர் எழுச்சியோடு உருவாக்கிக்கொண்டிருந்த காலம் அது. மிகுந்த ஆர்வத்தோடு கலை வாழ்வைத் தொடங்கிய டக்ளஸுக்கு இச்சூழலும் பின்னணியும் பெரும் பேறாக அமைந்தன. கல்லூரி வளாகம், சோழமண்டலம் ஆகிய இரண்டு இடங்களிலும் இருந்த படைப்பாளிகளிடமிருந்து இவர் அறிந்துகொண்டும் உருவாகிக்கொண்டும் இருந்தார்.

கலை, இலக்கியம், தத்துவம் குறித்து இளமையிலிருந்தே இவர் கொண்டிருந்த வாசிப்புத் தேட்டமும், உலக சினிமா, அரங்கக் கலை எனக் கலையின் சகல திசைகளிலும் கொண்டிருந்த ஈடுபாடுகளும் இவருடைய ஆளுமை வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தன. அதேவேளை, இவரைப் பெரிதும் கவர்ந்த ஓவியர் கே.ராமானுஜம். ஒரு பித்தனுக்குரிய தகிப்போடு படைப்பாக்கங்களில் ஈடுபட்டிருந்த ராமானுஜத்தைக் கல்லூரி வளாகத்திலும், பின்னர் சோழமண்டலத்திலும் தொடர்ந்து இவர் மிக உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருந்தார்.

இளம் வயதிலேயே தன் வாழ்வைத் துண்டித்துக்கொண்ட கே.ராமானுஜத்துடன் டக்ளஸ் கொண்டிருந்த உறவு, குறுகிய காலமே நீடித்தது என்றாலும், அதற்குள் அவரைத் தீவிர கதியில் சரணடைந்திருந்தார். ‘வாழ்வதற்கான ஒரே பாதை ஓவியம் மட்டுமே’ என்று சங்கல்பம் கொண்டிருந்த டக்ளஸ், வாழ்வதற்கான ஒரே பாதையாக ஓவியத்தை மட்டுமே கொண்டிருந்த ராமானுஜத்தைக் கலை ஞான குருவாகக் கொண்டதில் வியப்பில்லை. கோடுகளுக்குப் பேச்சும் சுவாசமும் இருப்பதை ராமானுஜத்திடமிருந்துதான் தெரிந்துகொண்டேன் என்கிறார் டக்ளஸ்.

வாழ்வு நிலைகளின் வண்ணங்கள்: டக்ளஸின் இளமைக் காலப் படைப்புகள் ராமானுஜத்தின் தாக்கத்தைக் கொண்டவை. தன் கலை ஞான குருவான கே.ராமானுஜத்திடமிருந்து கிரகித்துக்கொண்ட நுட்பமாக இழையூட்டப்பட்ட கோடுகளால் அமைந்தவை. ஓவியப் படைப்பை உருவாக்கும் விதத்திலும், ஓவிய வெளியை அணுகும் விதத்திலும் அவருடைய நுட்பங்களைக் கைக்கொள்ள முயன்றுள்ளார் டக்ளஸ். கனவுலகின் மூட்டத்தைக் கொண்டுவருவதற்காக வரைவதற்கு முன் தாளைத் தண்ணீரில் நனைத்துவிட்டு, அதைக் காய வைத்து, லேசான ஈரப் பதத்தில் அது இருக்கும்போது வரையத் தொடங்குவார் ராமானுஜம். விந்தையுலகை அற்புதமாக்கும் அவருடைய இத்தகைய வெளிப்பாடுகள் வியப்பூட்டும் தனித்துவம் கொண்டவை. எனில், ஒரு கட்டத்தில் தாளை நன்றாகக் கசக்கிவிட்டுப் பின்னர் அதில் தன் படைப்புகளை உருவாக்கினார் டக்ளஸ். ராமானுஜத்தின் கனவுலக விந்தைப் புனைவு ஈரப்பதமானது. நவீனத்துவ வாழ்வின் கடும் சிக்கல்களும் சிந்தனைகளும் கொண்ட டக்ளஸின் புதிர் உலகம் கசங்கலானது.

டக்ளஸின் ஆரம்ப கால ஓவியங்கள் பெரும்பாலும் தலைப்பிடப்படாதவை. இவை அரூபப் பின்புலத்திலான உருவ ஓவியங்கள். இருப்புக்கும் இறப்புக்கும் இடையேயான வாழ்வின் நிலைகளைச் செம்மண் நிறம், சாம்பல் வண்ணங்களால் புனைந்தார். ஓவியவெளியில் தான் வெளிப்படுத்த விழையும் இழைகள், தொனிகளை வசப்படுத்துவதற்காக மணல், சாம்பலையும் வண்ணங்களோடு சேர்த்துக்கொண்டார்.

கேள்விகளுடன் உருவான படைப்பு: இதனையடுத்து, தன் கலைவெளியை விஸ்தரித்துக்கொள்ள விழையும் வேட்கையோடு ஜெர்மனி சென்ற டக்ளஸ், புதியதோர் சூழலில் புதிய பரிசோதனைகளுக்குத் தன்னை ஆட்படுத்திக்கொண்டார். அதுவரை அவர் உருவாக்கிய உருவ ஓவியங்களிலிருந்து தன்னைத் துண்டித்துக்கொண்டு புதியதோர் பாணியைக் கைக்கொண்டார். ஓவியத்தின் சம்பிரதாய உபாயங்களான முக்கோணம், வட்டம், சதுரம், செவ்வகம், செங்குத்து, குறுக்குச்சட்டம், படுக்கைக்கோடு ஆகியவற்றினூடாக ஓவியவெளியை அப்போது அவர் வடிவமைத்தார். ‘‘வெறுமையான மனநிலையில், உணர்வுகளின் எவ்வித உந்துதலும் அற்று இவற்றை அவர் வரைந்திருக்க வேண்டும்’’ என்கிறார் விமர்சகர் ஜோசப் ஜேம்ஸ்.

ஏதோ ஒரு மனத்தூண்டுதலில் ஒன்பது ஆண்டு கால ஜெர்மனி வாசத்திலிருந்து விடுபட்டு, மீண்டும் சோழமண்டலத்தை வந்தடைந்தார் டக்ளஸ். இதற்குப் பின், நவீன மனிதன் பற்றியும் வாழ்க்கை பற்றியுமான புரிதல்களோடும் கேள்விகளோடும் அவர் உருவாக்கிய படைப்புகளே இன்று அறியப்படும் டக்ளஸ்.

மன எழுச்சியோடு மீண்டும் செயல்படத் தொடங்கினார். இத்தகைய ஓவிய இயக்கத்தின் தொடர்ச்சியாக அவருக்கான ஒரு பிரத்தியேக உருவம் உயிர்பெற்று நிலைபெறத் தொடங்கியது. சாந்தமாகவும் புதிர்த்தன்மையோடும் ரெம்பிராண்டின் தத்துவவாதி இருளுக்கும் ஒளிக்கும் இடையே நிற்பதைப் போல, இவருடைய உருவப் படிமம் பிறப்புக்கும் இறப்புக்கும் இடையேயான வாழ்வெளியில் துயர் சுமந்தும் வலிகள் நிறைந்தும் வெகு சாந்தமாகவும் புதிர்த்தன்மையோடும் இருந்துகொண்டிருக்கிறது.

படிமங்களின் இசைமை: மனித உடல், கர்ப்பப் பை சிசு, பறவைகள், மீன்கள், நெளியும் பாம்புகள், நெருப்பு, நீர், ஏணிகள், வண்ணத்துப்பூச்சிகள், உள்ளீடற்ற குழிவுகள், ஆலயமணிகள், தயையோடும் கருணையோடும் ஊட்டப்படும் நீர், கண்ணாடிகள், குழந்தை, முட்டை, மண்டையோடு, எழுத்துகள், வார்த்தைகள் எனப் பல்வேறு படிமங்களால் இவருடைய படைப்புலகம் அமைகிறது. பூமியும் சுழற்சியும், பிறப்பும் இறப்பும், வாழ்வின் இடையறாத இயக்கம் என்றாக விரிந்தும் பரந்தும் அடர்ந்தும் அமையும் ஓர் உலகம். ஓர் ஓவியத்துக்கு அனுசரணையான, அந்த உலகை அடர்த்தியாகவும் வாழ்க்கையின் பின்னங்கள் கூடியதாகவும் ஆக்கக்கூடிய பல்வேறு படிமக்கூறுகளை, ஓர் இசைமையோடு இணைத்துக்கொண்டே படைப்பின் பூரணத்துவத்தைக் கண்டடைகிறார். தான் அணுகும் சாதனத்தின் சாத்தியங்கள் குறித்த ஞானத்தோடு, அதைத் தன் அழகியல் நுட்பங்களுக்கேற்ப அமைத்துக்கொள்ள டக்ளஸுக்குக் கூடிவருகிறது. இவர் உருவாக்கும் வட்ட வடிவிலான ஓவியங்கள், அமராவதி சிற்பங்களின் சுழற்சி இயக்கத்தையும் வடிவழகையும் கொண்டிருக்கின்றன.

சமீப காலங்களில் டக்ளஸ் உருவாக்கிய சில ஓவிய வரிசைகளும் மிக முக்கியமானவை. அவை நவீனக் குறுங்காவியங்கள். ‘உடைந்த கண்ணாடி’, ‘விடுபட்ட அழைப்புகள்’, ‘கண் தெரியாக் கவிஞனும் வண்ணத்துப்பூச்சிகளும்’ போன்ற ஓவிய வரிசைகள் பிரமிப்பூட்டுவை. காவியத்தன்மையும் நவீனத்துவமும் கலந்து உறவாடுபவை. இந்தியாவின் பல ஓவியக் கூடங்களில் இவருடைய படைப்புகள் இடம்பெற்றிருக்கின்றன. ஆர்வம் உள்ளவர்கள் இணையத்திலும் தேடிப் பார்க்கலாம். ஒரு பெறுமதியான, புதிய கலைவெளி அனுபவமாக அது நிச்சயம் அமையும். 

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in