

மானுடத்தின் உன்னதங்களையும் கீழ்மை களையும் இலக்கியத்தின் வழியாகக் கடத்திய முற்போக்குப் படைப்பாளி என்று மட்டும் எழுத்தாளர் ஜெயகாந்தனைச் சுருக்கிவிட முடியாது. பன்முகப் பரிமாணங்கள் கொண்ட கலைஞர் அவர். இடதுசாரிச் சிந்தனையைத் தனது படைப்புகளிலும், அதில் ஆன்மாவாகத் தமிழரின் அறத்தையும் பொதிந்து வைத்தவர். தாம் நேசித்த தத்துவம், கலாச்சாரக் கால மாற்றங்களின் முன்னால் இடறித் தேங்கி நின்றபோது, அதையும் உதறித் தள்ளித் தன்னைப் புதுப்பித்துக்கொண்ட இந்த நூற்றாண்டின் சிறந்த சிந்தனையாளர். படைப்பு சார்ந்த அரசியல்வாதியாக அவரது பாணி, எவ்விதப் பிரச்சாரமும் இல்லாத இலக்கியச் செழுமை கொண்டது. முதலில்இடதுசாரி அரசியல் மீதும், பின்னர் காங்கிரஸ் இயக்கத்திலும் ஈடுபாடுகொண்டிருந்த அவருடன் ஓர் ஆத்ம நண்பனாகநெருங்கிப் பழகிய 45 ஆண்டுகள் மறக்க முடியாதவை.
எனது விமர்சனம்
ரஷ்யக் கலாச்சார மையம் 52 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை ஆழ்வார்பேட்டையில் அப்போதைய தமிழ்நாட்டின் ஆளுநர் கே.கே.ஷாவால் திறக்கப்பட்டது. அந்தத் திறப்பு விழாவில், ‘இந்திய - சோவியத் கலாச்சாரக் கழக'த்தின் (இஸ்கஸ்) துணைத் தலைவராக இருந்த ஜெயகாந்தன் சிறப்புவிருந்தினர்களில் ஒருவர். அந்த விழாவுக்கு 10 வயதுச் சிறுவனாக எனது தந்தையுடன் சென்றிருந்தேன். அப்போதுதான் அந்தக் கம்பீர எழுத்தாளுமையை முதன்முதலில் பார்த்தேன். பின்னர், 20 வயது இளைஞனாக அவரது புகழ்பெற்ற அலுவலகமான, சென்னை தேனாம்பேட்டை ராமசாமி தெருவில் அமைந்திருந்த கீற்று வேய்ந்த ‘மட’த்தில் சந்தித்தேன். அவரது அலுவலகம் ‘மடம்’ என்று மதிப்புக் கலந்த எள்ளலுடன் அழைக்கப்பட்டது. அந்த மடத்துக்கு என்னை அழைத்துக்கொண்டு போனவர் ஜெயகாந்தனின் நண்பரான சம்பத். ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்தைத் தொடர்ந்துமீண்டும் பீம்சிங் இயக்க, ஜெயகாந்தன் திரைக்கதையும் பாடல்களும் எழுதிய படம் ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’.சென்னை சாந்தி திரையரங்கில் அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வந்தபோது, சம்பத்தைத் திரையரங்கில் சந்தித்தேன். அவர் “என்னிடம் படம் எப்படியிருக்கிறது?” என்று கேட்டார். நான், “என்னங்க படம் இது? சாப்பிடுறாங்க... பேசுறாங்க... தூங்குறாங்க... திரும்பவும் சாப்பிடுறாங்க... பேசுறாங்க... தூங்குறாங்க...” என்றேன். எனது கருத்தைக் கேட்டுத் துணுக்குற்ற அவர், “நாளை ஜெயகாந்தன் மடத்துக்குநீங்க வந்தே ஆகணும்; இப்போ என்னிடம் சொன்னதை அவர் முன்னால் சொல்லணும்” என்றார். நானும் “சரி...” என்றேன்.
ஜெயகாந்தனின் பல படைப்புகளை அப்போது வாசித்திருந்ததால் அவரைச் சந்திக்க வேண்டும் என்பது என் விருப்பமாக இருந்தது. அடுத்த நாள், மடத்துக்குள் முதல் முறையாகக் காலடி எடுத்துவைத்த என்னை அறிமுகப்படுத்திய சம்பத், படம் குறித்த எனது விமர்சனத்தையும் அவரிடம் சொன்னார். அதைக் கேட்டுச் சலனப்படாத ஜெயகாந்தன், “அன்றாட வாழ்க்கையில் இதையெல்லாம் நீ செய்வதில்லையா?” என்றார். நான் வாயடைத்து நின்றேன்.
எம்.ஜி.ஆரின் தொலைபேசி
‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ படம் குறித்து இன்னொரு சம்பவம். அந்தப் படம் வெளியாகியிருந்தபோது அன்றைய முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். படத்தைப் பார்த்துவிட்டு, ஜெயகாந்தனைத் தொலைபேசியில் அழைத்து, “கல்யாணி கதாபாத்திரம் நோயுடன் போராடும் காட்சிகள், எனது மனைவி சதானந்தவதியின் வலி மிகுந்த நாள்களை நினைவுபடுத்திவிட்டது. இந்த நேரம் வரை என்னால் கண்ணீரை நிறுத்த முடியவில்லை” என்று கலங்கிய குரலில் சொன்னார்.
சோவியத் ஒன்றியம் உடைந்த பிறகு, ‘இந்திய - ரஷ்யக் கலாச்சார நட்புறவுக் கழக’த்தை நிறுவிய ஜெயகாந்தன், அதன் நிறுவனத் தலைவராக இறுதிவரை செயல்பட்டவர். நான் செயலாளராக இருந்தேன். இதே அமைப்பு முன்பு ‘இஸ்கஸ்’ ஆக இருந்தபோது, “அரசியல் காரணங்களுக்காகக் காமராஜரை இதுவரை அழைக்காமல் இருந்தது தவறு” என்றவர், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த காமராஜரை அழைத்துவந்து, ரஷ்யக் கலாச்சார மையத்தில் மாபெரும் விழா எடுத்தார். அந்த விழாவில் ‘ஒரு இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள்’ என்கிற தனது நூலை அவரை வெளியிடவைத்தார்.
அதன் பிறகு, “மு.கருணாநிதியை அழைத்து விழா நடத்த வேண்டும். அதற்குரிய தகுதி ‘தாய்’ காவியத்தின் வழியே அவருக்கு இருக்கிறது” என்றார். அவர்தான் என்னை கருணாநிதியிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினார். இளையராஜா உள்ளிட்ட மாபெரும் ஆளுமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் ஜெயகாந்தன்தான். நாங்கள் நடத்திய பாராட்டு விழாவில் மு.கருணாநிதி பேசும்போது “எனது கோபாலபுரம் வீட்டிலிருந்து கூப்பிட்டால் கேட்கிற தூரத்தில் இருக்கும் ரஷ்ய மையத்துக்கு 40 ஆண்டுகளாக என்னை ஏன் அழைக்கவில்லை என்று தெரியவில்லை. ஜெயகாந்தன் வலிய அழைத்ததால் வந்துவிட்டேன். அவர் இங்கே பேசும்போது, நான் எழுதிய எழுத்துகள் எதையும் படித்ததில்லை; இந்த விழாவுக்கு முன்பாக ‘தாய்’ காவியத்தை இன்றைக்குத்தான் படித்ததாகக் குறிப்பிட்டார். அந்தக் காவியம் வெளிவந்து ஐந்து பதிப்புகள் கண்டுவிட்டன. அதற்கு முன்னுரை எழுதியவர்கள் பொதுவுடைமைத் தலைவர்களான நல்லகண்ணுவும் சங்கரய்யாவும். தாய் காவியத்தை ஜெயகாந்தன் படித்ததால், நான் இன்றைக்கு மோதிரக் கையால் குட்டு வாங்கியிருக்கிறேன்” என்று பேசினார். கலையுலகிலும் பத்திரிகை உலகிலும் இலக்கிய உலகிலும் அரசியலிலும் சாதித்த கலைஞர் ஜெயகாந்தனுக்குச் சூட்டிய வைரக் கிரீடம் இது.
முதன்முதலில் தமிழ் சினிமாவின் முன்னோடி இயக்குநர் கே.சுப்ரமணியம் வீட்டில் சோவியத் நூலகம் அமைக்கப்பட்டபோது, அதில் அலுவலக உதவியாளராகப் பணிபுரிந்தவர், ஒருசில சிறுகதைகளை எழுதியிருந்த ஜெயகாந்தன் என்கிற இளைஞர். இன்றைய தலைமுறை தெரிந்துகொள்ள வேண்டிய தகவல். ரஷ்ய இலக்கியம் அவரது பார்வையை விசாலப்படுத்தியது. டால்ஸ்டாயின் ‘அன்னா கரீனினா’ நாவலை க.சந்தானம் மொழிபெயர்த்தபோது, 20 வயதுஇளைஞராக இருந்த ஜெயகாந்தன் அதற்குப் பிழை திருத்தம் செய்தார். அவரது பல படைப்புகள் ரஷ்ய மொழியில் பெயர்க்கப்பட்டு அங்கே பாடமாக வைக்கப்பட்டுள்ளது மட்டுமல்ல, இன்றைய நவீன ரஷ்யா ‘ஆர்டர் ஆஃப் ஃபிரெண்ட்ஷிப்’ என்கிற மிக உயரிய விருதையும் ஜெயகாந்தனுக்கு புடின் அரசு வழங்கிக் கௌரவம் செய்திருக்கிறது.
- ப.தங்கப்பன்
இந்திய - ரஷ்யக் கலாச்சார நட்புறவுக் கழகத்தின் பொதுச் செயலாளர்
தொடர்புக்கு: russiathangappan@gmail.com