மக்களவைத் தேர்தல்: கட்சிகளுக்கு முக்கியமாவது ஏன்?

மக்களவைத் தேர்தல்: கட்சிகளுக்கு முக்கியமாவது ஏன்?
Updated on
3 min read

18 ஆவது மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் தமிழ்நாட்டில் ஓய்ந்துவிட்டது. பொதுவாக, எல்லா அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் என்பது ஓர் அக்னிப் பரீட்சைதான். ஆனால், ஒருசில தேர்தல்கள் அரசியல் கட்சிகளுக்குக் கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறிவிடுவது உண்டு. அந்த வகையில் 2024 மக்களவைத் தேர்தல், முக்கியக் கட்சிகள் / கூட்டணிகளின் திசைவழியைத் தீர்மானிக்கும் தேர்தலாக அமையக்கூடும் என்றே கணிக்கப்படுகிறது.

ஆளும்கட்சிக்கான சான்றிதழ்: 2018இல் தமிழ்நாட்டில் உருவான திமுக தலைமையிலான கூட்டணி, 2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தலைத் தாண்டி 2024 மக்களவைத் தேர்தலிலும் தொடர்கிறது. கடந்த காலங்களில் திமுக அமைத்த கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகள் தொடர்ச்சியாக மூன்று தேர்தல்களிலும் ஒரே அணியாக இருந்ததில்லை.

அந்த வகையில், இந்தக் கூட்டணி தொடர்வது திமுகவுக்கு ஒரு நேர்மறையான அம்சம்தான். 2019 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் 39இல் 38 தொகுதிகளிலும், புதுச்சேரி தொகுதியிலும் திமுக கூட்டணி வென்றது. 2021இல் திமுக கூட்டணி 159 தொகுதிகளில் வெற்றி பெற்றது; தனிப் பெரும்பான்மை பெற்று தமிழ்நாட்டில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைக் கைப்பற்றியது.

2019 இல் பெற்ற வெற்றியைத் தக்கவைக்க முடியுமா என்கிற வகையில் திமுக கூட்டணிக்கு 2024 தேர்தல் ஒரு பரீட்சைதான். 2019, 2021 தேர்தல்களை மாநில எதிர்க்கட்சிகளாகச் சந்தித்த திமுக கூட்டணி, இன்று ஆளுங்கட்சிக் கூட்டணியாகச் சந்திக்கிறது. உண்மையில், ஆளுங்கட்சியாகத் தேர்தலைச் சந்திப்பது அவ்வளவு எளிதானது அல்ல.

இது ஓர் ஆட்சிக்கு, வாக்காளர்களாகிய மக்கள் அளிக்கும் சான்றிதழ் போன்றது. என்னதான் மக்களவைக்கான தேர்தலாக இருந்தாலும், மாநிலத்தில் உள்ள ஆட்சியின் செயல்பாடுகளையும் எடைபோட்டுப் பார்க்கும் மனநிலை வாக்காளர்களிடம் இருக்கவே செய்கிறது.

தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட 505 வாக்குறுதிகளில், ஆட்சிக்கு வந்த பிறகு 462 வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக திமுக சொல்கிறது. அதில் குறிப்பிடாத காலை உணவுத் திட்டம் உள்பட பலஅம்சங்களையும் நிறைவேற்றியிருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரங்களில் குறிப்பிடுகிறார்.

ஆளுங்கட்சி தன்னுடைய சாதனைகளாகக் குறிப்பிடும் விஷயங்களை வாக்காளர்கள் ஏற்றுக்கொண்டால், அது தேர்தலில் நேர்மறையாக எதிரொலிக்கக்கூடும். கூடவே, ஆளுங்கட்சி மீதான அதிருப்தியின் விளைவாக எதிர்ப்பு வாக்குகள் இருக்கின்றனவா என்பதும் இந்தத் தேர்தலில் தெரிந்துவிடும்.

தலைமைக்கான அங்கீகாரம்: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு வெற்றிபெறத் தடுமாறுகிறது என்கிற எதிர்மறையான பிரச்சாரத்தை அதிமுக எதிர்கொண்டிருக்கிறது.

சசிகலா, டிடிவி தினகரனின் தனி ஆவர்த்தனம், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கட்சியிலிருந்து நீக்கம், இரட்டைத் தலைமை ஒழிப்பு எனக் கடந்த ஏழு ஆண்டுகளாகவே அதிமுகவின் உள்கட்சி அரசியல் அக்கட்சியைப் பலமிழக்கச் செய்திருக்கிறது என்கிற விமர்சனங்களும் உண்டு.

ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமி உருவெடுத்த பிறகு, அவர் சந்திக்கிற முதல் பொதுத் தேர்தல் என்பதால், 2024 மக்களவைத் தேர்தல் அக்கட்சிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை மறுப்பதற்கில்லை.

2019 மக்களவைத் தேர்தலில் படுதோல்வி அடைந்திருந்தாலும், 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கெளரவமான வாக்கு சதவீதத்துடன் 66 தொகுதிகளில் வென்றது.

ஆனாலும் ஓ.பன்னீர்செல்வம் வெளியேற்றப்பட்ட பிறகு, அதிமுக சந்திக்கும் முதல் பொதுத் தேர்தலில் - அவரது வெளியேற்றத்தால் அதிமுகவின் செல்வாக்கு குறைந்துவிடவில்லை என்பதை நிரூபிக்க வேண்டிய தேவையும் அக்கட்சிக்கு ஏற்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டுகளாக இரு துருவ அரசியல்தான் நடைபெற்றுவருகிறது. திமுகவா,அதிமுகவா என்பதுதான் வாக்காளர் மத்தியில் முதன்மைக் கேள்வியாக இருக்கும். ஆனால், அந்தஇடத்துக்கு பாஜக வர விரும்புகிறது. 2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு அதிமுக இருக்காது என்று பாஜக தலைவர் அண்ணாமலை பேசிவருகிறார்.

இத்தேர்தலில், அதிமுக குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெறுவதன் மூலமாகவே இதுபோன்ற விமர்சனங்களை முறியடிக்க முடியும். அத்தோடு, இத்தேர்தலில் கிடைக்கும் முடிவைப் பொறுத்தே எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கும் அங்கீகாரம் கிடைக்கும்.

வாக்குச் சதவீத இலக்கு: தமிழ்நாட்டில் ஆளுமைமிக்க தலைவர்களான மு.கருணாநிதி, ஜெ.ஜெயலலிதா ஆகியோரின் மறைவுக்குப் பிறகு பாஜக வலுவாகக் காலூன்ற முயல்கிறது. முன்பு ‘கழகங்கள் இல்லா தமிழகம்’ என்கிற முழக்கத்துடன் பிரச்சாரம் செய்த கட்சிதான் பாஜக.

ஆனால் 2019, 2021 தேர்தல்களை அதிமுகவின் துணையுடன்தான் அந்தக் கட்சி சந்தித்தது. தற்போது திமுக, அதிமுகவை எதிர்த்து பாஜக ஒரு கூட்டணியை அமைத்திருக்கிறது. எல்.முருகன், அண்ணாமலை ஆகியோரின் வரவுக்குப் பிறகு தமிழ்நாட்டில் பாஜக வேகமாக வளர்ந்துவிட்டதாகக் கூறப்படும் சூழலில், இந்த மக்களவைத் தேர்தல் முடிவு அதற்கு விடையளிக்கும்.

அதிமுகவின் துணையின்றி இந்த முறை பாஜக குறிப்பிடத்தகுந்த வெற்றியையும் வாக்கு சதவீதத்தையும் பெறும் என்று அக்கட்சியின் தேசியத் தலைமையும் நம்புகிறது. அதன் விளைவாகவே இதற்கு முந்தைய தேர்தல்களைவிட, பிரதமர் மோடி பிரச்சாரத்துக்காகத் தமிழ்நாட்டுக்குப் பலமுறை வந்துசென்றார்.

தமிழ்நாட்டில் இதற்கு முன்பு நடந்திராத ‘ரோடு ஷோ’க்களையும் பாஜக மேற்கொண்டது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக, அதிமுக அல்லாத கட்சிகள் அல்லது கூட்டணி கடந்த காலங்களில் 10 முதல் 18% வாக்குகள் வரை பெற்றுள்ளன. ஆனால், அதே வாக்குகளைப் பங்குபோடும் இடத்தில் நாம் தமிழர் கட்சியும் சேர்ந்திருக்கிறது.

தமிழ்நாட்டில் மூன்று ஆண்டு காலமாக நடைபெறும் திமுக ஆட்சியைப் பார்த்து மக்கள் வெறுத்துவிட்டதாகப் பிரதமர் மோடி கூறுகிறார். எனில், அவரது 10 ஆண்டு கால ஆட்சியைத் தமிழ்நாட்டு மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்கிற கேள்வியும் இத்தேர்தலில் இயல்பாகவே எழும்.

தமிழ்நாட்டில் பாஜக எத்தனை தொகுதிகளில் வெல்கிறது, எத்தனை சதவீத வாக்குகளைப் பெறுகிறது என்பதே 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு அக்கட்சிக்கான முன்னோட்டமாக இருக்கும். கடந்த காலத்தைவிடக் கூடுதலாக எத்தனை சதவீத வாக்குகளைப் பெற்றாலும் அது அக்கட்சி வளர்ந்துள்ளது என்பதையே காட்டும். வாக்கு சதவீதத்தை அதிகரிக்கும் முனைப்பாகவே பாஜகவின் செயல்பாடுகளும் அமைந்துள்ளன.

அடுத்தகட்டத்துக்கான அடித்தளம்: 2016 சட்டமன்றத் தேர்தல், 2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல் என மூன்று தேர்தல்களிலும் நாம் தமிழர் கட்சி ஓரளவுக்கு வளர்ச்சியைக் காட்டியிருக்கிறது. அந்த வகையில் 2024இல் அந்தக் கட்சிக்கான ஆதரவுத் தளம் மேலும் விரிவாகியிருக்கிறதா இல்லையா என்பதை இத்தேர்தல் நிரூபிக்கும்.

2019, 2021இல் இரண்டு வலிமையான கூட்டணிகளை எதிர்த்துப் போட்டியிட்ட நாம் தமிழர், இந்த முறை மூன்று கூட்டணிகளை எதிர்க்க வேண்டியிருக்கிறது. திமுக, அதிமுக எதிர்ப்பு வாக்குகளும், இளம் வாக்காளர்களும் நாம் தமிழரின் பலம் என்றாலும், அந்த வாக்குகளைப் பிரிக்க பாஜகவும் போட்டியிடுவது களத்தைப் போட்டிமிகுந்ததாக ஆக்கியிருக்கிறது.

பொதுவாகத் தேர்தலில் எந்த ஒரு கட்சியும் தொடர்ந்து தோல்வியடைந்தால் கட்சியினர் சோர்வடைந்துவிடக்கூடும். அப்போது தங்கள் கொள்கையைத் தளர்த்திக்கொண்டு கூட்டணிக் கலாச்சாரத்துக்குள் புக நேரிடும். ஆனால், தொடர்ந்து தோல்வியடைந்தாலும் தனித்துப் போட்டி என்கிற கொள்கையைச் சீமான் பின்பற்றுகிறார்.

2021 சட்டமன்றத் தேர்தலில் பல தொகுதிகளில் திமுக-அதிமுக கூட்டணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவியதற்கு நாம் தமிழர் பிரித்த வாக்குகளும் ஒரு காரணம். இத்தேர்தலில் கிடைக்கும் முடிவு நாம் தமிழரின் அடுத்தகட்டப் பயணத்தை முடிவுசெய்வதாகவும் அமையும். இந்த முடிவுகளை எட்ட ஜூன் 4 வரை நாம் காத்திருக்க வேண்டும்.

- தொடர்புக்கு: karthikeyan.di@hindutamil.co.in

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in