நெருக்கடியில் பிறந்த நூல்கள்

நெருக்கடியில் பிறந்த நூல்கள்
Updated on
2 min read

சில நூல்கள் காலங்களைக் கடந்து வாசகர் மனங்களில் நிலைத்து நிற்கின்றன. அவற்றின் பின்னணியில் ஊனும் உயிருமாக ஒரு கதை உள்ளது. நெருக்கடியின் ஊடாக எழுதப்பட்ட நூல்களையும் வரலாற்றில் காண்கிறோம். ரஷ்ய எழுத்தாளர் தாஸ்தாவெஸ்கியின் புகழ்பெற்ற புதினங்களில் ஒன்றான ‘சூதாடி’ எழுதப்பட்ட சூழலும் அத்தகையதுதான்.

1864இல் அவருடைய மனைவி மரியா இறந்தார். அதையடுத்து சகோதரர் இறந்தார். தாஸ்தாவெஸ்கி நடத்தி வந்த இலக்கிய இதழ் நிதியின்றி நிறுத்தப்பட்டது. எல்லாவற்றுக்கும் மேலாக, சூதாட்டம் அவரை அலைக்கழித்தது. தாஸ்தாவெஸ்கி, சூதாட்டத்தால் பட்ட கடன்களை அடைப்பதற்காக ஸ்டெல்லோவ்ஸ்கி என்கிற வெளியீட்டாளரிடம் 3000 ரூபிள்கள் முன்கூட்டியே வாங்கியிருந்தார். அவருக்கு தாஸ்தாவெஸ்கி ஒரு ஆண்டுக்குள் ஒரு புதினம் (160 பக்கங்களுக்குக் குறையாமல்) எழுதித் தர வேண்டும்; இல்லையெனில் அவர் ஏற்கனவே எழுதிய நூல்களையும் எதிர்காலத்தில் எழுதவிருக்கும் நூல்களையும் அடுத்த 9 ஆண்டுகளுக்கு அச்சிடும் உரிமை வெளியீட்டாளரைச் சேரும். இந்தக் கெடுவே சூதாட்டத்துக்கு இணையாக இருந்தது. இச்சூழலில்தான் புதிய புதினம் எழுதும் வேலை தொடங்கியது. சூதாட்டவிடுதியில் இருந்தபோது, தாஸ்தாவெஸ்கிக்கு ஒரு கதைக்கரு தோன்றியிருந்தது. வாழ்வில் பல அடிகள் வாங்கினாலும், நம்பிக்கையைக் கைவிடாத, அதிகாரத்தைக் கேள்வி கேட்கிற சூதாடி ஒருவனைக் குறித்த கதை அது. காலையில் ‘குற்றமும் தண்டனையும்’ புதினமும் மாலையில் சூதாடி குறித்த புதினமும் எழுதுவதென அவர் திட்டமிட்டார். பிந்தைய வேலை நகரவே இல்லை. கெடு முடிய ஒரு மாதமே இருந்தது. ஸ்டெல்லோவ்ஸ்கி குறித்த நினைவுகள் அவரைத் தொந்தரவு செய்தன. தாஸ்தாவெஸ்கியின் நண்பர், இவ்வேலைக்காகச் சுருக்கெழுத்தாளரைப் பணிக்கு அமர்த்தும்படி கூறினார். அந்த நாளில் இது வழக்கத்தில் இல்லை. நீண்ட தயக்கத்துக்குப் பிறகுதான் தாஸ்தாவெஸ்கி சுருக்கெழுத்தாளரை வைத்துக்கொள்ளச் சம்மதித்தார். இதையடுத்துதான் அன்னா கிரிகோர்யேவ்னா, தாஸ்தாவெஸ்கிக்கு அறிமுகமானார். தாஸ்தாவெஸ்கி மீது அன்னா கிரிகோர்யேவ்னாவுக்கு மதிப்பு இருந்தாலும், அவரை ஏனோ பிடிக்கவில்லை. தனக்கு மனச்சோர்வு அளிக்கும்வகையில் தாஸ்தாவெஸ்கி நடந்துகொள்வதாக அவருக் குத் தோன்றியது. எனினும் அந்தப் புதினம் 26 நாள்களில் எழுதி முடிக்கப்பட்டது. இதற்கிடையே ஸ்டெல்லோவ்ஸ்கி அலுவலகத்தை மூடிவிட்டு வெளியூருக்குச் சென்றுவிட்டார். தாஸ்தாவெஸ்கியைக் கடன்காரராகவே நீடிக்கவைப்பதற்கான முயற்சி அது. ஒரு ‘நோட்டரி’ யிடம் சென்று கதையை ஒப்படைத்துப் பதிவு செய்துகொள்ளும்படி அன்னா கிரிகோர்யேவ்னா கூறிய ஆலோசனை, தாஸ்தாவெஸ்கியின் நூல்உரிமைகளைக் காப்பாற்றியது. ‘சூதாடி’ , தாஸ்தாவெஸ்கியையும் அன்னா கிரிகோர்யேவ்னா வையும் இணைத்து வைத்ததுடன், தாஸ்தாவெஸ்கியை ஒழுங்குக்குள் கொண்டு வந்தது.

சிறாரை மட்டுமல்லாமல், பெரியவர்களையும் சுவாரசியத்தால் கட்டிப்போட்டவை ஹாரி பாட்டர் புதினங்கள். அவற்றின் ஆசிரியர் ஜே.கே.ரௌலிங் சிறுவயதிலேயே எழுதும் பழக்கம் கொண்டிருந்தாலும், அவருக்குள் இருந்த எழுத்தாளர் முழுமையாக வெளிப்பட்டது30 வயதுக்கு மேல்தான். அவரது தாயின் இறப்பு, ஒரே ஆண்டில் முடிவுக்கு வந்த திருமண வாழ்க்கை, குடும்பத்தில் யாருடையதுணையும் இன்றிக் குழந்தையை வளர்க்க வேண்டிய சூழல், வேலையின்மை, பொருளாதார நெருக்கடி ஆகியவற்றால் அல்லாடிக்கொண்டிருந்த ரௌலிங், எழுதுவதையும் நிறுத்தவில்லை. 1990இல் ஒரு ரயில் பயணத்தின்போது பெரியவர்களுக்கான ஒரு கதையை அவர் சிந்தித்துக்கொண்டிருந்தபோது, ஹாரிபாட்டர் அவர் மனத்தில் தோன்றினான். ஹாரி பாட்டரின் அடிப்படைக் கதையை அவரால் எளிதில் வளர்த்தெடுக்க முடிந்தது. எனினும் முதல் பாகத்தை எழுதி முடிக்கவும் ஏழு பாகங்கள் அடங்கிய மொத்தத் தொகுதியையும் திட்டமிடவும் அவருக்கு 5 ஆண்டுகள் ஆகின. தற்கொலை குறித்த எண்ணங்கள் வருமளவுக்கு மனச்சோர்வும் இடையே அவரை வாட்டியது. அதற்காக அவர் மனநல சிகிச்சை எடுத்துக்கொண்டார். திருமண முறிவுக்குப் பின், அவரது பொருளாதார நிலைக்கு மான்செஸ்டரில் மோசமான நிலையில் இருந்த ஒரு வீட்டில்தான் குடியேற முடிந்தது. அந்த வீட்டிலும் உறவினருக்குச் சொந்தமான ஓர் உணவகத்திலுமாக உட்கார்ந்து ஹாரிபாட்டரை எழுதினார். நடைபழகும் நிலையில் இருந்த மகள் ஜெசிகாவையும் இதற்கிடையே கவனித்துக்கொள்ள வேண்டும். கதையை வெளியிடப் பதிப்பாளர் கிடைப்பது அடுத்த போராட்டமாக இருந்தது. ‘ஹாரிபாட்டர் அண்ட் சோர்செரர்’ஸ் ஸ்டோன்’ என்ற முதல் பாகத்தை 12 பதிப்பாளர்கள் நிராகரித்தனர். ப்ளூம்ஸ்பரி வெளியீட்டு நிறுவன நிர்வாகியின் 8 வயது மகள், அதன் முதல் அத்தியாயத்தை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மற்ற அத்தியாயங்களையும் படிக்க அவள் விரும்பினாள். நிர்வாகிக்கு மகளின் ஆர்வம், ஹாரிபாட்டர் மீது நம்பிக்கை அளிப்பதாக இருந்தது. ஹாரி பாட்டர் முதல் பாகம் 1997இல் ஏறக்குறைய 5000 பிரதிகள் அச்சடிக்கப்பட்டது. ’இதற்காகத்தான் காத்திருந்தோம்’ என்பதுபோல இங்கிலாந்து மக்கள் ஹாரி பாட்டரைக் கொண்டாடினார்கள். ரௌலிங்கின் வாழ்க்கை அடியோடு மாறியது.

வ.உ.சிதம்பரனாரின் ‘மனம்போல வாழ்வு’ நூலைப் படிக்கும் பலருக்கு, அதை அவர் சிறையிலிருந்து எழுதினார் என்பது தெரியாது. ‘இளைஞனே, நீ ஆழமாக விரும்புவது செயலாக ஒருநாள் உருப்பெறும்’ எனச் சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் இருந்தும் அவரால் எழுத முடிந்திருக்கிறது. வங்காளத்தைச் சேர்ந்த பிபின் சந்திர பால் 1908இல் சிறையில் இருந்து விடுதலை ஆனதையொட்டி வ.உ.சியும் சுப்பிரமணிய சிவாவும் திருநெல்வேலியில் கூட்டம் நடத்தினர்.தங்களுக்குத் தென்பகுதியில் தீராத தலைவலியாக இருந்த வ.உ.சியை அடக்குவதற்கான இந்த வாய்ப்பை ஆங்கிலேய அரசு தவறவிடவில்லை. வ.உ.சி.யும் சிவாவும் கைது செய்யப்பட்டனர். வ.உ.சி., மார்ச், 1908 முதல் டிசம்பர்,1912 வரை மொத்தம் நாலே முக்கால் ஆண்டுக்காலம் சிறையில் இருந்தார். வழக்கறிஞரான அவரது தொழில் வாழ்க்கை, குடும்பத்தின் பொருளாதாரம் போன்றவை நலிவடைந்தன. மாட்டுக்குப் பதிலாக வ.உ.சி., செக்கு இழுத்தது கோவைச் சிறையில்தான் நிகழ்ந்தது. அங்குதான் அவர் ‘மனம்போல வாழ்வு’ நூலை எழுதினார். ஜேம்ஸ் ஆலன் எழுதிய ‘As a man thinketh’ என்ற ஆங்கில நூலின் மொழி பெயர்ப்பு இது. எண்ணங்கள் செயலாக மாறும்அற்புதத்தை இந்நூல் விளக்குகிறது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in