

மக்களவைத் தேர்தல் 2024-ஐ முன்னிட்டு பல்வேறு மாநிலங்களின் தேர்தல் கள நிலவரம் குறித்து பார்த்து வருகிறோம். ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கும் பிரதான அரசியல் கட்சிகள் எவை எவை, கடந்த கால தேர்தல்களில் அக்கட்சிகளுக்குக் கிடைத்த வாக்கு சதவீதம் எவ்வளவு, அந்தக் கட்சிகளுக்கு கிடைத்த தேர்தல் வெற்றிகள் / தோல்விகள், தற்போதைய கள சூழல் யாருக்கு சாதகமாக / பாதகமாக இருக்கிறது என பல்வேறு அம்சங்களை புள்ளி விவரங்களோடு இந்தப் பகுதியில் பார்த்து வருகிறோம். அந்த வகையில் நமது அண்டை மாநிலமான கர்நாடகாவின் தேர்தல் கள நிலவரம் குறித்து பார்ப்போம்.
நிலப்பரப்பில் நாட்டின் 7-வது பெரிய மாநிலம் கர்நாடகா. இந்த மாநிலத்தில் 30 மாவட்டங்கள், 28 மக்களவைத் தொகுதிகள், 224 சட்டப்பேரவைத் தொகுதிகள் இருக்கின்றன. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கர்நாடகாவில் 6 கோடியே 11 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். மாநிலத்தின் கல்வி அறிவு 75.36%. ஆயிரம் ஆண்களுக்கு 873 பெண்கள் இருக்கிறார்கள். கர்நாடகாவில் இந்துக்கள் 84 சதவீதமும், இஸ்லாமியர்கள் 12.92 சதவீதமும் இருக்கிறார்கள். கிறிஸ்தவர்கள் 1.87% இருக்கிறார்கள்.
நாடு சுதந்திரம் அடைந்தது முதல் தற்போது வரை காங்கிரஸ் கட்சிதான் இம்மாநிலத்தில் அதிக காலம் ஆட்சியில் இருந்திருக்கிறது. இரண்டாம் இடத்தில் பாஜகவும், மூன்றாம் இடத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளமும் உள்ளன. நிஜலிங்கப்பா, ராமகிருஷ்ண ஹெக்டே, எஸ்.ஆர். பொம்மை, வீரப்ப மொய்லி, தேவெ கவுடா, எஸ்.எம். கிருஷ்ணா, குமாரசாமி, எடியூரப்பா, சதானந்த கவுடா, ஜெகதீஷ் ஷெட்டர், பசவராஜ் பொம்மை என பலர் இம்மாநிலத்தின் முதல்வர்களாக இருந்துள்ளனர். சித்தராமையா தற்போது முதல்வராக உள்ளார்.
கர்நாடகாவில் 80-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் இருந்தாலும், காங்கிரஸ், பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் (ஜேடிஎஸ்) ஆகிய 3 கட்சிகள் மட்டுமே அதிக செல்வாக்கோடு இருக்கின்றன. அதிலும், குறிப்பாக காங்கிரசும் பாஜகவுமே 30%க்கும் அதிக வாக்கு வங்கியைக் கொண்டுள்ளன. மதச்சார்பற்ற ஜனதா தளம் 10 சதவீதத்துக்கும் சற்று கூடுதலாக வாக்கு வங்கியைக் கொண்டுள்ளது. தற்போதைய தேர்தல் கள நிலவரம் குறித்து அறிந்து கொள்வதற்கு முன்பாக, கடந்த 2 மக்களவைத் தேர்தல்களின் முடிவுகள் குறித்து தற்போது பார்ப்போம்.
2019 மக்களவைத் தேர்தல் முடிவுகள்: இந்த தேர்தலில், பாஜக மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 27 தொகுதிகளில் போட்டியிட்டது. மறைந்த பிரபல நடிகர் அம்பரீஷின் மனைவியும் நடிகையுமான சுமலதா பாஜக ஆதரவுடன் ஒரு தொகுதியில் போட்டியிட்டார். காங்கிரஸ் கட்சியும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. இதில், காங்கிரஸ் கட்சி 21 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 7 தொகுதிகளிலும் போட்டியிட்டன.
இந்த தேர்தலில் பாஜக 51.75% வாக்குகளுடன் 25 தொகுதிகளைக் கைப்பற்றியது. சுமலதா 3.92% வாக்குகளுடன் தான் போட்டியிட்ட மாண்டியா தொகுதியில் வெற்றி பெற்றார். காங்கிரஸ் கட்சி 32.11% வாக்குகளைப் பெற்ற போதிலும், ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. மதச்சார்பற்ற ஜனதா தளம் 9.74% வாக்குகளுடன் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது.
2014 மக்களவைத் தேர்தல் முடிவுகள்: இந்த தேர்தலில் காங்கிரஸ், பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய 3 கட்சிகளும் தனித்துப் போட்டியிட்டன. அதேநேரத்தில், மதச்சார்பற்ற ஜனதா தளம் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 25 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டது. தேர்தல் முடிவில், பாஜக 43.37% வாக்குகளுடன் 17 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி 41.15% வாக்குகளுடன் 9 தொகுதிகளில் வெற்றி பெற்றது. மதச்சார்பற்ற ஜனதா தளம் 11.07% வாக்குகளுடன் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அடுத்ததாக, கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் குறித்து தற்போது பார்ப்போம்.
2023 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள்: இந்த தேர்தலில் காங்கிரஸ், பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய மூன்றும் தனித்துப் போட்டியிட்டன. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 223ல் போட்டியிட்ட காங்கிரஸ் 42.88% வாக்குகளுடன் 135 இடங்களில் வெற்றி பெற்றது. 1989க்குப் பிறகு காங்கிரசுக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றியாக இது அமைந்தது. இந்த வெற்றியை அடுத்து, கட்சியின் மூத்த தலைவர் சித்தராமையா முதல்வராகவும், டி.கே. சிவகுமார் துணை முதல்வராகவும் பதவியேற்றனர். 224 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 36% வாக்குகளுடன் 66 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 209 தொகுதிகளில் போட்டியிட்ட மதச்சார்பற்ற ஜனதா தளம் 13.30% வாக்குகளுடன் 19 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
2024 மக்களவைத் தேர்தல் களம்: இந்த தேர்தலில், காங்கிரஸ் கட்சி மொத்தமுள்ள 28 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் பாஜக கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது. பாஜக 25 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 3 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
பாஜக கூட்டணியில் மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு மாண்டியா, கோலார், ஹசன் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், மாண்டியாவில் முன்னாள் முதல்வர் குமாரசாமி போட்டியிடுகிறார். கோலாரில் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான எம். மல்லேஷ் பாபு போட்டியிடுகிறார். ஹசனில் தேவெ கவுடாவின் மற்றொரு மகனான ரேவண்ணாவின் மகனும், இத்தொகுதியின் தற்போதைய எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணா போட்டியிடுகின்றார்.
கர்நாடகாவில் மக்களவைத் தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. தெற்கு கர்நாடகாவில் உள்ள 14 தொகுதிகளுக்கு ஏப்ரல் 26-ம் தேதியும், வடக்கு கர்நாடகாவில் உள்ள 14 தொகுதிகளுக்கு மே 7-ம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது.
கருத்துக் கணிப்புகள் என்ன சொல்கின்றன? - கர்நாடகாவில் இதுவரை நடத்தப்பட்ட அனைத்துக் கருத்துக் கணிப்புகளுமே பாஜக கூட்டணியே அதிக இடங்களைக் கைப்பற்றும் என தெரிவிக்கின்றன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி குறைந்தபட்சம் 18 இடங்களிலும், அதிகபட்சம் 24 இடங்களிலும் வெற்றிபெறும் என கணிப்புகள் கூறுகின்றன. காங்கிரஸ் குறைந்தபட்சம் 2 தொகுதிகளிலும், அதிகபட்சம் 10 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
தலைநகர் பெங்களூரு உள்பட மாநிலத்தின் பல பகுதிகளில் நிலவும் குடிநீர் பிரச்சினை, மேக்கேதாட்டு அணை விவகாரம், மாநில அரசு மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் ஆகியவற்றை மையப்படுத்தி ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பாஜகவும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் பிரச்சாரம் செய்து வருகின்றன. அதோடு, காங்கிரஸ் முஸ்லிம்களை தாஜா செய்யும் அரசியலை செய்து வருவதாகவும் பாஜக குற்றம் சாட்டி வருகிறது.
அதேநேரத்தில், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக அளித்த வாக்குறுதிகளுக்கு இணங்க, பெண்களுக்கு இலவச பேருந்துப் பயணம், பழைய ஓய்வூதிய திட்டம், குடும்பத் தலைவிகளுக்கு மதம் ரூ.2000 வழங்கும் கிரஹ லட்சுமி திட்டம், 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் கிரஹ ஜோதி திட்டம், வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு மாதம்தோறும் தலா 10 கிலோ அரசி வழங்கும் அன்ன பாக்கியா திட்டம் ஆகியவற்றை நிறைவேற்றி இருப்பதை சுட்டிக்காட்டி காங்கிரஸ் பிரச்சாரம் செய்து வருகிறது.