Published : 23 Apr 2024 06:16 AM
Last Updated : 23 Apr 2024 06:16 AM

காலநிலை மாற்றம்: கட்சிகளின் நிலைப்பாடு?

காலநிலை நெருக்கடி ஏற்படுத்தியிருக்கும் இந்தத் துயரத்தின் மத்தியில், தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகள் மக்களவைத் தேர்தலுக்கான தங்கள் தேர்தல் அறிக்கைகளில் காலநிலை குறித்து அளித்திருக்கும் வாக்குறுதிகளைப் பார்ப்போம்.

அதிமுகவின் வாக்குறுதிகள்: அதிமுகவின் தேர்தல் அறிக்கையில், காலநிலை அல்லது காலநிலை மாற்றம் பற்றிய குறிப்பே இல்லை. நதிகளை இணைப்பதில் கவனம் செலுத்துவதாக அக்கட்சி முன்வைத்திருக்கும் வாக்குறுதிதான் ஓரளவு கவனத்துக்குஉரியது.

ஆனால், இது வறட்சி அல்லது நீர் நெருக்கடியைச் சமாளிப்பதற்கான தீர்வு அல்ல என சுற்றுச்சூழல் வல்லுநர்கள் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர். காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்சினைகளைத் தீர்ப்பதை மாநிலத்தின் நீர் தட்டுப்பாட்டுக்கான தீர்வாக மட்டுமே இந்தத் தேர்தல் அறிக்கை பார்க்கிறது.

விவசாயிகளைப் பாதுகாப்பது தொடர்பான வாக்குறுதிகளில், ‘காலநிலை மீள்தன்மையுடைய விவசாய’த்தை மேம்படுத்துவதற்கான அல்லது பேரழிவுகளிலிருந்து பாதுகாப்பதற்கான நிதி, கொள்கைகள், நடவடிக்கைகள் பற்றி எதுவும் பேசவில்லை.

“தேர்தல் அறிக்கையில் காலநிலை போன்ற வார்த்தைகளை நாங்கள் பயன்படுத்தாமல் இருக்கலாம். ஆனால், ஒரு கட்சியாக தண்ணீர்ப் பற்றாக்குறை, மரம் நடுதல் போன்ற காலநிலை தொடர்பான பிரச்சினைகளில் பணியாற்ற நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். அதிமுக ஆட்சியில்தான், தண்ணீர்ப் பிரச்சினைகளைத் தீர்க்க மழைநீர் சேகரிப்பு கட்டாயமாக்கப்பட்டது” என அதிமுகவின் கோவை வேட்பாளர் சிங்கை ஜி.ராமச்சந்திரன் கூறினார்.

திமுகவின் தேர்தல் அறிக்கை: 2019 தேர்தல் அறிக்கையிலேயே பல்வேறு வாக்குறுதிகளை திமுக வழங்கியுள்ளது. குறிப்பாக, காலநிலை நெருக்கடியுடன் நேரடியாகத் தொடர்புடைய 13 வாக்குறுதிகளை அளித்திருந்தது.

காலநிலைக் கல்வியை மாநிலப் பாடத்திட்டத்தில் கட்டாயமாக்குவது; 2050இல் இந்தியா கார்பன் சமநிலையை எட்டுவது முதல், நிகழ்நேர வெள்ள முன்னறிவிப்பு அமைப்புகள்; மின் வாகனங்களுக்கான மானியத்தை அதிகரிப்பது வரை, காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பதற்குத் தொலைநோக்கிலான வாக்குறுதிகளை திமுக வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள மத்திய - மாநில அரசு அலுவலகங்கள் அனைத்தும் 2030க்குள் சூரிய சக்தியில் இயங்கும் என்றும் தெரிவித்திருக்கிறது.

மிக்ஜாம் புயல் கையாளப்பட்ட விதம் குறித்து திமுக விமர்சனங்களுக்கு உள்ளானது. இதைத் தொடர்ந்து, நிவாரணத்துக்குத் தேவையான நிதியை மத்திய அரசு விடுவிக்க வில்லை என்று திமுகவும் விமர்சித்துள்ளது. இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், தற்போது மத்திய அரசால் வழங்கப்படும் மாநிலப் பேரிடர் நிவாரண நிதி 75 சதவீதத்தில் இருந்து 90 சதவீதமாக உயர்த்தப்படும் என்றும் வாக்குறுதி அளித்துள்ளது.

காலநிலை நடவடிக்கையை வெறும் தேர்தல் பிரச்சினையாக மட்டும் பார்க்காமல், வாழ்வாதாரப் பிரச்சினையாக திமுக பார்க்கிறது என்று கூறும் திமுக செய்தித் தொடர்பாளர் சரவணன், காலநிலை நெருக்கடி சார்ந்து கவனம் செலுத்துவதில், வாக்கு வங்கி அரசியலுக்கு அப்பால் செல்ல திமுக விரும்புகிறது என்றார்.

வாக்காளர்களின் எதிர்பார்ப்புகள்: காலநிலை நெருக்கடிக்குத் தீர்வு காண்பதன் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு வாக்காளர்களிடமும் இருக்கிறது. காலநிலைக் கல்வியாளர்கள் கூட்டமைப்பு (Climate Educators Network) மற்றும் அசர் ஆலோசகர்களால் (Asar Social Impact Advisors) நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வில், கணக்கெடுக்கப்பட்ட முதல்தலை முறை வாக்காளர்களில் தமிழ்நாட்டில் 50%க்கு அதிகமானோர்,

‘தேர்தலில் வாக்களிக்கும்போது, காலநிலை மாற்றம் தொடர்பாக அரசியல் கட்சிகள் / வேட்பாளர்கள் கொண்டிருக்கும் நிலைப்பாட்டை மனதில் கொள்வோம்’ என்று தெரிவித்திருந்தனர்.

“காலநிலைக் கல்வியில் கவனம் செலுத்துதல், தேர்தல் அறிக்கையில் காலநிலை மாற்றத்தை மையப்படுத்துவது ஆகியவை முக்கியமானவை. இளம் வாக்காளர்கள் தாங்கள் முக்கியமான பிரச்சினைகளாகக் கருதும் விஷயங்களில் அரசியல் தலைவர்கள் அக்கறை செலுத்துகிறார்களா என்பது குறித்த சான்றுகள் அவை.

காலநிலை மாற்றம் தங்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதை அறிந்த குடிமக்கள் மட்டுமே தலைவர்களைப் பொறுப்பேற்க வைக்க முடியும்; நடவடிக்கை எடுக்கவும் வைக்க முடியும். அரசியல் கட்சிகள் வாக்காளர்களை ஈர்க்க முயலும்போது காலநிலை நெருக்கடியைப் புறக்கணிக்கக் கூடாது என்பதை எங்களின் கணக்கெடுப்பு தெளிவாகக் காட்டுகிறது” என்கிறார் காலநிலைக் கல்வியாளர்கள் வலைப்பின்னல் அமைப்பின் இணை நிறுவனர் சுனயனா கங்குலி.

தேர்தல் காலத்தில் மட்டுமல்ல, இனி எப்போதும் இவ்விஷயத்தில் அரசியல் கட்சிகள் முனைப்புடன் செயல்பட்டால்தான் எதிர்காலத் தலைமுறைக்குப் பாதுகாப்பான வாழிடத்தை விட்டுச்செல்ல முடியும்.

- தொடர்புக்கு: priyankathirumurthy24@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x