சிறைக்குள் புதிய வானம்: சிறைவாசிகளின் வாசிப்பு அனுபவங்கள்
சிறை தருகிற கசப்பான உணர்வு களுக்கு ஒப்பீடு சொல்வது மிகவும் கடினம். மனித வாழ்க்கையில் சிறை என்பது முடிவாக இருந்துவிடக் கூடாது என்பதற்காகப் பல நடவடிக்கை எடுக்கப்படுகின்றன. புத்தக வாசிப்பு அவற்றில் மிகவும் பயனுள்ள நடவடிக்கை என்பதில் சந்தேகமில்லை. தமிழகத்தில் உள்ள சிறைகளில் பல ஆண்டுகளாகவே நூலகம்இயங்கிவருகிறது. 2023இல் பொதுமக்களிடமிருந்து புத்தகங்கள் நன்கொடை யாகப் பெற்றுச சிறைவாசிகளுக்கு அளிக்கப்படும் திட்டம் தொடங்கப்பட்டது. இது சிறையில் நடந்துவரும் புத்தக வாசிப்பை இன்னும் வலுப்படுத்துவதாக அமைந்தது.
‘கூண்டுக்குள் வானம்' என்கிற அத்திட்டம் குறித்துத் தமிழ்நாடு சிறைகள் - சீர்திருத்தப் பணிகள் துறையின் டிஐஜி முருகேசன் (சென்னை சரகம்) பகிர்ந்துகொண்டார்: "குடும்பத்துக்கு வருவாய் ஈட்டித்தர வேண்டிய ஒருவர், சிறையில் இருக்கும்போது அவரும் குடும்பமும் படும் வேதனை சொல்லில் அடங்காதது. குடும்பத்தைத் தவிக்க விட்டுவிட்டோமே என்கிற வேதனையுடன் இருக்கும் சிறைவாசிகளுக்கு, அவ்வளவு எளிதாக மன அமைதியை ஏற்படுத்திவிட முடியாது. புத்தகங்கள் அவர்களுக்கு ஆறுதலையும் தன்னம்பிக்கையையும் அளிக்கும். குற்றம் இழைத்த ஒருவரைத் திருத்த நிர்வாக நோக்கில் பல்வேறு செயல்கள் முன்னெடுக்கப்பட்டாலும், அவராக உணர்ந்து திருந்த முயலுவது அவசியம். அதற்குப் புத்தகங்கள் உறுதி யாகத் துணைபுரியும். சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் நடைபெறும் புத்தகக் காட்சிகளில் பள்ளிக் கல்வித் துறையின் ஒத்துழைப்புடன் மக்களிடம் நூல்கள் சேகரித்தோம். புதிய நூல்களையோ, ஏற்கெனவே பயன்படுத்திய நூல்களையோ அவர்கள் தரலாம். சிறைத் துறை சார்பாக நிகழ்வில் வைக்கப்பட்ட பெட்டியில் அவர்கள் இடும் நூல்களைத் தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் உள்ள நூலகங்களுக்குப் பகிர்ந்து அனுப்புவதுதான் இந்தத் திட்டம். இதற்கு மக்கள் நல்ல வரவேற்பு அளித்தார்கள்.
தமிழகம் முழுவதுமிருந்து ஒன்றே கால் லட்சம் நூல்கள் கிடைத்தன. நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், ஆன்மிகம், வாழ்க்கை வரலாறு, தொழில்நுட்பம் உள்பட பல்வேறு தலைப்புகளில் புத்தகங்கள் உள்ளன. சென்னை புழல் சிறை வளாகத்தில் உள்ள மூன்று சிறைகளிலும் தனித்தனி நூலகங்கள் உள்ளன. காலை 7.30 மணியிலிருந்து 4.30 மணி வரை நூலகம் திறந்திருக்கும். இம்மூன்று நூலகங்களிலும் மொத்தமாக 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளன. ஒருவர் எத்தனை புத்தகங்களை வேண்டுமானாலும் தனது அறைக்கு எடுத்துச்செல்லலாம்.
ஆயுள் தண்டனை பெற்றவர்கள் அதிக அளவில் புத்தகம் வாசிப்பதைக் காண முடிகிறது. 16 பட்ட, பட்டயப் படிப்பு முடித்தவர்கள்கூட அவர்களிடையே உண்டு. வாசிப்புப் பழக்கம் வழியே சிலர் அடைந்த அறிவுமுதிர்ச்சி அவர்களது பேச்சிலேயே வெளிப்படுவதைப் பார்க்க முடிவது மகிழ்ச்சி தருகிறது”.
சிறைவாசிகளின் வாசிப்பு அனுபவங்கள்
சென்னை புழல் சிறைவாசிகளில் சிலர், தாங்கள் படித்த புத்தகங்கள் குறித்துப் பகிர்ந்து கொண்டனர்:
ஜெயலட்சுமி: நான் வெளியே இருந்தபோது நூலகம் பற்றிக் கேள்விதான் பட்டிருக்கிறேன். சிறைக்கு வந்த புதிதில் தினமும் அழுதுகொண்டிருப்பேன். சிலருடன் எனக்குச் சண்டையும் வரும். புத்தகங்களை வாசிக்கத் தொடங்கிய பிறகு, என்னிடம் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக உணர்கிறேன். பள்ளிப் பருவம் நினைவுக்குவருகிறது. என்னுடைய கெட்ட பழக்கங்களும் மறைந்துபோகின்றன. மனச் சோர்வுக்கு மாத்திரை எடுத்துக்கொள்வதை நிறுத்திவிட்டேன். நான் தனியாக இருப்பதாக இப்போது எனக்குத் தோன்றுவதில்லை. ஆன்மிக நூல்கள் எனக்குப் பிடித்துள்ளன.
க.ஜெயராமன்: புத்தகங்கள் எங்கள் அறிவை மேம் படுத்திக்கொள்ளவும் துயரத்தை ஆற்றுப்படுத்திக் கொள்ளவும் துணையாக உள்ளன. சிறையில் எனக்கு வாய்த்த தோழனாகப் புத்தகத்தைக் காண்கிறேன்.
மா.கருணாநிதி: நான் 23 ஆண்டுகளாக ஆயுள் தண்டனையில் உள்ளேன். நானே சொந்தமாக வாங்கியும், இங்குள்ள நூலகம் மூலமாகவும் பல புத்தகங்களை வாசித்துவந்தேன். ‘கூண்டுக்குள் வானம்’ திட்டம் மூலம் பல்வேறு வகையான நூல்கள் அதிக எண்ணிக்கையில் வந்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. கர்னாடக இசை தொடர்பான நூல்கள், பாலகுமாரன் நாவல்கள், சு.வெங்கடேசனின் ‘வேள்பாரி’ நாவல், இரா.முத்துநாகுவின் ‘சுளுந்தீ’ நாவல், இமையத்தின் ‘செல்லாத பணம்’ நாவல் போன்ற நூல்களை வாசித்தேன்.
ஆ.ஏசுராஜன்: நான் சிறைக்கு வரும் முன், பாடப் புத்தகங்களையும் மதம் சார்ந்த நூல்களையுமே வாசித்துவந்தேன். அதற்கு மேலும் வாழ்க்கை உள்ளது என்பதை, இங்குள்ள நூல்கள்தான் எனக்கு உணர்த்தின. ஜெயராணி எழுதிய ‘ஜாதியற்றவளின் குரல்’ என்கிற நூல் என்னை மிகவும் கவர்ந்தது. நாம் இப்போது எங்கு இருக்கிறோம் எனவும் என் பயணம் எதை நோக்கி இருக்க வேண்டும் எனவும் இது உணர வைத்தது.
சீ.சுரேஷ்: எஸ்.ராமகிருஷ்ணனின் பயணக் கட்டுரைகள் உலகையே சுற்றிப் பார்க்கும் அனுபவத்தை அளித்தன. புதுமைப்பித்தன் சிறுகதைகள், இமையம் எழுதிய நாவல்கள் போன்றவை வாழ்க்கையின் யதார்த்தத்தை எனக்குப் புரியவைத்தன.
ச.சதீஷ்குமார்: நான் 25 ஆண்டுகளுக்கு மேலாக ஆயுள் தண்டனை அனுபவித்துவருகிறேன். ‘கூண்டுக்குள் வானம்’ மூலம் பல வகையான நூல்களை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. குறிப்பாக, கணினி நூல்களில் காம்கேர் புவனேஸ்வரி எழுதிய நூல்கள் அனைத்துமே பயனுள்ளதாக இருக்கின்றன. விவசாயத்தில் எனக்கு ஈடுபாடு உள்ளதால் ஆடுவளர்ப்பு, கோழிவளர்ப்பு, தென்னை வளர்ப்பது போன்ற நூல்களையும் வாசித்தேன். இவை வாழ்க்கையில் எனக்கு உறுதுணையாக இருக்கும்.
எல்.மேரி பிரான்சிஸ்: கண்ணதாசன் எழுதிய ‘இயேசு காவியம்’, ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ போன்ற நூல்களையும் மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா, அன்னை தெரசா, சரோஜினி நாயுடு, இந்திரா காந்தி போன்றோரின் வாழ்க்கை வரலாற்று நூல்களையும் வாசித்தேன். அண்ணல் அம்பேத்கர் பற்றி முதன்முதலில் இங்குதான் படித்தேன். அவர் பட்ட அவமானங்களையும் துன்பங்களையும் எப்படிச் சாதனையாக மாற்றிக் காட்டினார் என்பதை எடுத்துக்காட்டாக எடுத்துக்கொள்கிறேன்.
போ.ராஜேஷ்: ஆங்கில நூல்களில் ‘ரீட் வித் ஸ்பீட்’ என்கிற நூல், கவனத்தைச் சிதற விடாமல் ஒரு புத்தகத்தை எப்படி விரைவாக வாசிப்பது என வழிகாட்டியது. ‘பாடி லாங்வேஜ்’ என்ற நூல், பொது இடங்களில் பிறருடன் பேசும்போது நாம் உடல்மொழி சரியாக இருக்க வேண்டியதைப் பற்றிக் கூறுகிறது.
ச.செல்வபிரகாஷ்: நான் தூக்குத்தண்டனை சிறைவாசி. மாலையில் அறையில் அடைக்கப்பட்ட பிறகு, தனிமையைப் போக்க நூல்கள் உதவுகின்றன. வரலாறு, சுய முன்னேற்றம், தன்னம்பிக்கை உள்ளிட்ட துறை சார்ந்த நூல்களை வாசித்துவருகிறேன். என்னைச் சுயபரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ளவும் தன்னிலை அறிந்து செயல்படவும் நூல்கள் வாய்ப்பு அளிக்கின்றன. நான் பல துறைகளில் அறிவை வளர்த்துக்கொண்டு, வெளியே செல்லும்போது நம்பிக்கையுடன் செயல்படுவதற்கான உத்வேகம் வாசிப்பு வழியாகக் கிடைக்கிறது.
