அமெரிக்க மாணவர்களின் அறச்சீற்றம்!

அமெரிக்க மாணவர்களின் அறச்சீற்றம்!
Updated on
3 min read

2023 அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, காஸாவின்மீது இஸ்ரேல் தொடங்கிய போர் இன்று வரை தொடர்கிறது. இதில் கொல்லப்பட்ட பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 35,000-ஐக்கடந்துவிட்டது.

இஸ்ரேலை எதிர்க்கும் ஈரான் உள்ளிட்ட நாடுகள் இதற்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கிய பின்னரும், தொடர்ந்து இந்தப் போரை வெளிநாடுகளிலும் விரிவுபடுத்தவே இஸ்ரேல் முயல்கிறது. இது பிரதேசம் தழுவிய போராகவிரிந்துவிடாமல் இஸ்ரேலைத் தடுப்பதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முயல வேண்டியிருக்கிறது. இந்நிலையில், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் நடைபெறும் போராட்டங்கள் மிகுந்த கவனம் பெறுகின்றன.

வல்லரசுகளின் கபடம்: சர்வதேச உறவுகள் துறைப் பேராசிரியரும் பாலஸ்தீன விடுதலைப் போராட்டம் பற்றிய ஆய்வு நூலை எழுதியவருமான சோம்தீப் சென், சர்வதேசச் சட்டங்கள், போர் நடத்தை விதிகள் ஆகியவற்றை இஸ்ரேல் தொடர்ந்து மீறிவருவதாகவும், ஒரு ‘அடாவடி தேச’த்துக்கான (rogue state) அனைத்து குணாம் சங்களையும் அது பெற்றிருப்பதாகவும் கூறுகிறார். 21ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற அனைத்து மோதல்களையும்விட இந்தப் போரில் ஒருநாள் இறப்பு வீதம் பன்மடங்கு அதிகமாக இருப்பதாகவும், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இது நாசகாரமான போர் என்றும் ஐ.நா. அவை குறிப்பிடுகிறது.

ஆயினும், மத்தியக் கிழக்கில் தங்களுடைய நலன்களைப் பாதுகாப்பதற்கான தளமாக இஸ்ரேலைக்கருதும் மேற்கத்திய நாடுகள் (குறிப்பாக அமெரிக்கா) தொடர்ந்து அந்நாட்டுக்குப் பக்கபலமாக இருக்கின்றன.ராணுவ - நிதி உதவிகளையும் வழங்கிக்கொண்டிருக்கின்றன. சமீபத்திய நிதி நல்கையாக 26 பில்லியன் டாலர்களை இஸ்ரேலுக்கு வழங்கியிருக்கிறது அமெரிக்கா.

மாணவர்களின் மனசாட்சி: முடிவில்லாது தொடர்ந்துகொண்டிருக்கும் இன அழித்தொழிப்பில் தங்களது நாடுகள் பங்குவகிப்பதைக் கண்டு கொதித்தெழுந்த அமெரிக்கர்களும் இன்ன பிற ஐரோப்பிய நாட்டு மக்களும் போருக்கு எதிரான பேரணிகளையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்திவருகின்றனர்.

போராட்டங்களை முன்னின்று நடத்தியதால் அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் ‘பாலஸ்தீன நீதிக்கான மாணவர்’ என்ற அமைப்பைச் சேர்ந்த மாணவர்களும் ‘அமைதிக்கான யூதர்களின் குரல்’ என்ற ஜியோனிசத்தை எதிர்க்கும் யூத மதத்தைச் சேர்ந்த மாணவர்களும் பல்கலைக்கழகத்தினால் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தனர்.

இதன் நீட்சியாக, ஏப்ரல் 17 அன்று கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்துக்குள் கூடாரங்கள் அமைத்து ‘காஸாவுக்கான ஆதரவு முகாமிடல்’ என்று பெயரிட்டுப் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். அப்போராட்டத்தைக் கலைக்க முனைந்த பல்கலைக்கழகம், நியூ யார்க் காவல் துறையைக் கொண்டு அம்மாணவர்களைக் கைது செய்ய வைத்ததுதான் இவ்வகைப் போராட்டங்கள் அமெரிக்கா தொடங்கி கனடா, ஐரோப்பிய உயர் கல்வி வளாகங்களில் இப்போது பற்றிப் படர வழிவகை செய்திருக்கிறது.

வியட்நாம் போருக்கு எதிராக 1968 இல் நடைபெற்ற மாணவர் போராட்டத்தின்போது, கொலம்பியா பல்கலைக்கழக நிர்வாகம் ஏராளமான மாணவர்களைக் கைதுசெய்ய வைத்தது. ஏறத்தாழ அதேபோன்ற நிலை தற்போது ஏற்பட்டிருக்கிறது.

மாணவர்களின் கோரிக்கைகள்: பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகப் போராடும் அமெரிக்கர்கள், இஸ்ரேலுக்குஅமெரிக்கா நிதி வழங்குவதை எதிர்க்கின்றனர். அதேபோல், போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மாணவர்கள் தத்தமது கல்வி நிலையங்கள் இஸ்ரேலுடன் கொண்டிருக்கும் பொருளாதாரரீதியிலான பிணைப்புகளை, குறிப்பாக ஆயுதத் தளவாடங்கள் உற்பத்தியில் இப்பல்கலைக்கழகங்கள் சார்ந்துமுதலீடுகள் செய்யப்படுவதைக் கடுமையாக எதிர்க்கின்றனர்.

மேலும், இந்தப் பல்கலைக்கழகங்கள் இஸ்ரேலில் என்னென்ன முதலீடுகள் செய்திருக்கின்றன, இஸ்ரேலைச் சேர்ந்த நன்கொடைகள், முதலீடுகள் என்னென்ன இப்பல்கலைக்கழகங்களுக்கு வந்திருக்கின்றன என்பது குறித்த வெளிப்படையான அறிவிப்பையும் மாணவர்கள் கோருகிறார்கள்.

நிறவெறி தேசமாக இருந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக, முதலீட்டைத் திரும்பப்பெறும் (Divestment) கோரிக்கை 1980களில் உலகம் முழுக்க வலுவடைந்தது. விளைவாக, அந்நாடு பொருளாதார-கலாச்சாரத் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு, இறுதியாக இனவொதுக்கல் அமைப்பு (apartheid system) ஒழிக்கப்பட்டது.

அவ்வாறு காஸாவிலும் பாலஸ்தீனத்திலும் இனவொதுக்கல் முறையையும் இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகளையும் கையாளுகின்ற இஸ்ரேலிய அரசு பொருளாதார - கலாச்சாரரீதியிலான தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படும் வகையில் அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை இந்த மாணவர் இயக்கங்கள் முன்வைக்கின்றன.

தென் ஆப்ரிக்காவில் நிலவிய இனவொதுக்கல் முறையை எவ்வாறு சர்வதேசச் சமூகம், மானுடத்துக்கு நேர்ந்த அவலமாகவும் அறவீழ்ச்சியாகவும் கண்டு அதை ஒழிக்க முனைந்ததோ அவ்வாறே இஸ்ரேலின் குடியேற்றக் காலனியத்தையும் இனப்படுகொலையையும் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று இப்போராட்ட இயக்கம் கோருகிறது.

புலமைத்துவ அழிப்பு: இந்தியாவையோ இன்ன பிற நாடுகளையோ போலல்லாது ஒரு பிரதேசத்தில் வாழ்ந்த மக்கள் கூட்டத்தையும் நாகரிகத்தையும் வாழ்க்கை முறையையும் அழித்துவிட்டு, அந்நிலத்தை மட்டும் வரித்துக்கொண்டு ஆக்கிரமித்த காலனியவாதிகள் தங்களது குடியேற்றங்களையும், இறுதியாகத் தங்களுக்கு மட்டுமேயான ஓர் அரசமைப்பையும் உருவாக்குவதே குடியேற்றக் காலனியம் (Settler colonialism) என்று அழைக்கப்படுகிறது.

செவ்விந்தியர்களையும் அபாரிஜீன்களையும் அழித்துவிட்டு உருவான அமெரிக்காவையும் ஆஸ்திரேலியாவையும் குடியேற்றக் காலனியத்துக்கு உதாரணமாகச் சொல்லலாம். அத்தகையதொரு குடியேற்றக் காலனிய நாடாகவே இஸ்ரேலையும் இம்மாணவர்களும் பெரும்பாலான அறிவுஜீவிகளும் நோக்குகிறார்கள்.

இதனுடன்கூட கல்வி நிலையங்களையும் கலைஞர்களையும் திட்டமிட்டு இலக்காக்கும் இஸ்ரேலின் நடவடிக்கையும் அறிவுத் துறையில் ஈடுபட்டிருக்கும் மாணவர்களை மிகவும் பாதித்திருப்பதைக் காண முடிகிறது. போரில் கொல்லப்பட்ட பாலஸ்தீன அறிஞர்கள், கலைஞர்களின் பெயர்கள் பட்டங்களில் எழுதப்பட்டு, சில அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் மார்ச் மாதம் தொங்கவிடப்பட்டன.

இவ்வாறு கல்வி-பண்பாட்டுப் பரவலுக்கான உள்கட்டமைப்புகளை அழிப்பதையும் அத்துறைக்குப் பங்களிப்பவர்கள் கொல்லப்படுவதையும் இப்போராட்ட இயக்கங்கள் புலமைத்துவ அழிப்பு (scholasticide) என்பதாகச் சுட்டுகின்றன.

இத்தகைய மாபாதகத்தில் ஈடுபடும் இஸ்ரேலை, கல்விக்காகவும் அறிவுச் செழிப்புக்காகவும் பாடுபடுவதாகக் கூறும் பல்கலைக்கழகங்கள் ஆதரித்து நிற்பதோ அல்லது அந்நாட்டுடன் தங்களுக்குள்ள உறவுகள் பற்றித் தங்களது மாணவர்களுக்குத் தெரியாது மறைப்பதோ அநீதி என்றும் இவர்கள் கூறுகின்றனர்.

ஒருபக்கம் அறிவுப் பெருக்கத்துக்குப் பங்களிப்பதாகக் கூறிவிட்டு, இன்னொரு பக்கம் அதன் அழித்தொழிப்புக்குப் பங்களிப்பது தன்முரணானது என்றும் சாடுகின்றனர்.

மாணவர்களின் தீர்க்கம்: இந்தியா போன்ற நாடுகளில் இல்லாத அளவு, அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் மாணவர் போராட்டங்கள் போன்றவற்றுக்கு அதிகச் சுதந்திரம் வழங்கினாலும், கூடாரம் அடித்துத் தங்கி ஒரு குறிப்பிட்ட பகுதியை ஆக்கிரமித்துக்கொள்வதற்கு எதிராக இப்பல்கலைக்கழகங்கள் சட்டப்படியான கைது நடவடிக்கைகளை எடுக்க முடியும்.

ஆனால், கண்முன்னே ஓர் இனப்படுகொலை நடந்துகொண்டிருப்பதையும் அதில் தாங்கள் சார்ந்திருக்கும் நிறுவனங்கள் பங்குபெறுவதையும் காணும்போது, எல்லாம் சுபம் என்று வழக்கமான பணிகளைக் கவனித்துக்கொண்டிருக்க முடியாது என்பதே போராடும் மாணவர்களின் தீர்க்கமான முடிவு.

போராடும் மாணவர்களில் ஒரு பகுதியினர் கைதுநடவடிக்கை மூலம் காவல் துறையால் எச்சரிக்கப்பட்டாலும் கலைந்துசெல்லக் கூடாது என்று உறுதியாக இருக்கிறார்கள். இத்தகைய மாணவர்களே இந்தப் போராட்டம் நிலைபெறுவதற்கான மைய விசையாகச் செயல்படுகிறார்கள்.

இவர்கள் கைது செய்யப்படுவதோ அதற்காக முயற்சிகள் எடுக்கப்படுவதோ, போராட்டத்துக்கு ஆதரவான மாணவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து போராட்டம் மையப்படுத்துதலை இழந்து பரந்துபட்டதாக மாறுவதற்கு வித்திடுகிறது.

இவ்வாறு அமெரிக்காவின் அறிவுப் பணியில் ஈடுபடும் இளம் தலைமுறை, இஸ்ரேலின் இனவொதுக்கல் குடியேற்றக் காலனியத்துக்கு எதிராகத் திரும்பியிருப்பதைப் பொதுக் கருத்து-பண்பாட்டுத் தளத்தில் தனக்கு ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய சிக்கல் என்று இஸ்ரேல் கருதுகிறது. அதனால்தான் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் நடைபெறும் போராட்டங்கள் எல்லாம் யூத இனவெறுப்பைப் பரப்புவதாகவும் அதனால் அவற்றை ஒடுக்க வேண்டும் எனவும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வலிந்து பேசியிருக்கிறார்.

அமெரிக்க மாணவர் சமூகம் ஒரு வரலாற்று அநீதிக்கு எதிராகத் தீவிர உறுதியோடு களத்தில் மீண்டும் ஒரு முறை இறங்கியிருக்கிறது, நீதியிலும் விடுதலையிலும் நம்பிக்கை கொண்டவர்கள் அனைவருக்கும் அவர்களது கரத்தை வலுப்படுத்தும் கடப்பாடு உண்டு.

- தொடர்புக்கு: asironly@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in