

எழுத்தாளர் கு.அழகிரிசாமியின் சிறந்த கதைகளுள் ஒன்று ‘திரிபுரம்’ (1949). பசியின் தீவிரத்தைப் பேசும் சிறுகதை இது. பஞ்சத்தின் காரணமாகச் செத்துப்போன தன் கணவனைப் புதைத்துவிட்டுத் தன் மகள் வெங்கட்டம்மாவை அழைத்துக்கொண்டு சென்னைக்கு வருகிறாள் நரசம்மா. சென்னையில் கிடைக்கும் கழிப்பறைகளைத் தூய்மை செய்யும் பணிகளைச் செய்ய மனமில்லாமல், விருதுநகருக்கு வருகின்றனர். கணவன் பசியில் இறந்து போனதை வெளியே சொல்லக் கூச்சப்பட்டுக் காலராவில் இறந்துபோனதாகச் சொல்கிறார் நரசம்மா.
பிச்சையெடுக்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். புழு அரித்த ஒரு சொத்தை வெள்ளரிக்காயில் ஒட்டியிருந்த புழுதியை மகளுக்குத் தெரியாமல் ஊதி ஊதித் தின்கிறார். பழைய மான அவமானங்கள் நரசம்மா முன் நொறுங்கி விழுகின்றன. தனக்கென்று சொந்தமாக ஒரு புதிய மரபை ஏற்படுத்திக்கொள்ள முனைகிறாள். அந்தப் புதிய மரபு தன் மகளையே இரவில் இரண்டு ஆண்களிடம் ஒப்படைத்து, பத்து ரூபாயும் ஒரு பழைய புடவையும் சம்பாதிக்கிறது.
கு.அழகிரிசாமி இந்தக் கதைக்குத் ‘திரிபுரம்’ என்று பெயரிட்டிருக்கிறார். இது சிவபெருமான் குறித்த தொன்மம். ‘திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுள்’, ‘முப்புரம் எரித்தோன்’ ஆகியன சிவபெருமானின் பெயர்களாகும். இந்தத் தொன்மக் கதையைப் புரிந்துகொண்டால்தான் கு.அழகிரிசாமியின் ‘திரிபுரம்’ சிறுகதை புரியும்.
தாரகாசுரன் முருகப்பெருமானால் வதம் செய்யப்பட்ட பின் அவனுடைய மகன்களான தாரகாக்ஷன், கமலாக்ஷன், வித்யுன்மாலி ஆகியோர் பிரம்மனை நோக்கிக் கடும் தவம் செய்கின்றனர். இதன் பயனாகப் பிரம்மனிடம் வரம் பெறுகின்றனர். அதன்படி அவர்கள் யாராலும் அழிக்க முடியாத தங்கம், வெள்ளி, இரும்பு ஆகிய பறக்கும் கோட்டைகளைப் (நகரங்களை) பெறுகின்றனர். இவற்றால் நினைத்த இடத்துக்குப் பறந்து செல்ல முடியும். இவை ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நேர்க்கோட்டில் இணையும். அப்போது அவர்களுக்கு அழிவு ஏற்படும். அவர்கள் மூவருமே சிறந்த சிவ பக்தர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பெற்ற வரத்தைக் கொண்டு தேவர்களைத் துன்புறுத்துகின்றனர். தேவர்களுக்கு இம்மூன்று அசுரர்களையும் அழிக்கவேண்டிய அவசியம் உருவாகிறது. சிவனின் உதவியை நாடுகின்றனர். மூவரும் பெற்ற வரத்தின்படி தேவர்களின் பாதி வலிமையைச் சிவபெருமானுக்கு அளித்தால்தான், அவர்களை அழிக்க முடியும் என்கிற நிலை உருவாகிறது. தேவதச்சன் ஓர் ஒப்பற்ற தேரினை உருவாக்குகிறான். நான்கு வேதங்கள் குதிரைகளாகின்றன; பிரம்மன் சாரதியாகிறார். திரிபுரங்களை அழிக்கப் புறப்படுகிறார் சிவபெருமான்.
தங்களது பாதி வலிமை இல்லையெனில் சிவபெருமானால் அசுரர்களை அழிக்க முடியாது என்று தேவர்கள் அகந்தை கொள்கின்றனர். தேவர்களது அகத்தையை அறிந்த சிவபெருமான், மெல்ல நகைக்கிறார். அடுத்த கணமே தேர் முறிகிறது. தேவர்கள் திகைக்கின்றனர். மீண்டும் ஒருமுறை சிவபெருமான் சத்தமாகச் சிரிக்கிறார். உலகமே நடுங்கும்படியாக ஒரு தீப்பிழம்பு உருவாகிறது. ஒரு நொடியில் அசுரர்களின் மூன்று கோட்டைகளும் சாம்பலாகின்றன. இதுவொரு தொன்மம். காலந்தோறும் இத்தொன்மக் கதையினை இலக்கியங்கள் பல்வேறு வடிவங்களில் பதிவுசெய்து வருகின்றன.
‘திரிபுரம் தீ மடுத்து’ (பா.1) என்று கலித்தொகை கூறுகிறது. புறநானூறு, பரிபாடல், திருமுருகாற்றுப்படை, கந்தபுராணம், லிங்க புராணம் உள்ளிட்ட நூல்களிலும் சிவபெருமான் திரிபுரம் எரித்த நிகழ்வு குறித்துப் பாடப்பட்டுள்ளது. கதையின் கூற்றுமுறையில் மாற்றங்கள் உள்ளன. சிவபெருமான் திரிபுரத்தைச் சிரித்தே அழித்தார் என்பதுதான் இத்தொன்மத்தில் முக்கியம். இந்தத் தொன்மத்தைத்தான் கு.அழகிரிசாமி ‘திரிபுரம்’ கதையின் உச்சமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். வரலாற்றுக்கு முற்பட்ட ஒரு தொன்மத்தை நிகழ்கால யதார்த்தத்துடன் இணைத்து மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார் கு.அழகிரிசாமி.
ஒரு பெண் தாயின் கண்முன்னே பசியின் காரணமாகத் தன் கற்பை விற்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறாள். அவளது இந்நிலைக்கு யார் காரணம்? ‘இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து/கெடுக உலகியற்றி யான்’ என்ற வள்ளுவரும் ‘தனி யொருவனுக் குணவில்லை யெனில்/ஜகத்தினை யழித் திடுவோம்’ என்ற பாரதியும் கு.அழகிரிசாமியின் முன்னோடிகள். அந்த அறச்சீற்றத்தைத்தான் ‘திரிபுரம்’ கதையாகப் படைப்பூக்கத்துடன் எழுதியிருக்கிறார். இக்கதையின் முடிவுதான் அதனைச் செவ்வியல் தன்மைக்கு உயர்த்தியிருக்கிறது.
அந்த இரவுக்குப் பிறகு அவர்களிடம் பதினோரு ரூபாய் இருக்கிறது. முந்தைய நாள் அவர்களிடம் தம்பிடி காசும் இல்லாமல் பட்டினி கிடந்தார்கள். அம்மாவிடமிருந்த பத்து ரூபாய் நோட்டையும் சில்லறைக் காசுகளையும் வெங்கட்டம்மா வாங்கிப் பார்க்கிறாள். எவ்வளவு எளிதாக இவ்வளவு பெரிய தொகை கிடைத்துவிட்டது. சிரிக்கிறாள். உரக்கச் சிரிக்கிறாள். இந்தச் சமூகத்தைப் பார்த்துச் சிரிக்கிறாள். அந்தச் சிரிப்பில் சமூகம் கட்டியெழுப்பியிருக்கும் உன்னதங்கள் எல்லாம் சிதிலம் சிதிலமாக ஒடிந்து விழுகின்றன.
ஒழுக்கம், மரபு, பண்பாடு, நாகரிகம், விழுமியம் என எல்லாவற்றையும் அந்தச் சிரிப்பு பரிகசிக்கிறது; எரிக்கிறது. அரிமர்த்தன பாண்டியனிடம் சிவபெருமான் வாங்கிய பிரம்படி எல்லோர்மீதும் விழுந்தது; அப்படி இருக்கிறது வெங்கட்டம்மாவின் சிரிப்பு. சிவபெருமான் திரிபுரத்தை அழிக்கச் சிரித்த சிரிப்பை ஒத்திருந்தது அது. சிவபெருமானின் சிரிப்பு அழிக்கவே முடியாததாகக் கருதப்பட்ட திரிபுரத்தை அழித்தது. வெங்கட்டம்மாவின் சிரிப்பு என்ன செய்யப் போகிறதோ என்கிற பதற்றத்தைப் புனைவை வாசிப்பவரிடம் மிக வலிமையாகக் கடத்துகிறார் கு.அழகிரிசாமி.